Press "Enter" to skip to content

நிஜ்ஜார் கொலை: கனடாவால் இந்தியாவுக்கு நெருக்கடி தர முடியுமா? சர்வதேச சட்டம் கூறுவது என்ன?

அண்மையில், காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜென்சிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தேகம் தெரிவித்திருந்தார்.

இந்த கடுமையான குற்றச்சாட்டிற்குப் பிறகு, இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. கனடா தனது குற்றச்சாட்டிற்கு இதுவரை எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. இருப்பினும் ஒரு விவாதம் வெடித்துள்ளது.

கனடாவின் குற்றச்சாட்டுகளை இந்தியா முழுமையாக நிராகரித்துள்ளது. மாறாக, அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பல நாடுகள் கடந்த காலங்களில் மற்ற நாடுகளில் ‘குறிவைத்து கொலை செய்யும்‘ நிகழ்வுகளை அரங்கேற்றி அவற்றை நேரடியாகவும் ஏற்றுக்கொண்டும் இருக்கின்றன.

உதாரணமாக, பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது. இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்தை மீறுவதாக பல நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அமெரிக்காவிற்கு எதிராக நேரடியான கேள்வி எதுவும் எழுப்பப்படவில்லை.

இதுபோன்ற வழக்குகளில் சர்வதேச சட்டம் என்ன சொல்கிறது என்பதை அறியும் முன், இந்தியா மீது கனடா முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையும், இந்தியாவின் பதிலையும் பார்ப்போம்.

கனடாவின் குற்றச்சாட்டுகள்

கனடா பிரதமர் ட்ரூடோ செப்டம்பர் 18 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, “கனடா மண்ணில் கனடா குடிமகன் ஒருவரைக் கொன்றதில் எந்தவொரு வெளிநாட்டு அரசின் பங்கையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது நமது இறையாண்மையை மீறுவதாகும்,” என்றார்.

இது தொடர்பாக, இந்தியாவின் உயர் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கனடா தனது கவலையை தெரிவித்திருந்தது.

“கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது, ​​இந்த தகவலை நானே நேரடியாக பிரதமர் நரேந்திர மோதியிடம் தெரிவித்திருந்தேன்.”

ட்ரூடோவின் இந்த குற்றச்சாட்டை அடுத்து, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முதலில் கனடா இந்திய தூதர் ஒருவரை வெளியேற்றியது. பின்னர் இந்தியா ஒரு கனடா தூதர் ஒருவரை வெளியேற்றியது.

கனடா செல்லும் தனது குடிமக்களுக்கு இந்தியா ஒரு பயண அறிவுரையை கூட வெளியிட்டுள்ளது .

மற்றொரு நடவடிக்கையில், கனடா குடிமக்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்திவைத்துள்ளது.

அதை அங்குள்ள பாதுகாப்பு நிலவரத்துடன் இணைத்து, தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்று இந்தியா கூறியுள்ளது.

இந்தியா-கனடா நாடுகளுக்கு இடையே கசப்புணர்வு

பட மூலாதாரம், FB/VIRSA SINGH VALTOHA

அமெரிக்கா, ஆஸ்திரேலியா கூறுவது என்ன?

நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜென்சிகள் மீது அச்சம் தெரிவித்த ட்ரூடோ, இந்தக் கொலை தொடர்பான விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விசாரணையில் இந்தியா முழு வெளிப்படைத்தன்மையுடன் ஒத்துழைத்து உண்மையைக் கண்டறிய உதவ வேண்டும் என்றார்.

அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கனடாவின் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்று விவரித்துள்ளன, மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்க இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

மறுபுறம், இந்தியா தனது ஏஜென்சிகளுக்கு எதிரான நிஜ்ஜார் கொலை குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்துள்ளது.

வியாழனன்று, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “குற்றச்சாட்டிற்கு முன்னரோ அல்லது பின்னரோ கனடாவிலிருந்து எந்த உளவுத் தகவல்களும் வரவில்லை” என்றார். “நாங்கள் எந்த குறிப்பிட்ட தகவலையும் பார்க்க விரும்புகிறோம். ஆனால் இன்னும் கனடா எங்களிடம் எதையும் காட்டவில்லை.” என்றும் அவர் கூறினார்.

இந்தியா-கனடா நாடுகளுக்கு இடையே கசப்புணர்வு

பட மூலாதாரம், Getty Images

‘குறிவைத்துக் கொலை செய்வது’ பற்றி வெடித்த விவாதம்

நிஜ்ஜாரின் கொலையில் இந்தியா தனது ஏஜென்சிகள் எதற்கும் தொடர்பு இல்லை என்று மறுத்திருக்கலாம். ஆனால் இந்த விவகாரம் கிளம்பிய பிறகு, வெளிநாட்டில் இதுபோன்ற கொலைகள் நடந்ததாகக் கூறப்படுவது பற்றிய விவாதம் வெடித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா போன்ற நாடுகள், தங்களின் எதிரிகளை அந்நிய மண்ணில் கொலை செய்த சம்பவங்கள் நடந்த நிலையில், சர்வதேச சட்டம் இதுபோன்ற கொலைகளை அனுமதிக்கிறதா?

ஒரு நாடு தனது எதிரியாகக் கருதப்படும் ஒருவரை அந்நிய மண்ணில் கொல்ல முடியுமா?

ஒரு நாட்டில் வெளிநாட்டு ஏஜென்சியால் நடத்தப்படும் இதுபோன்ற கொலைகள் அந்நாட்டின் இறையாண்மையை மீறும் சம்பவங்களா?

சர்வதேச சட்டம் இதை அனுமதிக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்போம்.

மீறப்படும் இறையாண்மை

சர்வதேச சட்டங்களின்படி, ஒரு நாட்டில் வெளிநாட்டு ஏஜென்சிகளால் குறிவைத்துச் செய்யப்படும் கொலைகள் அந்நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக கருதப்படும்.

அவ்வாறு செய்வது சம்பவம் நடக்கும் நாட்டின் இறையாண்மையை மீறுவதாகும்.

இது ஒரு நாடு மற்றொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்கும் அடிப்படைச் சட்டத்தையும் மீறுவதாகும்.

அனைத்து உறுப்பு நாடுகளும் வேறு எந்த நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக அச்சுறுத்தல் அல்லது சக்தியைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறும் ஐ.நா. சாசனத்திற்கும் இது எதிரானது.

2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஈராக்கில் ட்ரோன் தாக்குதலில் ஈரான் ஜெனரல் காசிம் சுலேமானியை அமெரிக்கா கொன்றது.

பல ‘பாலஸ்தீன தீவிரவாதிகளை’ இதே போல் குறிவைத்துத் தாக்கி அழித்ததாக இஸ்ரேலும் ஒப்புக் கொண்டுள்ளது.

ஈரானின் அணு விஞ்ஞானிகளை கொன்றதாகவும் இஸ்ரேல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒரு நாட்டிற்கு அதன் ‘எதிரிகளை’ அல்லது ‘தீவிரவாத தாக்குதல் நடத்துபவர்களை’ கொல்லும் உரிமை உண்டு என்று கூறி இதுபோன்ற கொலைகளை நியாயப்படுத்த முடியுமா?

இந்தியா-கனடா நாடுகளுக்கு இடையே கசப்புணர்வு

பட மூலாதாரம், Getty Images

‘குறிவைத்து கொலை செய்வதற்கு‘ ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள்

ஆயுதமேந்திய மோதலின் போது ‘எதிரியை’ கொல்ல தங்களுக்கு உரிமை உண்டு என்று உலகின் பல நாடுகள் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.

பின் லேடன் மற்றும் சுலைமானி இருவரும் கொல்லப்பட்ட நேரத்தில், ‘அவர்கள் தனக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனர்’ என்று அமெரிக்கா வாதிட்டது.

அதனால் தற்காப்புக்காக அவர்களைக் கொன்றதாக அமெரிக்கா தெரிவித்தது. இது சர்வதேச சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும்.

ஆனால் இத்தகைய கொலைகளை எதிர்ப்பவர்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கூற்றுப்படி, இத்தகைய கொலைகளை நியாயப்படுத்த முடியாது. ஏனென்றால் குறிவைத்துக் கொல்லப்பட்டவர்களுக்கு சட்டப்படி, நீதிமன்றத்தில் தங்களை தற்காத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படவில்லை என வாதிடப்படுகிறது.

அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியனின் இணையதளத்தின்படி, உறுதியான, தீவிரமான மற்றும் உடனடி அச்சுறுத்தலுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமின்றி, அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டங்கள் ஆயுத மோதல் மண்டலத்திற்கு வெளியே அமெரிக்கப் படையை பயன்படுத்த அனுமதிப்பதில்லை.

அந்தச் சட்டத்தின் படி, “ஆயுதக் குழுக்களுக்கு எதிரான ஆயுத மோதல்களின் போது கூட, அமெரிக்காவிற்கு எதிரான நேரடி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மட்டுமே அமெரிக்க அரசு தனது ராணுவ சக்தியைப் பயன்படுத்தலாம்.”

“அரசு ராணுவ சக்தியைப் பயன்படுத்தும் போதெல்லாம், அருகிலுள்ள குடிமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் அமெரிக்காவில், நிர்வாக அனுமதியுடன் அத்தகைய சக்தியைப் பயன்படுத்தும் போது இந்த தரநிலைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.”

பாகிஸ்தான், சோமாலியா, ஏமன் மற்றும் பிற இடங்களில் அமெரிக்கா இத்தகைய சட்டவிரோத ‘குறிவைத்து கொலை செய்யும்’ சம்பவங்களை நடத்தியதாக அந்த இணையதளம் கூறுகிறது. அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அதற்கு பொறுப்பேற்கும் நிலை ஏற்படும்.

இந்தியா-கனடா நாடுகளுக்கு இடையே கசப்புணர்வு

பட மூலாதாரம், JUSTINTRUDEAU

சர்வதேச சட்ட நிபுணர்களின் கூற்றுப்படி, கனடா இந்தியா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள போதிலும், இதுவரை எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. அத்தகைய சூழ்நிலையில், கனடாவின் வாதம் வலுவற்றதாகிவிடுகிறது.

இந்த விவகாரத்தை கனடா சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லலாம், அங்கே வழக்கு தொடரலாம் என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் அங்கும் கனடாவுக்குச் சாதகமாக முடிவு வர வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இதனால் இந்தியாவுக்கு சிக்கல் எழ வாய்ப்பில்லை, இந்தியாவுக்கு எந்த நெருக்கடியும் வராது என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

இரு நாடுகளுக்கு இடையே ஆயுத மோதல்கள் நடக்கும் போது அந்த வழக்குகளில் சர்வதேச நீதிமன்றம் முடிவு எடுப்பதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அல் ஜசீரா கூற்றின்படி, நிஜ்ஜாரின் கொலையில் இந்திய ஏஜென்சிகளின் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இருந்தால், அது சர்வதேச சட்டத்திற்கு எதிரானதாக கருதப்படலாம் என்று சர்வதேச சட்டப் பேராசிரியர் மார்கோ மிலானோவிக் கூறினார். ஆனால் கனடாவின் தற்போதைய குற்றச்சாட்டு சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

சர்வதேச நீதிமன்றத்தில் இதுபோன்ற நாடுகளுக்கு இடையேயான சர்ச்சைகள் தொடர்பான வழக்குகள் மிகக் குறைவாகவே விசாரிக்கப்படுகின்றன என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கோட்பாட்டளவில், சர்வதேச நீதிமன்றம் (ஐக்கிய நாடுகள் சபையின் முதன்மை நீதித்துறை அமைப்பு) எந்த வழக்கையும் விசாரிக்க முடியும் (எந்தவொரு நாடும் ஒரு நபரைக் கொலை செய்யும் வழக்கும் இதில் அடங்கும்.)

எது எப்படி என்றாலும், இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பு காமன்வெல்த் உறுப்பு நாடுகளுக்கு இடையில் செல்லாது என்று இந்தியா மற்றும் கனடா ஆகிய இரண்டும் அறிவித்துள்ளன.

‘ஃபைவ் ஐஸ்’ கூட்டணி மற்றும் கொலை விசாரணை

‘ஃபைவ் ஐஸ்’ இன்டலிஜென்ஸ் கூட்டணியில் கனடாவும் உறுப்பினராக உள்ளது.

இந்த கூட்டணியில் பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகியவை அடங்கும்.

காலிஸ்தானி ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் 18 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முன்பே அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கனடா பாதுகாப்பு உளவுத்துறை எச்சரித்ததாக கூறப்படுகிறது.

கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆலோசகர் ஜோடி தாமஸ் ஆகஸ்ட் மாதத்தில் நான்கு நாட்களும், செப்டம்பரில் ஐந்து நாட்களும் இந்தியாவில் இருந்தார்.

கனடாவின் பிரதமர் ட்ரூடோ, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், இந்த விஷயத்தை பாராளுமன்றத்தில் மிகத் தீவிரமாக எழுப்புவதற்கான முடிவை எடுத்ததாகக் கூறினார்.

தற்போது தமது அரசாங்கம் அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை எனவும், சட்ட நடவடிக்கையின் போது இந்த ஆதாரங்கள் வெளிவரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை அறிக்கைகள் குறித்து கனடா துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்டிடம் கேட்கப்பட்டபோது, ​​விசாரணை மற்றும் கனடாவின் ‘ஃபைவ் ஐஸ்’ நட்பு நாடுகளுக்கான பொறுப்பை தன்னால் வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாது என்று கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »