Press "Enter" to skip to content

அதிமுக – பாஜக கூட்டணி முறிவால் திமுகவுக்கு என்ன பிரச்னை? அதிமுக தேர்தல் கணக்கு என்ன?

அதிமுக – பா.ஜ.க. இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த உரசல் இரு கட்சிகளின் பிரிவுக்கு வழிவகுத்துள்ளது. பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்துள்ளது. அதிமுக தனது முடிவை அறிவித்த பிறகு மாநில பா.ஜ.க. தலைமை இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக இந்த முடிவுக்கு வந்தது ஏன்? அதன் பின்னணியில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் அரசியல் கணக்கு என்ன? சிவசேனாவைப் போல அதிமுகவில் இருந்தும் ஒரு ஏக்நாத் ஷின்டே உருவெடுப்பாரா? பா.ஜ.க. என்ன செய்யப் போகிறது? அதிமுக முடிவால் திமுகவுக்கு என்ன பிரச்னை?

அதிமுக – பாஜக உறவு எப்போது தொடங்கியது?

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை பரவலாக அறியச் செய்ததில் அதிமுகவுக்கு முக்கிய பங்கு உண்டு என்றால் மிகையல்ல. 1998-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் முதன் முதலாக கூட்டு சேர்ந்த அதிமுக, தங்களது கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக வாஜ்பேயி முகத்தை சுவர் விளம்பரங்கள், பிரசுரங்கள் மூலம் வீட்டிற்கு வீடு கொண்டு போய் சேர்த்தது. அடுத்த ஓராண்டுக்குள்ளேயே அந்த கூட்டணி கசந்துவிட, டெல்லியில் நடந்த தேநீர் விருந்து வாஜ்பாய் அரசின் ஆயுளை 13 மாதங்களில் முடித்துவிட்டது.

அதன் பிறகு 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்த அதிமுகவுக்கு படுதோல்வியே பரிசாக கிடைத்தது. இதையடுத்து, பா.ஜ.க.வுடன் இனிமேல் ஒருபோதும் கூட்டணியே கிடையாது என்று அதிமுகவின் அப்போதைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். அதன் பிறகு அவர் மறையும் வரை நாடாளுமன்றமோ, சட்டமன்றமோ, உள்ளாட்சியோ எந்தவொரு தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணி அமைக்கவே இல்லை.

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசார கூட்டங்களில் “மோடியா? இந்த லேடியா?” என்று முழங்கிய ஜெயலலிதா, அதிமுகவுக்கு பெரும் வெற்றியையும் பெற்றுக் கொடுத்தார்.

அதிமுக vs பா.ஜ.க.

பட மூலாதாரம், Getty Images

ஜெயலலிதா மறைவுக்கு பின் மீண்டும் கூட்டணி

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வென்று ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரான சில மாதங்களிலேயே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். சுமார் இரண்டரை மாதங்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்து பா.ஜ.க.வின் கரங்கள் அதிமுகவுக்குள் ஊடுருவி விட்டதாக அரசியல் அரங்கில் பேச்சுகள் அடிபட்டன.

அதிமுகவில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என ஆளாளுக்கு தலைமைப் பதவிக்கு போட்டியிட ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு நபரை பா.ஜ.க. மறைமுகமாக ஆதரித்ததாக செய்திகள் வெளியாயின. அதிமுக உள்கட்சிப் பிரச்னையில் பா.ஜ.க. தலையீடு இருந்ததை ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி ஆகியோர் பகிரங்கமாக பொதுவெளியிலும் தெரியப்படுத்தியுள்ளனர்.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பா.ஜ.க. கூட்டணி மீண்டும் அரும்பியது. அதன் தொடர்ச்சியாக 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி நீடித்தது. அந்த தேர்தலில் கிடைத்த தோல்விக்குப் பிறகு அதிமுகவிலும், பா.ஜ.கவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் அரசியல் அரங்கிலும் நேரடியாக எதிரொலித்தது.

எடப்பாடி பழனிசாமி – அண்ணாமலை உறவு

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வில் மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி கட்சியின் ஒரே தலைமையாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்தார். இதன் பிறகுதான், அதிமுக – பா.ஜ.க உறவில் கசப்புகள் தோன்றின.

அதிமுகவை ஓரங்கட்டிவிட்டு, தமிழ்நாட்டில் திமுக vs பா.ஜ.க. இரு துருவ அரசியல் தொடங்கி விட்டதாக அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் பேசி வந்தது அதிமுகவை எரிச்சலடையச் செய்தது. அதுகுறித்தே பல முறை பகிரங்கமாக அதிமுக, பா.ஜ.க. தலைவர்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

உச்சக்கட்டமாக, ஜெயலலிதா குறித்தும், எம்.ஜி.ஆரின் அரசியல் ஆசான் அண்ணா குறித்தும் அண்ணாமலை முன்வைத்த கருத்துகள் அதிமுகவை கொந்தளிக்கச் செய்துவிட்டது. இதற்கு மேலும் பொறுத்துக் கொண்டிருப்பதில் பலனில்லை என்பது போல் கடந்த வாரமே, பா.ஜக.வுடன் அதிமுக கூட்டணி முறிந்துவிட்டதாகவும், இது கட்சித் தலைமையின் முடிவு என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார்.

அதிமுக vs பா.ஜ.க.

பட மூலாதாரம், ANI

அதிமுக – பா.ஜ.க. கூட்டணி முறிவு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த வாரம் அறிவித்ததை, கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக இன்று உறுதிப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக் கொள்வது மட்டுமின்றி, அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் வெளியேறுவதாக அதிமுக அறிவித்தது.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாட, மாநில பா.ஜ.க. தரப்போ இம்முறை மௌனம் காக்கிறது. மாநில பாஜ.க. தலைவர் அண்ணாமலையோ, “அதிமுக அறிக்கையை படித்தோம், இது குறித்து தேசிய தலைமை பேசுவார்கள்” என்று கூறி ஒரே வரியில் பதிலை சுருக்கிக் கொண்டார்.

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறும் அதிமுகவின் முடிவு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் கவனிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. ஏனெனில், பா.ஜ..க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க.வுக்குப் பிறகு பெரிய கட்சியாக இருந்தது அதிமுகதான். ஆகவே, தேசிய அளவிலும் அதிமுகவின் முடிவை ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.

அதிமுகவின் அரசியல் கணக்கு என்ன?

அதிமுக – பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்து மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாமிடம் பேசினோம். இதன் மூலம் அதிமுக போடும் அரசியல் கணக்கு என்ன என்று கேட்ட போது, “அதிமுகவைப் பொருத்தவரை, 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை விட 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலே மிகவும் முக்கியம். அத்துடன், தற்போதைய நிலையில் அக்கட்சிக்கு ஒரு எம்.பி மட்டுமே, அதுவும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் மட்டுமே இருக்கிறார். ஆகவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி ஒன்றிரண்டு இடங்களில் வென்றாலே லாபம்தான். இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் அதிமுக இருக்கிறது.

ஆனால், பா.ஜ.க.வைப் பொருத்தவரை அடுத்த நாடாளுமன்ற தேர்தல் அக்கட்சிக்கு முக்கியமானது. ஏனெனில், மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் உத்வேகத்தில் பா.ஜ.க. இப்போதே பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கு எதிராக தேசிய ஜனநாயக கூட்டணி பலமான கூட்டணியாக காட்ட அக்கட்சி முயற்சிக்கிறது. இந்த நேரத்தில், கூட்டணியில் இரண்டாவது பெயரி கட்சி வெளியேறுவது தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. இமேஜை பாதித்துவிடும். ஆகவே, கூட்டணி முறிவு குறித்து அதிமுகவை விட பா.ஜ.க.தான் அதிகம் கவலைப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

மேலும் தொடர்ந்த அவர், “அதிமுக – பா.ஜ.க. கூட்டணி முறிவுக்கு முழுக்கமுழுக்க அண்ணாமலையே காரணம். அவரது முதிர்ச்சியற்ற, பக்குவமற்ற பேச்சுகளும், அணுகுமுறையும் அரசியலுக்கு சரிவராது. துப்பாக்கி பிடித்த கை என்று பொதுவெளியில் அவர் பேசுகிறார். துப்பாக்கி பிடித்த கையாக இருந்தாலும் அரசியலில் பொதுமக்களிடம் கைகூப்பித் தானே ஓட்டு கேட்க முடியும். அடுத்த முதலமைச்சர் என்று அவர் தன்னை முன்னிலைப்படுத்த முயற்சிக்கும் போது எடப்பாடி பழனிசாமி என்ன செய்வார்? 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தொகுதிகளை வென்று கொடுப்பதால் தங்களுக்கு என்ன லாபம்? என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கலாம் இல்லையா?” என்று கூறினார்.

அதிமுக vs பா.ஜ.க.

அப்படியென்றால், பா.ஜ.க. என்ன செய்யும் என்ற கேள்விக்கு, “ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் மற்றும் சில உதிரி கட்சிகளை சேர்த்துக் கொண்டு பா.ஜ.க. போட்டியிடலாம். இந்த தேர்தலில் பாமகவின் முடிவு முக்கியமானதாக இருக்கும். அக்கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கக் கூடும். பா.ஜ.க. வசம் குறிப்பிட்ட சில தெரிவுகளே இருக்கின்றன.” என்று தராசு ஷ்யாம் தெரிவித்தார்.

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியிருப்பது ஒரு வகையில் திமுகவுக்கும் கூட பிரச்னையாக வாய்ப்புள்ளது. ஏனெனில், பா.ஜ.க. இருக்கும் கூட்டணியில் சேர்வதில்லை என்ற முடிவால் அதிமுகவை நெருங்கத் தயங்கிய சிறிய கட்சிகள், உதிரி கட்சிகள் இனி அதிமுகவை நெருங்குவதில் தயக்கம் இருக்காது. இதனால், சிறிய மற்றும் உதிரி கட்சிகள் பேரம் பேசுவதில் கூடுதல் பலம் பெற்றிருப்பதால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு தொகுதிகளை பங்கிடுவது அவ்வளவு சுலபமாக இருக்காது என்றே அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »