Press "Enter" to skip to content

தன்பாலின திருமண அங்கீகாரம்: இந்தியாவில் 14 கோடி பேரின் விருப்பம் நிறைவேறுமா? நாளை தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images

தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் நாளை வழங்கவுள்ளது.

திருமணம் செய்து கொள்ள முடியாதது அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகவும், அவர்களை “இரண்டாம் தர குடிமக்கள்” ஆக்குவதாகவும் மனுதாரர்கள் கூறுகின்றனர்.

தன்பாலினத்தவர் திருமணம் என்பது இந்திய கலாசாரத்திற்கு எதிரானவை என்று கூறி அரசும் மதத் தலைவர்களும் இதைக் கடுமையாக எதிர்த்தனர்.

திருமணம் செய்வதற்கான பாலின சமத்துவத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், அது இந்தியாவின் கோடிக்கணக்கான LGBTQ+ மக்களுக்கு திருமணம் செய்துகொள்ளும் உரிமையை வழங்கும்.

தத்தெடுப்பு, விவாகரத்து மற்றும் வாரிசுரிமை போன்ற பல சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்பதால், இந்த இந்திய சமூகத்தில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையின் கீழ் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, இந்த வழக்கிலுள்ள முக்கியமான சட்ட அம்சங்களை விசாரிக்க அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த வழக்கின் மீதான விசாரணை நடத்தப்பட்டது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலானஅமர்வு, இது “முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்” என்றும், வழக்கின் வாதங்கள் “பொது நலனுக்காக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது” என்றும் கூறினார். விசாரணைக்கு பிறகு உச்ச நீதிமன்றம் தனது இறுதி உத்தரவை மே 12 அன்று ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகிறது.

மனுதாரர்கள் யார், அவர்களின் கோரிக்கைகள் என்ன?

தன்பாலின தம்பதி திருமணம் சட்ட அங்கீகாரம்

பட மூலாதாரம், Getty Images

தன்பாலின தம்பதிகள், குழந்தைகளை ஒன்றாக வளர்க்கும் தன்பாலின தம்பதிகள், LGBTQ+ ஆர்வலர்கள் மற்றும் சில அமைப்புகள் என மொத்தமாக தாக்கல் செய்யப்படிருந்த 21 மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

திருமணம் என்பது இருவர் இணைந்து வாழும் வாழ்க்கை. ஆனால் அது ஆணும் பெண்ணும் மட்டுமே இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல, என்று மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தனர்.

காலப்போக்கில் மாறிவரும் திருமணம் குறித்த கருத்துகளைப் பிரதிபலிக்கும் வகையில் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்றும் தன் பாலின ஈர்ப்பாளர்களும் மரியாதையான திருமணத்தை விரும்புகிறார்கள் என்றும் அவர்கள் கூறினர்.

இந்திய அரசியலமைப்பு, அனைத்து குடிமக்களுக்கும் அவர்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளும் உரிமையை அளிக்கிறது. பாலினத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை அரசியலமைப்பு சட்டம் தடை செய்கிறது என்று மனுதாரர்கள் நீதிமன்றத்தில் பலமுறை வலியுறுத்தினர்.

திருமணம் செய்து கொள்ள முடியாததால், கூட்டு வங்கிக் கணக்குகளை வைத்திருக்கவோ, இருவரும் இணைந்து சொந்தமாக ஒரு வீட்டை வைத்திருக்கவோ அல்லது ஒன்றாக குழந்தைகளைத் தத்தெடுக்கவோ முடியாமல் இருப்பதை மனுதாரர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.

தன்பாலினத்தவரை பாதிக்கும் இந்த நிலை குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள், இதை நிவர்த்தி செய்ய அரசு என்ன திட்டமிட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசின் பதில் என்ன?

தன்பாலின தம்பதி திருமணம் சட்ட அங்கீகாரம்

பட மூலாதாரம், Getty Images

இந்த விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றத்தின் உரிமை குறித்து மத்திய அரசு கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்று அரசு கூறியது.

அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தினார். மேலும் திருமணம் என்பது ஒர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மட்டுமே நடக்க முடியும் என வாதிட்டார்.

இந்தியாவின் அனைத்து மத அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் அனைவரும் இந்த விவகாரத்தில் ஒன்றாக குரல் எழுப்பினர். தன்பாலின திருமண அங்கீகாரம் குறித்த கோரிக்கை தொடர்பாக பேசும் போது, ‘திருமணம் என்பது சம்பிரதாயம், அது பொழுதுபோக்கு அல்ல’ என்று கூறினர்.

ஆனால் அரசு மற்றும் மதத் தலைவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், வழக்கை விசாரிக்க நீதிபதிகள் முடிவு செய்தனர்.

மதங்கள் பின்பற்றும் சிவில் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாமல், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ், LGBTQ+ நபர்களை சேர்க்கும் வகையில் அதில் மாற்றங்களை கொண்டு வர முடியுமா என்று பார்க்க வேண்டுமென நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிறப்பு திருமணச் சட்டம் என்றால் என்ன?

இந்தியாவில், பெரும்பான்மையான திருமணங்கள் முஸ்லீம் திருமணச் சட்டம் மற்றும் இந்து திருமணச் சட்டம் போன்ற தனிப்பட்ட மத சட்டங்களின் கீழ் நடத்தப்படுகின்றன.

ஆனால் அவர்கள் தங்கள் மதம் அல்லது சாதியைச் சேர்ந்த தம்பதிகளுக்கு இடையே மட்டும் நடக்கும் திருமணங்களை அங்கீகரிக்கிறார்கள். எனவே, ஒர் இந்துவும் முஸ்லீமும் திருமணம் செய்ய விரும்பினால், அவர்களில் ஒருவர் மற்றவரின் மதத்திற்கு மாற வேண்டும்.

“இது மிகவும் சிக்கலான நடைமுறை” என்று வழக்கறிஞர் அக்‌ஷத் பாஜ்பாய் கூறுகிறார். இந்திய அரசியலமைப்பால் அனைத்து குடிமகன்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள மதத்தை கடைபிடிக்கும் உரிமைக்கு முரணாக இந்த சட்டம் உள்ளது.

எனவே, சுதந்திரத்திற்குப் பிறகு, பிற மதம், சாதி இடையிலான கலப்பு திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுக்க அரசு முடிவு செய்தது.

“நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு திருமணச் சட்டம் 1954, மதத்திற்கும், திருமணத்திற்கும் இடையே இருந்த பிடியை தளர்த்தியது. திருமணம் செய்வதற்காக ஒருவர் தங்கள் மதத்தை கைவிட வேண்டியதில்லை என்பதை இந்தச் சட்டம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது,” என்று பாஜ்பாய் கூறுகிறார்.

“இது தனிநபர் சுதந்திரத்தில் ஒரு பெரிய முன்னேற்றம்,” என்று அவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள சட்டத்தில் ‘ஆண்’ மற்றும் ‘பெண்’ என்பதை மாற்றி ‘துணை’ என மாற்றுவது மூலம் அவர்களுக்கு திருமண சமத்துவத்தை வழங்க முடியும் என்று நீதிமன்றத்தில் மனுதாரர்கள் வாதிட்டனர்.

ஆனால் விசாரணையின் போது இந்த சிறிய மாற்றத்தின் மூலம் முழுமையான அங்கீகாரம் கிடைக்காது என்பதும், ​​விவாகரத்து, தத்தெடுக்கும் உரிமை, வாரிசுரிமை, துணையை பராமரிப்பது மற்றும் பிற தொடர்புடைய சிக்கல்களை நிர்வகிக்கும் பல சட்டங்கள் இருப்பதால், இந்த ஒரு சட்டத்தை மாற்றியமைப்பது போதுமானதாக இருக்காது என்பது தெளிவானது.

நீதிமன்றத்தின் முன் இருக்கும் வாய்ப்புகள்

தன்பாலின தம்பதி திருமணம் சட்ட அங்கீகாரம்

பட மூலாதாரம், Getty Images

நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருக்குமென ஊகிப்பது கடினம், ஆனால் பரவலாக எதிர்பார்க்கப்படும் ஒன்று, அவர்கள் தன்பாலின தம்பதிகளுக்கு சில சமூக மற்றும் சட்ட உரிமைகளை வழங்குவார்கள்.

அதாவது கூட்டு வங்கிக் கணக்குகளைத் திறக்க அனுமதிப்பது, காப்பீடு எடுக்கும் போது ஒருவரை ஒருவர் நாமினியாக பரிந்துரைக்க அனுமதி வழங்குவது, கூட்டாக சொத்து வாங்குவது போன்ற உரிமைகள் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சொலிசிட்டர் ஜெனரல் மேத்தாவும், தன்பாலின தம்பதிகளுக்கு இந்த உரிமைகளை வழங்குவது குறித்து பரிசீலிக்க அரசு தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுக்களை அரசு தரப்பிலிருந்து கடுமையாக எதிர்க்கும் நிலையில், “மதத்தை முன்னிறுத்தி குடும்பம் மற்றும் திருமணங்கள் நடக்கும் நாட்டில், இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கும் நீதிபதிகளின் பணி, கயிற்றில் நடப்பது போல சவாலானது,” என்று வழக்கறிஞர் பாஜ்பாய் கூறினார்.

உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின்படி, சுமார் 14 கோடி LGBTQ+ சமூகத்தினர் இந்தியாவில் உள்ளனர். இவர்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

குறிப்பாக செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக அறிவித்ததிலிருந்து தன்பாலின சேர்க்கையை ஏற்றுக்கொள்வது அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன.

2020 இல் ப்யூ (Pew) கணக்கெடுப்பில் 37% மக்கள் தன்பாலின திருமணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்தியாவில் இந்த கேள்வியை முதன்முறையாக 2014இல் கேட்டபோது இந்த எண்ணிக்கை 15% ஆக இருந்தது. ஆனால் தற்போது 22% அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த கணக்கெடுப்பில் இதே எண்ணிக்கை இன்னும் அதிகரித்து, தன்பாலின தம்பதிகளுக்கு திருமணம் அங்கீகாரம் வேண்டுமென 53% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 43% பேர் இதற்கு அங்கீகாரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் LGBTQ+ சமூகத்தின் மீதான பார்வை குறித்து ஒருசில மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பாலினம் மற்றும் பாலியல் மீதான அணுகுமுறைகள் பெரும்பாலும் பழமைவாதமாகவே இருக்கின்றன என்றும் இதனால் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பாகுபாடுகளை எதிர்கொள்வதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

விசாரணையின் போது, ​​மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான முகுல் ரோஹத்கி, அரசியலமைப்பின் கீழ் LGBTQ+ நபர்களை சமமாக ஏற்றுக்கொள்ள சமூகத்திற்கு சில சமயங்களில் தூண்டுதல் தேவைப்படுவதாகவும், உச்ச நீதிமன்றம் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கினால், அது அவர்களை சமூகத்தில் ஏற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »