Press "Enter" to skip to content

இந்தியாவில் தன்பாலினத்தவர் திருமண உரிமைக்காக இந்த 73 வயது பெண் போராடுவது ஏன்?

பட மூலாதாரம், Maya Sharma

இந்தியாவில் LGBQT (தன்பால் ஈர்ப்பாளர்- பெண், தன்பால் ஈர்ப்பாளர்-ஆண், இருபால் ஈர்ப்பாளர், பால் புதுமையினர், திருநர்) உரிமைப் போராட்டத்தின் சமீபத்திய அத்தியாயமான தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது குறித்த தனது முடிவை இந்த வாரம் உச்ச நீதிமன்றம் அறிவிக்க உள்ளது. 16 ஆண்டுகால திருமண பந்தத்தில் இருந்து வெளியேறியது முதல் தன் பாலின திருமண சமத்துவத்திற்காக வழக்கு தொடுத்தது வரையிலான செயல்பாட்டை LGBQT ஆர்வலர் மாயா ஷர்மாவின் பார்வையில் பார்க்கலாம்.

LGBTQ ஆர்வலரான மாயா ஷர்மா, 1990 களின் முற்பகுதியில் தனது 16 ஆண்டுகால திருமண பந்தத்தை விட்டு வெளியேறியபோது, தன் பாலின தம்பதிகள், திருநங்கைகள் மற்றும் பால்புதுமையினர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்குமாறு உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

70 வயதை கடந்துள்ள மாயா, வதோதராவில் தனது பெண் துணைவருடன் வசித்து வருகிறார். தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தாலும்கூட, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம் அவரிடத்தில் இல்லை. இந்த வழக்கின் மூலம், நாம் “சமத்துவமான துணையை கற்பனை செய்ய முடியும்” என்பது அவரது நம்பிக்கை.

திருமண பந்தத்தில் இருந்தது முதல் தான் ஒரு லெஸ்பியன் என்பதை புரிந்துகொண்டது வரை LBGTQ இயக்கத்தின் பல முக்கிய மைல்கற்களில் ஒரு பகுதியாக மாயா இருந்துள்ளார். அந்த பயணம் குறித்து பார்ப்போம்.

தன்பாலின திருமணம்

பட மூலாதாரம், Getty Images

ஆரம்ப கால செயல்பாடுகள்

ராஜஸ்தானின் அஜ்மீரில் பள்ளிப் படிப்பை முடித்த மாயா, இளங்கலைப் படிப்பதற்காக 1960களின் பிற்பகுதியில் புது டெல்லிக்கு வந்தார். 1983 ஆம் ஆண்டில், அவர் சஹேலி என்ற பெண்கள் அமைப்பில் இணைந்து தன்னார்வத் தொண்டில் ஈடுபடத் தொடங்கினார். அங்கு “தங்கள் திருமண பந்தத்தில் இருந்து வெளியேறவும், சமூகத்தால் கட்டளையிடப்படுவதை விட தாங்கள் விரும்பியதை செய்ய சுதந்திரத்தை பெறவும் விரும்பிய நிறைய பெண்களை (தன்னைப் போன்ற) மாயா சந்தித்தார்.

அவர் சிறு வயதில் இருந்தே பெண்களால் அதிகம் ஈர்க்கப்பட்டார். “ஒரு இளம் பெண்ணாக இருந்தாலும், நான் எப்போதும் பெண்களுடன் மிகவும் ஆழமான நட்பை வைத்திருந்தேன்” என்று அவர் கூறுகிறார். “பள்ளிக் காலத்தில் நான் என்னுடைய ஆசிரியருடன் நெருக்கமாக இருந்தேன்.”

ஆண்டுகள் சென்றன. ஆணுக்கு பெண் என்று போதிக்கும் இந்த சமூகத்தில் பெண்களுடன் உறவை தொடர்வதை அவரால் நினைத்து பார்க்க முடியவில்லை. ஆனால், தனது பணிகள் நிறைய உள்கேள்விகளை எழுப்பியதாக அவர் கூறுகிறார்.

1988-ல், இரண்டு பெண் காவலர்கள் திருமணம் செய்து கொண்ட செய்திகள், லெஸ்பியன் தம்பதிகள் இணைந்து வாழ ஆரம்பித்தனர் என்று தலைப்பு செய்திகளாகின. “இந்தச் செய்தியைக் கேட்டதும் மனதுக்கு இதமாக இருந்தது,” என்கிறார் மாயா. இருப்பினும், அவர்கள் எதிர்கொண்ட அனைத்தையும் பார்ப்பதற்கும் கடினமாக இருந்தது – காவல் துறையினர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.

“அந்த நேரத்தில் எதுவும் [பால்புதுமை சமூகமும்] இல்லை. நம்மை ஒருவருக்கு ஒருவர் தெரியும் என்றாலும் நெருங்கிய நண்பர்கள் என்ற ரீதியில் வெளியே வருவது கூட கடினமாக இருந்தது” என்று அவர் கூறுகிறார்.

தன்பாலின திருமணம்

பட மூலாதாரம், Getty Images

‘லெஸ் தேன் கே’ அறிக்கை வெளியீடு

1991 ஆம் ஆண்டு “பிங்க் புக்” என்றும் அழைக்கப்படும் 70 பக்க அறிக்கை வெளியானதை LGBTQ பயணத்தின் ஒரு முக்கிய தருணமாக மாயா நினைவு கூர்ந்தார்.

ஹெச்ஐவி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துவந்த நேரத்தில் வெளியான ‘லெஸ் தேன் கே’(Less than Gay) என்ற இந்த அறிக்கை, “தன்பாலீன ஈர்ப்பாளர்கள் இந்தியாவில் இல்லை, தன்பாலீன ஈர்ப்பு குணப்படுத்தப்பட வேண்டிய நோய்” என்ற பரவலான நம்பிக்கைக்கு சவால்விடுத்தது.

“இந்தியாவில் வாழும் தன்பாலின ஈர்ப்பாளர், லெஸ்பியன் குறித்த முதல் ஆவணம் என்று கருத்தப்படும் அந்த அறிக்கை, சட்டப் பிரிவு 377 ஐ நீக்க வேண்டும், தன் பாலின திருமண சமத்துவத்திற்கு இடமளிக்கும் வகையில் சிறப்பு திருமணச் சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை அப்பொழுதே வைத்தது.

காதலில் விழுந்தார்

இந்த நேரத்தில், மாயா தனது 16 ஆண்டுகால திருமண பந்தத்தை விட்டு வெளியேறினார். “ஒரு நாள், நான் ஒரு சிறிய சூட்கேஸை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினேன்,”என்று அவர் கூறுகிறார். அவர் தனது வீட்டை விட்டு வெளியேறி டெல்லியில் ஒரு குடியிருப்பில் குடியேறினார்.

தனது பாலினம் காரணமாக மாயா திருமண பந்தத்தில் இருந்து விலகவில்லை, சொல்லப்போனால், அது தொடர்பாக அவர் இன்னும் முழுமையாக உடன்படவில்லை. மாறாக, திருமணத்தை மிகவும் ஒடுக்குமுறையாகக் அவர் பார்த்தார். “திருமணம் எந்தளவு சமமற்றது, அடக்குமுறையானது என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை” என்று மாயா கூறுகிறார்.

இந்த நடவடிக்கையில் அவரது பணியும் முக்கிய பங்கு வகித்தது. “சஹேலி எனக்கு நிறைய ஆறுதலையும் தைரியத்தையும் கொடுத்தது. வேறுவிதமாக சிந்திக்க எனக்கு தைரியம் கிடைத்ததாக உணர்ந்தேன்”.

சிறிது காலம் கழித்து, அவர் ஒரு பெண் மீது காதல் வயப்பட்டார். “என் வாழ்க்கையில் அற்புதமான காலகட்டம் அது. நீங்கள் யார் என்பதைப் புரிந்துகொள்வது என்பது ஒரு விஷயம். ஆனால் நீங்கள் ஒருவரைக் காதலிக்கும்போது, அது மேலும் முன்னோக்கி செல்வதாகும்.”

தனது துணைவர் குறித்து அன்புடன் நினைவுகூர்ந்த மாயா, “நான் அவரை என் குருவாகக் கருதினேன். அவரால் என்னென்ன விஷயங்களைச் செய்ய முடியும் என்பதை பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது” என்று குறிப்பிடுகிறார்.

தன்பாலின திருமணம்

பட மூலாதாரம், Getty Images

லெஸ்பியன்களுக்கான அங்கீகாரம்

1990களில் LGBTQ பற்றிய உரையாடல் சத்தமாக ஒலிக்கத் தொடங்கியது. 1994 ஆம் ஆண்டு திகார் சிறையில் ஆணுறைகளை விநியோகிப்பதை கிரண் பேடி நிறுத்தியது – தன்பாலின ஈர்ப்பாளர்களை தடுக்கும் நடவடிக்கை – பல எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது.

“அந்தப் போராட்டத்தில் நானும் அணிவகுத்துச் சென்றேன்” என்கிறார் மாயா.

பெண்கள் குழுக்கள் கூட LGBTQ விவகாரங்களை எப்போதும் ஆதரிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், “இது நலிந்த மேற்கத்திய கலாச்சாரம் என்று [இந்திய பெண்களின் தேசிய கூட்டமைப்பு] விம்லா ஃபரூக்கி கூறினார். பால் புதுமையினர் சிறு சிறு குழுக்களாக பேசத் தொடங்கினர். ஆனால், வெளி உலகிற்கு வருவது என்பது கடினமாக இருந்தது. LGBTQ மக்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும்போதெல்லாம், நாங்கள் சமூகக் கட்டமைப்பை கிழித்தெறிய போகிறோம் என்று மக்கள் பயந்தார்கள்” என்றார்.

உலகம் பால்புதுமையினரை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தை விவரிக்கும்போது, “அப்போது நான் இளம் வயதை கடந்திருந்ததால் பதற்றமாக உணர்ந்தேன்.” என மாயா தெரிவித்தார்.

தன்பாலின திருமணம்

பட மூலாதாரம், Maya Sharma

ஃபயர் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம்

1998 இல் வெளிவந்த ‘ஃபயர்(Fire)’திரைப்படம்- திருமணமான இரண்டு மைத்துனிகளுக்கு இடையேயான உடல் உறவு தொடர்பான வெளிப்படையான காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்தன- மற்றொரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

மும்பை, டெல்லி மற்றும் சூரத் ஆகிய இடங்களில் திரையரங்குகள் சேதப்படுத்தப்பட்டன. அரசியல் கட்சிகள் மற்றும் LGBTQ குழுக்கள் நடத்திய போராட்டங்கள் குறித்து பல நாட்கள் பேசப்பட்டது.

“இந்தியன் அண்ட் லெஸ்பியன்’ என்று ஒரு விளம்பர ஒட்டியை மிகுந்த நேசத்துடனும் பெருமையுடனும் உருவாக்கினோம். நாங்கள் ரீகல் திரைப்படத்திற்கு வெளியே கூடி மெழுகுவர்த்தி அணிவகுப்பு நடத்தினோம்,” என்று மாயா குறிப்பிட்டார்.

மறுநாள் காலை, செய்தித்தாள் தலைப்புச் செய்திகளில் லெஸ்பியன் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. இது குறித்து அவர் பேசும்போது, “அதுவும் எங்களை பயமுறுத்தியது. எங்கள் குடும்பங்களுக்கும் எங்கள் பணியிடங்களுக்கும் எங்களைப் பற்றி தெரியாது. அதனால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் போராட்டம் என்னை உற்சாகப்படுத்தியது. நீங்கள் பயத்தை கடந்து உயரும்போது, அது உங்களுடையதாக இருக்காது, பிறருடையதாக மாறிவிடும். அவர்கள் நம்மை என்ன செய்ய முடியும் என்று நீங்கள் உணர்வீர்கள்” என்றார்.

“இது போன்ற பல சிறிய தருணங்கள் உள்ளன,” என்றும் அவர் கூறுகிறார்.

தன்பாலின திருமணம்

பட மூலாதாரம், Getty Images

வதோதராவுக்குச் சென்றார்

மாயா 2000 களின் முற்பகுதியில் ஒரு தொழிற்சங்கத்துடன் பணிபுரிந்துவந்தார். அது LGBTQ விவகாரங்களில் அவர் ஈடுபடுவதை ஏற்கவில்லை. “ தொழிற்சங்கத்தின் பெயரை கெடுத்துவிட்டதாக அவர்கள் என் மீது மிகவும் கோபமாக இருந்தார்கள். அதனால் அதில் இருந்து நான் விலக வேண்டியதாயிற்று” என்று மாயா தெரிவித்தார்.

இறுதியில், அவர் வதோதராவுக்குச் சென்று, பெண்கள் மற்றும் LGBTQ உரிமைகளுக்காக போராடும் விகல்ப் மகளிர் குழுவில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டார். தனது பணி அனுபவங்களின் அடிப்படையில் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள லெஸ்பியன்களின் வாழ்க்கையை விவரிக்கும் ‘Loving Women: Being Lesbian in Underprivileged India’என்ற புத்தகத்தை 2006-ல் மாயா எழுதினார்.

377 சட்டப்பிரிவை நீக்குவதற்கான போராட்டம்

இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பை குற்றம் அற்றதாக்குவதற்கான போராட்டம் 1990 களில் இருந்து நடந்து வந்தாலும், 2000-களின் முற்பகுதியில் இதற்கான சட்டப் போராட்டம் வேகம் பெற்றது. 2003-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம், தன்பாலின ஈர்ப்பை குற்றமாக கருதும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-க்கு எதிரான மனுவை ஏற்க மறுத்தது LGBTQ சமூகத்துக்கு பெரிய பின்னடைவானது.

மாயா இந்த போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு, LGBTQ சமூகத்திற்கு ஆதரவை பறை சாற்றினார். “நாங்கள் களத்தில் இருக்கும் வீரர்கள் போன்றவர்கள் எங்களுக்கு ஆதரவாக விக்ரம் சேத் போன்ற பெரிய பெரிய ஆட்களை பெற்றிருந்தோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

2009ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் சட்டப்பிரிவு 377 இந்திய அரசியலமைப்புக்கு எதிரானதாக உள்ளதால் அதை ரத்து செய்வதாக உத்தரவிட்டது. எனினும், அப்பிரிவு செல்லும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் 2013இல் தீர்ப்பளித்தது. இது மனச்சோர்வை ஏற்படுத்தியதாக மாயா கூறுகிறார்.

அதேநேரத்தில் இதனால் பலன்களும் இருப்பதாக கூறும் அவர், “இந்த வழக்கின் மூலம் LGBTQ சமூகம் மொத்தமாக ஒரு புரிதலுடன் ஒன்று கூடியது. அதுவரை அவர்கள் சிதறியும் சச்சரவுகளுடனும் இருந்தனர்” என்றார்.

தன்பாலின திருமணம்

பட மூலாதாரம், Maya sharma

திருநர்களுக்கு அங்கீகாரம், தன்பாலின ஈர்ப்பு குற்றமற்றதாக அறிவிப்பு

இந்த தீர்ப்புக்கு சில மாதங்கள் கழித்து திருநர்களை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மற்றொரு முக்கிய தீர்ப்பை வழங்கியது.

“இதன் மூலம் நீங்கள் இதைச் செய்யக்கூடாது, இதைச் செய்யலாம் என்று நாங்கள் அரசாங்கத்துடன் வாதிடமுடியும்” என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், முக்கிய முன்னேற்றம் 2018ஆம் ஆண்டு அக்டோபரில் நிகழ்ந்தது. தன்பாலின ஈர்ப்பு குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இது மாயாவுக்கு மன உறுதியை அளித்தது. “நாங்கள் இயற்கைக்கு மாறானவர்கள் என்று யாராவது சொல்வார்களோ என்ற பயம் எப்போதும் இருந்தது. இந்த தீர்ப்பின் மூலம் நாங்கள் குற்றவாளிகள் அல்ல என்பது ஆறுதலாக இருந்தது ” என்கிறார் அவர்.

LGBTQ-களின் உணர்வுகளை ஏற்றுக்கொள்வதில் இது முக்கியமான படியாக இருந்தாலும் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன. “சட்டத்தை மாற்றுவது முக்கியம். இருப்பினும், அதன் தாக்கம் மெதுவாக உணரப்படுகிறது” என்று மாயா கூறுகிறார்.

அவர் வதோதராவில் இருந்த காலத்தில், தற்போது அவரது துணைவராக இருக்கும் பெண்ணை சந்தித்தார். தன் வாழ்நாளில் மகிழ்ச்சி நிறைந்த நாட்கள் அவை என்று குறிப்பிடும் மாயா, “நான் LGBTQ சமூகத்திற்காக பணிபுரிந்துகொண்டிருந்ததால் அவரை தினமும் சந்திப்பேன். நான் காதல் வயப்பட்டிருந்தேன்” என்றார்.

தன்பாலின திருமணம்

பட மூலாதாரம், Getty Images

திருமணத்திற்கான உரிமையை எதிர்நோக்கும் LGBTQ

தன்பாலின உறவு குற்றமற்றதாக அறிவிக்கப்பட்டு திருநர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், LBGTQ சமூகத்தில் பலர் திருமணம் செய்வதற்கான உரிமையை எதிர்நோக்க தொடங்கினர்.

ஜனவரி 2020-ல், ஓர் ஓரினச்சேர்க்கை தம்பதியினர் திருமணம் செய்து கொள்வதற்கான உரிமை கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதேபோன்ற மனுக்கள் டெல்லி மற்றும் ஒரிசா உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் தொடரப்பட்டன. திருமணமான தம்பதிகளுக்கு வழங்கப்பட்டும் பல அடிப்படை உரிமைகள் தங்களுக்கு மறுக்கப்படுவதாக மனுதாரர்கள் வாதிட்டனர். 2023 ஜனவரியில், உச்ச நீதிமன்றம் இந்த மனுக்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்தது.

திருமணத்திற்கு மாயா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், 2023 பிப்ரவரியில் அவரும் மேலும் சிலரும் தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரி மனு தாக்கல் செய்தனர். இதற்கு காரணம் சொத்து, வாரிசுச் சட்டங்களில் தன்பாலினத்தவர்களுக்கு சம உரிமை வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

“பால்புதுமையினருக்கு திருமணத்தை பரிந்துரைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஏனென்றால் திருமணம் என்ற வார்த்தை நிறையவற்றுடன் சேர்ந்து வருகிறது. அதற்கு பதிலாக துணை என்று அழைப்பதை நான் விரும்புகிறேன்” என்றார். இந்த மனுவின் மூலம் மக்கள் மிகவும் சமமான, குறைந்த ஆணாதிக்க எண்ணத்துடன் சிந்திக்கத் தொடங்குவார்கள் என்று அவர் நம்புகிறார்.

ஒருவரின் குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் என்ற தனித்துவமான கோரிக்கையையும் அவரது மனு முன்வைக்கிறது. “[குடும்பங்களில்] வன்முறை வெளிப்படையாக கவனிக்கப்படுவதில்லை. பால் புதுமையினர் தங்கள் பிறந்த குடும்பங்களில் எதிர்கொள்ளும் வன்முறையில் இருந்து அவர்களுக்கு எப்படி ஆதரவு அமைப்பை வழங்குவீர்கள்?” என்றும் மாயா கேள்வி எழுப்புகிறார்.

உச்ச நீதிமன்றம் என்ன முடிவெடுத்தாலும், இந்த செயல்பாடுகள் அதன் வேலையைக் குறைக்கிறது என்று மாயா நம்புகிறார். “சட்ட அங்கீகாரத்திற்கான வேட்கை ஒரு பக்கம் உள்ளது, சமூக மாற்றம் மறுபுறம் உள்ளது. இருப்பினும், இருவரும் எப்போதாவது சந்திக்க முடியும் என்பது ஒரு அழகான உணர்வு” என்று அவர் கூறுகிறார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »