Press "Enter" to skip to content

முத்துராமலிங்க தேவரின் தங்க கவசம்: அ.தி.மு.க.வில் முடிவு கிடைக்காமல் தொடரும் சர்ச்சை

பட மூலாதாரம், Sakkarai/BBC

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெறுவது யார் என ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தரப்பினர் ஒவ்வோர் ஆண்டும் உயர் நீதிமன்றத்தை நாடி நீதிமன்றம் வழங்கும் உத்தரவின் அடிப்படையில் கவசம் பசும்பொன்னில் உள்ள தேவருக்கு பொருத்த எடுத்துச் செல்லப்படுகிறது.

முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசம் தொடர் சர்ச்சையாக மாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் யாருக்கு உள்ளது என்பதைக் காட்டவே ஓ.பி.எஸ், ஈபிஎஸ் தரப்புகள் கவசத்திற்கான உரிமையைக் கோருகின்றனரா?

விடுதலைப் போராட்ட வீரரும் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவருமாக இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நேதாஜி சுபாஷ் சந்திர பாவனை படையில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது தவிர மீனாட்சி அம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டோருக்காக ஆலையப் பிரவேசம், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு தனது சொத்துகளை எழுதி வைத்தது ஆகிய செயல்களையும் மேற்கொண்டார்.

முத்துராமலிங்கத் தேவர் கடந்த 1963ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் மறைந்தார். அதன் பிறகு அவரது உடல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதன் பிறகு தொடக்கத்தில் ஆண்டுதோறும் அவர் வழிநடத்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், கிராம மக்கள் குருபூஜை நடத்தி வழிபாடு செய்து வந்தனர்.

பசும்பொன் தேவருக்காக எம்.ஜி.ஆர் என்ன செய்தார்?

முத்துராமலிங்க தேவரின் தங்க கவச சர்ச்சை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவை அரசு விழாவாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களும் ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதியன்று நேரில் பசும்பொன்னுக்கு சென்று தங்களது மரியாதையைச் செலுத்தி வருகின்றனர்.

அதிமுக தேர்தல் அறிவிப்பில் முத்துராமலிங்க தேவருக்கு தங்க கவசம்

பசும்பொன்னில் உள்ள அவரது சிலைக்கு முழு தங்க கவசம் வழங்கப்படும் என்று மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 2010ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் அறிவித்தார்.

அதன்படி 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி அதிமுக சார்பில் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவித்து அதற்கான பொறுப்பை பசும்பொன் நினைவிடப் பொறுப்பாளரிடம் வழங்கினார்.

தேவர் கவசத்திற்கு அதிமுக பொருளாளர் வங்கியில் கையெழுத்து இடுவது ஏன்?

முத்துராமலிங்க தேவரின் தங்க கவச சர்ச்சை

பட மூலாதாரம், Facebook

தேவருக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்கக் கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள பொதுத்துறை வங்கியில் (Bank Of India) வைக்கப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் தேவர் குருபூஜைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு பொறுப்பாளர் மற்றும் அதிமுகவின் பொருளாளர் கையெழுத்தைப் பெற்று அரங்காவலர் பாதுகாப்பில் குரு பூஜை விழாவிற்காக எடுத்துச் செல்லப்படும். பிறகு விழா முடிந்ததும் மீண்டும் வங்கிக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு வைக்கப்படும்.

தங்கக் கவசம் வழங்கியபோது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதை முத்துராமலிங்கத் தேவர் மணிமண்டபத்தின் பொறுப்பிலேயே கொடுத்திருந்தார்.

ஆனால், தங்க நகைகள் என்பதால் அதில் ஏதேனும் குளறுபடிகள் நிகழ்ந்து விடக்கூடாது என்று காந்தி மீனாள் அதை ஏற்க மறுத்து அதிமுகவில் ஒருவரும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அதனால், அதிமுக பொருளாளர் கையெழுத்திட்ட பிறகு அதை வங்கியில் இருந்து எடுத்துச் செல்லும் விதமாக வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு வைக்கப்பட்டது.

தேவரின் தங்கக் கவசம் சர்ச்சையாவது ஏன்?

முத்துராமலிங்க தேவரின் தங்க கவச சர்ச்சை

பட மூலாதாரம், Facebook

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அதிமுகவின் பொருளாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் கையெழுத்து இட்டு தேவரின் தங்கக் கவசத்தைப் பெற்று வழங்கி வந்தார். அதன் பிறகு கட்சிக்குள் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்தது.

அந்நேரத்தில் அதிமுக கட்சியின் பொதுக்குழு, எடப்பாடி கே. பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராகவும் திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராகவும் தேர்வு செய்தது. மேலும் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதனால் கடந்த 2 ஆண்டுகளாக மதுரை உயர்நீதிமன்றத்தில் யார் பொருளாளராக கையெழுத்து இட்டு தங்கக் கவசத்தைப் பெறுவது என வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு இருவரும் தங்களுக்குத்தான் அதிமுக பொருளாளர் உரிமை உண்டு எனப் பல ஆவணங்களைச் சமர்பித்தனர். ஆனால் நீதிமன்றம் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி மதுரை, ராமநாதபுரம் இரு மாவட்ட டி.ஆர்.ஓ-கள் தங்கக் கவசத்தைப் பெற்று மீண்டும் பாதுகாப்பாக வங்கியில் வைக்க உத்தரவிட்டது.

மீண்டும் இந்த ஆண்டு என்ன வழக்கு?

அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இந்த ஆண்டு தேவரின் தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து பெற்றிடும் உரிமையைத் தனக்கு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த அக்டோபர் 10ஆம் தேதி நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி இதற்கு ஓ.பி.எஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருந்தால் அதை அங்கே பார்த்துக் கொள்ளும் படியும், தற்போது அதிமுகவின் பொருளாளராக உள்ள திண்டுக்கல் சீனிவாசன், தேவர் மணிமண்டப பொறுப்பாளர் ஆகியோர் இணைந்து தங்கக் கவசத்தைப் பெற்றுக் கொள்வார்கள் எனவும் உத்தரவு வழங்கினார்.

ஓ.பி.எஸ் தொடர் தோல்வியைத் தவிர்க்க நினைக்கிறாரா?

முத்துராமலிங்க தேவரின் தங்க கவச சர்ச்சை

“தேவரின் தங்கக் கவச வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக நிலையான தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு இரு வாரங்களுக்கு மேல் கால அவகாசம் இருந்தது.

ஆனால் அதைப் பயன்படுத்தி ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்யவில்லை. அவருக்கு ஏற்பட்டு வரும் தொடர் தோல்விகளைத் தவிர்ப்பதற்காகவே இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யவில்லை.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக எந்தத் தீர்ப்பு வழங்குவதாக இருந்தாலும் எங்கள் வாதத்தைக் கேட்டு வழங்க வேண்டும் என்பதற்காக கேவியட் மனுவையும் அதிமுக சார்பில் தாக்கல் செய்துள்ளோம்,” என குறிப்பிட்டார் திண்டுக்கல் சீனிவாசன்.

தங்கக் கவசத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டுமா?

முத்துராமலிங்க தேவரின் தங்க கவச சர்ச்சை

“முத்துராமலிங்கத் தேவர் முதலில் எங்கள் கட்சியின் தலைவர். மறைந்தது முதல் ஃபார்வர்டு பிளாக் கட்சி, கிராம மக்கள் சார்பில் மரியாதை செய்து வந்தோம். அதன் பிறகுதான் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் அரசியலுக்காக நேரில் வந்து தங்களின் மரியாதையைச் செலுத்த வேண்டி சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கக் கவசத்தை அளித்தார். தற்போது ஒவ்வோர் ஆண்டும் நீதிமன்றம் சென்று தங்கக் கவசத்தைப் பெற்று தேவருக்கு அணிவிக்க வேண்டிய சூழல் உள்ளது.

இது அவரது புகழுக்கு நெருடலை ஏற்படுத்தும். எனவே, அதிமுக தாமாக முன்வந்து தங்கக் கவசத்தை அரசிடம் ஒப்படைத்து, அரசின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் அதைப் பெற்று பொருத்த வேண்டும்.

அதுவே அவருக்கு அதிமுக சார்பில் செய்யும் கூடுதல் மரியாதையாக இருக்கும்,” எனக் கூறுகிறார் பார்வார்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன்.

தங்கக் கவசம் யாருடைய பொறுப்பு?

முத்துராமலிங்க தேவரின் தங்க கவச சர்ச்சை

பட மூலாதாரம், Facebook

தங்கக் கவசம் அதிமுக சார்பில் வழங்கிய நேரத்தில் கமுதியில் இருந்த வங்கிகளில் தங்கக் கவசத்தைப் பாதுகாக்க பெட்டக வசதி இல்லை.

எனவே, மதுரையில் அதிமுக கட்சியின் பரிவர்த்தனைகள் உள்ள வங்கியில் (Bank Of India) கணக்குத் துவங்கி அதில் வைக்கப்பட்டது. முதல் நபராக அதிமுக பொருளாளர், இரண்டாம் நபராக நினைவிடப் பொறுப்பாளர் இருப்பார் எனவும் முடிவு செய்யப்பட்டது.

வங்கியில் பொருளாளர் கையெழுத்து இடுவது மட்டுமே அவரது பணி, மதுரை முதல் பசும்பொன் வரை எடுத்துச் சென்று வருவது முழுக்க நினைவிடப் பொறுப்பாளரின் பொருப்பு.

இந்நிலையில், தங்கக் கவசம் விவகாரம் அதிமுக தான் முடிவு செய்யும் என்கிறார் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள்.

ஆனால், ஓ.பி.எஸ் தந்த வெள்ளிக்கவசத்தை பசும்பொன் நினைவிடம்தான் பாதுகாத்து பராமரித்து வருகிறது..

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவச் சிலைக்கு 10.4 கிலோ எடை கொண்ட வெள்ளிக் கவசத்தை கடந்த 2022ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்.

தங்க கவசம் குறித்து யார் முடிவு செய்வது?

முத்துராமலிங்க தேவரின் தங்க கவச சர்ச்சை

அதிமுக சார்பில் வழங்கிய தங்க கவசத்தை, கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்னையால் கடந்த இரு ஆண்டுகளாக நீதிமன்றம் சென்று பெற்று வருகிறோம்.

இந்நிலையில், அந்தக் கவசத்தின் முழு பொறுப்பையும் பசும்பொன் நிர்வாகத்திடம் ஒப்படைப்பது குறித்து அதிமுகதான் முடிவு செய்ய வேண்டும்.

பிபிசி தமிழிடம் இதுகுறித்துப் பகிர்ந்து கொண்ட மூத்த பத்திரிக்கையாளர் கார்த்திகேயன், “திராவிட கட்சிகள் எந்த நேரத்திலும் விடுதலைப் போராட்ட வீரர்களை சாதிய தலைவர்களாகப் பார்த்தது கிடையாது.

ஆனால், அதிமுக முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் அதிகமாகத் தங்கள் பக்கம் இருப்பதை உறுதி செய்ய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு தங்க கவசம் வழங்கியது.

ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக சந்தித்த 2019, 2021 ஆண்டு தேர்தல்களில் முக்குலத்தோர் சமுதாயத்தின் வாக்குகள் 10% முதல் 15% வரை சரிவைச் சந்தித்தது,” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், மேற்கு மாவட்டத்தைத் தாண்டிய வாக்குகளைத் தன்னால் பெற முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே எடப்பாடி பழனிசாமி தங்கக் கவசத்தின் மீது அதீத கவனம் செலுத்துவதாகவும் கூறுகிறார் கார்த்திகேயன்.

தமிழக தலைவராக மாற முயலும் எடப்பாடி பழனிச்சாமி

முத்துராமலிங்க தேவரின் தங்க கவச சர்ச்சை

அதிமுகவில் கவுண்டர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் சாதி ரீதியாக கட்சி பிளவுபட்டு இருப்பதைத் தவிர்க்கவும், மேற்கு மாவட்டத்தைத் தாண்டி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளைத் தன்னாலும் பெற முடியும் என்பதைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் காீத்திகேயன் கூறுகிறார்.

அதற்காகத்தான் தென் மாவட்டத்தைக் குறி வைத்து மதுரையில் அதிமுகவின் மாநில மாநாடு, பசும்பொன் தேவருக்கு இந்த ஆண்டு நேரில் சென்று அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.

டிடிவி, ஓபிஎஸ் தரப்பு தென் மாவட்டங்களில் அதிமுகவை பலவீனப்படுத்துமா?

முத்துராமலிங்க தேவரின் தங்க கவச சர்ச்சை

“ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் ஆகியோர் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

கடந்த நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இணைந்திருந்த போதும் அமமுகவிற்கு தென் மாவட்டத்தில் முக்குலத்தோர் வாக்குகள் சென்றதால் தென் மாவட்டத்தில் மோசமான தோல்வியை அதிமுக சந்தித்தது.”

ஆகவே, “அதை மீட்டெடுக்க தங்கக் கவசத்தை பெறுவதில் அதிமுகவினர் மும்முரம் காட்டுவதாகவும் கார்த்திகேயன் தெரிவித்தார்.

முக்குலத்தோர் வாக்குகளை பாஜக குறி வைக்கிறதா?

இதற்கிடையே, பாஜகவும் ஒருபுறம் முக்குலத்தோர் வாக்குகளைப் பெற முயல்வதாக கார்த்திகேயன் கூறுகிறார்.

“அதிமுக தென் மாவட்டங்களில் இழந்த முக்குலத்தோர் வாக்குகளைப் பெறுவதற்காகவே சமீபகாலமாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை முத்துராமலிங்கத் தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட தலைவர்களைப் பற்றிப் பேசி வருகிறார்.

குறிப்பாக மதுரையில் அண்ணாவுக்கு எதிராக முத்துராமலிங்கத் தேவர் பேசியதாகக் கூறி முக்குலத்தோர் சாதிய வாக்குகளை பாஜகவை நோக்கி மடைமாற்றம் செய்ய முயல்கிறார்.

ஆனால், பெருவாரியான முக்குலத்தோர் வாக்குகள் திராவிடக் கட்சிகளைத் தாண்டிச் செல்வதில்லை என்பதுதான் கள எதார்த்தமாக இருக்கிறது,” எனவும் தெரிவித்தார் மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயன்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »