Press "Enter" to skip to content

“அரசியல் என்பது ஆண்களின் உலகம்தான்” – பிபிசி பேட்டியில் கனிமொழி கூறியது என்ன?

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிபிசியிடம் பேசினார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றிற்கான பதில்களும் இங்கே தரப்பட்டுள்ளன.

கேள்வி: நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றங்களிலும் இந்த மசோதா எந்த மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: இப்போது, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களே இல்லை என்று சொல்லக்கூடிய விதத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருக்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள நேபாளம், பங்ளாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருப்பதை விட இங்கே மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பெண்கள் தான் இந்திய நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்த 33 சதவிகித இட ஒதுக்கீடு என்பது, நாடாளுமன்றத்தில் அல்லது சட்டமன்றங்களில் புதிய சட்டங்கள் இயற்றப்படும் போது அல்லது அரசு ஏதாவது முடிவுகளை எடுக்கும் போது, முக்கிய முடிவுகளை எடுக்கும் உரிமையை பெண்களுக்கு அளிப்பதோடு, பெண்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் நிச்சயமாகக் கிடைக்கும்.

கேள்வி: நிச்சயமாக. இப்படி பெண்களின் குரல் ஒலிப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் ஒரு பெண் பதவி பெறும் போதே இந்த மாற்றம் நடக்கும் என்று உறுதியாகச் சொல்லமுடியுமா? ஏனென்றால், சாதாரணமாக உள்ளாட்சி அமைப்புக்களில் பெண்கள தேர்ந்தெடுக்கப்படும் போது கூட, நடைமுறையில் அவர்கள் செயல்பட முடியாத நிலை காணப்படுகிறதே?

பதில்: இல்லை. இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களுடைய கூற்றை நான் முற்றிலுமாக நிராகரிக்கவில்லை. பல இடங்களில், ஒரு பதவிக்கு பெண் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றால், அவருக்குப் பதிலாக அவரது சகோதரரோ, தந்தையோ, கணவரோ முடிவுகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பெயரளவில் தான் பெண்கள் பொறுப்புக்களில் இருக்கும் சூழல் காணப்படுகிறது. இதை நான் மறுக்கவில்லை. இது போல் ஒரு சில இடங்களில் நடந்தாலும், நிறைய இடங்களில் பெண்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து, தாங்கள் முடிவுகளை எடுக்கவேண்டும் என்ற நிலைக்கு இப்போது மாறியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் செயல்படுவதில்லை என்ற கருத்தை நான் ஏற்கவில்லை.

கனிமொழி பேட்டி

பட மூலாதாரம், Getty Images

கேள்வி: நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் என்பது உள்ளாட்சி பதவிகளைப் போன்றது அல்ல. இது போன்ற பொறுப்பு மிக்க பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் போது தன்னிச்சையான முடிவுகளை எடுத்து பெண்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள் என நினைக்கிறீர்களா?

பதில்: இப்போது பெண்கள் பல துறைகளில் செயல்பட்டுக் கொண்டுள்ளனர். வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள், பத்திரிக்கையாளர்களாக இருக்கிறார்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள், ஐஏஎஸ் அலுவலர்களாக இருக்கின்றனர். இப்படி நிறைய துறைகளில் அவர்கள் ஏற்கெனவே செயல்பட்டு வரும் நிலையில், அவர்கள் செயல்படுவதற்கான வழிகள் இருக்கின்றன என்பது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களுக்கு நியாயமான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

கேள்வி: அந்த அங்கீகாரம் தற்போதைய அரசியல் கட்சிகளுக்கு உள்ளே இருக்கிறது என்று சொல்கிறார்களே?

பதில்: இல்லை. அரசியல் கட்சிகளுக்குள்ளும் போதுமான அங்கீகாரம் இல்லை. அதனால் தான் இது போன்ற சட்டங்கள் தேவை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இந்த அங்கீகாரம் பெண்களுக்குக் கிடைக்கவேண்டும்.

கேள்வி: தற்போதுள்ள அரசியல் கட்சிகளில் பெண்களுக்கான இடம் கிடைப்பதற்கு என்ன மாதிரியான மாற்றங்கள் தேவை?

பதில்: ஆண்களுக்கு இணையாக பல முடிவுகளை எடுப்பது, நிதி ஆதாரங்களைச் செலவு செய்வது போன்ற விஷயங்களில் பெண்கள் ஈடுபட முடியாத நிலையே தற்போது காணப்படுகிறது. இது போன்ற ஒரு சூழலில் பெண்களை முழுமையாக அங்கீகரிப்பதில் ஒரு பெரும் தயக்கம் நிலவுகிறது. அது நிச்சயமாக மாற வேண்டும். பல நேரங்களில் பெண்களின் குரலை பெரும் இயக்கங்கள் கேட்பதில்லை. அவர்களுடைய உழைப்புக்கான மரியாதை இல்லை. இதெல்லாம் நிச்சமாக மாறவேண்டும். இட ஒதுக்கீடு என்பது அந்த மாற்றத்தை இன்றும் வேகமாகக் கொண்டுவரும்.

கேள்வி: கருணாநிதியின் மகள் என்பதைத் தாண்டி, அரசியலில் இந்த அளவுக்கு வளர்ந்துள்ள நிலையில், உங்களுடைய பயணம் எப்படி இருந்தது?

பதில்: அரசியல் என்பது ஒரு ஆண்களின் உலகம் தான். இன்றைய நிலையில் இது தான் நிதர்சனம். இது மாறவேண்டும். அப்படி இருக்கக்கூடிய நிலைகளை நிச்சயமாக மாற்றவேண்டும். நான் பத்திரிக்கையில் இருந்த போது விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் தான் பெண்கள் இருந்தனர். அப்போதும், இன்று வரையும் என்னைப் பொறுத்தளவில் பெண்களுக்கான மதிப்பு குறைந்தே உள்ளது.

ஒரு ஆண் சொல்லும் போது கேட்கும் உலகம், அதே விஷயத்தை ஒரு பெண் சொல்லும் போது கேட்பதில்லை. இது போன்ற சவால்களைத் தான் நானும் கடந்து வந்துள்ளேன். இப்படி வந்து தான் நாம் யாரென்று நிரூபிக்கவேண்டும். என்னைப் போல் நிறைய பெண்கள் ஏற்கெனவே வளர்ந்திருந்தனர். அவர்களுடைய தடத்தைப் பின்பற்றித் தான் நான் வந்துள்ளேன். அப்படிப் பார்த்தால், இன்றைய பெண்கள், அடுத்த தலைமுறைக்கான வழியை உருவாக்கியுள்ளனர். அதே போல் நம்முடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் போது, அது வருங்காலப் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் இருக்கும்.

கனிமொழி பேட்டி

பட மூலாதாரம், Getty Images

கேள்வி: இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் கூட, மேல் தட்டு வகுப்புகளைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே அந்த இடங்களை அபகரித்துக் கொள்ளும் நிலை இருக்கிறது என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இதிலும் சமூக ரீதியான இட ஒதுக்கீடு வேண்டும் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதே?

பதில்: ஆமாம். இதைப் பற்றிப் பேசுகையில், நம்முடைய முதலமைச்சர் கூட, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் தமிழகத்தில் எப்படிப்பட்ட சூழல் நிலவுகிறது என்பது உங்களுக்கே தெரியும். நிச்சயமாக இங்கு அதுபோன்ற நிலை இல்லை. இதுபோன்ற ஒரு நிலையில், இந்த மசோதா, எல்லோருக்குமானதாக இருக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

கேள்வி: இந்த மசோதாவை அமல்படுத்துவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பதுடன், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்ற இரண்டு நிலைகளைக் கடந்து செல்லவேண்டும் என்கிற சூழலில், இது இந்த மசோதாவுக்கான தடைகள் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: நிச்சயமாக. ஏற்கெனவே நடந்து முடிந்திருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் நடக்கவில்லை. எப்போது நடக்கும் என்பதும் யாருக்கும் தெரியாது.பத்து அல்லது இருபது ஆண்டுகள் கழித்தும் கூட இது நடக்கலாம். அதற்குப் பின் தொகுதி மறுசீரமைப்பு செய்யவேண்டிய தேவை இருக்கிறது. அதற்கும் கால அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில், இந்த மசோதா எந்த கால வரையறைக்குள் அமல்படுத்தப்படும் என்பதையாவது தெளிவுபடுத்த வேண்டும். இதனால், இந்த மசோதா குறித்து ஒரு நிச்சயமற்ற தன்மை காணப்படுகிறது.

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் இந்த மசோதாவை பாஜக கையில் எடுத்தது ஒரு தேர்தல் உத்தி என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: இந்த மசோதாவை நிறைவேற்ற தொடர்ந்து பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இந்த மசோதா குறித்து தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி போன்றவர்கள் இந்த மசோதாவுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து பிரதமர்களுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதப்பட்டு வருகின்றன.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டெல்லியில் அனைத்து கட்சிகளின் பெண் தலைவர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் அடங்கிய கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற அழுத்தங்கள் தொடர்ந்து இருந்த போதிலும் கடந்த 9 ஆண்டுகளாக பாஜக இந்த மசோதாவைப் பற்றி சிந்திக்கவில்லை. நானும் நாடாளுமன்றத்தில் இது குறித்து வலியுறுத்தியபோது, அனைத்து கட்சிகளையும் ஆலோசித்து ஒரு முடிவெடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்த நிலையில், தற்போது தேர்தலுக்கு முன்பாக யாரையும் கலந்தாலோசிக்காமல் மிகவும் ரகசியமாக இந்த மசோதாவை நிறைவேற்றியிருக்கின்றனர். எனவே நிச்சயமாக இதுபோன்ற சந்தேகங்கள் எழத்தான் செய்யும்.

கனிமொழி பேட்டி

பட மூலாதாரம், Getty Images

கேள்வி: இந்த மசோதா நிறைவேறியிருப்பது, ஒரு பெண் என்ற முறையில் உங்களுக்கு என்ன மாதிரியான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது?

பதில்: இது உண்மையில் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இந்த இட ஒதுக்கீடு எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை உறுதியாக அறிவித்தால், இன்னும் ஒரு முழுமையான மகிழ்ச்சி ஏற்படும்.

கேள்வி: தொகுதி மறுசீரமைப்பை மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்வதை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்தச் சூழலில் இந்த மசோதாவை இப்படி ஆதரிப்பதற்கு என்ன காரணம்?

பதில்: ஏனென்றால், பெண்களுக்கான இட ஒதுக்கீடு தேவை என்பதில் திமுக எப்போதுமே மிகவும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. அதனால் தான் இதை எங்கள் கட்சி ஆதரித்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் போது தென்மாநிலங்களுக்கு மிகப்பெரிய ஒரு இழப்பாக அது மாறிவிடக் கூடாது என்பது குறித்தும் நாங்கள் எச்சரித்துள்ளோம். கல்வியை பெரும் அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்து மக்கள் தொகையை நாம் குறைத்திருக்கிறோம். சுகாதாரம், தொழில் போன்ற துறைகளில் நாம் ஏற்கெனவே முன்னேறியுள்ள நிலையில், நாம் வஞ்சிக்கப்படும் இடத்தில் இருக்கக் கூடாது என்பது தான் அனைவரின் அச்சமாக உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »