Press "Enter" to skip to content

உலகக்கோப்பை: இந்திய அணியை வெற்றி பெற வைக்கும் ராகுல் டிராவிட்டின் டிரெசிங் ரூம் உத்தி

பட மூலாதாரம், Getty Images

தற்போது நடந்து வரும் 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை இந்தியா இன்று(29/10/2023) எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டி லக்னௌவில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக, இந்தியா தான் ஆடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், ஐந்து போட்டிகளில் நான்கில் இங்கிலாந்து தோல்வியடைந்து மோசமான நிலையில் உள்ளது.

இருப்பினும், உலகக்கோப்பையில் இந்திய அணியின் இதுவரையிலான பயணத்துக்கும் 2011, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் ஆட்டத்துக்கும் இடையே ஒரு பொதுவான விஷயம் உள்ளது.

இந்தியா லீக் போட்டிகளில் வலுவான ஆட்டம் ஆடி, நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

இந்திய அணி 2011இல் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றது. ஆனால் 2015 மற்றும் 2019 போட்டிகளில், நாக்-அவுட் சுற்றின் முதல் போட்டியில், அதாவது அரையிறுதியில் தோல்வியடைந்தது.

டிரசிங் ரூமில் புதிய வழக்கம்

ஆனால் கடந்த சில மாதங்களில், இந்திய கிரிக்கெட் அணியின் டிரெசிங் ரூமில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரின்போது, இந்திய அணியின் டிரெசிங் ரூமில் ஒரு வழக்கம் தொடங்கப்பட்டது. அது தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

போட்டிக்குப் பிறகு, வீரர்களின் ஃபீல்டிங் குறித்து கருத்து தெரிவிக்கவும், அவர்களுடன் ஆட்டம் குறித்து உரையாடவும், பின்னர் அவர்களுக்கு பதக்கங்கள் வழங்கவும் புதிய வழக்கம் தொடங்கப்பட்டது.

இதற்காக, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஹைதராபாத்தில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்த டி திலீப்பை தேர்வு செய்துள்ளார்.

திலீப் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர். அவர் அனைத்து வீரர்களையும் டிரெசிங் ரூமில் ஒன்றாக நிறுத்தி, அவர்களின் ஆட்டம் எவ்வாறு இருந்தது என அலசி, தவறுகளைச் சுட்டிக்காட்டி, சிறப்பான ஆட்டத்தைப் பாராட்டவும் செய்வார்.

உதாரணமாக, தரம்ஷாலாவில் நியூசிலாந்திடம் கிடைத்த வெற்றிக்குப் பிறகு, அவர் வீரர்களிடம், “உங்கள் திறமையான ஃபீல்டிங் மூலம் 14 ரன்களை தடுத்தீர்கள்,” என்று கூறினார்.

இந்தியா Vs இங்கிலாந்து

பட மூலாதாரம், BCCI

நாக்-அவுட் சுற்று

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும் பிபிசி டிஎம்எஸ் ஒளிபரப்புக் குழு உறுப்பினருமான ஜொனதன் அக்னியூ, “டிரெசிங் ரூமில் நடப்பவை களத்தில் உள்ள வீரர்களின் முகங்களில் பிரதிபலிக்கும்,” என்றார்.

“கிளைவ் லாய்ட் மற்றும் விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோரைக் கொண்ட உலக சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியின் டிரெசிங் ரூமில், அனைவரும் சகோதரர்களைப் போல ஒன்றாகப் பழகி, வேடிக்கையாகப் பேசிக் கொள்வார்கள். சோதனை போட்டி ஆனாலும் சரி, ஒருநாள் போட்டி ஆனாலும் சரி, அந்த அணி வீரர்களின் வலுவான ஒற்றுமை களத்தில் எதிரணிகளுக்கு நெருக்கடியைக் கொடுத்தது,” என்று அவர் மேலும் கூறினார்.

“நிச்சயமாக இந்திய வீரர்களிடையே ஒற்றுமை உள்ளது, அதனால்தான், பும்ரா, முகமது ஷமியின் கழுத்தைச் சுற்றி தனது கையை இயல்பாகப் போடுகிறார். மேலும் விராட் போட்டியில் வென்ற பிறகு, ரோஹித் சர்மா ஓடி வந்து அவரைக் கட்டிப்பிடிக்கிறார்,” என்று அக்னியூ குறிப்பிடுகிறார்.

இப்போதெல்லாம், இந்திய அணி விளையாட வரும்போது, அவர்களின் டிரெசிங் ரூமின் சுவர்களில் A4 அளவு பக்கங்களில் “நீங்களே சிறந்தவர்” மற்றும் “கிரிக்கெட் தான் என் முதல் காதல்” போன்ற மேற்கோள்கள் ஒட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.

இந்தியா Vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் பகுப்பாய்வாளரும், மிட்டே பத்திரிகைக்கு உலகக்கோப்பை 2023 குறித்து செய்தி சேகரித்து வருபவருமான சந்தோஷ் சுரி, “நாக்-அவுட் சுற்றில் போட்டிகளை வெல்ல, சரியான மனநிலை தேவை மற்றும் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் – அவரே ஒரு பெரிய வீரர் – இதை வழங்குகிறார்,” என்கிறார்.

கடந்த ஆண்டில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் இருந்து பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு ராகுல் டிராவிட், “வீரர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் முக்கியம். தொழில்முறை கால்பந்தில் உள்ளது போலவே, வீரர்களின் பணிச்சுமை சரியாக நிர்வகிக்கப்பட வேண்டும்,” என்று கூறியிருந்தார்.

அண்மையில், தரம்ஷாலாவில் நியூசிலாந்திடம் கிடைத்த வெற்றிக்குப் பிறகு இந்திய அணி, ஒரு நாள் கூடுதலாக அங்கு தங்கியிருக்கும் என்றும் வீரர்கள் ஓய்வெடுப்பார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டது. ராகுல் டிராவிட், மட்டையாட்டம் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் ஆகியோரும் இளைப்பாறினார்கள்.

வீரர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படக்கூடாது என்பதற்காக, அவர்கள் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால் நதியில் குளித்து ஓய்வெடுக்க முழு அனுமதியும் கொடுக்கப்பட்டது.

விராட் கோலி ஆதரவற்றோர் இல்லம் ஒன்றுக்கு விருந்தினராகச் சென்று குழந்தைகளுடன் நேரத்தை நல்லபடியாகச் செலவிட்டார். நாக்-அவுட் சுற்றில் வெற்றிபெற இதுபோன்ற மனநிலை தேவை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இங்கிலாந்து அணியுடனான போட்டி

இந்தியா Vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இந்தப் போட்டியை தொடரின் தொடக்கத்தில், இறுதிப்போட்டி அளவிலான போட்டி என்று மக்கள் கருதினர். ஆனால் தொடரில், இரு அணிகளின் பாதைகளும் வெவ்வேறாக இருந்தன.

இந்தியா இதுவரை தனது ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இங்கிலாந்து தனது ஐந்து போட்டிகளில் வங்கதேசத்தை எதிர்த்த ஒன்றில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது. ஆப்கானிஸ்தானும் இலங்கையும் இங்கிலாந்தை தோற்கடித்தன.

இங்கிலாந்து பயிற்சியாளர் மேத்தியூ மோட், “உலகக்கோப்பைக்கு தகுதி பெறுவது எங்களுக்கு சாத்தியமில்லாதது போலத் தெரிகிறது. ஆனால் எங்கள் சுயமரியாதைக்காக விளையாடுவோம்,” என இங்கிலாந்தின் கடைசி தோல்விக்குப் பிறகு கூறியிருந்தார்.

இங்கிலாந்தின் அனைத்து முக்கிய வீரர்களும் – சாம் கரன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் – தொடரில் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியது இங்கிலாந்து அணிக்கு மிகவும் துயரமான விஷயமாக இருந்திருக்க வேண்டும்.

இந்தியா Vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

போட்டிக்கு முன், அணியின் உதவி பயிற்சியாளர் மார்கஸ் ட்ரெஸ்கோத்திக், “நிலைமை நிச்சயமாக ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் அனைவரும் இதனால் காயமடைந்துள்ளோம். ஆனால் நாங்கள் என்ன செய்ய முடியும்? நாங்கள் ஒவ்வொரு போட்டிக்கும் முன்பு போலத் தயாராகி பயிற்சி செய்கிறோம்,” என்று ஒப்புக்கொண்டார்.

தொடர் சூடு பிடிக்கும்போது, அழுத்தம் மற்றும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன என்பதை இந்திய அணி கருத்தில் கொள்ளும்.

தரம்ஷாலாவில் இருந்து லக்னௌ வந்த அணியினரில் பாதிக்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை மைதானத்திற்கு வந்து டிராவிட் மேற்பார்வையில் வலை பயிற்சி செய்தனர். அதேபோல் சனிக்கிழமை மாலையும் பயிற்சி தொடர்ந்தது.

பயிற்சியாளர் டிராவிட் இரு நாட்களிலும் மைதானத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள நேரத்தை எடுத்துக்கொண்டார். மேலும் ஊழியர்களுடன் நீண்ட உரையாடல்களையும் நடத்தினார்.

கடந்த ஆண்டு, அதே மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்திய அணி 249 ஓட்டங்கள் என்ற இலக்கை அடையத் தவறியது. ஒரு கட்டத்தில் 118 ரன்களுக்கு 5 மட்டையிலக்குடுகள் விழுந்தன.

ஹர்திக் பாண்ட்யா காயமடைந்ததால், கடைசி போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் ஐந்து மட்டையிலக்குடுகள் எடுத்து அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை போட்டிக்கு, டிராவிட், கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் மைதானம் சுழல் பந்துக்கு ஏற்றவாறு இருக்கிறது என நினைத்தால், ஒருவேளை ஆர். அஸ்வினுக்கு ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு கிடைக்கலாம்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »