Press "Enter" to skip to content

சீனாவை விட்டு அமெரிக்கா பக்கம் சாய்கிறதா பாகிஸ்தான்? இந்தியாவுக்கு சிக்கல் வருமா?

பட மூலாதாரம், GETTY IMAGES

சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) 2013 இல் தொடங்கப்பட்டது, இது உலக அரங்கில் பாகிஸ்தானின் அடையாளத்தை முற்றிலுமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் தெற்காசியாவின் முக்கிய சக்திகளில் ஒன்றாக பாகிஸ்தான் மாற வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடனும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

ஆனால் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, தற்போது இந்த திட்டத்தின் காரணமாக, எப்போதும் நண்பர்களாகக் கருதப்படும் சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக ஊகங்கள் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

உண்மையில், CPEC திட்டத்தின் கீழ் எரிசக்தி, நீர் மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல துறைகளில் பாகிஸ்தானின் முன்மொழிவுகளை ஏற்க சீனா மறுத்துவிட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

CPEC திட்டத்தின் கூட்டு ஒத்துழைப்புக் குழு (JCC) கூட்டத்திற்குப் பிறகு இரு நாடுகளும் கையெழுத்திட்ட ஆவணத்தின் அடிப்படையில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதன்படி, கில்கிட்-பல்டிஸ்தான், கைபர் பக்துன்க்வா, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் மற்றும் கடலோரப் பகுதிகள் தொடர்பாக பாகிஸ்தான் முன்வைத்த பல முன்மொழிவுகளுக்கு சீனா ஒப்புதல் அளிக்கவில்லை. மாறாக, CPEC திட்டப் பணிகளில் சீனாவுக்கு பல சலுகைகளை அளிக்க பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.

சீனாவின் பாராமுகம்

பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் டொனால்ட் ப்ளோம், சில நாட்களுக்கு முன் குவாதர் துறைமுகத்திற்கு சென்றிருந்தார். குவாதரின் மூலோபாய அமைவிடம் முக்கியமானது மட்டுமல்ல, இது CPEC திட்டத்தின் மிக முக்கியமான பகுதியாகும்.

பல ஊடக அறிக்கைகள் மற்றும் நிபுணர்களின் பார்வையில், சமீபத்திய வளர்ச்சி இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆனால் யதார்த்தம் என்ன?

சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கான JCC குழுவின் 11 ஆவது கூட்டம், 2022 அக்டோபர் 27 அன்று நடைபெற்றது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) அதாவது PMLN கட்சி கோரிக்கையின் பேரில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, இரு நாடுகளும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அதில், கில்கிட்-பால்டிஸ்தான், கைபர் பக்துன்க்வா மற்றும் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரில் எல்லை தாண்டிய சுற்றுலா மற்றும் கடலோர சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டங்களுக்கு சீனா ஒத்துழைக்க மறுத்ததை இந்த ஆவணம் காட்டுகிறது.

சீனா – பாகிஸ்தான் கருத்து வேறுபாடு

சீனா  பாகிஸ்தான் அமெரிக்கா உறவு

பட மூலாதாரம், GETTY IMAGES

நீர் வள மேலாண்மை, காலநிலை மாற்றம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற பல விஷயங்களை CPEC கட்டமைப்பில் சேர்க்கும் பாகிஸ்தானின் முன்மொழிவை சீனா ஏற்கவில்லை. நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்கான புதிய பணிக்குழுவை உருவாக்க பாகிஸ்தான் முன்மொழிந்தது. இதையும் சீனா நிராகரித்தது.

பல மின் நிறுவனங்களின் நிதி சவால்கள் தொடர்பான தகவல்களை சீனாவும் ஆவணத்தில் இருந்து நீக்கியுள்ளதாக ‘தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்’ தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

காலநிலை மற்றும் அதிக செலவு போன்ற பல்வேறு காரணங்களால், குவாதரில் கட்டப்பட்டு வரும் 300 மெகாவாட் மின் உற்பத்தி திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியது.

அல்லது உள்ளூர் நிலக்கரியை பயன்படுத்துவதற்காக, இத்திட்டத்தை தாருக்கு (தார்பார்கர்) மாற்ற வேண்டும் என்றும் பாகிஸ்தான் முன்மொழிந்தது. ஆனால் இதற்கும் சீனா ஒப்புக்கொள்ளவில்லை.

ஆனால், குவாதர் மின் நிலைய கட்டுமானத்தில் ஏற்கனவே உள்ள திட்டத்தின்படியே இரு நாடுகளும் செயல்பட முடிவு செய்துள்ளதாக, ஜேசிசி கூட்டத்திற்குப் பிறகு வெளிவந்த ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.

‘சிறந்த நட்பில்’ விரிசலா?

பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் டொனால்ட் ப்ளோம் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் துறைமுகத்துக்கு அண்மையில் சென்றிருந்தார்.

50 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டிலான, CPEC திட்டத்தின் மிக முக்கியமான பகுதியாக குவாதர் கருதப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்காவின் உயர்நிலை அதிகாரிகள் குவாதருக்கு வரவில்லை. எனவே, டொனால்ட் ப்ளோமின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு முன், 2006ல் இருந்து எந்த அமெரிக்க தூதரக அதிகாரியும் குவாதருக்கு விஜயம் செய்ததில்லை. இதனால் சீனாவை விட்டு அமெரிக்க பக்கம் பாகிஸ்தான் சாய்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு ஏதேனும் சிக்கல் வருமா என்ற கேள்வியும் எழுகிறது.

அமெரிக்க தூதரின் வருகை

சீனா  பாகிஸ்தான் அமெரிக்கா உறவு

பட மூலாதாரம், GETTY IMAGES

கடந்த 2022 ஆம் ஆண்டில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த ஆண்டறிக்கையில், குவாதர் ஒரு நாள் சீன ராணுவத்தின் தளமாக மாறக்கூடும் என்று கூறியிருந்தது.

தனது இந்த பயணத்தின்போது, அமெரிக்க தூதர் ப்ளோம், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் கடற்படையின் மேற்கு தளபதி ஆகியோரையும் சந்தித்ததாக ஜப்பானிய வெளியீடான ‘நிக்கி ஆசியா’வில் செய்தி இடம்பெற்றுள்ளது.

செப்டம்பர் 12 இல், அமெரிக்க தூதரின் இந்த விஜயத்திற்குப் பிறகு, பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில், “டொனால்ட் ப்ளோம் குவாதர் துறைமுகத்திற்குச் சென்று அங்கு நடைபெற்றுவரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல வணிக நாளிதழான Nikkei Asia இன் கட்டுரையில், ‘சீனாவுடனான பதற்றமான சூழலுக்கு மத்தியில், CPEC யில் சில சலுகைகளை பாகிஸ்தான் பெறுவதற்கான ஒரு வழியாக அமெரிக்க தூதரின் இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது’ என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா தொடர்பான பாகிஸ்தானின் வளர்ந்து வரும் உத்தி என்றும் அமெரிக்கத் தூதரின் இந்த வருகை வர்ணிக்கப்படுகிறது.

CPEC இன் சில திட்டங்கள் அடுத்த மாதம் இறுதி செய்யப்பட உள்ளதாக, பாகிஸ்தான் அரசு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதில் சீனாவிடம் இருந்து சில சலுகைகளை பெற பாகிஸ்தான் விரும்புகிறது. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்க தூதரான ப்ளோமின் குவாதருக்கு வருகை புரிந்திருந்ததை இந்தப் பின்னணியில் பார்க்க வேண்டியுள்ளது.

சீனாவின் நண்பன்

ஆனால், எப்போதும் தனது நண்பனான சீனாவுக்கு எதிராக பாகிஸ்தான் தனது உத்தியை மாற்றிக் கொள்கிறது என தான் நம்பவில்லை என்று கூறுகிறார் பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதராக இருந்த டிசிஏ ராகவன் கூறுகிறார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, ​​”சீனாவை விட்டு விலகி அமெரிக்காவுடன் நெருங்கிச் செல்ல பாகிஸ்தானிடம் அப்படியொரு உத்தி இருப்பதாக நான் நினைக்கவில்லை.

சீனாவுடனான தனது உறவு வலுவாக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் எப்போதும் முயற்சிக்கிறது. எனவே, சீனாவுடனான தனது உறவுகளில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளும் அளவுக்கு பாகிஸ்தான் எப்போதும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் என்று கருதுகிறேன்,” என்று கூறுகிறார் டிசிஏ ராகவன்.

அதேநேரம், அமெரிக்காவுக்கும் பாகிஸ்தான் உடனான உறவு தொடர்ந்து மேம்பட வேண்டும். எனவே, எந்தவொரு நிகழ்வாலும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மாறாது என்றும் டிசிஏ ராகவன் கூறுகிறார்.

சீனாவின் தயக்கத்திற்கு என்ன காரணம்?

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு நல்ல முறையில் இருக்கிறது என்று கருதப்படுகிறது. ஆனாலும் சீனா தனது லட்சியமான CPEC திட்டத்தில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது ஏன் என்பதுதான் தற்போது எழும் கேள்வி.

Nikkei Asia இன் செய்தியின்படி, உண்மையில், CPEC திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களுக்கு பாகிஸ்தான் பணம் செலுத்தாதது சீனாவின் விரக்திக்கு முக்கிய காரணம்.

அத்துடன், இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் மிகப்பெரிய தொடர் வண்டிபாதையின் செலவைக் குறைக்க பாகிஸ்தான் சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பிரதான தொடர் வண்டிபாதை -1 இன் திட்டச் செலவை 9.9 பில்லியன் டாலரிலிருந்து 6.6 பில்லியன் டாலராகக் குறைக்க பாகிஸ்தான் விரும்புகிறது.

அரசியல் ஸ்திரமின்மை

சீனா  பாகிஸ்தான் அமெரிக்கா உறவு

பட மூலாதாரம், GETTY IMAGES

சீனா தனது CPEC திட்டத்தின் மூலம், பாகிஸ்தானின் ஒவ்வொரு மூலையையும் அடைந்துள்ளது, இப்போது இரு நாடுகளும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்க முடியாத நிலையில் உள்ளன என்கிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) தெற்காசிய ஆய்வுகள் துறை பேராசிரியர் மகேந்திர லாமா.

பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமின்மையை சந்தித்து வருகிறது.

இதை சுட்டிக்காட்டும் மகேந்திர லாமா, “பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரமின்மை உள்ளது. எனவே அங்கு தேர்தல் நடைபெறுவதற்காக சீனா காத்திருக்கிறது.

பாகிஸ்தான் தேர்தலில் என்ன நடக்கிறது என்பதை சீனா பார்க்க விரும்புகிறது. அதுவரை சீனா தனது ஆட்டத்தை கொஞ்ச காலத்து நிறுத்திக் கொள்ள விரும்புவதாக கருதுகிறேன்.

தேர்தல் முடிந்து பாகிஸ்தானில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் CPEC சம்பந்தமான அதன் கொள்கைகள் மாறும்,” என்கிறார் லாமா.

பாகிஸ்தானின் நிதி நிலைமை

‘தி இன்டிபென்டன்ட்’ இதழின் உருது சேவையான ‘இண்டி உருது’ ஆசிரியர் ஹாரூன் ரஷீத்தும் இதேபோன்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.

சீனாவுக்கு பாகிஸ்தான் மீது கோபம் எல்லாம் இல்லை. ஆனால் பாகிஸ்தானின் நிதி நிலைதான், CPEC தி்ட்டத்தை முழுவீச்சில் முன்னெடுக்க சீனா தயக்கம் காட்டுவதற்கு காரணம் என்று ஹாரூன் கூறுகிறார்.

உலகம் முழுவதும் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. இத்தகைய சூழலில் அனைத்து நாடுகளும் அவற்றின் பொருளாதார மேம்பாட்டுக்கு தான் முன்னுரிமை அளிக்கும்.

சீனாவும் அதன் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தை கையாள்வதில் தீவிரமாக இருக்கும், எனவே அது வெளிநாட்டு முதலீட்டை சிறிது காலத்திற்கு குறைக்கலாம். சீனா தற்போது CPEC இல் அதிக முதலீட்டைத் தவிர்ப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் ஹாரூன்.

ஆனால் சீனாவிடமிருந்து அதிகபட்ச முதலீட்டை பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது. மறுபுறம் சீனாவைப் பார்க்கும்போது, ​​அது தனது சொந்த பலனைக் காணும் திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்யும் என்று ஹாரூன் கூறுகிறார்.

அவரது கூற்றுப்பிடி, தனக்கு எந்தப் பலனும் கிடைக்காதபோது, பாகிஸ்தானின் நலனுக்காக மட்டும் CPEC திட்டத்தில் சீனா எந்த முதலீட்டையும் மேற்கொள்ளாது.

பொருளாதார உதவிகளை அனுபவிக்கும் பாகிஸ்தான்

தெற்காசிய ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் கட்டுரையில், மூத்த இந்திய பத்திரிகையாளர் சி. ராஜா மோகன், அமெரிக்க தூதரின் குவாதர் பயணத்தையும், பாகிஸ்தானில் சீனாவின் செல்வாக்கைக் குறைக்கும் அமெரிக்காவின் முயற்சிகளையும் இணைத்துள்ளார்.

கடந்த ஆண்டு, இந்தியா மீதான கோபத்தில், எஃப்-16 ஜெட் விமானங்களை பராமரிப்பதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்ததாக அவர் எழுதியுள்ளார்.

பாகிஸ்தானை வெள்ள பாதிப்பில் இருந்து மீட்க உதவியது, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியுதவி பெற்ற தந்தது என்று அமெரிக்காவும் பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவிகள் கிடைப்பதில் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க தூதர் ப்ளோமினின் குவாதர் பயணம், அமெரிக்கா மற்றும் சீனாவுடனான உறவை சமநிலைப்படுத்த பாகிஸ்தான் முயற்சிப்பதையே காட்டுகிறது என்றும் தமது கட்டுரையில் சி.ராஜமோகன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முயற்சிக்காக பாகிஸ்தானை வெகுவாக பாராட்டுகிறார் ஹாரூன் ரஷித்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் சமநிலைப்படுத்தும் வேலையை பாகிஸ்தான் இப்போது வரை சாமர்த்தியமாக செய்து வருகிறது. இதன் பயனாக இரு நாடுகளிடம் இருந்தும் பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவிகள் கிடைத்து வருகின்றன.

இதற்கு கைமாறாக அமெரிக்காவும், சீனாவும் பாகிஸ்தானிடம் இருந்து ஏதாவது பலன்களை பெற்று வருகின்றன. இது தொடரும் வரை, பாகிஸ்தான் மகிழ்ச்சியாக இருக்கும். சீனாவும் அமெரிக்காவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றார் ஹாரூன் ரஷித்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »