Press "Enter" to skip to content

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது திமுக கூட்டணியை பிரிக்கும் உத்தியா?

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது. திங்கட்கிழமை நடந்த அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் தாக்கம் என்ன?

2019ஆம் ஆண்டிலிருந்து நீடித்துவந்த அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையிலான கூட்டணி முறிந்துவிட்டதாக அ.தி.மு.க. அறிவித்திருக்கிறது. திங்கட்கிழமையன்று அ.தி.மு.கவின் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பா.ஜ.கவின் மாநிலத் தலைமை தொடர்ந்து அ.தி.மு.கவின் தலைவர்களும் அதன் கொள்கைகளையும் விமர்சித்துவருவதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.கவின் இந்த முடிவை அக்கட்சித் தொண்டர்கள், இரண்டாம் கட்டத் தலைவர்கள் வெகுவாக வரவேற்றிருக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க. தலைமை இது தொடர்பாக மௌனத்தையே கடைபிடித்து வருகிறது.

தற்போது மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுவரும் பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, தேசியத் தலைமைதான் இது குறித்து அறிவிக்கும் என்று மட்டும் தெரிவித்தார். கட்சியின் பிற தலைவர்களும் செய்தித் தொடர்பாளர்களும் இதே கருத்தையே தெரிவிக்கின்றனர்.

முடிவுக்கு வந்த அதிமுக பாஜக கூட்டணி

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலிதா மறைந்த பிறகு, அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் நெருங்கிவந்தன. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. தமிழ்நாடு – புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 இடங்களில் பா.ஜ.கவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டன. தேனி தொகுதியைத் தவிர, அனைத்துத் தொகுதிகளும் இந்தக் கூட்டணி தோல்வியைத் தழுவியது.

இதற்கடுத்துவந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் மீண்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் பா.ஜ.கவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் 4 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது.

இதற்கடுத்துவந்த உள்ளாட்சித் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடவில்லை என்றாலும், தேசிய அளவில் இரு கட்சிகளுக்கும் இடையிலான நெருக்கம் தொடரவே செய்தது. மாநிலங்களவையில் பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், நான்கு இடங்களை வைத்திருக்கும் அ.தி.மு.க. அனைத்து மசோதாக்களை நிறைவேற்றுவதிலும் ஆதரவளித்துவந்தது.

பா.ஜ.கவின் தேசியத் தலைமையுடன் அ.தி.மு.கவுக்கு நல்ல உறவு இருந்தாலும் மாநிலத் தலைவராக இருந்த கே. அண்ணாமலையின் போக்கு, அ.தி.மு.க. தலைவர்களுக்கு நெருடலாகவே இருந்தது. அந்த நெருடலின் உச்சகட்டமாகத்தான் இந்தப் பிளவு நேர்ந்திருக்கிறது.

அ.தி.மு.க. – பா.ஜ.க. மோதலின் சமீபத்திய துவக்கம்

முடிவுக்கு வந்த அதிமுக பாஜக கூட்டணி

2019ஆம் ஆண்டிலிருந்தே அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டுவந்தாலும், கடந்த ஆண்டிலிருந்தே அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையில் முரண்பாடுகள் நீடித்து வருகின்றன. இந்த முரண்பாடுகளைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையிலான முரண்பாடுகள் என்பதைவிட, அ.தி.மு.கவிற்கும் பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலைக்கும் இடையிலான மோதல் என்பதாகவே புரிந்துகொள்ளலாம்.

இந்த முரண்பாடுகள் பல்வேறு காலகட்டங்களில் வெளியில் வெடித்திருக்கின்றன. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த கே. அண்ணாமலை, ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை சென்றவர் என்று குறிப்பிட்டார். இதற்கு அ.தி.மு.க. கடுமையான எதிர்வினையாற்றியது.

அண்ணாமலையின் பேச்சைக் கண்டித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஊழல் பற்றி பேசும் அண்ணாமலை, கர்நாடக பாஜக அரசின் ஊழல் பற்றியும் பேச வேண்டியது தானே? ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவைக்குச் செல்ல அதிமுக தானே காரணம்? இந்த அடிப்படை விஷயத்தை மறந்து, கூட்டணியை முறிக்கும் செயலாக அண்ணாமலையின் செயல்பாடுகள் உள்ளன” என்று குறிப்பிட்டார். இதற்குப் பிறகு பல தலைவர்கள் அண்ணாமலையில் பேச்சைக் கண்டித்தனர்.

இதற்குப் பிறகு, அண்ணாமலையைக் கண்டித்து அ.தி.மு.க. தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியது. ஆனாலும், அவர் அசரவில்லை. இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட அவர், “இன்று அ.இ.அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எனக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாக அறிகிறேன். அது மட்டும் அல்லாது நேற்று மற்றும் இன்று காலை, முன்னாள் தமிழக அமைச்சர்கள் சிலர் நான் ஆங்கில நாளேடுக்கு கொடுத்த பேட்டியை சரிவர புரிந்து கொள்ளாமல் எனக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்திருந்தனர். அவர்களைப் போல் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை” என்றார்.

இதற்குப் பிறகு, ஜூலை மாதத்தில் பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதற்குமான பாத யாத்திரையைத் துவங்கியபோது அதில் கலந்துகொள்ள அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதில் அவர் கலந்துகொள்ளவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா இதில் பங்கேற்ற நிலையிலும் அ.தி.மு.கவின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மட்டும் பெயருக்கு வந்து சென்றார்.

முடிவுக்கு வந்த அதிமுக பாஜக கூட்டணி

அண்ணாதுரை – முத்துராமலிங்க தேவர் சர்ச்சை

மதுரையில் நடந்த அ.தி.மு.கவின் மாநாடு குறித்து, கட்சிக்காரர்கள் இடையிலான கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை, “அ.தி.மு.கவினர் மக்களை கவர வேண்டும் என்பதற்காக, மதுரையில் மாநாடு நடத்தினர். பிரமாண்ட மாநாடு என்று கூறிக் கொள்கின்றனர். எனக்கு தெரிந்த வரை, அதில் பிரமாண்டம் இல்லை. மாநாட்டுக்கு வந்தவர்களில் 10 சதவீதம் பேர்தான் கட்சிக்காரர்கள். மீதமுள்ள 90 சதவீதம் பேர் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள். இப்படிப்பட்ட மாநாடுகளால் மக்களிடம் எந்த ஈர்ப்பும் ஏற்படாது” என்று சொன்னதாக செய்திகள் வெளியாயின. இது அ.தி.மு.கவின் தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதற்குப் பிறகுதான் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியே முறியுமளவுக்குக் கொணடுசென்ற சர்ச்சைப் பேச்சைப் பேசினார் அண்ணாமலை.

“செப்டம்பர் 11ஆம் தேதியன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டுமென்று போராட்டம் நடத்தினார் அண்ணாமலை, அந்தப் போராட்டத்தில் பேசிய அவர், “1956. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு தமிழ் மாநாடு நடக்கிறது. ஜூன் மாதத்தில் 10 பத்து நாட்கள் நடக்கிறது. முதல் நாள் ராஜாஜி பேசுகிறார். இரண்டாவது நாள் இன்னொருவர் பேசுகிறார். மூன்றாவது நாள் ஒருவர் பேசுகிறார். நான்காவது நாள் பி.டி. ராஜன் அவர்கள் பேசுகிறார். மேடைக்கு போகிறார். ஆனால், அழைப்பிதழில் சம்பந்தமே இல்லாத, பெயரே இல்லாத அண்ணாதுரையை மேடைக்கு அழைத்துச்செல்கிறார். மேடைக்குப் போய் அண்ணா துரை அவர்களுக்கு மைக் கிடைக்கிறது. பேசுவதற்கு முன்பு மணி மேகலை என்ற குழந்தை ஒரு சங்க இலக்கியப் பாடலைப் பாடுகிறார். “

முடிவுக்கு வந்த அதிமுக பாஜக கூட்டணி

பட மூலாதாரம், FACEBOOK

“மைக்கை எடுத்த அண்ணாதுரை என்ன சொல்கிறார்… இந்த பெண் நல்லா பாடுச்சு. இதே கற்காலமாக இருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள் என்றால், உமையவள் பாலைக் குடித்துதான் இந்தப் பெண் பாட்டைப் பாடியதாக கட்டிவிட்டிருப்பார்கள். நல்லவேளை பகுத்தறிவு வந்துவிட்டது. மக்கள் இதையெல்லாம் நம்ப மாட்டார்கள். ஆறாவது நாள் முத்துராமலிங்கம் அவர்கள் பேச வேண்டும். 6வது நாள் பேச வேண்டிய முத்துராமலிங்க தேவர் ஐந்தாவது நாள் மேடைக்கு வருகிறார். ஒரு நாள் முன்னாடியே வருகிறார். பி.டி. ராஜன் அவர்கள், நீங்கள் பேசக்கூடாது என்கிறார். இல்லை நான் பேசுவேன், மேடை நாகரீகத்தை முறியடிக்கப்போகிறேன் என்று கூறி மேடைக்கு ஏறிய முத்துராமலிங்கத் தேவர் சொல்கிறார், சிவபுராணம் இயற்றப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் யார் இங்கே வந்து உமையவளைப் பற்றித் தப்பாகப் பேசியது? எல்லோரும் பம்முகிறார்கள். யாருமே பேசவில்லை. பி.டி. ராஜன் வாயிலிருந்து வார்த்தையே வரவில்லை. அண்ணாதுரை அவர்களை ஒளித்து வைத்திருக்கிறார்கள். வெளியேவே போகமுடியவில்லை. முத்துராமலிங்க தேவரய்யா உக்கிரமாக இருக்கிறார். “

“முத்துராமலிங்கத் தேவர் சொல்கிறார், இன்னொரு முறை கடவுளை நம்ப மாட்டேன், கடவுள் இல்லையென்று சொல்பவன் கடவுளை நம்புபவர்களைப் பற்றிப் பேசினால், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இதுவரை பாலில் அபிஷேகம் நடந்திருக்கிறது. இன்னொரு முறை தமிழகத்திலே கடவுளை நம்பாதவர்கள் கடவுளை நம்பக்கூடியவர்களைப் பற்றித் தவறாகப் பேசினால், மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்திலே அபிஷேகம் நடக்கும் என்று சொல்லிய பிறகு மன்னிப்புக் கேட்டுவிட்டு ஓடிவந்த கும்பல், பி.டி. ராஜன் அவர்கள், அண்ணாதுரை அவர்கள் மன்னிப்புக் கேட்டுவிட்டு வந்தார்கள்” என்று குறிப்பிட்டார்.

முடிவுக்கு வந்த அதிமுக பாஜக கூட்டணி

பட மூலாதாரம், அதிமுக

அ.தி.மு.க. – பா.ஜ.க. உறவில் விரிசல்

இது அடுத்த சில நாட்களிலேயே சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தத் தகவல் பொய்யென்று பலரும் கூறியும் தனது பேச்சைத் திரும்பப் பெற மறுத்தார் அண்ணாமலை. இதையடுத்து செப்டம்பர் 18ஆம் தேதியன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அ.தி.மு.க. தலைவர்கள் குறித்து தொடர்ந்து அண்ணாமலை மோசமாகப் பேசிவருவதால், அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையில் இனி கூட்டணி கிடையாது என்று கூறினார்.

சி.வி. சண்முகம் உள்ளிட்ட பிற தலைவர்களும் அண்ணாமலையைக் கடுமையாக விமர்சித்துப் பேசினர். இதற்குப் பிறகு, இது குறித்துப் பேச வேண்டாமென அ.தி.மு.க. தலைமை அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியாயின. உடனடியாக ஒரு அமைதி நிலவியது. இதற்குப் பிறகு, அமித் ஷாவைச் சந்திக்க, தங்கமணி, வேலுமணி ஆகியோர் தில்லி சென்றதாகவும் அவரைச் சந்திக்க முடியாமல், பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்துத் திரும்பியதாகவும் கூறப்பட்டது. இது குறித்தும் அ.தி.மு.க. தலைமை அதிகாரபூர்வமாக எந்த செய்தியையும் வெளியிடவில்லை.

இதற்குப் பிறகுதான் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டுவதாக அ.தி.மு.க. அறிவித்தது. அந்தத் தருணத்திலேயே கூட்டணி முறிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன.

முடிவுக்கு வந்த அதிமுக பாஜக கூட்டணி

பட மூலாதாரம், அதிமுக

வெளியேறிய அ.தி.மு.க.

திங்கட்கிழமையன்று மாலை 3.45- 4.00 மணியளவில் அ.தி.மு.கவின் தலைமையகத்தில் கூட்டம் துவங்கும் என்று கூறப்பட்டிருந்தாலும் அதற்குச் சில மணி நேரத்திற்கு முன்பே தொண்டர்கள் அங்கு குவியத் துவங்கிவிட்டனர். பெரும்பலானவர்களிடம், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. பிரிய வேண்டும் என்ற எண்ணமே வெளிப்பட்டது.

இது தொடர்பான அறிவிப்பு வெளியானதும், கட்சி அலுவலகத்தில் கூடியிருந்த தொண்டர்கள் மட்டுமல்லாது, மாநிலம் முழுவதுமே தொண்டர்கள் வெடிகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் அதனைக் கொண்டாடினர்.

2024ஆம் ஆண்டுத் தேர்தலை தன் தலைமையில் கூட்டணி அமைத்து சந்திக்கப்போவதாக அ.தி.மு.க. அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி அமையும் நிலையில், அதில் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், பா.ஜ.க. கூடுதல் இடங்களை அ.தி.மு.கவிடமிருந்து கோரிப் பெற்று, எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு எதிர் அணியாக செயல்படும் டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வழங்கும் என்றும் பேசப்பட்டு வந்தது.

ஆனால், இப்போது அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி முறிந்திருப்பது, பல சிறிய கட்சிகளின் நிலையைக் கேள்விக்குரியாக்கியிருக்கிறது. பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சி மட்டும் பா.ஜ.கவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கக்கூடும் எனத் தெரிகிறது. மற்ற கூட்டணிக் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை இன்னும் தெளிவாக்கவில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை தேசிய அளவில் பா.ஜ.கவுக்கு அடுத்த பெரிய கட்சியாக அ.தி.மு.கவே இருந்துவந்தது. தே.ஜ.கூவில் உள்ள மற்ற கட்சிகள் அனைத்துமே அந்தந்த மாநிலங்களில் மிகச் சிறிய வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் கட்சியாகவே இருந்தன. தற்போது கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி ஏற்பட்டிருப்பதால், அங்கு மட்டும் சற்றே பலம் வாய்ந்த கட்சியின் கூட்டணி அமைந்திருக்கிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. இந்தக் கூட்டணியை விட்டு விலகியிருப்பது தே.ஜ.கூட்டணி பலவீனமடைந்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தை இந்த அணிக்கு அளிக்கும்.

முடிவுக்கு வந்த அதிமுக பாஜக கூட்டணி

பட மூலாதாரம், M K STALIN

‘இந்தியா கூட்டணிக்கு பாதிப்பு இல்லை’

ஆனால், தற்போது அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையிலான கூட்டணி முறிந்திருப்பது நிரந்தரமானது என்ற நம்பிக்கை பலருக்கு ஏற்படவில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பா.ஜ.க. ஆதரவாளர்கள் பலரும் நிலைமை மாறக்கூடும் என்ற கருத்தையே முன்வைக்கிறார்கள்.

அதற்குக் காரணம் இருக்கிறது. 2018ல் இந்திய ஜனநாயக் கூட்டணியுடன் மட்டும் இணைந்து போட்டியிட்ட பா.ஜ.க. வெறும் 2.8 சதவீத வாக்குகளையே பெற்றது. அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தாலும் வாக்கு சதவீதம் மாறாது என்றாலும், சில இடங்களையாவது பெற முடிந்தது. அ.தி.மு.கவுடனான கூட்டணி இல்லையென்றால், வலுவான தி.மு.க. கூட்டணியை எதிர்த்து சில இடங்களைப் பெறுவது என்பது கானல் நீராகிவிடும்.

2024ஆம் ஆண்டு தேர்தலில் குறைந்தது 9 இடங்களைப் பெற்று, அதில் தீவிரமாகப் போட்டியிட பா.ஜ.க. திட்டமிட்டிருந்தது. இதற்கான தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டிருந்தன. இந்த நிலையில்தான், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அ.தி.மு.க. தொண்டர்களைப் பொறுத்தவரை, பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்ததால் தாங்கள் இழந்த சிறுபான்மையினர் வாக்குகளைத் திரும்பப் பெற முடியும் என நம்புகிறது. திங்கட்கிழமையன்று நடந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, இந்த விஷயத்தை சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் அழுத்தமாகப் பதியச் செய்யுங்கள் எனத் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார்.

ஆனால், என்னதான் சொன்னாலும் எந்த மாற்றமும் ஏற்படாது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன். “பா.ஜ.கவுக்கும் அ.தி.மு.கவிற்கும் அடிப்படை விஷயங்களில் வித்தியாசம் இல்லை. ஒரு நாடு ஒரு தேர்தல், காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்குவது ஆகியவற்றில் இரு கட்சிகளுக்கும் ஒரே நிலைப்பாடுதான் இருக்கிறது. அ.தி.மு.க. இல்லாமல் பா.ஜ.கவால் மாநிலங்களவையில் 9 வருடம் காலம் தள்ளியிருக்க முடியாது. இப்போது தமிழக மன நிலை, பா.ஜ.கவுக்கு எதிராக இருக்கிறது. அந்த எதிர்ப்பு வாக்குகள் ஒரே தரப்புக்கு போய்விடக்கூடாது என நினைக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் பிஎஸ்பியும் பல மாநிலங்களில் ஓவைசியும் செய்வதை அ.தி.மு.க. இங்கே செய்கிறது.”

“தற்போது அ.தி.மு.கவின் நிலைப்பாடு என்பது பா.ஜ.கவுக்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிரான நிலைப்பாடு அல்ல. பா.ஜ.கவின் மாநிலத் தலைவருக்கு எதிரான நிலைப்பாடு. தேர்தலுக்கு 9 மாதங்கள் உள்ளன. இவ்வளவு நாட்களுக்கு முன்பாக எல்லா விஷயத்தையும் முடிவுசெய்ய முடியாது. ஆனால், முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாவையும் ஜெ. ஜெயலலிதாவை அண்ணாமலை கேவலப்படுத்திய நிலையில், இதைக்கூட செய்யாவிட்டால் தொண்டர்கள் மதிக்க மாட்டார்கள். ஆகவே, கட்சிக்காரர்களின் கோபத்தைத் தணிக்க எடுக்கப்பட்ட முடிவு இது. கூட்டணியைவிட்டு வெளிவருவதாக இருந்தால் சில நாட்களுக்கு முன்பாக, முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஏன் தில்லிக்குப் போய் முக்கியத் தலைவர்களைச் சந்திக்கிறார்கள்? இந்தத் தேர்தலை எதிர்கொள்ள இரு தரப்பிடமுமே எதுவுமே இல்லை. சாதனைகளாகச் சொல்ல எதுவுமே இல்லை. ஆகவேதான், இதையெல்லாம் விவாதமாக்க முயல்கிறார்கள்” என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

பா.ஜ.கவின் மாநிலத் தலைமை தங்களை இழிவுபடுத்துவதாக அ.தி.மு.கவின் அறிக்கையில் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டும் ஏ.எஸ். பன்னீர்செல்வன், தேர்தல் நெருங்கும்போது மாநிலத் தலைமைதானே பிரச்சனை, அதனை மாற்றுகிறோம் என்பர்கள் என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

அதையும் தாண்டி தனித்தனியாகப் போட்டியிட்டாலும் ஒதிஷாவில் நவீன் பட்நாயக்கைப் போலவும் ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியைப் போலவுமேதான் எடப்பாடி கே. பழனிச்சாமி செயல்படுவார் என்கிறார் அவர்.

“தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி ஒரு மதச்சார்பற்ற, முற்போக்கான கூட்டணியாக தன்னை முன்னிறுத்திவருகிறது. இந்தக் கூட்டணியில் தி.மு.க, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிக் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. தற்போதே, தேர்தல் பேச்சு வார்த்தைகளைத் துவங்கிவிட்ட தி.மு.க. இந்த முறை வலுவான நிலையில் இருப்பதால், கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான இடங்களையே ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது அதில் உள்ள சில கட்சிகள், அ.தி.மு.கவை நோக்கித் திரும்பும் என்ற பேச்சும் அடிபடுகிறது.”

“அப்படி நடக்காது. காரணம், இது வெறும் தொகுதிகளின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனையில்லை. 2016ல் மக்கள் நலக் கூட்டணியால் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அங்கே போனால், கூடுதலாக ஒரு இடம் கிடைக்கலாம். ஆனால், வெற்றிபெற வேண்டுமே? கூடுதல் இடங்களைப் பெற்றுத் தோற்றுப்போனால் என்ன செய்வது?”

“தவிர, காங்கிரசைப் பொறுத்தவரை இந்திய அளவில் தி.மு.க. முக்கியமான கூட்டாளி. அதனால்தான் பாரத் ஜோடோ யாத்திரையை மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். பா.ஜ.கவுக்கு எதிரான காங்கிரசின் முற்போக்கு முகத்திற்கு தி.மு.கதான் ஒரு வலுவான பின்னணியை அளிக்கிறது. ஆகவே, காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி உடையாது” என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறார் அவர். அதாவது, அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகள், ஆளுநர் மாளிகையிலேயே தேங்கியிருக்கும் நிலையில், இந்தக் கூட்டணி எந்தத் தருணத்திலும் புதுப்பிக்கப்படலாம் என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

முடிவுக்கு வந்த அதிமுக பாஜக கூட்டணி

பட மூலாதாரம், TWITTER/ANNAMALAI

பா.ஜ.க. இனி தமிழ்நாட்டில் என்ன செய்யும்?

தமிழ்நாட்டில் அ.தி.மு.கவுடன் பா.ஜ.க. அமைத்த கூட்டணி என்பது, நீண்ட நாட்களுக்குப் பிறகு மாநிலத்தில் கிடைத்த ஒரு நல்ல கூட்டணி. தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகள் மட்டுமே அடிமட்டம் வரையிலான வலுவான கட்டமைப்பைக் கொண்டிருக்கும் நிலையில், இந்த இரு கட்சிகளையும் சாராமல் தனித்து நிற்பது கடினமான காரியம்.

2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. பா.ஜ.கவுடன் இணைந்து போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அந்தக் கூட்டணிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துத் தவறு செய்துவிட்டதாகவும் இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன் என்றும் வாக்குறுதி அளித்தார் ஜெயலலிதா. அதேபோலவே, 2006, 2009, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் பா.ஜ.கவை தனது கூட்டணியில் அவர் சேர்த்துக்கொள்ளவில்லை.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.கவின் தலைமை தொடர்பாக பல குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில், மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பிடித்தது பா.ஜ.க. இந்தக் கூட்டணி வெற்றிபெறுமா, பெறாதா என்பதைத் தாண்டி, வேறு கணக்குகள் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு இருந்தன. அதாவது, அ.தி.மு.கவின் ஒரே தலைவராக தான் நிலைபெறும் வரையில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவின் தயவு தனக்குத் தேவை எனக் கருதினார் அவர். அதனாலேயே இந்தக் கூட்டணி அடைந்த தோல்விகளை அவர் சகித்துக்கொண்டார்.

ஆனால், கட்சியின் மாநிலத் தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பிறகு காட்சிகள் மெல்லமெல்ல மாறத் துவங்கின. எதிர்க்கட்சியான தி.மு.கவை தாக்குவதோடு, அவ்வப்போது அ.தி.மு.கவையும் விமர்சிக்க ஆரம்பித்தார். ஒரே கூட்டணியாக இருக்கும்போது அண்ணாமலை ஏன் இப்படிப் பேசுகிறார் என்ற ஆச்சரியத்தை பல முறை அ.தி.மு.க. தலைவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர். இருந்தபோதும் அவரதும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

தேர்தல்களை தனது தலைமையில் தனித்து எதிர்கொள்ள விரும்புபவரைப் போலவே நடந்துகொண்டார் அண்ணாமலை. சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், 2026ல் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி என்பதை தான் ஏற்க முடியாது என்றார். ஏற்கெனவே ஊசலாடிக்கொண்டிருந்த கூட்டணியை, இந்த பதில்தான் மொத்தமாக முறித்திருக்க வேண்டும்.

அ.தி.மு.க. சொல்வதைப் போலவே கூட்டணி முறிந்துவிட்டால், பா.ஜ.க. சிறிய கட்சிகளை இணைத்துக்கொண்டுதான் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »