Press "Enter" to skip to content

சென்னிமலை ஜெபக்கூட்டத்தில் தொடங்கிய தகராறு பெரும் பிரச்னையானது எப்படி? – பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஒரு சிறிய வீட்டில் ஜெபம் செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, கிறிஸ்தவ முன்னணி என்ற அமைப்பு பேசிய கருத்தைக் கண்டித்து, 10,000-க்கும் மேற்பட்டோர் இந்து முன்னணி தலைமையில் போராட்டம் நடத்தியிருந்தனர்.

இது தமிழக அளவில் பெரும் பேசுபொருளானது. இந்தச்சம்பவம் நடந்தது எப்படி என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு செய்தது.

சென்னிமலை ஜெபக்கூடம், கிறித்தவர்கள், இந்து முன்னணி

சென்னிமலையில் என்ன நடந்தது?

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கோவில் தமிழகத்தின் மிக முக்கியமான கோவில்களில் ஒன்று.

இந்தச் சென்னிமலையில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள முருங்கத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட கத்தக்கொடிக்காடு பகுதியில், ஒரு வீட்டில் அனுமதியின்றி ஜெபம் நடத்தியதாகக்கூறி, அவர்கள் மீது அப்பகுதியில் இருந்தவர்கள் செப்டம்பர் 17ம் தேதி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தாக்குதலைக் கண்டித்து செப்டம்பர் 25ம் தேதி கிறிஸ்தவ அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் போது அதில் பங்கேற்ற இரு பாதிரியார்கள் பேசிய கருத்து, தமிழகம் முழுவதிலும் பேசுபொருளானதுடன் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அதன்பின், கிறிஸ்துவ அமைப்பினரின் கருத்தை கண்டித்து சென்னிமலையில் இந்து அமைப்பினர், சென்னிமலை முருகன் பக்தர்கள் குழு என, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நடத்திய போராட்டம் தமிழகம் முழுவதிலும் பேசுபொருளானது.

சென்னிமலை ஜெபக்கூடம், கிறித்தவர்கள், இந்து முன்னணி

அதன்பின், சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக, காஞ்சிபுரத்தை சேர்ந்த கிறிஸ்தவ முன்னணியை சேர்ந்த வழக்குரைஞர் சரவணன் (36) மற்றும் ஸ்டீபன் ஜோசப் (40) ஆகியோரை போலீஸார் கைது செய்திருந்தனர்.

பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னிமலைக்குச் சென்று வழிபாடு நடத்தினார், சில அரசியல் கட்சித்தலைவர்கள் சென்னிமலை விவகாரம் தொடர்பாக கருத்துக்கள் தெரிவித்திருந்தனர்.

சென்னிமலை விவகாரத்துக்கான காரணம் என்ன? தொடக்கம் முதல் என்ன நடந்தது என்பதை அறிய, பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் பேசியது.

சென்னிமலை ஜெபக்கூடம், கிறித்தவர்கள், இந்து முன்னணி

சிறிய வீட்டில் செயல்பட்ட ஜெபக்கூடம்

சென்னிமலையில் இருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ள முருங்கத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட கத்தக்கொடிக்காடு பகுதிக்கு சென்றோம். அங்கு, சத்தியபுரி பகுதியில் நல்லிக்கவுண்டன் வலசு என்ற சிறிய தெருவில் இருந்து, 80 அடி தொலைவில் அமைந்திருந்தது அந்த வீடு. சுற்றிலும் தென்னந்தோப்புகளுக்கு மத்தியில், ஹாலோபிளாக் கற்கள் கொண்டு சிமெண்ட் ஷீட் உடன் அமைந்திருந்தது ஜெபம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடு.

இங்கு நடந்த தகராறு தொடர்பாக பக்கத்து தெரு மக்கள் மற்றும் இந்த வீட்டுக்கு அருகில் இருப்பவர்களிடம் பேசினோம்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர்கள், ‘இங்கு அனைத்து சாதி மக்களும் உள்ளனர், கிறிஸ்தவ மக்கள் மிகக் குறைவாகத்தான் உள்ளனர். அங்கு ஜெபம் நடப்பதே எங்களில் பலருக்கும் தெரியாது, கடந்த மாதம் அந்த வீட்டுக்குச் செல்லும் வழியில் சில வாகனங்கள் நின்றிருந்தது, அதன்பிறகுதான் தகராறு ஏற்பட்டுள்ளதே தெரியவந்தது,’ என்றனர்.

சென்னிமலை ஜெபக்கூடம், கிறித்தவர்கள், இந்து முன்னணி

‘குடும்பத்துடன் தான் ஜெபம் செய்தேன்’

ஜெபக்கூடத்தில் எப்படி பிரச்னை துவங்கியது, நடந்தது என்ன என்பது குறித்து, ஜெபம் நடத்திய அர்ஜூனன் என்கிற ஜான் பீட்டர் பிபிசி தமிழிடம் விவரித்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய ஜான் பீட்டர், “கத்தக்கொடிக்காடு அருகேயுள்ள கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். சம்பவம் நடந்த கத்தக்கொடிக்காடு கிராமத்தில் இடம் விலைக்கு வாங்கி அதில் சிறிய அளவில் வீடு கட்டியுள்ளேன். 2005ல் இருந்து அந்த வீட்டில் குடும்பத்தினருடன் ஜெபம் செய்து வருகிறேன். குடும்பத்தினருடன் ஜெபம் செய்வதால், அந்த வீட்டில் ஜெபம் நடத்த அரசின் அனுமதியை நான் பெறவில்லை,” என்றார்.

மேலும், “ஜெபம் நடக்கும் என் வீட்டுக்கு அருகே சின்னுசாமி என்பவர் குடியிருந்து வருகிறார். இரு மாதங்களுக்கு முன்பு என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டுக்கு ஜெபம் செய்ய வந்திருந்தனர். அப்போது, சின்னுசாமி என்னிடம் வந்து வீட்டில் ஜெபம் செய்யக்கூடாது, வெளி நபர்களை அழைத்து வரக்கூடாது எனக்கூறினார். அதன்பின், நாங்கள் ஜெபம் செய்ய வில்லை,” என்றார்.

சென்னிமலை ஜெபக்கூடம், கிறித்தவர்கள், இந்து முன்னணி

மேலும் தொடர்ந்த அவர், “எனது வீடு தானே, சரி குடும்பத்துடனாவது ஜெபம் செய்யலாம் என நினைத்து, செப்டம்பர் 17-ஆம் தேதி நான், என் மனைவி ரத்தினம், மகள் ஜெனிபர், பியூலா உள்பட குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேர் ஜெபம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அங்கு ஐந்து பேருடன் வந்த சின்னுசாமி, எங்கள் குடும்பத்தினரை தாக்கினார், வெளிநபர்கள் இல்லையென நாங்கள் கூறிய நிலையிலும் எங்களை தாக்கினார். அதன்பின், எங்களைத் தாக்கியவர்கள் மீது காவல் நிலையத்தில் புகாரளித்தேன், அவர்களை போலீஸார் கைது செய்தனர்,” என்றார்.

பிரச்னை பெரிதாகக் காரணம் என்ன என்றும் விவரிக்கிறார் ஜான் பீட்டர்.

“இந்த சம்பவத்தை கண்டித்து, கிறிஸ்தவ முன்னணி அமைப்பு மற்றும் நாங்கள் இணைந்து போராட்டம் நடத்தினோம். இதில், கிறிஸ்தவ அமைப்பின் தலைவர் சரவணன் மற்றும் பாதிரியார் ஸ்டீபன் ஜோசப் ஆகிய இருவரும் சென்னிமலை முருகன் குறித்து கருத்துத்தெரிவித்த பின்பு தான், சாதாரண பிரச்னை இவ்வளவு பெரிதாக மாறிவிட்டது. நான் தற்போது அந்த வீட்டில் ஜெபம் செய்வது இல்லை, வேறு பகுதியில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் ஜெபம் செய்து வருகிறேன்,” என்றார்.

சென்னிமலை ஜெபக்கூடம், கிறித்தவர்கள், இந்து முன்னணி

‘திட்டமிட்டு நடத்தப்பட்டதா?’

சென்னிமலை விவகாரம் இந்து முன்னணியால் திட்டமிட்டு நடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகமாக உள்ளது என்கிறார், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன்.

பிபிசி தமிழிடம் பேசிய ராமகிருட்டிணன், ‘‘விநாயகர் சதுர்த்தி அன்று சர்ச்சைக்குறிய கருத்து பேசியதாக, ஈரோடு அருகே இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். செந்தில்குமாரும், சர்ச்சை கருத்து தெரிவித்த கிறிஸ்தவ முன்னணியை சேர்ந்த சரவணனும் நண்பர்கள் என விவரிக்கும் வகையில், அவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் ஒரு புகைப்படத்தை எனக்கு தெரிந்தவர்கள் பகிர்ந்தனர். அதை சமூக வலைதளத்தில் நான் பகிர்ந்துள்ளேன். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது சென்னிமலை விவகாரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது. இதை போலீஸார் விசாரிக்க வேண்டும்,’’ என்கிறார் ராமகிருட்டிணன்.

மேலும் தொடர்ந்த ராமகிருட்டிணன், ‘‘சென்னிமலை குறித்து கிறிஸ்தவ அமைப்பினர் கூறிய கருத்தை மையமாக வைத்து, உணர்வுகளைத் தூண்டிதான் இந்து முன்னணியினர் மக்களை திரட்டி போராட்டம் நடத்தியுள்ளனர். எனினும், கிறிஸ்துவ முன்னணியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் சென்னிமலை முருகன் குறித்து சர்ச்சையான கருத்தை முன்வைத்திருக்கக்கூடாது,’’ என்றார் ராமகிருட்டிணன்.

சென்னிமலை ஜெபக்கூடம், கிறித்தவர்கள், இந்து முன்னணி

பட மூலாதாரம், கோவை ராமகிருட்டிணன்

‘சர்ச்சைக்குரிய கருத்தால்தான் போராட்டம்’

போராட்டம் நடத்தியதற்கான உண்மை காரணம் என்ன என்ற கேள்வியை, ஈரோடு மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் முரளியிடம், பிபிசி தமிழ் முன்வைத்தது.

அதற்கு விளக்கமளித்த இந்து முன்னணி முரளி, ‘‘ஜான் பீட்டர் தனது வீட்டில் ஜெபம் நடத்த சட்டப்படி எந்த அனுமதியையும் பெறவில்லை, சட்ட விரோதமாக ஜெபம் நடத்தி வந்துள்ளார்.”

“பணம், நகை திருடுவதற்காக சமீபத்தில் சென்னிமலை அருகில் இரண்டு கொலைகள் நடந்துள்ளன. ஜான் பீட்டர் வீட்டுக்கு அருகிலுள்ள சின்னுசாமி வசதியானவர். அவரது வீட்டுக்கு அருகே, அடையாளம் தெரியாத நபர்களை ஜான் பீட்டர் அழைத்து வந்து ஜெபம் நடத்தியதால், சின்னுசாமி அச்சமடைந்தது, ஜெபம் நடத்த வேண்டாமென ஜான் பீட்டரிடம் பலமுறை தெரிவித்துள்ளார். ஆனாலும், ஜான் பீட்டர் மீண்டும் மீண்டும் ஜெபம் நடத்தியதால், சின்னுசாமி அதைக்கேட்க சென்றபோது தகராறு ஏற்பட்டுள்ளது,’’ என்றார்.

சென்னிமலை ஜெபக்கூடம், கிறித்தவர்கள், இந்து முன்னணி

கிறிஸ்தவ முன்னணியினர் பேசிய கருத்தால் தான், இந்து முன்னணி போராட்டம் நடத்தியது என்கிறார் முரளி.

‘‘இந்தப்பிரச்னை தொடர்பாக போராட்டம் நடத்திய கிறிஸ்துவ முன்னணியை சேர்ந்த சரவணன் மற்றும் ஸ்டீபன் ஜோசப், சர்ச்சைக்குரிய வகையில், இந்து மத மக்களின் நம்பிக்கையை சீண்டும் வகையில் பேசினார்கள். இதைக் கண்டித்து இந்து முன்னணி, சென்னிமலை முருகன் பக்தர்கள் குழு மற்றும் மக்கள் என அனைவரும் இணைந்து போராட்டம் நடத்தினோம்,” என்றார்.

மேலும், “கிறிஸ்துவ முன்னணி பேசிய சர்ச்சைக்குரிய கருத்தால் தான் போராட்டம் நடத்தினோம். இந்து முன்னணி திட்டமிட்டு இதை செய்கிறது, இந்து முன்னணி செந்தில் மற்றும் கிறிஸ்துவ முன்னணி சரவணன் இருவரும் நண்பர்கள் எனக்கூறுவது எல்லாம் முற்றிலும் பொய். இவர்கள் இருவரும் இணைந்து இருப்பது போன்ற புகைப்படம் மார்ஃபிங் (Morphing) செய்யப்பட்டது. இதற்கான ஆதாரத்தை சைபர் கிரைம் போலீஸாரிடமே வழங்கியுள்ளோம்,” எனக்கூறி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் குற்றச்சாட்டை மறுக்கிறார் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் முரளி.

சென்னிமலை ஜெபக்கூடம், கிறித்தவர்கள், இந்து முன்னணி

காவல்துறை சொல்வது என்ன?

சம்பவம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சென்னிமலை போலீஸ் ஆய்வாளர் சரவணன், “வீட்டில் அனுமதியின்றி ஜெபம் நடத்தக்கூடாது என ஜான் பீட்டருக்கு ஏற்கனவே அறிவுரை வழங்கியிருந்தோம். ஆனாலும், மீண்டும் அவர் ஜெபம் நடத்தியபோது அவரது வீட்டுக்குச் சென்ற சின்னுசாமி தலைமையிலான ஐந்து பேர், ஜான் பீட்டரை தாக்கியுள்ளனர். ஜான் பீட்டர் கொடுத்த புகாரின் பேரில், சின்னுசாமி உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்துள்ளோம். பின் அவர்கள் பெயிலில் வெளியில் வந்துள்ளனர்,” என்றார்.

மேலும், “இது சாதாரண பிரச்னை, அப்படியே முடிந்திருக்கும். கிறிஸ்துவ முன்னணியை சேர்ந்தவர்கள் பேசிய கருத்து, சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி தான், இவ்வளவு பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. நாங்கள் துவக்கம் முதல் சரியாக நடந்து வழக்குகள் பதிவு செய்துள்ளோம், பிரச்னையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம்,” என்றார் ஆய்வாளர் சரவணன்.

சென்னிமலை ஜெபக்கூடம், கிறித்தவர்கள், இந்து முன்னணி

இது எச்சரிக்கை தான் – அமைச்சர் சேகர் பாபு

சென்னிமலை விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “சென்னிமலை விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது, இனி இது போன்று மற்றவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசாமல் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை நடவடிக்கை தான்,” என்றார்.

“அரசு அதிகாரிகளோ, அரசியல் கட்சியினரோ இது போன்று பேசியிருந்தால் சுற்றறிக்கை அனுப்பி அறிவுரை வழங்க முடியும். எங்கோ ஒரு தனிநபர் பேசுவதற்கு அரசு என்ன செய்ய முடியும்? இருந்தாலும் இது போன்ற மத ரீதியிலான சர்ச்சைகள், பிரச்னைகள் எழுவதை தடுக்கத்தான் கைது போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »