Press "Enter" to skip to content

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக யாருடன் கூட்டணி?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையிலான கூட்டணி முறிந்துவிட்டதாக இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு, அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

கூட்டணியாக இருந்த பாரதீய ஜனதா கட்சிக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டிருந்த நிலையில், அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 69 மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பலரும் பா.ஜ.கவுடனான கூட்டணி தேவையில்லை என்பதையே வலியுறுத்திவந்தனர்.

இதற்குப் பிறகு, பா.ஜ.கவுடனான கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி அந்தத் தீர்மானத்தை வாசித்தார். “தேசிய ஜனநாயக் கூட்டணியில் உள்ள பா.ஜ.கவின் மாநிலத் தலைமை கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டு, வேண்டுமென்று, உள்நோக்கத்தோடு, அ.தி.மு.க. மீதும் பேரறிஞர் அண்ணாவையும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் அவதூறாகப் பேசியும் எங்களது கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.

அதிமுக vs பா.ஜ.க.

மேலும் பா.ஜ.கவின் மாநிலத் தலைமை கடந்த 20.8.2023ல் மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும் எங்கள் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் நடந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும் விருப்பத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து பா.ஜ.கவிலிருந்தும் தே.ஜ.கூட்டணியிலிருந்தும் அ.தி.மு.க. விலகிக்கொள்கிறது. வருகின்ற 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவின் தலைமையில் பொதுச் செயலாளர் தலைமையில் மற்ற கட்சிகளுடன் இணைந்து போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது” என அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

கூட்டணியிலிருந்து வெளியேறுவது என்ற அ.தி.மு.கவின் தீர்மானம் குறித்த அறிவிப்பு வெளியானதும் அங்கு கூடியிருந்த அக்கட்சியின் தொண்டர்கள் பெரும் உற்சாகத்துடன் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர்.

அதிமுக - பாஜக கூட்டணி

அண்ணாமலை பதில் என்ன?

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்துள்ளது குறித்து கோவையில் நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அதிமுக அறிக்கையை படித்தோம், இது குறித்து தேசிய தலைமை பேசுவார்கள்” என்றார்.

தே.ஜ.கூட்டணி அர்த்தமற்றதாகிவிட்டது- தேஜஸ்வி

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதன் மூலம் தே.ஜ.கூட்டணி அர்த்தமற்றதாகிவிட்டதாக பீகார் துணை முதல்வரும் ராஸ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிடிஐ செய்தி முகமைக்கு பேட்டியளித்துள்ள அவர், “தென்னிந்தியாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மிகப்பெரிய கூட்டணிகட்சியாக இருந்தது, பாஜகவுடனான உறவை முறித்துக் கொள்வது (பாஜகவின்) வாய்ப்புகளை சிதைத்துவிடும். தற்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி அர்த்தமற்றதாகிவிட்டது” என்றார்.

அதிமுக பாஜக கூட்டணி

பட மூலாதாரம், ANI

“8 மாதங்களில் எதுவும் நடக்கலாம்”

பாஜகவைச் சேர்ந்த சி.டி. ரவி, ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், “இன்னும் எட்டு மாதங்கள் உள்ளதால் என்ன நடக்கும் என்பதை இப்போதே கூற முடியாது. கட்சியை பலப்படுத்துவது ஒவ்வொரு நிர்வாகியின் கடமை. அண்ணாமலை தலைமையில் கட்சியை பலப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்.

“அமலாக்கத்துறை நடவடிக்கை அதிகரிக்கும்”

அதிமுகவும் மத்திய அரசின் எதிர்க்கட்சியாக மாறியுள்ளதால் தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை நடவடிக்கை அதிகரிக்கும் என்று திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு அவர் அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் தங்களின் செயல்பாட்டை அமலாக்கத்துறை மேலும் அதிகரிக்கும். மத்திய அரசு எப்போதும் எதிர்க்கட்சிகளை குறிவைத்து வருகிறது. தற்போது அதிமுகவும் எதிர்க்கட்சியாக மாறியுள்ளதால் அவர்களையும் மத்திய அரசு குறிவைக்கும். அண்ணாமலையின் பேச்சு காரணமாகதான் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளார்கள். ஒருவேளை அண்ணாமலை மாற்றப்பட்டால் என்ன நடக்கும் என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும் ” என தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »