Press "Enter" to skip to content

ஐ.நா. பொதுச்செயலாளரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் இஸ்ரேல் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் 19-வது நாளை எட்டியுள்ள நிலையில், பாலத்தீனம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்த கருத்து அவருக்கே எதிராக வந்து நிற்கிறது. அவரை பதவி விலகுமாறு இஸ்ரேல் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளது. பிரிட்டனும் ஐ.நா. பொதுச் செயலாளரை கண்டித்துள்ளது. அப்படி அவர் என்ன சொன்னார்? என்ன நடந்தது?

ஹமாஸூடன் இஸ்ரேலுக்கும் குத்தேரஸ் கண்டனம்

இஸ்ரேல் – பாலத்தீன மோதல் தொடர்பாக செவ்வாய்க்கிழமை ஐ.நா மன்றத்தில் பொதுச்செயலாளர் ஆந்தோனியோ குத்தேரஸ் உரையாற்றினார்.

“காசாவில், சர்வதேச மனிதாபிமான சட்டம் தெளிவாக மீறப்படுவதை நாம் கண்டு வருகிறோம். இது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். தெளிவாகச் சொல்கிறேன். ஆயுத மோதலில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.

ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு காரணம் இல்லாமல் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டியது அவசியம்.  பாலத்தீன மக்கள் 56 ஆண்டுகளாக திக்குமுக்காடச் செய்யும் ஆக்கிரமிப்புக்கு  ஆளாகியுள்ளனர். தங்கள் நிலம், குடியேற்றங்களால் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுவதையும், வன்முறையால் தொடர்ந்து பாதிக்கப்படுவதையும் பாலத்தீன மக்கள் பார்க்கின்றனர். அவர்களின் பொருளாதாரம் வளராமல் தடைபட்டுள்ளது; பாலத்தீன மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன.

தங்களின் அவலநிலைக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்கிற பாலத்தீன மக்களின் நம்பிக்கை மறைந்து வருகிறது. ஆனால்  பாலத்தீன மக்களின் மனக்குறைகள் ஹமாஸின் பயங்கரமான தாக்குதலை நியாயப்படுத்த முடியாது. மேலும் பாலத்தீன மக்களுக்கு கூட்டு தண்டனை தரும் திகைக்க வைக்கும் வைக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது.” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஆந்தோனியோ குத்தேரஸ், மனிதாபிமான உதவிகளை பாதுகாப்பாகவும் வழங்கிடவும், பணயக் கைதிகளை விடுவிக்கவும், மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக, போர் நிறுத்தத்திற்கான எனது கோரிக்கையை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துவதாகக் கூறினார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த பாலத்தீனம் வலியுறுத்தல்

இதேபோல  ஐ.நா அவையில் உரை நிகழ்த்திய பாலத்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல்-மாலிகி, ” மனிதனால் சகித்துக்கொள்ள முடியாததைக் கூட காஸா மக்கள் சகித்துக் கொண்டிருக்கின்றனர் இந்த சித்திரவதைகள், கொலைகள் போதும். பாலத்தீன மக்களுக்கு எதிராக திட்டமிட்டு, காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் உடனடியாக இதை நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும் தொடர்ந்த அவர், “பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதை தடுக்கவும். அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் படுகொலைகளை நிறுத்தவும், ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல், அதன் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பாலத்தீன மக்களுக்கு எதிராக திட்டமிட்டு, , காட்டுமிராண்டித்தனமாக நடத்தி வரும் படுகொலைகளை நிறுத்தவும் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.

இஸ்ரேலை தடுக்கும் கடமை பாதுகாப்பு மன்றத்திற்கு உள்ளது. சர்வதேசச் சட்டத்தின் கீழ் அவர்களைத் தடுக்க சர்வதேச சமூகம் கடமைப்பட்டுள்ளது. அவர்களைத் தடுப்பது நமது கூட்டு மனிதக் கடமையாகும். அதேசமயம், இந்த விஷயத்தில் கவுன்சிலின் தோல்வியை மன்னிக்க முடியாது.” என்று கூறினார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

குத்தேரஸ் பதவி விலக இஸ்ரேல் வலியுறுத்தல்

ஆந்தோனியோ குத்தேரஸின் பேச்சுக்கு இஸ்ரேல் கடுமையாக எதிர்வினையாற்றியது. எந்த உலகில் இருக்கிறீர்கள் என ஆவேசமாக பேசிய இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் எலி கோஹன், “ஹமாஸை ஒழித்துக்கட்டுவது இஸ்ரேலின் உரிமை மட்டுமல்ல. அது; நம் கடமை” என்றார்.

“இந்த படுகொலை ஐ.எஸ்.ஐ.எ.ஸ்.யை விட கொடூரமானதாக வரலாற்றில் இடம்பிடிக்கும். ஹமாஸ்தான் புதிய நாஜிக்கள். நாகரிக உலகம் ஒன்றுபட்டு, நாஜிக்களை வீழ்த்தியது போல, நாகரிக உலகம் ஐ.எஸ்.ஐ.எ.ஸ்.யை தோற்கடிக்க ஒன்றுபட்டது போல,  நாகரிக உலகம் ஹமாஸை வீழ்த்த இஸ்ரேலின் பின்னால் ஒன்றுபட வேண்டும்.

பொதுச்செயலாளர் அவர்களே, நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீகள். நிச்சயமாக இது நம் உலகம் அல்ல. அக்டோபர் 7ம் தேதி படுகொலைக்கு ஹமாஸ் தான் காரணம். ஹமாஸில் உள்ள கடைசி நபருக்கும் அழிவு ஏற்படும். ஹமாஸை ஒழித்துக்கட்டுவது இஸ்ரேலின் உரிமை மட்டுமல்ல. அது நம் கடமை” என்று அவர் கூறினார்.

ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன், ஆன்தோனியோ குத்தேரஸ் ஐ.நா.வை வழிநடத்த தகுதியற்றவர் என்று கூறி ராஜினாமா செய்ய வலியுறுத்தினார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

குத்தேரஸூடன் பேச மறுத்த இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ‘ஐ.நா பொதுச் செயலாளரின் தொலைபேசி அழைப்புகளை நிராகரித்துவிட்டார்’ என்று இஸ்ரேலிய தூதர் கிலாட் எர்டன் கூறியுள்ளார்.

ஐநா பொதுச்செயலாளர் பற்றி பேசிய எர்டன், போர் தொடங்கியதில் இருந்து ஆன்தோனியோ குத்தேரஸ் இஸ்ரேலுக்கு வரவில்லை என்பது “தற்செயலாக இல்லை” என்றார்.

அக்டோபர் 7 முதல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இரண்டு முறை பேசுமாறு குத்தேரஸ் கேட்டுக் கொண்டார் – ஆனால் நெதன்யாகு “அவரது அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்” என்று எர்டன் கூறினார்.

“களத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து தவறான சித்திரத்தை முன்வைக்கும் “ஐ.நா அதிகாரிகளை” இஸ்ரேலில் இருந்து வெளியேற்றுவது அடுத்தபடியாக இருக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.

ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸுக்கு இஸ்ரேலிய விசா மறுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், மற்ற ஐ.நா ஊழியர்கள் “நிராகரிக்கப்படுவார்கள்” என்றார்.

குத்தேரஸ் கருத்தில் உடன்பாடு இல்லை – பிரிட்டன்

ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்தோனியோ குத்தேரஸின் கருத்துகளை பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் நிராகரித்துள்ளார். “வெறுப்பு மற்றும் சித்தாந்தத்தால் உந்தப்பட்ட ஹமாஸின் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு எந்த நியாயமும் இல்லை என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.” என்று அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஜெர்மனி அரசின் செய்தித் தொடர்பாளர் குத்தேரஸ் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஐநா பொதுச்செயலாளர் விளக்கம்

ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்தோனியோ குத்தேரஸ் தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

‘ஹமாஸ் செய்த பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது’ என்றும், ‘இஸ்ரேலில் ஹமாஸின் கொடூரமான பயங்கரவாதச் செயலைக் கண்டித்ததாகவும்’ அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

குத்தேரஸ் பதவி விலக மீண்டும் வலியுறுத்தும் இஸ்ரேல்

ஆனால், குத்தேரஸின் விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள இஸ்ரேல், அவர் பதவி விலக வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் கருத்தை நிராகரித்ததுடன், அவர் பதவி விலகுமாறு மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.

“பொதுச்செயலாளர் தனது வார்த்தைகளை திரும்பப்பெற பெறாததுடன், நேற்று கூறியதற்கு மன்னிப்புக் கூட கேட்காமல் இருப்பது ஐ.நா.வுக்கு அவமானம். அவர் பதவி விலக வேண்டும்” என்று எர்டன் கூறினார்.

அவர் “உண்மையை திரித்து கூறுகிறார்” என்று கூறிய எர்டன், அக்டோபர் 7 அன்று ஹமாஸின் கொடூரமான தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஐ.நா பொதுச்செயலாளர் குற்றம் சாட்டியுள்ளதாக கூறினார்.

“அவரது வார்த்தைகளின் அர்த்தம் என்னவென்றால், ஹமாஸின் செயல்களுக்காக இஸ்ரேலுக்கு குற்ற உணர்வு இருக்கிறது அல்லது குறைந்தபட்சம், படுகொலைக்கு வழிவகுக்கும் ‘பின்னணி’ பற்றிய அவரது புரிதலைக் காட்டுகிறது. அப்பாவிகளின் கொலையை எந்த ‘பின்னணி’யாலும் புரிந்து கொள்ள முடியாது என்பதை புரிந்து கொள்ளாத பொதுச்செயலாளர் பொதுச்செயலாளராக இருக்க முடியாது.” என்று எர்டன் சாடியுள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »