Press "Enter" to skip to content

கனடா: ஜஸ்டின் ட் ரூடோவின் அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்ற உதவிய சீக்கியர்கள்

பட மூலாதாரம், GETTY IMAGES

ஜஸ்டின் ட்ரூடோ 2015இல் முதல்முறையாக கனடாவின் பிரதமராகப் பதவியேற்றார். அப்போது அவர், ​இந்தியாவில் மோதி அரசில் இருப்பவர்களைவிட தனது அமைச்சரவையில் சீக்கிய அமைச்சர்கள் அதிகம் என்று நகைச்சுவையாகக் கூறினார்.

அப்போது ட்ரூடோ நான்கு சீக்கியர்களை அமைச்சரவையில் சேர்த்திருந்தார். கனடாவின் அரசியல் வரலாற்றில் இப்படி நடந்தது அதுவே முதல்முறை.

தற்போது ​​பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு இந்தியாவுடனான கனடாவின் உறவுகள் கடுமையான சிக்கலில் இருப்பதாகத் தெரிகிறது.

காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்குப் பின்னால் இந்திய அரசு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ திங்களன்று நாடாளுமன்றத்தில் சந்தேகம் தெரிவித்தார். அதன் பிறகு இரு நாடுகளும், ஒன்று மற்றதன் உயர் தூதரக அதிகாரிகளை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றின.

காலிஸ்தான் காரணமாக கனடாவுடனான இந்தியாவின் உறவுகளில் கடந்த காலங்களிலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் நாடாளுமன்றத்தில் பதற்றங்கள் பற்றிக் குறிப்பிடப்படும் அளவுக்கு அது ஒருபோதும் தீவிரம் அடைந்ததில்லை.

கனடாவில் சீக்கியர்கள் மத்தியில் ட்ரூடோவின் பிரபலம் பற்றிப் பேசப்படும் போதெல்லாம், காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீதான அவரது மென்மையான நிலைப்பாடு குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கனடாவிடம் இந்திய அரசு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது.

ட்ரூடோ அரசு தனது வாக்கு வங்கி அரசியலை மனதில் வைத்து காலிஸ்தான் மீது மென்மையாக இருப்பதாக இந்தியா கருதுகிறது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இந்தக் கூற்றை முன்வைத்துள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் இதுவரையிலான அரசியல் பயணம் மற்றும் அதில் கனடா வாழ் சீக்கியர்களின் சிறப்புப் பங்கு பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

ட்ரூடோவுக்கு சீக்கியர்கள் ஏன் முக்கியம்?

ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்கள் கனடா

பட மூலாதாரம், GETTY IMAGES

ஜஸ்டின் ட்ரூடோ தனது 44 வயதில் முதல்முறையாக கனடாவின் பிரதமரானார். 2019ஆம் ஆண்டில் அவர் மீண்டும் இந்த நாற்காலியில் அமர்ந்தார். ஆனால் அந்த நேரத்தில் அவரது பிரபலம் கணிசமாகக் குறைந்துவிட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த தொற்றுப் பேரிடரைத் திறம்பட சமாளித்தால், ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் (கனடா நாடாளுமன்றத்தின் கீழ் அவை) தங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்று ட்ரூடோவின் லிபரல் கட்சியினர் நம்பினர்.

இந்நிலையில் 2019ஆம் ஆண்டு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டது. ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 20 இடங்கள் குறைந்தன.

ஆனால் இந்தத் தேர்தலில் ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி, 24 இடங்களைப் பெற்றிருந்தது.

ஜக்மீத் சிங் கட்சித் தலைவராக ஆவதற்கு முன்பு காலிஸ்தான் பேரணிகளில் கலந்துகொள்வார் என்று வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.

“ட்ரூடோ பிரதமராக நீடிக்க ஜக்மீத் சிங்கின் ஆதரவு மிகவும் முக்கியமானதாகிவிட்டது. சீக்கியர்களை கோபப்படுத்தும் எந்தவொரு செயலையும் செய்யாமல் இருக்க ட்ரூடோ முயல்வதற்கு ஒருவேளை இதுவும் ஒரு பெரிய காரணமாக இருக்கலாம்,” என்று ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி, ’ட்ரிப்யூன் இந்தியா’, ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

“ட்ரூடோ பெரும்பான்மை இல்லாத அரசை நடத்துகிறார். ஆனால் ஜக்மீத் சிங்கின் ஆதரவு அவருக்கு உள்ளது. ட்ரூடோ அரசியலில் தொடர்ந்து இருக்க ஜக்மீத் சிங் தேவை. ஜக்மீத் சிங் இப்போது ட்ரூடோவின் நம்பகமான கூட்டாளியாகக் காணப்படுகிறார். ஒவ்வொரு கடினமான நேரத்திலும் ட்ரூடோவுடன் அவர் நிற்கிறார்,” என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கனடாவின் மக்கள்தொகையில் சீக்கியர்கள் 2.1 சதவிகிதமாக உள்ளனர். கனடாவில் சீக்கிய மக்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் கல்வி, தொழில், வேலை போன்ற காரணங்களுக்காக இந்தியாவின் பஞ்சாபில் இருந்து கனடா வந்தவர்கள்.

இந்தியா கனடா பதற்றம்

பட மூலாதாரம், Getty Images

கனடாவின் அரசியலில் சிறுபான்மை சீக்கியர்கள் ஏன் இவ்வளவு முக்கியமானவர்கள் என்பதே இப்போதைய கேள்வி.

“சீக்கியர்களின் சிறப்பியல்புகளில் ஒன்று, அவர்கள் ஒரு சமூகமாக ஒன்றுபட்டுள்ளனர். அவர்கள் நிர்வாகத் திறன் கொண்டவர்கள். கடின உழைப்பாளிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள குருத்வாராக்களின் மிகப்பெரிய நெட்வொர்க்கிங் மூலம் அவர்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு நிதியும் திரட்டுகிறார்கள்.

நன்கொடைகள் என்பது, சீக்கியர்கள் மற்றும் குருத்வாராக்களை எந்த ஒரு கனேடிய அரசியல்வாதிக்கும் ஆதரவு அமைப்பாக மாற்றும் ஒரு அம்சம்,” என்று நிபுணர்களை மேற்கோள்காட்டி ’ட்ரிப்யூன் இந்தியா’ தெரிவிக்கிறது.

வான்கூவர், டொராண்டோ, கல்கேய்ரி உட்பட கனடா முழுவதும் குருத்வாராக்களின் பெரிய நெட்வொர்க் உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வான்கூவர் சன் இதழில் டப்பில்ஸ் டோட் ஒரு கட்டுரை எழுதினார். “வான்கூவர், டொராண்டோ மற்றும் கல்கேய்ரியில் உள்ள முக்கிய குருத்வாராக்களில் இருக்கும் சீக்கியர்களின் பிரிவு, சில லிபரல் மற்றும் என்டிபி தேர்தல் வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக பெரும்பாலான நேரங்களில் தன் பணத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்துகின்றன,” என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் உள்ள பதற்றம் குறித்து வாஷிங்டன் போஸ்ட் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் கல்கேய்ரி பல்கலைக்கழகத்தின் மதத் துறையில் கற்பிக்கும் ஹர்ஜீத் சிங் கிரேவால், சீக்கியர்களுக்கு கனடா ஏன் பிடிக்கிறது என்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

“கடந்த 1947ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை நடந்த பிறகு ஏற்பட்ட ஸ்திரமின்மை, பஞ்சாபின் சீக்கியர்களை இடம்பெயர வைத்தது. சீக்கியர்கள் பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் குடியேறினர். ஆனால் அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கனடாவை அடைந்தனர். ஏனெனில் இங்கு தார்மீக-சமூக மதிப்புகளில் குறிப்பிடத்தக்க வேறுபாட்டை அவர்கள் காணவில்லை,” என்று அவர் கூறுகிறார்.

இன்று சீக்கியர்கள் கனடாவின் சமூகத்திலும் அரசியலிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். புதிய ஜனநாயகக் கட்சியின் (என்டிபி) தலைவர் ஜக்மீத் சிங் ஒரு சீக்கியர். இந்தியாவில் சீக்கியர்கள் நடத்தப்படும் விதம் குறித்து அவர் பலமுறை வெளிப்படையாகப் பேசியுள்ளார். 2013இல் ஜக்மீத் சிங்கிற்கு இந்திய விசா மறுக்கப்பட்டதற்கு அவரது அறிக்கைகளே காரணம் என்று வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.

‘தலைவர் ஆவதற்காகப் பிறந்தவர்’

ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்கள் கனடா

பட மூலாதாரம், PETER BREGG/CANADIAN PRESS

ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நான்கு மாதங்களே ஆனபோது, ​​அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன், அந்தக் குழந்தை ஒருநாள் தன் தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் என்று கணித்திருந்தார்.

ரிச்சர்ட் நிக்சன் 1972ஆம் ஆண்டு கனடாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது நடத்தப்பட்ட மாபெரும்​​ விருந்தின்போது அவர் கனேடிய பிரதமரிடம், “இன்றிரவு நாம் சம்பிரதாயங்களைத் தவிர்ப்போம். கனடாவின் வருங்காலப் பிரதமர் ஜஸ்டின் பியர் ட்ரூடோவின் பெயரில் இந்த நேரத்தை அர்ப்பணிக்கிறேன்,” என்று கூறினார்.

“அவருக்கு (ஜஸ்டின் ட்ரூடோ) அதிபர் ஆவதற்கான திறமையும் ஆளுமையும் இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அந்த நேரத்தில் பியர் ட்ரூடோ கூறியதாக சிபிசி அறிக்கை தெரிவிக்கிறது.

ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியர் ட்ரூடோ 1980கள் வரை கனடாவின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தினார். பியர் ட்ரூடோ 1968 முதல் 1979 வரையிலும், மீண்டும் 1980 முதல் 1984 வரையிலும் கனடாவின் பிரதமராக இருந்தார்.

ஜஸ்டினின் குழந்தைப் பருவம்

ஜஸ்டின் ட்ரூடோவுடைய குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதி அரசியலில் இருந்து விலகியே கழிந்தது. அவர் மெக்கில் பல்கலைக் கழகத்திலும் பின்னர் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்திலும் படித்து ஆசிரியரானார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் இளைய சகோதரர் மைக்கேல், 1998ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்தார். இந்த பேரிழப்புக்குப் பிறகு அவர் ஆற்றிய பங்கு மக்களின் கவனத்தை ஈர்த்தது. அவர் பனிச்சரிவு பாதுகாப்புக்கான செய்தித் தொடர்பாளராக ஆனார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது தந்தை 80 வயதில் காலமானபோது, ஜஸ்டின் ​​ட்ரூடோ தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவரது பேச்சு பெரிதும் பாராட்டப்பட்டது. அதே நேரத்தில் அவர் பிரதமராகும் வாய்ப்பையும் பலர் பார்த்தனர்.

ட்ரூடோ 2004இல் சோஃபி கிரேகோயரை மணந்தார். இருவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் ட்ரூடோவும் அவரது மனைவியும் தாங்கள் பிரியப் போவதாக இந்த ஆண்டு அறிவித்தனர்.

அரசியல் பந்துவீச்சு சுற்றுஸின் ஆரம்பம்

ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்கள் கனடா

பட மூலாதாரம், GETTY IMAGES

ஜஸ்டின் ட்ரூடோ தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரசியலில் தீவிரமாக இறங்கினார். 2008ஆம் ஆண்டு முதல்முறையாக அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரம்பத்திலிருந்தே லிபரல் கட்சி, ஜஸ்டின் ட்ரூடோவிடம் ‘ஒரு தலைவரை’ப் பார்த்தது. ட்ரூடோ 2011இல் மீண்டும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லிபரல் கட்சியை வழிநடத்த வேண்டும் என்ற அவரது ஆசை பலமுறை நிறைவேறாமல் போனது. அதன் பிறகு 2012இல் கட்சித் தலைமைக்கான தேர்தலில் போட்டியிடும் தனது விருப்பத்தை ட்ரூடோ தெளிவுபடுத்தினார்.

தேர்தல் பிரசாரத்தின்போது ​​ட்ரூடோவின் அனுபவமின்மையை சுட்டிக்காட்டி அவரது எதிரிகள் அவரைத் தொடர்ந்து விமர்சித்தனர். பொதுத் தேர்தலுக்கு முன்பும் இதே விமர்சனத்தை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் ட்ரூடோ பொதுத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்திய அரசுடன் முன்பும் பதற்றம் இருந்தது

ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்கள் கனடா

பட மூலாதாரம், GETTY IMAGES

கடந்த 2018ஆம் ஆண்டு நரேந்திர மோதி பிரதமராக இருந்தபோது ​​ஜஸ்டின் ட்ரூடோ முதன்முறையாக ஏழு நாள் பயணமாக இந்தியா வந்தபோதும் பல சர்ச்சைகள் எழுந்தன.

அப்போது ட்ரூடோவை வரவேற்பதில் இந்தியா அலட்சியம் காட்டியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

சீக்கிய பிரிவினைவாதிகள் மீது கனடா காட்டும் அனுதாபம் காரணமாகவே இந்தியா இவ்வாறு செய்ததாக அந்த ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டிருந்தது.

இந்த சுற்றுப்பயணத்தின்போது ஜஸ்டின் ட்ரூடோ அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கும் சென்றார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் 2018ஆம் ஆண்டில் மூன்று சீக்கிய அமைச்சர்கள் இருந்தனர். இந்த அமைச்சர்களில் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜீத் சஜ்ஜனும் ஒருவர்.

சஜ்ஜன் இப்போதும் ட்ரூடோவின் அமைச்சரவையில் இருக்கிறார். மேலும் கனடா பிரதமரின் அறிக்கையை ஆதரித்த அவர், ”இந்தியா உட்பட எந்த நாட்டின் தலையீட்டையும் பொறுத்துக்கொள்ள முடியாது,” என்று அவர் கூறினார்.

சஜ்ஜனை காலிஸ்தான் ஆதரவாளர் என்று 2017இல் அப்போதைய பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் அழைத்தார். இருப்பினும் இந்தக் கூற்றை சஜ்ஜன் சிங் நிராகரித்தார்.

இந்தியாவில் 1984ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தைக் கண்டித்து ஒன்டாரியோ சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியதும் இந்தியாவுக்கு பிடிக்கவில்லை.

கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் ’சுதந்திர பஞ்சாப்’ தொடர்பான பொது கருத்துக் கணிப்பு நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.

இதற்கு முன்பும் சர்ச்சையில் சிக்கிய ட்ரூடோ

ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்கள் கனடா

பட மூலாதாரம், GETTY IMAGES

ஜஸ்டின் ட்ரூடோ 2015இல் ‘உண்மையான மாற்றம்’ போன்ற பல முற்போக்கான வாக்குறுதிகளுடன் வெற்றி பெற்று கனடாவின் பிரதமரானார்.

ட்ரூடோ தனது முதல் பதவிக் காலத்தில் 92 சதவீத வாக்குறுதிகளை ஓரளவுக்கு அல்லது முழுமையாக நிறைவேற்றியதாக இரண்டு டஜனுக்கும் அதிகமான சுதந்திர கனேடிய கல்வியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஜஸ்டின் ட்ரூடோவின் இரண்டாவது பதவிக்காலம் ஒரு தூதாண்மை சம்பவத்துடன் தொடங்கியது. அவர் டொனால்ட் டிரம்பை கேலி செய்தார். இது ஒளிக்கருவி (கேமரா)வில் பதிவாகியது. இதற்குப் பதிலடியாக டிரம்ப், ட்ரூடோவை ‘பாசாங்குகாரர்’ என்று அழைத்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவில் அந்த நேரத்தில் நடந்த போராட்டங்கள் குறித்து ஊடகங்கள் அவரிடம் கேள்வி கேட்டன. அதற்கு ​​​​ட்ரூடோ 20 விநாடிகளுக்கு மேல் அமைதியாக இருந்தார். இந்த காணொளிவும் பெரிதும் மிகுதியாக பகிரப்பட்டது.

கடந்த ஆண்டு பாலியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போது, ​​சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ஜஸ்டின் ட்ரூடோவின் காணொளி சமூக ஊடகங்களில் மிகுதியாக பகிரப்பட்டது. இதில் இரு தலைவர்களுக்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தைக் காண முடிந்தது.

“நமக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை நாளிதழ்களில் கசிந்துவிட்டது. அது சரியில்லை… இது பேச்சுவார்த்தைக்கான வழிமுறை அல்ல,” என்று சீன அதிபரின் வார்த்தைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சொல்வதைக் கேட்க முடிந்தது.

“நீங்கள் உண்மையானவராக இருந்தால், நாம் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் பேச வேண்டும். இல்லையெனில் விளைவு என்னவாக இருக்கும் என்று சொல்வது கடினம்,” என்று ஷி ஜின்பிங் கூறினார்.

இதற்கு கனாடாவின் பிரதமர் ட்ரூடோ, “கனடாவில் நாங்கள் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான பேச்சுவார்த்தையை நம்புகிறோம். நாங்கள் அதைத் தொடர்ந்து செய்வோம்,” என்று நிதானமாகப் பதிலளித்தார்.

ட்ரூடோவின் மிகப்பெரிய சோதனையாக கொரோனா தொற்றுப் பேரிடர் இருந்தது. கனடாவுக்கு அது மிகவும் கடினமான 18 மாதங்கள்.

அவர் முன்கூட்டியே தேர்தலை நடத்தியபோது, ​​கடந்த காலத்தைத் தாண்டி கனடா நகர்ந்துவிட்டதாக நம்பப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் லிபரல் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்தது. ஜக்மீத் சிங்கின் ஆதரவு அவருக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால், ட்ரூடோவின் அரசியல் எதிர்காலம் ஆபத்தில் முடிந்திருக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »