Press "Enter" to skip to content

குஜராத் பால விபத்து: ஓராண்டுக்கு பிறகு பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலை – கள நிலவரம்

பட மூலாதாரம், Getty Images/BBC

ஷபானாவுக்கு 38 வயதாகிறது. அவர் தனக்கு நீதி கிடைக்கும் வரை செருப்பு அணியப் போவதில்லை என உறுதிபூண்டுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி குஜராத்தின் மோர்பியில் உள்ள தொங்கு பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். அதில் ஷபானாவின் மகனும் ஒருவர்.

ஷபானாவை போலவே, நரேந்திர பர்மர் அந்த விபத்தில் தனது மகளை இழந்தார்.

மோர்பி விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மோர்பி துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தை நிறுவி நடத்தி வருகின்றனர்.

இந்த சங்கத்தின் 113 உறுப்பினர்களும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கூடுகிறார்கள். இந்த மக்கள் அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடி வருகிறார்கள்.

குஜராத் மோர்பி பாலம் விபத்து

இழப்பீடு கிடைத்தது, ஆனால் நீதி?

ஷபானாவும், நரேந்திர பர்மாரும் மோர்பி தொங்கு பால விபத்தில் பலியானவர்களின் துயரத்தைப் பிரதிபலிக்கின்றனர்.

மோர்பி விபத்து சம்பவத்திற்குப் பிறகு 72 மணிநேரம் நிவாரணப் பணிகள் தொடர்ந்தன. விபத்துக்குப் பிறகு மோர்பி டவுன் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இந்த விபத்து நடந்து ஓராண்டு கழித்து, பிபிசி குஜராத்தி இந்தச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இன்றும் கோபத்தில் உள்ளனர்.

பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு அரசு அறிவித்த இழப்பீடு கிடைத்துள்ள போதும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்களுக்கு தண்டனை வழங்கப்படுமா என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

குஜராத் மோர்பி பாலம் விபத்து

பட மூலாதாரம், Getty Images

மகனுக்கு நீதி கேட்கும் தாய்

ஷபானா பதான் 20 வயதில் கணவனை இழந்தபோது, அவரது மூன்றாவது மகனுக்கு வயது வெறும் ஆறு மாதங்கள்.

சென்ற ஆண்டு அவரது மகன் அல்ஃபாஸ் பால விபத்தில் இறந்தபோது அவருக்கு 19 வயது. அன்று அவர் தனது நண்பர்களுடன் பாலத்திற்குச் சென்றிருந்தார். இந்தச் சம்பவத்தில் அவரது நண்பர்களும் உயிரிழந்தனர்.

அல்ஃபாஸ் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மாதம் ரூ.15,000 சம்பாதித்து வந்தார்.

தனது கணவர் இறந்த பிறகு, ஷபானா வீட்டு வேலை செய்து தனது மூன்று குழந்தைகளை வளர்த்தார். தந்தையின் அன்பையும் சேர்த்து தன் குழந்தைகளுக்குக் கொடுத்ததாகக் கூறுகிறார்.

தன் மகனை நினைவு கூர்ந்த ஷபானா, “அவன் என் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பவனாக இருந்தான்,” என்கிறார்.

“அவன் சம்பாத்தியத்தில் இருந்து வாடகை, மின்கட்டணம் செலுத்தி வந்தோம். அவன் ஆற்றிலிருந்து உயிருடன் வெளியேற்றப்பட்டான். ஆனால் சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டான். அவன் இல்லாமல் வாழ்வது மிகவும் கடினமாக இருக்கிறது,” என்றார்.

ஒரு தாயின் சபதம்

ஷபானா கண்ணீருடன் தொடர்ந்தார்.

“இப்போது எனது இரண்டு மகன்கள் தான் வீட்டின் பொறுப்பை ஏற்றுள்ளனர். என் இளைய மகன் படிப்பை நிறுத்திவிட்டுச் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டான்,” என்கிறார்.

ஷபானா சமீபத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இப்போது அவரால் வேலைக்குச் செல்ல முடிவதில்லை. தனது மகனுக்கு நீதி கிடைக்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் என சபதம் செய்துள்ளார்.

“வருடக்கணக்கில் காத்திருக்க நேரிட்டாலும், குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படும் வரை செருப்பு அணியமாட்டேன். நான் அல்லாஹ்வை நம்புகிறேன்,” என்கிறார் அவர்.

இவ்வளவு கடினமான சபதத்தை எடுப்பதற்கான காரணம் என்ன என்று கேட்டபோது, ‘எங்களைப் போன்றவர்கள் அரசாங்கத்தின், நீதித்துறையின் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்,’ என்று ஷபானா கூறுகிறார்.

ஷபானா மேலும் கூறுகையில், “அவர்களிடமிருந்து எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த விபத்தில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்கிறார் அவர்.

இந்த உறுதிமொழியால், ஷபானா அடிக்கடி நீதிமன்ற வளாகங்களுக்கும், காவல் நிலையங்களுக்கும் வெறுங்காலுடன் சென்று வருகிறார்.

ஒரே குடும்பத்தில் இறந்த ஏழு பேர்

குஜராத் மோர்பி பாலம் விபத்து

இந்த விபத்தில் ஹாஜி ஷாம்தார் தனது குடும்பத்தில் ஏழு பேரை இழந்தார். விபத்தில் உயிரிழந்த தனது 22 வயது மகள் முஸ்கானை பற்றிப் பேசும்போது அந்த தந்தையின் கண்களில் கண்ணீர் திரையிடுகிறது.

ஷாம்தர் இப்போது தனது இரண்டு மாடி வீட்டில் தனது மனைவி ஜமீலா மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்தச் சம்பவத்தில் அவரது மனைவி நூலிழையில் உயிர் தப்பினார். இந்தக் குடும்பத்தில் இறந்த ஏழு பேரில் நான்கு குழந்தைகளும் அடங்குவர். குழந்தைகளின் சிரிப்பொலியால் நிறைந்திருந்த அவர்களின் வீடு இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது.

முஸ்கான் பி.காம் படித்துவிட்டு குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகி வந்தார். “அவள் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி ஆக விரும்பினாள். ஆனால் அந்தக் கனவு நிறைவேறாமலே இந்த உலகத்தை விட்டுப் பிரிந்துவிட்டாள்,” என்கிறார் ஹாஜி.

“எங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டதைப் போல் உணர்கிறோம்,” என்று அவர் கூறுகிறார். ஆறு உடல்கள் ஒன்றாகத் தகனம் செய்யப்பட்ட காட்சி இன்னும் என் நினைவில் உள்ளது. அதை மறக்கவே முடியாது,” என்கிறார் அவர்.

‘ஒரு குடும்பமே அழிந்துபோனது’

குஜராத் மோர்பி பாலம் விபத்து

விபத்துக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு ஹாஜியின் 77 வயதான தாயார் இறந்தார். குடும்பத்தில் நடந்த சோகத்தால் அவர் அதிர்ச்சியடைந்து மன உளைச்சலுக்கு ஆளானார்.

உரையாடலின்போது ஜமீலா தொடர்ந்து அழுதுகொண்டிருந்தார். எங்கள் கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் ஹாஜி குடும்பத்திற்கு உதவி செய்யும் பொருட்டு அவர்களைச் சந்திக்க வந்து கொண்டே இருக்கிறார்கள்.

அத்தகைய ஒரு உறவினரான ஹமிதா ஷாம்தார் பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், “நாங்கள் அவர்களைச் சந்திக்க வரும்போதெல்லாம், எங்களைப் பார்த்ததும் அழத் தொடங்குகிறார்கள். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் முழு குடும்பமும் அழிக்கப்பட்டுவிட்டது. வேறு சில குடும்பங்களிலும் இதே நிலைதான்,” என்கிறார்.

இந்த விபத்தில் சாரதா பிகா தனது 22 வயது மகனை இழந்தார்.

சாரதா, “எங்களுக்கு நீதியைத் தவிர வேறு எதுவும் வேண்டாம். வயதான காலத்தில் நமக்கு உறுதுணையாக இருந்த மகன்கள் பலரையும் நாங்கள் இழந்திருக்கிறோம். இப்போது எங்கு செல்வது என்று தெரியவில்லை,” என்கிறார்.

குஜராத் மோர்பி பாலம் விபத்து

பட மூலாதாரம், ANI

மோர்பி சம்பவ வழக்கில் என்ன நடந்தது?

விபத்து நடந்த 12 மணிநேரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், பத்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் ஜாமீனில் வெளிவந்தனர். இந்த வழக்கு மோர்பி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

மோர்பியின் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள அரசு வழக்கறிஞர் விஜய் ஜானி, பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், “இந்த வழக்கில் முதல் மூன்று மாதங்களுக்கு அரசு வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இப்போது இந்தப் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்முறையை விரைவுபடுத்த முயல்வோம்,” என்றார்.

தற்போது அரசுத் தரப்பு தாக்கல் செய்த மூன்று தனித்தனி மனுக்கள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. இந்த வழக்கில் 350 சாட்சிகள் இருப்பதாக விஜய் ஜானி கூறினார்.

சம்பவத்தில் பலியான 112 பேரின் குடும்பங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உட்கர்ஷ் தவே, “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஐபிசியின் 302வது பிரிவை இணைக்க நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளோம். இந்த விவகாரத்தில் புகார் அவசர அவசரமாகப் பதிவு செய்யப்பட்டதால், உரிய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை,” என்று கூறினார்.

ஒரு குடும்பமாக இணைந்த பாதிக்கப்பட்டவர்கள்

மோர்பி தொங்கு பால விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காகப் போராட வேண்டி ஒரு சங்கத்தைத் துவங்கியுள்ளனர்.

ஆசிரியர் நரேந்திர பர்மாரின் முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில் அவர் தனது பத்து வயது மகளை இழந்தார்.

“ஒரு தளத்தை உருவாக்க எங்கள் வழக்கறிஞர் எங்களுக்கு வழிகாட்டினார்,” என்று பர்மர் பிபிசி குஜராத்தியிடம் கூறினார்.

“இதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். தற்போது நாங்கள் ஒரே தரப்பாகச் சேர நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளோம்,” என்கிறார் அவர்.

இந்தச் சங்கத்துக்கு மோர்பி துயரத்தால் பாதிக்கப்பட்டோர் சங்கம் என்று பெயரிட்டுள்ளனர். இது பாதிக்கப்பட்டவர்கள் நிறைந்த ஒரு பெரிய குடும்பமாகத் திகழ்கிறது. நீதிமன்றச் செயல்முறை மற்றும் வழக்கு வழிமுறைகள் குறித்து மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த சங்க உறுப்பினர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை கூட்டங்களை நடத்துகின்றனர்.

இந்த வழக்கில் பர்மரும் ஒரு சாட்சியாக உள்ளார். விபத்து நடந்தபோது அவர் தனது மகள் மற்றும் மகனுடன் பாலத்தில் இருந்தார். அவரும் அவரது மகனும் உயிர் தப்பினர், ஆனால் அவரது மகள் இறந்துவிட்டார்.

மோர்பி துயரத்தால் பாதிக்கப்பட்டோர் சங்கம் காவல் துறை விசாரணையில் திருப்தியடையவில்லை.

“புகார் பதிவு செய்வது முதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வது வரை, காவல் துறையினர் வேண்டுமென்றே வழக்கில் பல ஓட்டைகளை விட்டுவிட்டனர். இது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாக அமைந்தது. நீதிமன்றத்தில் பிணை பெற அவர்களுக்கு உதவியது,” என்று பர்மர் கூறுகிறார்.

குஜராத் மோர்பி பாலம் விபத்து

பட மூலாதாரம், ANI

விபத்து அரசியலாக்கப்படுகிறதா?

மாறாக, பாவ்நகர் பகுதியின் காவல் ஆய்வாளர் ஜெனரல் அசோக் குமார் யாதவ், பிபிசியிடம் பேசுகையில், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றார்.

அவர், “ஓரேவா நிறுவனத்தில் ஜெய்சுக் படேலின் பங்கு உறுதி செய்யப்பட்டவுடன், அவர்கள் கைது செய்யப்பட்டனர். நாங்கள் விசாரணையை விரைவுபடுத்தியது மட்டுமல்லாமல், சம்பவத்திற்குப் பிறகு மீட்புப் பணிகளிலும் விரைவாகச் செயல்பட்டோம். அனைத்து குற்றச்சாட்டுகளையும் வலுப்படுத்தும் வகையில் குற்ற அறிக்கையில் ஆவண ஆதாரங்களை இணைத்துள்ளோம்,” என்றார்.

விபத்து நடந்த உடனே நடந்த சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் காந்தி அமிர்த்யா அமோக வெற்றி பெற்றார். விபத்துக்குப் பிறகு, மக்களைக் காப்பாற்ற அவர் ஆற்றில் குதிக்கும் காணொளி மிகுதியாக பகிரப்பட்டது. அது அவர் தேர்தலில் வெற்றி பெற உதவியதாகக் கூறப்படுகிறது.

பிபிசி குஜராத்தியிடம் பேசிய அமிர்த்யா, “மோர்பியில் ரூ.525 கோடியில் மருத்துவக் கல்லூரி கட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 2,000 மாணவர்கள் பயன்பெறுவதோடு, அப்பகுதியில் மருத்துவ வசதிகளும் அதிகரிக்கும். இது தவிர, விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் உரிய நேரத்தில், கண்ணியமான முறையில் இழப்பீடு வழங்கப்படும்,” என்றார் அவர்.

இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க பல திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகவும், அதை விரைவில் அறிவிக்கப் போவதாகவும் அவர் கூறினார்.

மோர்பியை சேர்ந்த மூத்த பாஜக தலைவர் மோகன் குந்தாரியா கூறுகையில், “இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கட்சியும் அரசாங்கமும் துணை நிற்கின்றன. ஆமதாபாத் ரிவர்ஃபிரண்ட் போன்ற ஒரு திட்டத்தை அரசாங்கம் மோர்பியில் உருவாக்கி வருகிறது,” என்றார்.

இருப்பினும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்த காங்கிரஸ் தலைவர் ஜே.ஜே.படேல், இந்தத் திட்டங்கள் அனைத்தும் பொய்யானவை என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இவ்வளவு கொடூரமான சம்பவத்திற்குப் பிறகும், மக்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் விழிப்புடன் இல்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது,” என்றார் அவர்.

சிறப்புப் புலனாய்வு அறிக்கை என்ன சொல்கிறது?

குஜராத் மோர்பி பாலம் விபத்து

பட மூலாதாரம், AFP

இந்த விபத்து குறித்து விசாரிக்க, சிறப்புப் புலனாய்வுக் குழுவை அரசு அமைத்தது. இதற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமை வகித்தார்.

இந்தக் குழு தனது அறிக்கையை இந்த ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி குஜராத் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின்படி, தர்பார்கர் முனையிலிருந்து பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தில் மக்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் இல்லாததால், அதீத சுமை காரணமாக பாலம் இடிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பாலத்தைச் சீரமைக்கும் முன் எந்த தொழில்நுட்ப நிபுணரையும் கலந்தாலோசிக்கவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருகும் முக்கிய விஷயங்கள்

  • பாலம் 75-80 பேரை மட்டுமே சுமக்கப் போதுமானதாக இருந்தது.
  • பாலத்தின் 49 கேபிள்களில் 22 கேபிள்கள் அரிப்பு காரணமாக உடைந்து போயிருந்தன. அவை சீரமைக்கப்படவில்லை.
  • இத்தகைய சூழ்நிலையில், பாலத்தில் சுமை கொள்ளளவை குறைக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் அவ்வாறு செய்யப்படாதது மட்டுமின்றி, பாலத்தில் மக்கள் செல்ல எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.
  • பாலத்தின் நிலை, அதன் மறுசீரமைப்பு மற்றும் பழுது குறித்து மதிப்பீடு செய்யப்படவில்லை.
  • பழுது பார்க்கும் பணியில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை.
  • பாலத்தின் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கு முன் எந்த மதிப்பீடும் செய்யப்படவில்லை.
  • பாலத்தின் அடிப்பகுதியில் மரத்திற்குப் பதிலாக அலுமினியத் தாள்கள் சேர்க்கப்பட்டதால் பாலத்தின் மொத்த எடை அதிகரித்தது. பாலத்தின் சஸ்பெண்டர் கம்பிகள் மாற்றப்படவில்லை.
  • பாலத்தைத் திறப்பதற்கு முன் சுமை சோதனையோ, கட்டமைப்பு சோதனையோ செய்யப்படவில்லை.
  • பழுது பார்க்கும் பணி பொருத்தமற்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மோர்பி தொங்கு பாலத்தின் வரலாறு

  • 1887: மோர்பியின் அரச குடும்பத்தால் தொங்கு பாலம் கட்டப்பட்டது
  • 1949-2008: இந்தக் காலகட்டத்தில் பாலத்தின் பராமரிப்புக்கு மோர்பி நகராட்சி பொறுப்பேற்றது.
  • 29 மே 2007: பாலத்தின் பராமரிப்பு மற்றும் இயக்க அதிகாரங்கள் ராஜ்கோட் ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது.
  • 16 ஆகஸ்ட் 2008: ராஜ்கோட் ஆட்சியர் அலுவலகம் பாலத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்காக அவுரேவா நிறுவனத்துடன் ஒன்பது ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • 2008-2017: இந்தக் காலகட்டத்தில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி பராமரிப்பு, பாதுகாப்பு, மேலாண்மை, கட்டண வசூல் பொறுப்பு அவுரேவா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
  • 2017-2019: புரிந்துணர்வு ஒப்பந்தம் 15 ஜூன் 2017 அன்று காலாவதியானது. இருப்பினும், அவுரேவா குழுமம் அதைத் தொடர்ந்து நிர்வகித்து வந்தது.
  • 29 டிசம்பர் 2021: மோர்பி நகராட்சியின் தலைமை அதிகாரியிடம், பாலத்தின் மோசமான நிலை காரணமாக, அதைச் சீரமைக்க முடிவெடுக்க வேண்டும் என்று ஓரேவா கூறினார்.
  • 8 மார்ச் 2022 முதல் 25 அக்டோபர் 2022 வரை: இந்தக் காலகட்டத்தில் பழுது பார்ப்பதற்காக பாலம் மூடப்பட்டது
  • 26 அக்டோபர் 2022: நகராட்சி அனுமதியின்றி பாலம் திறக்கப்பட்டது
  • 30 அக்டோபர் 2022: பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் பலியாயினர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »