Press "Enter" to skip to content

இலங்கையை வந்தடைந்த சீனாவின் கடல் ஆராய்ச்சி கப்பல்: ஷி யென் 6 கப்பலை எதிர்க்கும் இந்தியா

பட மூலாதாரம், K.ARULANANTHAN

இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நேற்று மாலை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

தமது அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் நோக்கிலேயே இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீன கடல் ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு வருகை தருவதற்கு இதற்கு முன்னர் அனுமதி கோரிய நிலையில், இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அந்த நடவடிக்கை தள்ளிப் போடப்பட்டிருந்தது.

சீன கப்பல் தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர், பல்வேறு சந்தர்ப்பங்களில் மாறுப்பட்ட கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், குறித்த கப்பலுக்கு அடுத்த மாதம் நாட்டிற்கு வருகை தர அனுமதிக்கப்பட்டதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கருத்து தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே, இந்தக் கப்பல் நேற்று மாலை திடீரென இலங்கையை வந்தடைந்தது.

இந்தக் கப்பல் இலங்கை கடற்பரப்பை அண்மித்த தருணத்திலேயே, கப்பல், சில மணிநேரத்தில் நாட்டை வந்தடையும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த மாதம் 10ஆம் தேதி சீனாவிலிருந்து பயணத்தை ஆரம்பித்த ஷி யென் 6 என்ற கப்பல், 15 நாட்களுக்குப் பிறகு நேற்று இலங்கையை வந்தடைந்தது.

தமது அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ததன் பின்னர், இந்த கப்பல் விரைவில் நாட்டை விட்டு வெளியேறும் என இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

சாதாரண கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரும் வகையிலேயே இந்தக் கப்பல் நாட்டை வந்தடைந்து உள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிடுகின்றனர்.

சமுத்திர ஆராய்ச்சி கப்பல் ஷி யென் 6

பட மூலாதாரம், PMD SRI LANKA

ஷி யென் 6 கப்பல் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு

இலங்கைக்கு ஷி யென் 6 கப்பல் வருகை தரவுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, இந்தியா தொடர்ச்சியாக கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தது.

தென் இந்தியாவிலுள்ள மிக முக்கிய இடங்களை இலங்கைக்கு வருகை தரும் இந்த கப்பலால் ஆய்வு செய்ய முடியும் என்ற அடிப்படையிலேயே இந்தியா இந்தக் கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக ஊடக செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஷி யென் 6 கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது. சீனாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த 15ஆம் தேதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனா நோக்கிப் பயணமாகியிருந்தார்.

ஷி யென் 6 கப்பல் தனது பயணத்தைத் தொடங்கி, ஐந்து நாட்கள் கடந்த சந்தர்ப்பத்திலேயே ரணில் விக்ரமசிங்க சீனா நோக்கிப் பயணித்திருந்தார்.

கடந்த 15ஆம் தேதி நாட்டிலிருந்து புறப்பட்ட ரணில் விக்ரமசிங்க 16ஆம் தேதி சீனாவை சென்றடைந்ததுடன், அங்கு நான்கு நாட்கள் தங்கிருந்து உயர்மட்ட சந்திப்புகளை நடத்தியிருந்தார்.

இந்த விஜயத்தின்போது, சீனா ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

இவ்வாறான சீன விஜயம் நிறைவடைந்து, சில தினங்களிலேயே இந்த கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் விஜயத்தின்போது, இந்தக் கப்பலை அனுமதிக்குமாறு சீனாவால் வலியுறுத்தப்பட்டிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சமுத்திர ஆராய்ச்சி கப்பல் ஷி யென் 6

பட மூலாதாரம், K.ARULANANTHAN

சீன கப்பலில் நடந்த விசேஷ சந்திப்பு

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலில் இன்று முற்பகல் விசேஷ கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் நீரியல் வளங்கள் ஆய்வு அபிவிருத்தி மற்றும் முகவர் நிறுவனம் (நாரா), இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம், சமுத்திர பல்கலைக்கழகம் மற்றும் ருஹணு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தக் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் ஆய்வுகளை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ள போதிலும், இலங்கை வெளிவிவகார அமைச்சு அதற்கான அனுமதியை இன்று மதியம் வரை வழங்கியிருக்கவில்லை.

இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை நடத்துவதற்கு இதற்கு முன்னர் சீனா அனுமதி கோரியிருந்ததாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு மாத்திரமே தற்போது வரை சீனா ஆராய்ச்சி கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சீனாவின் ஷி யென் 6 கப்பலில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, நீரியல் வளங்கள் ஆய்வு அபிவிருத்தி மற்றும் முகவர் நிறுவனத்தின் (நாரா) பிரதான விஞ்ஞானி கணபதிபிள்ளை அருளானந்தன் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

”இந்தக் கப்பல் என்ன நோக்கத்திற்காக வந்துள்ள என்பது பற்றி கலந்துரையாடினோம். இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை நடத்த வந்துள்ளதாகவும், இலங்கையில் ஆய்வுகளை முடித்துக்கொண்டு மத்திய இந்திய கடல் பரப்புககுச் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வளிமண்டலத்திற்கும், கடலுக்கும் இடையில் இருக்கின்ற தொடர்புகளை ஆராய்வதே நோக்கம். கடலில் ஏற்படுகின்ற மாற்றம் தான், வளிமண்டலத்தில் ஏற்படுகின்ற மாற்றமாகும். கடலுக்கும், வளிமண்டலத்திற்கும் இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்து, அதன் மூலம் காலநிலையைத் துல்லியமாக எதிர்வு கூறுவதற்கும், காலநிலை மாற்றங்களால் கடலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்குமான கப்பல்தான் இது என்றே சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்,” என நாரா நிறுவனத்தின் அவர் தெரிவித்தார்.

ஐந்து நாட்கள் ஆய்வு செய்வதற்கான அனுமதியையே, இலங்கை வெளிவிவகார அமைச்சிடம், சீன கப்பலான ஷி யென் 6 கோரியுள்ளது.

ஆனால், இந்த அனுமதி எப்போது கிடைக்கும், இந்தக் கப்பல் இலங்கையை விட்டு எப்போது வெளியேறும் என்பது தொடர்பிலான எந்தவித தகவல்களும் தனக்குத் தெரியாது என நாரா நிறுவனத்தின் பிரதான விஞ்ஞானி கணபதிபிள்ளை அருளானந்தன் கூறினார்.

இலங்கைக்கு வருகை தந்த போர் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்கள் தொடர்பான தகவல்கள்

இலங்கைக்கு வருகை தந்த கப்பல்களில், யுவான் சேங் 5 கப்பலே, மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த 2020ஆம் ஆண்டு இலங்கைக்கு 43 போர் கப்பல்கள் வருகை தந்துள்ளன.

இவற்றில் 15 கப்பல் இந்தியாவிற்கு சொந்தமானவை என்பதுடன், 9 கப்பல்கள் ஜப்பானுக்கு சொந்தமானவை என இலங்கை கடற்படையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று, 2021ஆம் ஆண்டு இலங்கைக்கு 36 போர்க் கப்பல்கள் வருகை தந்துள்ளதுடன், அவற்றில் 12 கப்பல்கள் இந்தியாவிற்கு சொந்தமானவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்த போர் கப்பல்களில், ரஷ்யாவிற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல்கள் இரண்டும் அடங்குவதாகக் கூறப்படுகின்றது.

இந்த இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளன.

கடந்த ஆண்டு 31 போர் கப்பல்கள் இலங்கை வந்துள்ளதுடன், அவற்றில் 14 கப்பல்கள் இந்தியாவிற்கு சொந்தமானவை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 2023ஆம் ஆண்டின் இதுவரையான காலம் வரை 16 போர் கப்பல்கள் வந்துள்ளன.

அவற்றில் 4 கப்பல்கள் இந்தியாவிற்கு சொந்தமானவை எனவும், மூன்று அமெரிக்காவிற்கு சொந்தமாவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவிற்கு சொந்தமான போர்க் கப்பல்களே அதிகளவில் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »