Press "Enter" to skip to content

இந்திய ரூபாயை விஞ்சிய ஆப்கானி – வறுமை, பட்டினிக்கு மத்தியில் எப்படி சாத்தியமானது?

பட மூலாதாரம், Getty Images

ஆசிய அண்டை நாடுகளுடன் வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் பில்லியன்கணக்கான டாலர்கள் சர்வதேச உதவிக்கு நன்றி. கடந்த காலாண்டில் ப்ளூம்பெர்க்கின் உலகளாவிய நாணயங்கள் தர வரிசையில் ஆப்கானிஸ்தானின் நாணயம் முதலிடம் பிடித்துள்ளது.

வறுமை மற்றும் பட்டினியால் போராடும் நாட்டில் இப்படி நடப்பது மிகுந்த வியப்பை அளிக்கிறது.

ஆகஸ்ட் 15, 2021 அன்று, தாலிபன் போராளிகள் கிட்டத்தட்ட எந்த எதிர்ப்பும் இன்றி காபூலில் நுழைந்து, மேற்கத்திய ஆதரவில் செயல்பட்டு வந்த அஷ்ரப் கனியின் அரசை அதிகாரத்திலிருந்து அகற்றினர். அப்போதைய அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.

அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் அவசரத்தில் இருந்தன. காபூல் விமான நிலையத்தில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு விமான நிலையத்தில் குவிந்திருந்தனர்.

நாடு முழுவதும் ஒரு குழப்பமான சூழல் நிலவிய நேரத்தில் காபூல் விமான நிலையத்தில் அனைத்துமே குழப்பத்தில் மூழ்கியிருந்தது.

இருப்பினும், இது போன்ற அனைத்து வியத்தகு முன்னேற்றங்களுக்குப் பிறகு, தாலிபன் அமைப்பினர் படிப்படியாக தங்களது இரண்டாவது ஆட்சியை நாட்டில் தொடங்கினர். ஆனால் அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு நாட்டை வழிநடத்துவது அவ்வளவு எளிதானது அல்ல.

தாலிபனின் கூட்டாளிகள் என்று அழைக்கப்படும் அண்டை நாடுகள் கூட ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தை இன்னும் அங்கீகரிக்கவில்லை. இந்த சர்வதேச அங்கீகாரம் இல்லாமல், ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தடையற்ற இறக்குமதி-ஏற்றுமதி இல்லாமல், அரசாங்கம் எவ்வாறு பணம் சம்பாதிக்க முடியும்?

ஆப்கானிஸ்தான் நாணயம்

பட மூலாதாரம், Getty Images

தற்போதைய நிலையில் ஆப்கானிஸ்தான் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். உலக வங்கியின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தான் கல்வியறிவின்மை, வேலையின்மை மற்றும் அடிப்படை வாழ்க்கைத் தேவைகளின் பற்றாக்குறை ஆகிய பிரச்னைகளில் தத்தளித்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 3.4 கோடி ஆப்கானியர்கள் வறுமையில் வாழ்கின்றனர். 2020ல் இந்த எண்ணிக்கை 1.5 கோடியாக இருந்தது. சுமார் நான்கு கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இது மிகப்பெரிய எண்ணிக்கை.

இத்தனை ஏமாற்றங்களுக்கிடையில் ஆப்கானிஸ்தானின் பணம்யான ஆப்கானியின் மதிப்பு ஆச்சரியமான விதத்தில் அதிகரித்துள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, இந்த காலாண்டில் ஆப்கானிஸ்தான் ஆப்கானி உலகின் வலுவான நாணயமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்றைய மதிப்பீட்டின்படி, ஆப்கானி ஒன்றின் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 3.72 ஆகும். கடந்த மூன்று மாதங்களில் இந்த நாணயத்தின் மதிப்பு 9% அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஒரு டாலருக்கு சுமார் 79 ஆப்கானிகளைக் கொடுக்கவேண்டியுள்ளது. அதே சமயம் இந்தியாவில் ஒரு டாலரின் விலை 80 ரூபாய்க்கு மேல் நிலவுகிறது.

ஆப்கானிஸ்தான் நாணயம்

பட மூலாதாரம், Getty Images

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை வலுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். நாட்டிற்குள் பணம் செலுத்துவதற்கு டாலர்கள் மற்றும் பாகிஸ்தான் ரூபாயைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்தும் நடவடிக்கையும் இதில் அடங்கும்.

மேலும் கணினிமய வர்த்தகம் உள்ளிட்ட சில நடவடிக்கைகளுக்கு தாலிபன்கள் தடை விதித்துளளனர். உண்மையில் கணினிமய வர்த்தகம் சட்டவிரோதமானது என்று அவர்கள் அறிவித்துள்ளனர் என்பதுடன் இந்த உத்தரவை மீறுபவர்களை சிறையில் அடைத்து வருகின்றனர்.

ப்ளூம்பெர்க் தரவுகளின்படி, நாணயத்தின் மீதான வலுவான கட்டுப்பாடு, சர்வதேச உதவிப் பணம் மற்றும் வெளியிலிருந்து வந்த நிதி உதவிகள் காரணமாக ஆப்கானிஸ்தான் ஆப்கானி இந்த காலாண்டில் 9 சதவீதம் வலுவடைந்துள்ளது.

வாஷிங்டனில் உள்ள தெற்காசிய விவகாரங்களில் நிபுணரான கம்ரான் புகாரி ப்ளூம்பெர்க்கிடம் பேசியபோது, “நாணயத்தின் மீது தாலிபன்களின் முழுமையான கட்டுப்பாடு செயல்படுகிறது. ஆனால் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை ஆப்கானிஸ்தான் நாணயம் இப்படி வலுவடைந்திருப்பதை ஒரு குறுகிய கால நன்மையாக மாற்றும்,” என்றார்

ஆப்கானிஸ்தானின் செல்வத்தின் பெரும்பகுதி சர்வதேச உதவிப் பணத்தில் இருந்து வருகிறது. இந்த உதவிகளில் பெரும்பாலானவை ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் அந்நாட்டை அடைகின்றன.

ஆப்கானிஸ்தான் நாணயம்

பட மூலாதாரம், Getty Images

ஐக்கிய நாடுகள் சபை அளிக்கும் தகவலின் படி, ஆப்கானிஸ்தானுக்கு இந்த ஆண்டு சுமார் 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவி தேவைப்படுகிறது. இதில் 1.1 பில்லியன் டாலர்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நான்கு பில்லியன் டாலர்களை ஐ.நா. சபை அளித்தது.

2021 இல் ஆப்கானிஸ்தானில் அதிகார மாற்றம் ஏற்பட்டதில் தொடங்கி, ஐக்கிய நாடுகள் சபை 5.8 பில்லியன் டாலர் உதவியை இதுவரை வழங்கியுள்ளது. இந்த ஆண்டு முதல் நாட்டின் பொருளாதாரம் மோசமடைவது முடிவுக்கு வரும் என்றும், 2025-க்குள் அதன் வளர்ச்சி இரண்டு முதல் மூன்று சதவீதத்தை எட்டும் என்றும் உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

ஒரு வலுவான நாணய மதிப்பு பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது. ஏனெனில் அது பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.

ஆனால், பெண்கள் அடக்குமுறைக்கு ஆளானதாக வெளியான செய்திகளை அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்படும் உதவி குறைக்கப்படலாம் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாணயம்

பட மூலாதாரம், Getty Images

ஆப்கானிஸ்தானில், அந்நியச் செலாவணி வணிகம் பணம் மாற்றுபவர்கள் மூலம் நடத்தப்படுகிறது. இவர்கள் அங்கு கந்து வட்டிக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். தங்கம், வெள்ளி போன்ற வர்த்தகங்கள் நடைபெறும் புல்லியன் சந்தைகளில் ஏராளமான முதலீடுகள் குவியல்குவியலாக உள்ளன. இந்த சந்தைகள் நாட்டின் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை காணப்படுகின்றன.

இந்த நாட்களில், காபூலின் சராய் ஷாஜதா பஜார் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தின் மையமாக உள்ளது. இந்த சந்தையில் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது மற்றும் நாட்டின் மத்திய வங்கி நாணய பரிமாற்றத்திற்கு எந்த வரம்பும் நிர்ணயிக்காததும் ஒரு சாதகமான அம்சமாக உள்ளது.

உலக வங்கி தெரிவிக்கும் தகவலின்படி, ஆப்கானிஸ்தானின் நிதிச் சேவைகளில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்று தெரியவருகிறது.

உலக வங்கியின் வலைப்பதிவு ஒன்றில் பொருளாதார நிபுணர் நமோஸ் ஜாஹீர், “ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாடு இல்லாததால், பெரும்பாலான பணப் பரிமாற்ற வேலைகள் ஹவாலா மூலம் செய்யப்படுகிறது. தாலிபன்களின் ஆட்சி அமைந்தபின், படித்த பெரும்பாலானோர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். நாட்டின் மத்திய வங்கியில் (ஆப்கானிஸ்தான் வங்கி) திறமையான பணியாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக, பயங்கரவாத நிதி மற்றும் பண மோசடி அச்சுறுத்தல் நாட்டில் அதிகரித்துள்ளது,” என எழுதியுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து கடத்தல் மூலம் ஆப்கானிஸ்தானை அடையும் டாலர்கள் தாலிபன் ஆட்சியின் உயிர் நாடியைப் போல் விளங்குகின்றன.

ஆப்கானிஸ்தான் நாணயம்

பட மூலாதாரம், Getty Images

ஐக்கிய நாடுகள் சபையின் உதவியைத் தவிர, ஆப்கானிஸ்தானில் லித்தியம் போன்ற மதிப்புமிக்க இயற்கை வளங்கள் உள்ளன. ஒரு சர்வதேச மதிப்பீட்டின்படி, நாட்டில் மூன்று டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள லித்தியம் இருப்புக்கள் உள்ளன.

புரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட் அளிக்கும் தகவலின் படி, சீனா இந்த பெரிய இருப்பு மீது ஒரு கண் வைத்திருக்கிறது.

இந்த மாதம், ஆப்கானிஸ்தானில் இரும்புத் தாது மற்றும் தங்கச் சுரங்கங்களை தோண்டி எடுப்பதற்காக சீனா, பிரிட்டன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் நிறுவனங்களுக்கு $6.5 பில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஜனவரியில், தாலிபன்களும் எண்ணெய் ஆய்வுக்காக சீனாவுடன் ஒப்பந்தம் செய்தனர்.

இது தவிர, ஆப்கானிஸ்தானில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் விரிவாக்கம் அங்குள்ள உள் கட்டமைப்பில் கணிசமான முதலீடுகளுக்கு வழிவகுக்கும்.

புதன்கிழமை (செப்டம்பர் 27) பிற்பகல் ஒரு அமெரிக்க டாலரின் விலை 83.21 இந்திய ரூபாயாக இருந்தது. இதை ஆப்கானியுடன் ஒப்பிடுகையில், ஒரு அமெரிக்க டாலருக்கு 78.39 ஆப்கானிகளை மட்டுமே வாங்க முடியும்.

அதாவது இன்றைய நிலவரப்படி ஆப்கானிஸ்தானின் ஆப்கானி இந்திய ரூபாயை விட அதிக மதிப்பில் உள்ளது. ஆனால் நாம் ஏற்கெனவே தெரிந்துகொண்ட தகலைப் போல், இதற்குக் காரணம் வலுவான பொருளாதாரம் அல்ல, வேறு காரணங்கள் உள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »