Press "Enter" to skip to content

இந்தியாவை புறக்கணித்து சீனா பக்கம் சாய்கிறதா பூடான்? இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

பட மூலாதாரம், Getty Images

பூடான் வெளியுறவு அமைச்சரின் சீனப் பயணத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயும் பல வருடங்களாக இருந்துவரும் எல்லைப் பிரச்னை முடிவுக்கு வரலாம் என ஊகங்கள் எழுந்து வருகின்றன.

மேலும், சீனவுக்கும் பூடானிற்கும் இடையே விரைவில் தூதரக உறவுகள் (Diplomatic Relations) ஏற்படுவதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன. இந்த இரண்டு விஷயங்களும் இந்தியாவிற்கு மேலும் தலைவலியைதான் தரப்போகின்றன.

சீனாவிற்கும் பூடானிற்கும் இடையேயான எல்லைப் பிரச்சனையில் சமரசம் ஏதும் ஏற்பட்டால் அது நேரடியாக டோக்லாம் எல்லையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

2017ம் ஆண்டு இந்திய மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையே 73 நாட்களுக்கு மோதல் நிலவியது. பூடானால் தங்களது பகுதி என சொல்லப்படும் இடத்தில் சீனா சாலை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் இந்த மோதல் ஏற்பட்டது.

தற்போது பூடான் உடனான எல்லை பிரச்சனையில் சீனா தீர்வை எட்டிவிட்டால் இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்துடனும் சீனா நட்புறவில் உள்ளது என்ற சூழல் உருவாகிவிடும்.

சமீபத்தில், சீனா தனது அண்டை நாடுகள் தொடர்பாக வெளியுறவு கொள்கை குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், 12 அண்டை நாடுகளோடு தனக்கிருந்த தரை வழி எல்லைப் பிரச்சனையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொண்டதாக சீனா தெரிவித்தது. மேலும், 9 நாடுகளோடு நட்புறவில் இருப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திட்டுள்ளதாக சீனா தெரிவித்தது.

அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை.

இந்தியா சீனா

பட மூலாதாரம், Getty Images

சீனா – பூடான் இடையே அதிகமாகும் நெருக்கம்

கிழக்கு லடாக்கில் உள்ள இந்தியா-சீனாவின் எல்லைப்பகுதியில் இரு நாடுகளுக்கும் நடந்துவரும் மோதல் இன்னும் தொடர்கிறது.

இந்த நிலையில், சீனாவிற்கும் பூடானிற்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டால் கண்டிப்பாக அதை இந்தியா தீவிரமாக கண்காணிக்கும்.

தனது நலனுக்காக இராணுவ மற்றும் பொருளாதார பலத்தை பயன்படுத்தி சிறிய நாடுகளை கட்டுப்படுத்துவதாக சீனா மீது அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

பூடானிற்கும் சீனாவிற்கும் இடையே 25வது கட்ட எல்லைப் பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு சீனா தரப்பில் அதன் வெளியுறவு இணையமைச்சர் சுன் வீடாங்க் மற்றும் பூடானின் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் தண்டி டோர்ஜி தலைமை தாங்கினர். இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு பிரதிநிதிகளும் பூடான் – சீனா எல்லையை தீர்மானிப்பது குறித்த கூட்டுறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அக்டோபர் 23ம் தேதி தண்டி டோர்ஜியை சந்தித்த பின் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேசுகையில் சீனாவும் பூடானும் மலைகளாலும், நதிகளாலும் ஆழமான கலாச்சார நட்புறவால் பிணைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜ தந்திர உறவுகள் பூடானின் நீண்டகால திட்டங்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

சீனாவின் உதவிக்கும் வலிமையான ஆதரவிற்கும் நன்றி தெரிவித்த பூடானின் வெளியுறவுத்துறை அமைச்சர் தண்டி டோர்ஜி, சீனா-பூடான் இடையே பாரம்பரியமான நட்பு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “சீனாவின் ஒரு பகுதிதான் தைவான் என்பதை வலியுறுத்தும் ‘ஒரே சீனா’கொள்கையோடு நாங்கள் முற்றிலும் உடன்படுகிறோம். சீனாவோடு விரைவாக இராஜ தந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கு தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இந்தியா பூடான்

பட மூலாதாரம், Getty Images

சீனா – பூடான் எல்லைப் பிரச்னையின் பின்னணி என்ன?

சீனா-பூடான் எல்லையானது 400 கிலோமீட்டருக்கும் அதிகமானது. இரு நாடுகளும் தங்களது எல்லைப் பிரச்சனையில் தீர்வு காண 1984ல் இருந்து தற்போது வரை 25 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

சீனாவிற்கும் பூடானுக்கும் இடையே பெரும் சர்ச்சைக்குரியதாக இருக்கும் இரண்டு பகுதிகளில் ஒன்று இந்தியா-சீனா-பூடான் முச்சந்திக்கு அருகில் உள்ள 269 சதுர கிலோமீட்டரிலுள்ள பகுதி, மற்றொன்று பூடானின் வடக்கே 495 சதுர கிலோமீட்டரில் உள்ள ஜகர்லுங் மற்றும் பாசம்லுங் பள்ளத்தாக்குகள்.

495 சதுர கிமீ பகுதியை பூடானிடம் விட்டுக்கொடுத்துவிட்டு 269 சதுர கிமீ பகுதியை எடுத்துக்கொள்ள சீனா விரும்புகிறது.

பூடானின் மேற்கு எல்லையில் சீனா சொந்தம் கொண்டாடும் இரண்டு பகுதிகளில் ஒன்று சும்பி பள்ளத்தாக்கு. இதற்கு அருகில்தான் உள்ள டோக்லாம் பகுதியில்தான் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மோதல் ஏற்பட்டது.

இந்த சும்பி பள்ளத்தாக்கை தான் வைத்துக்கொண்டு பூடானிற்கு அதைவிட பெரிய ஒரு பகுதியை வழங்க சீனா தயாராக உள்ளது.

இதில் இந்தியாவிற்கு என்ன பிரச்சனையென்றால், பூடானிடம் இருந்து சீனா கேட்கும் அந்தப்பகுதி இந்தியாவின் சிலிகுரி பாதை அல்லது ‘கோழிக்கறிஸ் நெக்’ எனப்படும் பகுதிக்கு அருகே உள்ளது. இந்த சிலிகுரி பாதை வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்வதற்கு முக்கியமான வழித்தடமாக உள்ளது.

சிலிகுரி பாதைக்கு சீனா வந்துவிட்டால் அது வட கிழக்கு மாநிலங்களுக்கான தொடர்பிற்கு பெரும் ஆபத்தாகவும் இந்தியா வியூகம் அமைப்பதற்கு பெரும் சவாலாகவும் அமையும்.

சில வாரங்களுக்கு முன்பு தி இந்து ஆங்கில நாளிதழக்கு பேசிய பூடான் பிரதமர் லோடேய் ஷெரிங், “பூடான் எடுக்கக்கூடிய முடிவால் சீனாவும் இந்தியாவும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதை உறுதி செய்வோம். சீனா உடனான பிரச்னையை முடித்துவிட்டு இந்தியாவுடன் புதிய பிரச்சனையை ஆரம்பிக்க பூடான் விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.

இந்தியா சீனா எல்லை

பட மூலாதாரம், Getty Images

சீனா – பூடான் உறவில் இந்தியாவிற்கு என்ன பிரச்னை?

புது தில்லியில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் ஆய்வுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைத் துறையின் துணைத் தலைவராக உள்ள

பேராசிரியர் ஹர்ஷ் வி பந்த் கூறுகையில், “டோக்லாம் எல்லையில் (Tri-junction) ஏற்பட்ட நெருக்கடியை நாம் பார்த்தோம். அந்தப் பிரச்னைக்கான தீர்வு முத்தரப்பு வழியில் செய்யப்பட வேண்டும் என்பதே பூடானின் நிலைப்பாடு” எனத் தெரிவித்தார்.

பூடானிற்கு தனது நலன்களைப் பாதுகாக்க எந்தவொரு நாட்டுடனும் பேச்சுவார்த்தை நடத்த முழு உரிமை உள்ளது என்றும், அதை பகிரங்கமாக எதிர்க்க இந்தியா விரும்பாது என்றும் ஹர்ஷ் பந்த் கூறுகிறார்.

மேலும், “சீனாவிற்கும் பூடானிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் இந்தியாவிற்கு சொந்தமான பகுதிகளின் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதுதான் இந்தியாவின் கவலையாக இருக்கும்.” என அவர் தெரிவித்தார்.

பூடானின் பார்வையில் இருந்து பார்த்தால், இந்தியா-சீனா சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பூடான் பார்த்து வருகிறது, எனவே இந்தியா-சீனா மோதல்கள் மேலும் தீவிரமடைவதற்குள் இந்தப் பிரச்னையை பூடான் தீர்க்க முயற்சிப்பதாக பேராசிரியர் பந்த் கூறுகிறார்.

இந்தியா-சீனா இடையேயான எல்லைப்பிரச்சனையில் மேலும் சிக்கிக்கொள்ள பூடான் விரும்பவில்லை என்றும் இந்தியா-சீனா இடையேயான எல்லைப்பிரச்னை பெரிதாவதற்கு முன்பே தங்களுக்கு சீனா உடன் இருக்கும் எல்லைப் பிரச்னையை முடித்துக்கொள்ள பூடான் விரும்புவதாகவும் பந்த் கூறுகிறார்.

இந்தியா பூடான்

பட மூலாதாரம், Getty Images

முச்சந்தி பிரச்னைக்கு முக்கோண தீர்வு

இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எஸ்பி அஸ்தானா, பாதுகாப்பு மற்றும் வியூக விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர்.

“பூடானின் வெளியுறவு அமைச்சரின் சீன பயணத்தை தொடர்ந்து சீனா-பூடான் இடையேயான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு கிடைத்து விடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை” என அஸ்தான தெரிவித்தார்.

ஏனென்றால், இந்தியாவும் சீனாவும் கூட அவ்வப்போது தங்களது எல்லைப் பிரச்னைகளை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்துவார்கள் ஆனால் அதன் பின்பு பிரச்சனை தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். எனவே சீனா-பூடான் விவகாரத்தில் பிரச்னை தீர்ந்துவிட்டதாக நாம் கூற முடியாது என அஸ்தானா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “சீனாவும் பூடானும் வெளியிட்ட கூட்டறிக்கையில் எல்லைப்பகுதியில் பிரச்னைக்குரிய நிலத்தை சீனாவிற்கு வழங்க பூடான் ஒப்புக்கொண்டதாக குறிப்பிடப்படவில்லை. சீனா அந்த கூட்டறிக்கையை தங்களுக்கு ஏற்ற மாதிரி திரித்துக்கொண்டது. 25 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்போதுதான் சீனாவும் பூடானும் எல்லையை தீர்மானிப்பதை நெருங்கியுள்ளார்கள்” என அவர் தெரிவித்தார்.

அஸ்தானா கூறுகையில், கடந்த காலத்தில் இந்த முச்சந்தி விவகாரத்தை மூன்று நாடுகளும் சேர்ந்துதான் தீர்க்க வேண்டும் என்பதுதான் பூடானின் நிலைப்பாடு என்றும் இப்போதும் இந்தியாவை பகைத்துக்கொண்டு பூடான் எந்த முடிவையும் எடுக்காது என்றும் தெரிவித்தார்.

சீனா பூடான்

பட மூலாதாரம், Getty Images

பூடானோடு இராஜ தந்திர உறவு வைத்துக்கொள்ள சீனா விரும்புவது ஏன்?

தைவான் போல் அல்லாமல் சீனாவின் எந்த விதமான இருப்பும் இல்லாத நாடு பூடான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தவிர, பூடானுக்கும் இந்தியாவுடன் சிறப்பான உறவு உள்ளது. எனவே பூடானுடன் சீனா தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டால், அது சீனாவிற்கான ஒரு விளம்பரமாக இருக்கும்.

பேராசிரியர் பந்த் கூறுகையில், ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்புநாடுகள் எதனுடனும் பூடானிற்கு தூதரக உறவுகள் இல்லை. இந்த நிலையில் சீனாவோடு பூடான் தூதரக உறவு ஏற்படுத்திக்கொண்டால் அது நிச்சயம் இந்தியாவை பாதிக்கும். ஆனால், அந்த அளவிற்கு பூடான் செல்லாது.

மேலும் அவர் கூறுகையில், பூடான் சீனாவோடு மட்டும் உறவு வைத்துக்கொண்டால் நிச்சயம் அதை அமெரிக்க ஏற்றுக்கொள்ளாது. பூடானோடு வெளியுறவு சிக்கல்களையும் அமெரிக்கா உருவாக்கும் எனத் தெரிவித்தார்.

இந்தியா சீனா

பட மூலாதாரம், Getty Images

பூடான் மீது சீனா அழுத்தம் கொடுக்கிறதா என்பதையும் பார்க்கவேண்டும். ஏனென்றால் தங்களோடு தூதரக உறவு வைத்துக்கொண்டால் அதற்கு பதிலாக எல்லைப் பிரச்சனையை தீர்த்துக்கொள்ளலாம் என சீனா பூடானிடம் கூறுவதாக பேராசிரியர் பந்த் கூறுகிறார்.

அவர் கூறுகையில், “இந்த விஷயத்தில் இந்தியா கண்டிப்பாக பூடானோடு பேசும். பூடானும் சீனாவுடன் தாங்கள் என்ன செய்கிறோம், செய்யவில்லை என்பதை இந்தியாவிற்கு தெரிவிக்கும்” எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து மேஜர் ஜெனரல் அஸ்தானா கூறுகையில், “பூடான் இறையாண்மையும் ஜனநாயகமும் கொண்ட நாடு. அவர்கள் எந்த நாட்டுடனும் இருதரப்பு உறவை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்வார்களா என்பதுதான் கேள்வி” எனத் தெரிவித்தார்.

பூடானின் பிரதமர் லோடேய் ஷெரிங்கின் அறிக்கையை குறிப்பிடும் அஸ்தானா, “கோட்பாட்டு அளவில் பூடான் சீனாவோடு எப்படி எந்த இருநாட்டு உறவும் வைத்துக் கொள்ளாமல் இருக்க முடியும். எப்போது மற்றும் எந்த விதத்தில் அந்த உறவை வைத்துக் கொள்ள போகிறோம் என்பதுதான் கேள்வி” என தெரிவித்தார்.

பூடானில் மன்னராட்சி இருந்தபோது ​​ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஏதேனும் ஒருவருடன் பூடான் இருதரப்பு உறவுகளை ஏற்படுத்திக் கொண்டால், மீதமுள்ள நான்கு நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பூடான் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பூடானில் ஜனநாயகம் வந்த பிறகு, பூடானின் அந்த நிலைப்பாட்டில் மாற்றம் வந்திருக்கலாம்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »