Press "Enter" to skip to content

இஸ்ரேலுக்கு செல்லும் அமெரிக்க அதிபர் பைடன் – என்ன செய்யப் போகிறார்?

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை (புதன்கிழமை, அக்டோபர் 18) இஸ்ரேலுக்குப் பயணம் செய்யவுள்ளதாக, தற்போது இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அறிவித்துள்ளார்.

ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில், பிளிங்கன் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவருக்கும் இடையேயான ஏழு மணி நேர சந்திப்புக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேலுக்குச் செல்வார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பைடன் இஸ்ரேலுக்கு நாட்டிற்குப் பயணம் செய்யும் போது ‘இஸ்ரேலின் போர் நோக்கங்கள் மற்றும் மூலோபாயம் பற்றிய விரிவான தகவலைப்’ பெறுவார், என பிளிங்கன் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், ‘பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைக்கும் விதத்தில் இஸ்ரேல் எவ்வாறு தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என்பதையும், இஸ்ரேல் காஸாவில் உள்ள பாலஸ்தீனியப் பொதுமக்களுக்கு உதவிகளை அனுப்ப என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதையும் கேட்டறிவார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில் பைடனின் பயணம் அமையவிருக்கிறது.

இந்நிலையில் இஸ்ரேல் மீது காசாவின் ராக்கெட் தாக்குதலும் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் இருக்கிறது.

இஸ்ரேலில் பைடன் என்ன செய்வார்?

இதுகுறித்துப் பேசிய அமெரிக்க தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, புதன்கிழமை இஸ்ரேலின் டெல் அவிவில் தரையிறங்கும் போது அதிபர் பைடன் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் ‘ஒரு முக்கியமான தருணத்தில்’ அங்கு செல்வார் என்று கூறினார்.

பைடனின் முக்கியக் குறிக்கோள்கள், இஸ்ரேலுக்கு ‘அமெரிக்காவின் ஆதரவை உறுதிப்படுத்துவது’ மற்றும் ‘காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு உதவுவது’ என்று கிர்பி கூறினார்.

மேலும், ஹமாஸுக்குப் பயனளிக்காத வகையில், மனிதாபிமான உதவிகள் வழங்குவதுபற்றி அவர் விவாதிப்பார் என்று கிர்பி கூறினார்.

காசாவை விட்டு வெளியேற விரும்பும் பொதுமக்களுக்காக ‘பாதுகாப்பான பாதையை’ உருவாக்கவும் பைடன் முனைவர் என்று அவர் கூறினார்.

அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

மத்தியக் கிழக்கில் அமெரிக்கா இப்போது என்ன செய்கிறது?

ஹமாஸின் தாக்குதலும் இஸ்ரேலிய எதிர்த்தாக்குதலும் மேற்குக் கரையிலும் அதற்கு அப்பாலும் வன்முறையைத் தூண்டக்கூடும் என்று அமெரிக்கா கவலைப்படுகிறது.

ஏற்கனவே இஸ்ரேலில் இருக்கும் பிளிங்கன் பாலஸ்தீனியப் போராளிக் குழுவான ஹமாஸால் நிர்வகிக்கப்படும் காஸாவில் பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தடுக்க முயற்சிக்கிறார். இஸ்ரேல் ஏற்கனவே இடைவிடாத வான்வழித் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 3,000 பாலஸ்தீனியர்களைக் கொன்றிருக்கிறது, மேலும் காஸாவிற்கு உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றைத் தடுத்து, அதை மனிதாபிமான நெருக்கடியில் மூழ்கடித்துள்ளது.

“பிளிங்கன் ஒரு சிக்கலான சூழ்நிலையைச் சமாளிக்கப் பார்க்கிறார்,” என்று அமெரிக்காவின் மத்திய கிழக்கிற்கான வெளியுறவுத்துறையின் முன்னாள் உயர் தூதர் டேவிட் ஷெங்கர் கூறுகிறார். “இதுவரை, அவர் அதைச் சிறப்பாக நிர்வகித்ததாகத் தெரிகிறது. ஆனால் அது மேலும் மேலும் சவாலானதாக மாறுகிறது,” என்றார் அவர்.

பிளிங்கன்

பட மூலாதாரம், Getty Images

அரபு நாடுகளின் நிலைப்பாடு என்ன?

கடந்த வாரம், அவர் அரபு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்நாடுகள் ஹமாஸை தெளிவாகக் கண்டிக்க வைக்கவும், இஸ்ரேலின் இராணுவ செயல்பாடுகள் மீதான விமர்சனத்தை மட்டுப்படுத்தவும் முயன்றார்.

இரண்டு அரபு அரசாங்கங்கள் – பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – ஹமாஸைக் கண்டித்தன. மற்றவர்கள் தனிப்பட்ட முறையில் அவ்வாறு செய்திருக்கலாம், ஏனென்றால் பெரும்பாலானவர்கள் வெவ்வேறு அளவுகளில் ஹமாஸுக்கு விரோதமாக உள்ளனர்.

இருப்பினும், பொதுவாக, அவர்கள் காஸாவில் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான அவலத்தைப் பற்றியே அதிகம் பேசினர்.

ஒரு நீண்ட இஸ்ரேலிய தரைப்படை நடவடிக்கையானது, பாலஸ்தீனிய காரணத்தை ஆதரிக்கும் அவர்களின் மக்களைத் தூண்டிவிடலாம், தங்கள் நாடுகளில் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தலாம் மற்றும் எகிப்து மற்றும் சவுதி அரேபியா போன்ற அரபு ஹெவிவெயிட்கள் நிலைமையை அமைதிப்படுத்த வேண்டிய இராஜதந்திர அறையை சுருக்கலாம்.

ஆனால், எகிப்து, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் எதிர்தாக்குதல் என்பதையும் மீறி ஒரு ‘கூட்டு தண்டனையாக’ மாறியிருக்கிறது என்று விமர்சித்திருக்கிறது.

அன்வர் இப்ராஹிம்

பட மூலாதாரம், Getty Images

பாலத்தீன மக்களை ஆதரிப்பதாக மலேசிய பிரதமர் வாக்குறுதி

இதற்கிடையில் பாலத்தீன மக்களுக்கு அசைக்கமுடியாத ஆதரவை வழங்குவதாக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவிடம் கூறியதாக மலேசிய பிரதமர் இப்ராஹிம் அன்வர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியாவுடன் தொலைபேசியில் உரையாடியதாக இப்ராஹிம் கூறினார். “காஸாவின் மோசமான சூழ்நிலையில், குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்தவும், ரஃபாவில் ஒரு மனிதாபிமான வழித்தடத்தை நிறுவவும் நான் வலுவாக வாதிடுகிறேன்,” என்று எக்ஸ் வலைத்தளத்தில் இப்ராஹிம் பதிவிட்டார்.

“இஸ்ரேல், தங்கள் ஆக்கிரமிப்பு அரசியலை கடைப்பிடிப்பதை கைவிடுவதும், ஹமாஸுடன் உடனடியாக போர்நிறுத்தம் செய்வதும், நடந்துகொண்டிருக்கும் மோதலுக்கு முடிவுகட்ட ஒரு அமைதியான உடன்பாட்டை உண்மையாக பின்பற்றுவதும் கட்டாயமாகும்.” என்று அவர் கூறினார்.

“மனிதாபிமான உதவிகளை வழங்குவற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், குறிப்பாக உணவு மற்றும் மருந்து வடிவில் தேவைப்படுபவர்களின் துன்பத்தைப் போக்குவதற்கு முடிவு செய்திருக்கிறோம்,” என்றார்.

ஹமாஸின் செயல்களை நியாயப்படுத்த முடியாது – ஜஸ்டின் ட்ரூடோ

ட்ரூடோ

பட மூலாதாரம், Reuters

காஸாவில் மனிதாபிமான பாதை திறக்கப்பட வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரிக்கை விடுத்துள்ளார்.

காஸாவில் முடங்கியுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமையை கனடா ஆதரிக்கிறது, ஆனால் “போர்களுக்குக் கூட விதிகள் உண்டு” என்று அவர் மேலும் கூறினார்.

“பயங்கரவாதம் எப்போதும் பாதுகாக்க முடியாதது, ஹமாஸின் பயங்கரவாத செயல்களை எதுவும் நியாயப்படுத்த முடியாது. ஹமாஸ் பாலத்தீனிய மக்களையோ அல்லது அவர்களின் நியாயமான விருப்பங்களையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை” என்று நாடாளுமன்றத்தில் ட்ரூடோ கூறினார்.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் கனடாவைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர், மூன்று பேரைக் காணவில்லை.

ஹமாஸ் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை வட கொரியா வழங்கியதா? தென் கொரியா கூறுவது என்ன?

ஹமாஸ்

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதங்களை ஹமாஸுக்கு வடகொரியா வழங்கியதற்கான அறிகுறிகளை கண்காணித்து வருவதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

“வட கொரியா மத்திய கிழக்கு நாடுகள், ஆயுதக் குழுக்களுக்கு பல்வேறு ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகிறது என்பதற்கான ஆதாரங்களை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம். இஸ்ரேல் எல்லைக்கு அருகே வட கொரியாவில் தயாரிக்கப்பட்ட 122 மிமீ ரேடியல் பீரங்கி குண்டுகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இவை ஹமாஸை ஆதரிக்கும் தீவிரவாதிகளுடையதாகவோ, ஹமாஸுடன் இணைந்த குழுவுக்குச் சொந்தமானதாகவோ இருக்கலாம் என்று நம்பப்படுகிறது,” என்று ஒரு தென் கொரியா ராணுவ அதிகாரி உள்நாட்டு செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

மோட்டார் பொருத்தப்பட்ட பாராகிளைடர்கள் மூலம் ஊடுருவும் ஹமாஸின் உத்தி வட கொரியாவுக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

பணயக் கைதிகளின் முதல் காணொளியை வெளியிட்டது ஹமாஸ்

பணயக் கைதி

தங்களிடம் பணயக் கைதியாக உள்ள ஒரு பெண்ணின் காணொளியை ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல்-காஸம் பிரிகேட்ஸ் வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு ஹமாஸ் வெளியிட்ட முதல் பணயக்கைதி காணொளி இதுவாகும். காஸாவில் 199 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காணொளியில், ஒரு இளம் பெண் தனது பெயர் மாயா ஷெம் என்றும், தனக்கு 21 வயது என்றும், இஸ்ரேலில் உள்ள ஷோஹாம் நகரைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார்.

இஸ்ரேலில் நடந்த ஒரு விருந்தில் ஹமாஸால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டதாகக் கூறி, தன்னை விடுவிக்குமாறு அவர் கெஞ்சும் காட்சி அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.

அதே பெண் கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெறும் காட்சியும் இதில் அடங்கும்.

ஹமாஸால் மாயா கடத்தப்பட்டதை உறுதிப்படுத்திய இஸ்ரேல் பாதுகாப்புப் படை அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பிபிசி பொதுவாக பணயக் கைதிகள் காணொளிக்களை வெளியிடுவதில்லை.

காணொளியில் இருந்து படங்களை காட்டலாம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டதாக குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »