Press "Enter" to skip to content

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், மயுரேஷ் கொன்னூர்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

மக்களவையிலும் மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், இது தனது ‘இலக்கை’ எப்போது அடையும் என்பது குறித்த கேள்விகள் தற்போது எழுப்பப்படுகின்றன.

இந்த இடஒதுக்கீடு 2023இல் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அது எப்போது நடைமுறைக்கு வரும்? 2024ஆம் ஆண்டிலா, 2029ஆம் ஆண்டிலா, 2034ஆம் ஆண்டிலா அல்லது அதற்கும் பின்னரா?

விடை தெரியாத நிச்சயமற்ற இந்த நிலைக்கு காரணம் ‘எல்லை நிர்ணயம்’ (தொகுதி மறு சீரமைப்பு).

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கும் போது இந்தக் கேள்வி ஏன் என்று சந்தேகம் எழலாம். இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அடுத்த பொதுத் தேர்தலுக்கு பிறகு புதிய மக்களவை உறுப்பினர்கள் அவைக்கு வரும்போது 33 சதவீத பெண் பிரதிநிதிகள் இருப்பார்கள் என்பதுதான் பொதுவான புரிதலாக உள்ளது. பிறகு ஏன் நிச்சயமற்ற நிலை?

இதற்குக் காரணம், முன்மொழியப்பட்ட மசோதாவில் உள்ள ஒரு பகுதிதான். அதில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்ட பின்னரே மசோதாவில் உள்ள மாற்றங்கள் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

மகளிர் இட ஒதுக்கீடு எப்போது கிடைக்கும்?

மகளிர் இடஒதுக்கீடு மசோதா

பட மூலாதாரம், Getty Images

மசோதாவில், இடஒதுக்கீடு தொடர்பாக “…அரசமைப்பு (128வது திருத்தம்) சட்டம் 2023-க்கு பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைக்கும் புள்ளிவிவரங்களுக்குப் பிறகு, எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரும். அதன் பின்னர் 15 ஆண்டுகளுக்கு அவை காலாவதி ஆகாது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இட ஒதுக்கீட்டை ஆதரித்தாலும், மறுபுறம் அரசை விமர்சித்து வருகின்றன. ஏனெனில் மசோதாவில் கூறப்பட்டுள்ளவாறு 33 சதவீத இடஒதுக்கீடு எந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பெண்களுக்கு இது கிடைக்கும் என்பது தொடர்பாக யாரிடமும் சரியான பதில் இல்லை.

மசோதா தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மக்களவையில் பேசும்போது, “நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். கடந்த 13 ஆண்டுகளாக இந்த அரசியல் பொறுப்புக்காக இந்தியப் பெண்கள் காத்திருக்கிறார்கள்.

இப்போது இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்கும்படி அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எத்தனை ஆண்டுகளுக்கு? இரண்டு ஆண்டுகளா? நான்கு ஆண்டுகளா? ஆறு ஆண்டுகளா? அல்லது எட்டு ஆண்டுகளா?” என்று கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது மற்ற எதிர்க்கட்சி எம்பிக்களும் இதே கேள்வியை எதிரொலித்தனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்பதற்கும் தொகுதி மறு சீரமைப்பு எப்போது செய்யப்படும் என்பதற்கும் எந்தக் காலக்கெடுவும் இல்லை.

ஏன் அப்படி என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன்பாக இந்த செயல்முறைகளைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

சென்செக்ஸ் – தொகுதி மறுசீரமைப்பு – மகளிர் இடஒதுக்கீடு

மகளிர் இடஒதுக்கீடு மசோதா

பட மூலாதாரம், ANI

இந்தியாவில், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தொகுதிகள் மக்கள்தொகை அடிப்படையில் அவ்வப்போது மறுசீரமைப்பு அல்லது மறுவரையறை செய்யப்படுகின்றன. இந்த மறுசீரமைப்புடன், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் முறையான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக, ‘ஒரு நபர், ஒரு வாக்கு’ என்ற கருப்பொருளின்படி, வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப, தொகுதிகளின் எண்ணிக்கையும் காலப்போக்கில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில், 1976ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசமைப்பு திருத்தத்திற்குப் பிறகு 2001ஆம் ஆண்டு வரை மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்வது நிறுத்திவைக்கப்பட்டது. 2001இல் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட அரசமைப்புத் திருத்தம் மூலம் இது 2026ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2008இல், நாட்டின் சில மாநிலங்களில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டு, அதன்படி அடுத்த தேர்தல்கள் 2009 முதல் நடத்தப்பட்டன. ஆனால் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இதனால் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக தொடர்ந்தது.

அதேநேரம், நாட்டின் மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது. வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விகிதாசாரங்களில் நகரமயமாக்கலின் வேகம் அதிகரித்து, தற்போது மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது. எனவே, ஒவ்வொரு வாக்காளருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க மக்களவை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று கருதப்படுகிறது.

தொகுதி மறுவரையறைக்குப் பிறகு (எல்லை நிர்ணயம்) பெண்களுக்கான இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என்று இப்போது அரசு சொல்கிறது. எனவே, எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் இடங்களிலிருந்து இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா

பட மூலாதாரம், Getty Images

தொகுதி எல்லை நிர்ணயம் மற்றும் விரிவாக்கத்திற்கான அடிப்படையாகப் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு தசாப்தத்தின் முதல் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

கடைசியாக இந்தியாவில் 2011இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எப்போது நடக்கும் என்று உறுதியாக தெரியவில்லை.

காலதாமதத்திற்கு கோவிட் தோற்று காரணம் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயம் அரசாங்கத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

நிச்சயமாக, 2001ஆம் ஆண்டு அரசமைப்பு திருத்தத்தின்படி, மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 2026க்குப் பிறகுதான் அதிகரிக்க முடியும். இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில், 2026க்கு பிறகு, 2031இல் நடைபெறும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு, மறுசீரமைப்பு மற்றும் புதிய தொகுதிகளுக்கான விரிவாக்கத்தைக் காணும். அதுவரை, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தற்போதைய தொகுதிகள் அமைப்பு அப்படியே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மறுவரையறை என்றால் என்ன?

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தொகுதிகளை மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயம் செய்வதே மறுவரையறை என்று அழைக்கப்படுகிறது. மாறிவரும் மக்கள் தொகைக்கும் ஏற்ப இதுவொரு தொடர்ச்சியான செயல்முறையாகும். இதற்காகவே தொகுதி மறுவரையறை ஆணையம் நிறுவப்பட்டது.

1952, 1962, 1972 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் சட்டம் மூலம் இந்த ஆணையம் நிறுவப்பட்டது. இந்த ஆணையத்திற்கு அரசமைப்பின் மூலம் அதிகாரங்களும் சுயாட்சியும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் முறையீடு செய்ய முடியாது.

எந்த ஒரு தொகுதி அமைப்பிற்கும் மக்கள் தொகையே அளவுகோல். ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள்தொகை விகிதத்தின் அடிப்படையில் மக்களவை இடங்களைப் பெறுகின்றன. ‘ஒரு நபர், ஒரு வாக்கு’ என்ற கோட்பாட்டின்படி, ஒவ்வொரு வாக்குக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். ஆறு சட்டப்பேரவை தொகுதிகள் இணைந்து ஒரு மக்களவை தொகுதியாக மாறியுள்ளது.

தற்போது உள்ள தொகுதிகள் 2001ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2002இல் அமைக்கப்பட்ட ஆணையத்தால் உருவாக்கப்பட்டன. 2002இல் செய்யப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தின்படி, 2026க்குப் பிறகு முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு வரை தொகுதிகள் மறுசீரமைக்கப்படாது, அதுவரை அதே தொகுதிகள் நடைமுறையில் இருக்கும். 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த அரசு முடிவு செய்யாவிட்டால், 2026க்குப் பிறகு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2031இல் நடைபெறும்.

மகளிர் இடஒதுக்கீடு – 2024 தேர்தலில் இல்லையென்றால் பின்னர் எப்போது?

மகளிர் இடஒதுக்கீடு மசோதா

பட மூலாதாரம், ANI

2031 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, இறுதிப் புள்ளி விவரங்களைப் பெற்று அதன் அறிக்கையைச் சமர்ப்பிக்க சிறிது காலம் எடுக்கும். அதன் பின்னர் தொகுதி மறுவரையறை ஆணைக்குழுவின் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

அந்தச் செயல்முறையை முடித்து, இறுதியாக மறுசீரமைப்பு மற்றும் அதிகரிக்கப்பட்ட தொகுதிகளை அறிவிப்பதற்கு நீண்ட காலம் ஆகும். திட்டமிட்டபடி 2031இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தால், 2029ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கு பிறகுதான் மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்.

அரசியல் ஆய்வாளரும் ஆர்வலருமான யோகேந்திர யாதவ், இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வருவதற்கு 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் என்று சமூக வலைதளமான ‘X’ இல் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“இந்திய அரசமைப்பு சட்டம் 82 (2001 இல் திருத்தப்பட்டது) 2026க்குப் பிந்தைய முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களுக்கு முந்தைய தொகுதி மறுவரையறையைக் கிட்டத்தட்ட தடுக்கிறது.

தொகுதி மறுவரையறை ஆணையம் அதன் இறுதி அறிக்கையை வழங்க 3 முதல் 4 ஆண்டுகள் வரை ஆகும் (கடைசியாக 5 ஆண்டுகள் எடுத்தது) என்பது பெரும்பாலான பார்வையாளர்களுக்கு நினைவில் இல்லை. தவிர, மக்கள் தொகை விகிதாச்சார மாற்றங்களைக் கருத்தில் கொள்ளும்போது மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுவரையறை மிகவும் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம்.

எனவே 2037இல் அல்லது அதற்குப் பிறகே இறுதி அறிக்கை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம், அப்படியிருக்கும்போது 2039இல் தான் மகளிர் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும்,” என்கிறார் யோகேந்திர யாதவ்.

விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் – மத்திய அரசு கூறுவது என்ன?

மகளிர் இடஒதுக்கீடு மசோதா

பட மூலாதாரம், Getty Images

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்காக காத்திருக்காமல் மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், வரும் 2024 தேர்தலில் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தன. இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதைத் தடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மக்களவையில் தனது உரையின் போது ராகுல் காந்தி கூறினார்.

இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதைக் காலவரையின்றி நீட்டித்ததன் பின்னணியில் பாஜக அரசின் அரசியல் இருப்பதாகவும், வரும் தேர்தலில் பெண் வாக்காளர்களின் வாக்குகளைக் கருத்தில் கொண்டு ஒன்பதரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

ஆனால் அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய நடைமுறைகளை முடித்த பின்னரே இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.

மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்குப் பதிலளித்து உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளிப்படைத்தன்மை என்பது இங்கு முக்கியமான பிரச்னை என்று கூறினார். இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறை ஆணையமே முடிவு செய்ய வேண்டும்.

ஆனால் 2001ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் காரணமாக 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மட்டுமே ஆணையத்தால் அறிக்கை தயாரிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா

பட மூலாதாரம், ANI

“எந்த இடங்களை ஒதுக்குவது என்பதை யார் முடிவு செய்வார்கள்? அதை நாங்கள் அரசாங்கம் செய்ய வேண்டுமா? மகளிருக்கு வயநாடு தொகுதி ஒதுக்கப்பட்டாலோ அல்லது ஒவைசியின் ஹைதராபாத் ஒதுக்கப்பட்டாலோ, அரசியல் உள்நோக்கத்துடன் இது நடந்ததாக நீங்கள் புகார் கூறுவீர்கள்.

எனவே இப்பணியை தொகுதி மறுவரையறை ஆணையத்திடம் ஒப்படைப்பதே சரியாக இருக்கும். இந்த ஆணையம் பகுதி நீதிசார் அதிகாரமாக உள்ளது. இது ஒவ்வொரு இடத்துக்கும் சென்று, வெளிப்படையான கருத்துகளைக் கேட்டு இந்த இடஒதுக்கீட்டு செயல்முறையை வெளிப்படையான முறையில் நடத்துகிறது. எனவே வெளிப்படைத்தன்மை மட்டுமே இந்த முடிவின் பின்னணியில் உள்ள ஒரே பிரச்னை. பாரபட்சம் இருக்கக்கூடாது,” என்றார் அமித் ஷா.

இட ஒதுக்கீட்டிற்கும் தொகுதி மறுவரையறைக்கு என்ன தொடர்பு என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வியாக இருக்கிறது. “பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது ஏன் முதலில் தொகுதி மறுவரையறை உடன் இணைக்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் (அரசு) விளக்கத் தவறிவிடுவார்கள்.

பாஜக 2010இல் அத்தகைய நிபந்தனைகள் எதுவும் விதிக்காமல் மசோதாவை ஆதரித்தது. 2024ஆம் ஆண்டு தேர்தலில் பெண்களின் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் அவர்களின் வாக்குகளை பெறுவதற்கான பிரதமரின் தீவிர முயற்சியைத் தவிர வேறில்லை,” என்று மாநிலங்களை காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தப் போவதில்லை என்றால், சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி அவசர அவசரமாக மசோதாவைக் கொண்டு வந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இட ஒதுக்கீட்டை எப்படி அமல்படுத்துவது?

மகளிர் இடஒதுக்கீடு மசோதா

பட மூலாதாரம், Getty Images

அரசியல் ஆய்வாளர் அபய் தேஷ்பாண்டே இது தொடர்பாக கூறுகையில், “2024 தேர்தலை கருத்தில் கொண்டு இந்த இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. மக்கள் தொகையில் பாதியளவு இருக்கும் பெண் வாக்காளர்களின் கேள்வியாக இந்த இட ஒதுக்கீடு இருக்கிறது. அவர்கள் அதை ஈர்க்க விரும்புகிறார்கள்.

ஆனால் 2026 காலக்கெடு முடிந்ததும், இந்த இடஒதுக்கீட்டை விரைவில் கொண்டு வர அரசு ஏதாவது செய்யும். எப்படி என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், குறைந்த பட்சம் அடுத்த இரண்டு தேர்தல்களிலாவது இந்த இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை,” என்றார்.

முன்னதாக, மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு உரிமை கொண்டாடுவது தொடர்பாக காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தற்போது, இட ஒதுக்கீட்டை எப்படி அமல்படுத்துவது என்பதுதான் முக்கியமான பிரச்னையாக இருக்கிறது.

வாக்காளர்களின் பார்வையிலும் இது முக்கியமானது. பல ஆண்டுகளாக முட்டுக்கட்டையாக இருந்த இட ஒதுக்கீடுதான் இப்போது சட்டப்படி வழங்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இட ஒதுக்கீட்டை விரைவில் அமல்படுத்தாமல் இருப்பதால் அவர்களிடம் அது அதிருப்தியை ஏற்படுத்துமா?

வரவிருக்கும் தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கான இட ஒதுக்கீடு இருக்காது. அதேநேரம், இந்த பிரச்னை தேர்தல் களத்தில் சூடு பிடிக்கும் என்பது உறுதி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »