Press "Enter" to skip to content

குறுவை பயிர் காப்பீடு: மத்திய அரசு முன்வந்தும் தமிழ்நாடு அரசு மறுப்பது ஏன்? விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கான காப்பீட்டை மாநில அரசாங்கம் பதிவு செய்யாததால், குறுவை பயிர் பாதிப்பு காரணமாக பல ஆயிரம் விவசாயிகள் கடனாளியாகிவிட்ட சூழல் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறுவை சாகுபடிக்குப் பயிர் காப்பீடுத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஏன் முன்னெடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கேள்வி எழுப்பிய நிலையில், பாதிக்கப்பட்ட குறுவை பயிருக்கான இழப்பீடாக தமிழ்நாடு அரசு சிறிய தொகையை அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய அளவில், குறுவை காலப் பயிரில் பாதிப்பை சந்திக்கும் 12 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். இதனால் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இருந்தபோதும், தமிழ்நாடு அரசு குறுவைப் பயிர் காப்பீடு செய்வதில் விருப்பம் காட்டவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தனியார் பயிர் காப்பீடு நிறுவனங்கள் தாமதித்த காரணத்தால்தான் காப்பீடு செய்யமுடியவில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறுவை பயிர் காப்பீட்டில் ஏன் இத்தனை சிக்கல்கள்?

குறுவை சாகுபடி என்றால் என்ன?

குறுவை சாகுபடி ஜூன்-ஜூலை மாதம் பயிரிடப்பட்டு, அக்டோபர்-நவம்பர் காலத்தில் அறுவடை செய்யப்படும்.

இந்தச் சமயத்தில் குறுகிய காலத்தில் விளையும் நெல் ரகங்கள் அதாவது 100 முதல் 120 நாட்களுக்குள் அறுவடை செய்யப்படும் நெல் மட்டுமே பயிரிடப்படும். சம்பா மற்றும் தாளடி அறுவடையை காட்டிலும் அதிக விளைச்சலை தரக்கூடியது குறுவை ஆகும். இது விவசாயிகளுக்கு நல்ல வருமானம் வரும் நேரம். அது மட்டுமல்லாது, உணவு உற்பத்திக்கான முக்கியமான காலமாக குறுவை கருதப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் வேளாண்துறை தரவுகளின்படி, இந்த ஆண்டு சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக 40,000 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையாக பாதிக்கப்பட்ட நிலத்தின் அளவு மூன்று லட்சம் ஏக்கராக இருக்கும் என விவசாய சங்கங்கள் கூறுகின்றன.

தமிழ்நாடு விவசாயிகள் குறுவை சாகுபடி

குறுவை சாகுபடிக்கு காப்பீடு ஏன் முக்கியம்?

குறுவை கால காப்பீட்டின் அவசியத்தை தெரிந்துகொள்வதற்காக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் முதன்மை விஞ்ஞானியான கோபிநாத்திடம் பேசினோம்.

அவர், குறுவை காலத்தில் மழைப்பொழிவு அதிகம் இருப்பதோடு, பூச்சி தாக்குதலுக்கான சாத்தியம் அதிகமுள்ள காலம் என்றார்.

“மற்ற பருவ காலங்களைவிட அதிக ஆபத்துகள் இருந்தாலும், அதிக உற்பத்திக்கான காலம். இந்த சமயத்தில் பாதிப்பு ஏற்பட்டால், விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்படும். அதனால், காப்பீடு இல்லாமல் போனால், விவசாயிகள் மோசமான கடன் வலையில் மாட்டிக்கொள்ளும் அபாயம் இந்தக் காலத்தில் உள்ளது,” என்றார்.

மேலும், விவசாயிகளிடம் இருந்து அரசாங்கத்தை அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யும் காலமும் குறுவைதான், என்கிறார் கோபிநாத்.

மேலும், தண்ணீர் பற்றாக்குறை அல்லது அதிக மழை பொழிவு காரணமாகவும் குறுவை காலத்தில் அதிக பாதிப்பு ஏற்படும் என்கிறார். காப்பீடு இல்லாவிட்டால், அடுத்த இரண்டு பருவங்களுக்கு மீண்டும் விவசாயிகள் முதலீடு செய்வது கடினம். அதனால், அரசாங்கம் கொள்முதல் செய்வதும் குறையும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

தமிழ்நாடு விவசாயிகள் குறுவை சாகுபடி

பட மூலாதாரம், Tamilselvi

குறுவை காலத்தை நம்பியுள்ள விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வி குறுவை காலத்தில் மோசமான பாதிப்புகளைச் சந்தித்தவர். காப்பீடு இல்லாத காரணத்தால் பயிர்கள் வாடியது பற்றியும், மூன்று ஏக்கர் நெல் பயிர்கள் கருகிப்போனதால் அதிக வட்டி கட்டும் சூழலுக்கு தள்ளப்பட்டது பற்றியும் பிபிசியிடம் கூறினார்.

“நிலத்தடி நீர் மட்டத்தைப் பொருத்து, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதத்தில் பாதிப்பு மாறும். எங்கள் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைவு என்பதால், வாய்க்கால் நீரை நம்பித்தான் இருக்கிறோம். அருகில் உள்ள கிணறு ஓரளவு தண்ணீர் தேவைக்கு உதவினாலும், தற்போது பயிர் கருகும் சூழல்தான் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த ஆண்டு வாங்கிய கடனை இன்னும் கட்டிமுடிக்கவில்லை. இந்த ஆண்டும் இதுபோன்ற சோதனை காலமாகிவிட்டது,” என வருத்தத்துடன் சொல்கிறார் தமிழ்ச்செல்வி.

ஏற்கனவே இருந்த ரூ1.5 லட்சம் கடனுக்காக வட்டி செலுத்தி வரும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இழப்பை சரிசெய்ய, புதிதாக ஒரு லட்சத்திற்கு நகைக் கடன் வாங்கியுள்ளதாக கூறுகிறார் தமிழ்செல்வி.

“தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இழப்பீடு ஒரு ஏக்கருக்கு ரூ.5,400 என்பது எந்த விதத்திலும் எங்களுக்கு பலன் தராது. காப்பீடு செய்திருந்தால், ஓரளவு கடனிலிருந்து நாங்கள் தப்பித்திருப்போம். தற்போது இழப்பீடு என்ற பெயரில் கொடுக்கும் சிறுதொகையை வைத்து வட்டிகூட கட்டமுடியாத நிலையில்தான் எங்களை போன்ற பல ஆயிரம் விவசாயிகள் தவிர்க்கிறார்கள்,” என்கிறார் தமிழ்செல்வி.

தமிழ்நாடு விவசாயிகள் குறுவை சாகுபடி

பட மூலாதாரம், Jeevakumar

மத்திய – மாநில அரசுகளுக்கு இடையில் சிக்கியுள்ள விவசாயிகள்

தமிழ்செல்வியைப் போல பல விவசாயிகள் குறுவை கால பயிருக்கான காப்பீடு பதிவு செய்யப்படவில்லை என்பதால் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயிகள் உரிமை செயற்பாட்டாளர் ஜீவக்குமார், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், ஆண்டு தோறும் குறுவை, சம்பா சாகுபடியின் போது பயிர் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்படும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாகக் குறுவை சாகுபடிக்குப் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பலரும் விவசாயத்துறை அதிகாரிகளிடம் மாவட்ட அளவிலும், மாநில அளவிலான கூட்டங்களிலும் தொடர்ந்து காப்பீட்டின் அவசியம் குறித்து மனு அளித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். மத்திய அரசு, காப்பீட்டிற்கான பிரீமியம் செலுத்த முன்வந்தபோதும், தமிழ்நாடு அரசு முன்வராமல் இருப்பதால் உயர்நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பிபிசி தமிழிடம் பேசிய செயற்பாட்டாளர் ஜீவக்குமார், “மத்திய அரசு, மாநில அரசு மற்றும் விவசாயிகள் இணைந்து பிரீமியம் தொகை செலுத்துகிறோம். அதன்படிதான் சம்பா பயிர் காப்பீடு இந்த ஆண்டு செய்யப்பட்டது. அதேபோல, குறுவை காப்பீடு செய்வதில் தமிழ்நாடு அரசு மிகவும் தயக்கம் காட்டுகிறது. மத்திய அரசும், விவசாயிகளும் தயாராக இருந்தபோதும், மாநில அரசு காப்பீடு செய்ய முன்வரவில்லை. விவசாயிகள் பலமுறை அழுத்தம் கொடுத்தும் பயனில்லை. இதற்கான பதிலை பெற தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளோம்,” என்கிறார்.

குறுவை காலத்தில் ஏற்படும் இழப்பீடுகளை தவிர்ப்பதற்காகத்தான் காப்பீடு நிறுவனங்கள் ஒப்பந்தம் எடுக்க முன்வருவதில்லை என்றும் தமிழ்நாடு அரசும் அவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது சரியல்ல என்றும் விமர்சிக்கிறார் ஜீவக்குமார்.

”சம்பா சாகுபடி காப்பீடு செய்வதில் ஆர்வம் காட்டும் நிறுவனங்கள், குறுவை காலத்தை புறக்கணிக்கின்றன. தமிழ்நாடு அரசு தானாகவே ஒரு காப்பீடு நிறுவனத்தை தொடங்கலாம். அல்லது தனிப்பட்டு ஒவ்வொரு காலத்திற்கும் தனியாக ஒப்பந்தம் கோருவதற்கு பதிலாக, ஒரு ஆண்டுக்கு எல்லா பருவத்திற்கும் ஒப்பந்தம் கொடுப்பது மூலமாக, ஒப்பந்தம் எடுக்கும் தனியார் நிறுவனத்தின் பங்கேற்பை உறுதிசெய்யமுடியும்,” எனக் காப்பீடு நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை இருப்பதை சொல்கிறார் ஜீவக்குமார்.

தமிழ்நாடு விவசாயிகள் குறுவை சாகுபடி

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு அரசு காப்பீடு செய்யாதது ஏன்?

விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், மத்திய அரசு காப்பீடு செய்ய முன்வந்தபோதும் மாநில அளவில் அது செய்யப்படாதது ஏன் என்றும் தெரிந்துகொள்ள வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தியைத் தொடர்பு கொண்டோம்.

அவர் முதலில், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளில் குறுவை பயிருக்கு காப்பீடு செய்யவில்லை என்பது உண்மைதான் என்றார். அதற்கு மூன்று முக்கிய காரணங்களைத் தெரிவித்தார்.

1) கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும்தான் குறுவை பயிர் காப்பீடு செய்யவில்லை. அதிலும் குறிப்பாக 2021-22 ஆண்டு, காப்பீடு நிறுவனங்களுக்கான ஒப்பந்தம் அறிவித்தபோது எந்த நிறுவனமும் முன்வரவில்லை. முதல் ஒப்பந்தம், இரண்டாவது ஒப்பந்தம் என இரண்டு முறையிலும் காப்பீடு நிறுவனங்கள் முன்வரவில்லை. மூன்றாவது முறை ஒப்பந்தம் அறிவித்தபோது, காப்பீடு நிறுவனங்கள் வந்தாலும், குறுவை பயிரின் காலமே முடிந்துவிடும் நேரம் ஆகிவிட்டது. தாமதம் ஏற்பட்ட காலத்தால்தான், கடந்த ஆண்டு காப்பீடு செய்யமுடியவில்லை.

2) இந்த ஆண்டு, காப்பீடு நிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டாம் என்றும் குறுவை பயிருக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், தமிழ்நாடு அரசாங்கம் தனது மாநில பேரிடர் கால நிதியில் இருந்து இழப்பீடு வழங்கலாம் என முடிவு செய்துவிட்டதால், காப்பீடு நிறுவனங்களுக்கான ஒப்பந்தம் நடத்தப்படவில்லை.

3) கடந்த ஆண்டு பெற்ற அனுவத்தில் இருந்து, இந்த ஆண்டு காப்பீடு செய்ய வேண்டாம் என அரசாங்கம் கொள்கை முடிவு செய்துவிட்டதால், இந்த ஆண்டு நேரடியாக ஆய்வு நடத்தி, இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேரிடர் கால நிதியில் இருந்து இழப்பீடு தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.5,400 வழங்கப்படுகிறது.

ஆனால், இந்த ஆண்டு மத்திய அரசு காப்பீடு பிரீமியம் செலுத்த முன்வந்தபோது, தமிழ்நாடு அரசு மறுத்தது ஏன் என்று கேட்டபோது, “இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு ஒரு கொள்கை முடிவை எடுத்துள்ளது. அதன்படி, பாதிப்புக்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகையை மாநில அரசே வழங்கும் என்று முடிவுசெய்துவிட்டதால், காப்பீடு குறித்து இந்த ஆண்டு ஆலோசிக்கவில்லை,” என்றார் வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி.

தமிழ்நாடு விவசாயிகள் குறுவை சாகுபடி

இழப்பீட்டுத் தொகை ஏன் குறைவாக உள்ளது?

இழப்பீடாக தரப்படும் தொகை போதுமானதாக இல்லை என விவசாயிகள் கூறுவது பற்றி கேட்டபோது, “இழப்பீடு என்பது ஒவ்வொரு ஊரிலும் ஏற்பட்டுள்ள பாதிப்பை பொருத்து வழங்கப்படுகிறது. காப்பீடு செய்திருந்தாலும் கூட, விவசாயிகள் முதலீடு செய்த தொகையை முழுமையாகப் பெறமுடியாது. இழப்பீடு என்பதை உதவித் தொகையாகப் பார்க்கவேண்டும். செலவு செய்த முழு பணத்தையும் இழப்பீடாக கொடுப்பது விதிகளில் இல்லை,” என்கிறார் வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி.

அறுவடை காலத்தில் பயிர்கள் முழுவதும் கருகியிருந்தால் அதிக இழப்பீடும், நாற்று நடப்பட்ட சமயத்தில் பாதிப்பு அடைந்த பயிர்களுக்கு குறைவான இழப்பீடும் அளிப்பது தவிர்க்க முடியாதது என்றும் அவர் சமயமூர்த்தி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட நிலத்தின் அளவு வெறும் 40,000 ஏக்கர் என வரையறுத்தது தவறு என விவசாயிகள் கூறுவது பற்றிக் கேட்டபோது, “நாங்கள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்குகிறோம். பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வாடியிருக்கும் இடங்களைப் பார்வையிட்டு இழப்பீட்டை முடிவு செய்தோம்,” என்கிறார் அவர்.

காப்பீட்டு நிறுவனத்தின் பதில் என்ன?

‘ஏ.ஐ.சி இந்தியா’ நிறுவனம் 2016 முதல் 2021 வரையிலான காலகட்டங்களில் குறுவை சாகுபடி சமயத்தில் காப்பீடு வழங்கியுள்ளது என அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடபட்டுள்ளது.

2021-22 குறுவை கால பயிருக்கு காப்பீடு பதிவு செய்ய ஒப்பந்தம் அறிவித்தபோது தாமதம் ஏற்பட்டது ஏன் என தெரிந்துகொள்ள ‘ஏ.ஐ.சி இந்தியா’ என்ற காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது எந்த பதிலும் கிடைக்கவில்லை.

மின்னஞ்சல் வாயிலாகக் கேள்விகள் அனுப்பியபோதும், பதில்கள் இதுவரை கிடைக்கவில்லை.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »