Press "Enter" to skip to content

ரமேஷ் பிதுரி: வெறுப்புப் பேச்சுக்கு வெகுமானமா? பா.ஜ.க.வில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், ANI

“ஒரு நாட்டின் சாலைகள் வெறிச்சோடி கிடக்கும் போது, அந்த நாட்டின் நாடாளுமன்றம், கட்டுக்கடங்காததாக மாறும்.”

சோசலிஸம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளுடன் நாட்டின் தெருக்களில் காங்கிரஸுக்கு எதிரான வெகுஜன இயக்கங்கள் நிறைய செயல்பட்டு கொண்டிருந்த நேரத்தில், தெருக்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான பரஸ்பர உறவு குறித்து மருத்துவர் ராம் மனோகர் லோஹியா இவ்வாறு கூறினார். நாட்டின் நாடாளுமன்றத்தில் மக்களின் விருப்பங்கள் எதிரொலித்தன.

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் லோஹியா விடுத்த இந்த எச்சரிக்கை கடந்த சில வருடங்களாக தொடர்ந்து உண்மையாகி வருகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ‘அமிர்த காலத்தில்’ செப்டம்பர் 21ஆம் தேதி நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வின் போது, ​​இந்த விஷயம் ஒரு புதிய திகிலூட்டும் வடிவத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோதி, இந்தக் கூட்டத் தொடரின் காலம் நிச்சயமாகக் குறைவு என்றும், ஆனால் இதில் சில பெரிய மற்றும் வரலாற்றுப் பணிகள் நடைபெறப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நான்கு நாட்கள் நடந்த சிறப்பு அமர்வில் நடந்ததை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூற முடியுமா என்பதில் இருவேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால் கடைசி நாளில் நடந்தது ‘முன்னெப்போதும் நடக்காதது’ மற்றும் ‘மோசமான வரலாற்று’ நிகழ்வு என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது, ​​உறுப்பினர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளையும், எதிர்க் குற்றச்சாட்டுகளையும் கூறுவதும், சில சமயங்களில் ஒருவரையொருவர் தகாத வார்த்தைப் பிரயோகம் மூலம் திட்டிக்கொள்வது சகஜமான நிகழ்வுகளாகவே இருந்து வருகின்றன. அவ்வாறு செய்யும் உறுப்பினர்களை அவைத் தலைவர் எச்சரிப்பதன் பேரில், அவர்களின் ஆட்சேபனைக்குரிய வார்த்தைகள் நீக்கப்படும். அவையின் நடவடிக்கைகள், சில சமயங்களில் முழு அவையையும் ஒருமனதாக சம்பந்தப்பட்ட உறுப்பினரின் இத்தகைய நடத்தையை கண்டித்து அவரை வருத்தம் தெரிவிக்கும்படி கட்டாயப்படுத்தும் நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.

சில சந்தர்ப்பங்களில், சபாநாயகர் அத்தகைய உறுப்பினர்களை சில நாட்களுக்கு அல்லது முழு அமர்வில் இருந்தும் இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கும் நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. ஆனால் செப்டம்பர் 21-ம் தேதியன்று மக்களவையில் என்ன நடந்தது என்பதை இந்திய நாடாளுமன்றமும் நாடும் முதல் முறையாகக் கண்டன.

சந்திரயான்-3 வெற்றி குறித்த விவாதத்தின் போது, ​​தெற்கு டெல்லியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்பியான ரமேஷ் பிதுரி, அம்ரோஹாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்பி குன்வர் டேனிஷ் அலிக்கு அளித்த பதிலில், நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகத்தை நோக்கி அநாகரீகமான, வகுப்புவாத வெறுப்பு நிறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அதுமட்டுமின்றி, அவையை விட்டு வெளியே வந்தபின் ‘பார்த்துக் கொள்வதாகவும்’ மிரட்டியுள்ளார்.

ஹர்ஷ்வர்தன், ரவிசங்கர் மீதான விமர்சனம்

அப்போது, ​​சபை நடவடிக்கைகளை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந்த சபாநாயகர் கொடிக்குன்னில் சுரேஷ், பிதுரியை தடுக்க முயன்றார். ஆனால் பிதுரி தனது ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், பிதுரி இதைச் செய்து கொண்டிருந்தபோது, ​​அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ஹர்ஷ்வர்தனும், அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த முன்னாள் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் அவர் பேசுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

இதுமட்டுமின்றி, ஆளுங்கட்சியைச் சேர்ந்த சில எம்.பி.க்களும் மேசையைத் தட்டி பிதுரியை உற்சாகப்படுத்தினர். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிதுரியை தடுக்க முயற்சிக்கவில்லை.

கொரோனா தொற்றுநோய் காலத்தில் பிரதமர் மோதியின் கனவுத் திட்டமாக பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில்தான் இவை அனைத்தும் நடந்தன என்பதும், நான்கு மாதங்களுக்கு முன்பு மிக பிரம்மாண்டமாக நடந்த இந்த கட்டடத்தின் தொடக்க விழாவில் வேத மந்திரங்கள் ஓதி பிரதமர் மோதி தலைமையில் செங்கோல் ஒன்று நிறுவப்பட்டது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள்.

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொற்கள்

இங்கே ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால், கடந்த ஆண்டு ஜூலை மாதம், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என பல சொற்கள் அடங்கிய ஒரு நீண்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

அந்தப் பட்டியலைப் பார்த்து, பாஜக எம்பி பேசியதை ஒப்பிடும் போது எவ்வளவு அநாகரீகமான சொற்களை அவர் பயன்படுத்தியுள்ளார் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

புதிய கட்டிடத்தில் இந்த முதல் கூட்டத்தொடர் தொடங்கிய போது, ​​இந்த கட்டிடம் எம்.பி.க்களுக்கு புதிய உத்வேகத்தையும் ஆற்றலையும் தரும் என்றும், இது நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் பிரதமர் மோதி கூறியிருந்தார்.

இருப்பினும், பிதுரியின் நடத்தைக்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியபோது, ​​​​பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.

பிதுரியின் வாயிலிருந்து வந்த அவதூறான வார்த்தைகளை ஒட்டுமொத்த நாடும் கேட்டது. தற்போது அவரது காணொளி உலகம் முழுவதும் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

அவரைப் பற்றிப் பேசிய ராஜ்நாத் சிங், “உறுப்பினர் பிதுரி என்ன பேசினார் என்பதை என்னால் சரியாக கேட்க முடியவில்லை. இன்னும் அவரது வார்த்தைகளால் எதிர்க்கட்சிகள் புண்பட்டிருந்தால் நான் வருத்தம் தெரிவிக்கிறேன்,” என்று கூறினார்.

நாடாளுமன்றத்தின் கண்ணியம்

பட மூலாதாரம், ANI

பிரதமர் மோதி மவுனம்

இப்போது அனைவரின் மனதிலும் எழும் இயல்பான கேள்வி என்னவென்றால், அப்படிப் பேசியவரின் பெயர் ரமேஷ் பிதுரி என்பதற்குப் பதிலாக டேனிஷ் அலி என்று இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதே.

‘சப்கா சாத், சப்கா விஸ்வாஸ், சப்கா விகாஸ்’, ‘வசுதைவ குடும்பகம்’ என்று நாட்டிலும், பல்வேறு சர்வதேச அரங்குகளிலும் பிரகடனம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோதி, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் ரமேஷ் பிதுரி இப்படிப் பேசியது குறித்து இதுவரை எதிர்வினையாற்றவில்லை.

உண்மையில், பிதுரி ஒரு சாதாரண பாஜக எம்பி அல்ல. அவர் தெற்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் இருந்து தொடர்ந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியின் மிகவும் வளமான மற்றும் உயர்தரமான பகுதியிலிருந்து வரும் உறுப்பினராக அவர் கருதப்படுகிறார். மேலும் அவர் மூன்று முறை டெல்லி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

பிரதமர் மோதி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பியதும், டெல்லி விமான நிலையத்தில் அவரை பிதுரியும் வரவேற்கிறார். இது தவிர, டெல்லியில் மோதியின் எந்தவொரு பேரணி அல்லது பொதுக்கூட்டத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பையும் பிதுரி ஏற்றுக்கொண்டு வருகிறார். இதன் காரணமாக பிரதமரின் விருப்பமான எம்.பி.க்களில் இவரும் ஒருவராக விளங்குகிறார்.

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவரான மோகன் பகவத்துடன், பிதுரி தனது டீன் ஏஜ் பருவத்தில் இருந்தே தொடர்புடையவராக இருக்கிறார். இந்துகளும் முஸ்லீம்களும் ஒரே டிஎன்ஏ கொண்டவர்கள் என்றும், அனைவரும் இந்தியத் தாயின் குழந்தைகள் என்றும் அடிக்கடி கூறுவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.

ஆனால் இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டரான பிதுரியின் நடத்தை குறித்து சங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை.

நாடாளுமன்றத்தின் கண்ணியம்

பட மூலாதாரம், ANI

ஒருவரின் இடைநீக்கம், யாரோ ஒருவருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மட்டுமே

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, பிதுரியின் ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பும் இந்த காலத்தில், அத்தகைய நடவடிக்கை அர்த்தமற்றதாகவே இருக்கிறது.

டேனிஷ் அலிக்கு எதிராக பிதுரி பயன்படுத்திய ஆட்சேபனைக்குரிய வார்த்தைகள் நாடு முழுவதும் பதிவாகி, நாடாளுமன்ற வரலாற்றில் இடம்பிடித்து, காணொளி கிளிப்புகள் மூலம் உலகம் முழுவதும் பரவி வருகின்றன.

எதிர்க்கட்சி எம்.பி.க்களை சின்னச்சின்ன பிரச்னைகளுக்கு கூட்டத் தொடர் முழுவதும் பணியிடைநீக்கம் செய்யும் சபாநாயகர், இந்த விவகாரத்தில் பிதுரிக்கு, மீண்டும் சபையில் இதுபோல் நடந்து கொண்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை மட்டும் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, ​​மக்களவையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும், ராஜ்யசபாவில் ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்கும், இருக்கையில் இருந்து எழுந்து நின்று மணிப்பூர் பிரச்னை குறித்து பிரதமரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் முன் செல்ல முயற்சித்தபோது, அவர்கள் இருவரும் அந்த அமர்வு முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.

ராஜ்யசபாவிலும் இந்த 17வது லோக்சபாவிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட பல சம்பவங்கள் ஏற்கெனவே நிகழ்ந்துள்ளன. அதேசமயம் அந்த சம்பவங்களுடன் பிதுரியின் பேச்சு குறித்து ஒப்பிட்டால், அது மிகவும் தீவிரமானது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 105 (2) வது பிரிவின்படி, எந்த ஒரு எம்.பி.யும், நாடாளுமன்றத்தில் அவர் பேசுவதற்கு அல்லது நடந்துகொண்டதற்கு எந்த நீதிமன்றத்திற்கும் பதிலளிக்க வேண்டியதில்லை. மேலும் அவர் மீது காவல்துறையும் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது உண்மைதான். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மக்களவையின் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின்படி, சபாநாயகருக்கு மட்டுமே இது குறித்து நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு.

இவ்வாறான நிலையில், இந்தச் சிறப்புரிமையின் கீழ் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைப் பிரயோகம் அல்லது துஷ்பிரயோகம் செய்ய முடியுமா என்பதும் கேள்விக்குறியே.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மக்களவை சபாநாயகரிடம், இந்த விஷயத்தில் சபாநாயகர் என்ன செய்ய வேண்டும் அல்லது அவரது காலத்தில் இந்த விவகாரம் நடந்திருந்தால் அவர் என்ன செய்திருப்பார் என்று கேட்டபோது அவரது எதிர்வினை ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்தது. இந்த முழு விஷயத்திலும் அவருக்கு எதுவும் தெரியாது என்ற நிலையிலான பதில் தான் கிடைத்தது.

இதுமட்டுமின்றி, ரமேஷ் பிதுரி மற்றும் டேனிஷ் அலி ஆகியோர் யார் என்றும் அவர் கேட்டார். அதேசமயம் அவர் மக்களவையின் சபாநாயகராக இருந்த போதும் ஐந்து ஆண்டு காலம் பிதுரி உறுப்பினராக இருந்தார்.

முழு சம்பவத்தையும் அவரிடம் விளக்கிய போது, ​​“இப்போது நான் சபாநாயகராக இல்லை. இதைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? இதைப் பற்றி சபாநாயகரிடம் கேட்டால் நன்றாக இருக்கும்” என்றார்.

நாடாளுமன்றத்தின் கண்ணியம்

பட மூலாதாரம், ANI

வெறுப்புப் பேச்சுக்கு வெகுமானமா? பா.ஜ.க.வில் என்ன நடக்கிறது?

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி பிதுரிக்கு அறிவிப்பு அளித்து 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு கூறியுள்ளது.

ஆனால், அறிவிப்பு கொடுத்தவர்களுக்கும், அறிவிப்பு கொடுக்கப்பட்டவர்களுக்கும், அந்த நடவடிக்கையில் எந்த அர்த்தமும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். நோட்டீசுக்கு பிதுரி வருத்தம் தெரிவித்த பின்னர் இந்த விவகாரம் அப்படியே விடப்பட்டு பின்னர் மூடி மறைக்கப்படும்.

உண்மையில், முஸ்லீம் சமூகத்தை குறிவைத்து இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்திய முதல் பாஜக தலைவர் ரமேஷ் பிதுரி அல்ல.

நாடாளுமன்றத்துக்குள் இதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்திய முதல் தலைவர் அவர் தான் என்றாலும், நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்துக்கு வெளியே, யோகி ஆதித்யநாத், அனுராக் தாக்கூர், பிரக்யா சிங் தாக்கூர், கிரிராஜ் சிங், ஹிமந்தா பிஸ்வா சர்மா, சாத்வி நிரஞ்சன் ஜோதி போன்றவர்கள் இது போல் பேசியுள்ளனர். இப்படிப் பேசியவர்களின் பட்டியல் மிக நீண்டது என்றாலும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது என்பதே உண்மை.

நாடாளுமன்றத்தின் கண்ணியம்

பட மூலாதாரம், Getty Images

2020 ஆம் ஆண்டில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டங்கள் நடந்துவந்தன. அப்போது அந்தப் போராட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஷாஹீன் பாக்கில் நடைபெற்ற பேரணியில், துரோகிகளை சுட்டுக்கொல்லும் வகையிலான முழக்கங்களை மத்திய இணை அமைச்சராக இருந்த அனுராக் தாக்கூர் முன்னிலையிலேயே அவரது ஆதரவாளர் ஒருவர் எழுப்பினார் .

அவர் மீது எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்ய முடியவில்லை. வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு அவர் கேபினட் அமைச்சராக்கப்பட்டது மட்டுமல்லாமல், இரண்டு முக்கியமான அமைச்சகங்களும் அவரிடம் வழங்கப்பட்டன.

பீகார் பாஜக தலைவர் கிரிராஜ் சிங், மகாத்மா காந்தியின் கொலையாளி நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்றும் கூறியிருக்கிறார்.

பிரதமர் மோதியால் முதல்முறை அமைச்சராக பதவியேற்ற இவர், இரண்டாவது பதவிக் காலத்தில் கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றார்.

போபால் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர். பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்க உருவாக்கப்பட்ட உபா (UAPA) சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், கட்சி அவரை 2019 மக்களவைத் தேர்தலில் போபால் வேட்பாளராக நிறுத்தியது.

தேர்தல் பிரசாரத்தின்போதே, நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்றும், சிறந்த மனிதர் என்றும் அவர் பல அறிக்கைகளில் தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கைகளுக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்திய பிரதமர் மோதி, இந்த அறிக்கைகளுக்காக பிரக்யா தாக்கூரை ஒருபோதும் மனதார மன்னிக்க முடியாது என்று கூறினார். ஆனால் கட்சி அவரது வேட்புமனுவை நிராகரிக்கவில்லை. தற்போது எம்.பி.யாக உள்ள அவர், தினமும் இதுபோன்ற அறிக்கைகளை இன்னும் கொடுத்து வருகிறார்.

பிரக்யா சிங் தாக்கூர் விவகாரத்தில் ஒழுங்காற்றுக் குழுவை பாஜக அமைத்ததா என்பது கூட மக்களுக்கு நினைவில் இல்லை. அந்தக் குழு இதுவரை எந்தக் கூட்டத்தையும் நடத்தவில்லை.

5 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மாவும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் அறிக்கைகளை தொடர்ந்து கொடுத்து வருவதால், பாஜக அவரை அசாம் மாநில முதல்வராக்கியுள்ளது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது, மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி , ‘ராம்சாதே மற்றும் ஹராம்சாதே’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தியபோது, ​​பிரதமர் மோதியே நாடாளுமன்றத்தில் அவரைப் பாதுகாத்து, அவர் பிற்படுத்தப்பட்ட ஜாதி மற்றும் கிராமப்புற பின்னணியில் இருந்து வந்த தலைவர் என்பதால், அவரது பேச்சுக்களை மிகைப்படுத்த கூடாது என்று கூறினார்.

​​ரமேஷ் பிதுரிக்கு சமூக வலைதளங்களில் பாஜக ஆதரவாளர்களிடம் இருந்து வரும் ஆதரவு மற்றும் இந்த உதாரணங்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது அவர் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்குமா என்று தெரியவில்லை.

ஆனால், தேர்தல் நெருங்கும்போது, ​​ஆளும்கட்சியின் தலைவர்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் இப்படிப் பேசும் போக்கு நிற்குமா என்றும், அவர்களுக்கு எதிராக கட்சித் தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்க முடியுமா என்றும் பல அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »