Press "Enter" to skip to content

கேரளா குண்டு வெடிப்பு: ‘அமைதியான’ஆங்கில ஆசிரியர் குண்டு வைக்கும் அளவுக்குச் சென்றது ஏன்? – பிபிசி கள ஆய்வு

கேரளாவின் கொச்சி நகருக்கு அருகில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருக்கிறது. குண்டு வைத்ததாகச் சரணடைந்திருக்கும் நபரின் பின்னணி பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வந்த அவரைத் அறிந்தவர்கள், அவர் யாருடனும் அதிகம் பேசமாட்டர் என்றும், யாருடனும் எந்த சச்சரவும் வைத்துக்கொண்டதில்லை என்றும், தன் மகளின் மீது மிகவும் பாசமாக இருந்தார் எனவும் கூறுகிறார்கள்.

இப்படிப்பட்டவர் குண்டு வைக்கும் அளவுக்குச் சென்றது எப்படி?

அதற்கான காரணமாக அவர் கூறியது என்ன?

கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்

என்ன நடந்தது?

கேரள மாநிலம் கொச்சி நகருக்கு அருகில் உள்ள களமச்சேரியில் உள்ள ஜாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில், அக்டோபர் 27-ஆம் தேதி முதல் யகோவாவின் சாட்சியம் என்ற மதப் பிரிவினரின் மாநாடு நடந்து வந்தது.

இதற்காக சுமார் 2,500 பேர் அந்த மாநாட்டுக் கூடத்தில் கூடியிருந்த நிலையில், அன்று காலை 9.40 மணியளவில் அகுண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.

இதில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 50 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்

‘என் அம்மா ஆறுதலுக்காகப் போனார், இறந்துவிட்டார்’

இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த 54 வயதுப் பெண்மணியான குமாரி புஷ்பனின் குடும்பத்தினர் நொறுங்கிப் போயிருக்கிறார்கள்.

“முதலில் இவ்வளவு மோசமாக நடந்திருக்கும் என நாங்கள் நினைக்கவில்லை. இங்கே வந்தபோது என் அம்மாவின் நிலை சிக்கலாக இருப்பதாகச் சொன்னார்கள். அப்போதும் அவர் இறந்துவிட்டதாகச் சொல்லவில்லை. ஆனால், ‘சிக்கலாக இருப்பதாகச்’ சொன்னதுமே நான் புரிந்து கொண்டுவிட்டேன். கொஞ்ச நேரம் கழித்துத்தான் அம்மாவைக் காட்டினார்கள். அவரது உடல் 90% எரிந்து போயிருந்தது. பிறகு அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டது. சிறுநீரகம் சேதமடைந்துவிட்டது. ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது. தேறமாட்டார் என்பது தெரிந்துவிட்டது,” என்று சொல்லிவிட்டு அழுகிறார் அவரது மகன் ஸ்ரீராஜா.

குமாரி புஷ்பன் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவைச் சேர்ந்தவர். இவர்களுடையது ஒரு இந்துக் குடும்பம். ஆனால், குமாரி மட்டும் யகோவாவின் சாட்சியத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்.

“எனக்கு எந்த மதத்திலும் பெரிய நம்பிக்கை கிடையாது. என் அம்மாவுக்கு குடும்பத்தில் சில பிரச்சனைகள் இருந்தன. அம்மாவுக்கு இங்கே ஆறுதல் கிடைத்தது. சந்தோஷம் கிடைத்தது. இது அம்மாவின் தனிப்பட்ட விஷயம் என விட்டுவிட்டோம்,” என்கிறார் ஸ்ரீ ராஜா.

கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்

இறந்துபோன 12 வயதுச் சிறுமி

இந்த விபத்தில் முதன் முதலில் உயிரிழந்த பெண்மணி யார் என்பது முதலில் அடையாளம் காண முடியாமல் இருந்தது. பிறகு அவர் பெம்பாவூர் இரிங்கோலைச் சேர்ந்த லெயோனா பாலோஸ் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அவரது உடலுக்கு டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு உடலை ஒப்படைக்க அரசு முடிவுசெய்திருக்கிறது.

இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சைபெற்றுவந்த 12 வயதுச் சிறுமியான லிபினா என்பவரும் உயிரிழந்திருக்கிறார். அவருடைய தாயும் சகோதரனும் தற்போது ஆபத்தான கட்டத்தில் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

மாற்றுத்திறனாளி கணவருடன் உயிர் தப்பிய பெண்

கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்

குண்டுவெடிப்பு நடக்கும்போது பிரார்த்தனைக் கூடத்தின் உள்ளே இருந்து உயிர் தப்பியவர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

குண்டு வெடித்தபோது பிரார்த்தனைக் கூடத்துள் இருந்த ராணி ரிச்சர்ட், அந்த அனுபவத்தை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.

முதலில் வெடிச்சத்தம் கேட்டதாகவும், பிறகு தீப்பற்றி எரிந்தபோது மக்கள் அது மின்சார ஷார்ட்-சர்க்யூட் ஆக இருக்கும் என்று நினைத்ததாகவும் கூறுகிறார்.

கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்

“காலை சரியாக 9:38 மணி இருக்கும். நாங்க அங்கே போனோம். உள்ளே அமர்ந்து பக்கத்தில் இருந்தவர்களோடு பேசிக்கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு பிரார்த்தனை ஆரம்பமானது. நாங்கள் கண்களை மூடி பிரார்த்தித்தபோது, ஹாலின் மையத்தில் அந்த வெடிச் சத்தம் கேட்டது. ஒரு பெரிய தீப்பிழம்பு வந்தது. அதைப் பார்த்தவுடன் மின்சார வயரில் ஷார்ட் – சர்க்யூட் என நினைத்தோம்,” என்கிறார் ராணி.

இவரது கணவர் ஒரு மாற்றுத் திறனாளி. அவர்கள் அங்கிருந்து எப்படித் தப்பித்து வந்தனர் என்று கூறுகிறார். “எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பயங்கரமான புகைமூட்டம் ஏற்பட்டது. என் கணவர் ஒரு மாற்றுத் திறனாளி. அதனால் கஷ்டப்பட்டு எல்லோரும் வெளியில் வந்தோம். வெளியில் வந்தவுடன் நான் சுயநினைவை இழந்து விழுந்துவிட்டேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் சுயநினைவு திரும்பினாலும் உடம்பு முழுக்க வலி இருந்தது. இப்போதும் வலி இருக்கிறது,” என்கிறார் ராணி ரிச்சர்ட்.

‘சிறிது நேரம் கழித்தே குண்டு வெடிப்பு எனத் தெரிந்தது’

களமச்சேரியைச் சேர்ந்த ஜோசுவாவும் இதே போன்ற அனுபவத்தையே சொல்கிறார்.

“நானும் ஒரு யகோவா விசுவாசிதான். பிரார்த்தனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே குண்டு வெடித்தது. அந்த நேரத்தில் யாருக்கும் ஏதும் புரியவில்லை. நான் வெளியில் வந்த பிறகு மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு நடந்தது. பிரதான வாயில் அருகே வந்ததும் இன்னும் ஒரு குண்டு வெடித்தது. கொஞ்ச நேரம் கழித்துத்தான் இது குண்டு வெடிப்பு எனத் தெரிந்தது,” என்கிறார் ஜோசுவா.

இப்போது மெல்ல மெல்ல அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்கும் ‘யகோவாவின் சாட்சிய’ விசுவாசிகள், அந்த மாநாட்டு அரங்கிலிருந்து வாகனங்களை எடுத்துச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த வழக்கை மாநிலக் காவல்துறையோடு, தேசியப் புலனாய்வு முகமையும் விசாரித்துவருகிறது. எட்டு பேரைக் கொண்ட குழு ஒன்று, குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்கு வந்து, தடயங்களைச் சேகரித்துச் சென்றிருக்கிறது.

கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்

விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது?

இந்தக் குண்டுவெடிப்பை தானே நிகழ்த்தியதாகக் கொச்சியின் தம்மனம் பகுதியைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் சம்பவம் நடந்த ஞாயிற்றுக் கிழமை மதியமே சரணடைந்துவிட்டார்.

இருந்தும், பல சந்தேகங்களைத் தீர்த்த பிறகே, இந்த வழக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது என்ற முடிவில் இருக்கிறது கேரள காவல்துறை.

டொமினிக் கடந்த இரண்டு ஆண்டுகளாக கேரளாவில் இல்லாத நிலையில், அவர் வெளிநாட்டில் இருந்தபோது யாருடன் தொடர்பில் இருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார் என்பதையெல்லாம் காவல்துறை விசாரித்து வருகிறது.

அவருடைய ஃபேஸ்புக் நடவடிக்கைகள் ஆராயப்படுவதோடு, அவரது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

தங்கள் பகுதியில் சாதாரணமாகச் சுற்றித்திரிந்த நபர் இதுபோல ஒரு செயலில் ஈடுபட்டிருந்தார் என்பதை அந்தப் பகுதியில் வசிப்பவர்களால் நம்ப முடியவில்லை.

கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்

‘குண்டு வைத்தவர் ஒரு அமைதியான ஆங்கில ஆசிரியர்’

தம்மனத்தில் குறுகிய தெரு ஒன்றில், ஒரு மாடி வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பத்தினருடன் வசித்துவந்திருக்கிறார் டொமினிக் மார்ட்டின்.

அந்த வீட்டின் உரிமையாளர் பி.ஏ. ஜலீல் அதிர்ந்து போயிருக்கிறார்.

“டொமினிக் ஐந்தரை வருடங்களுக்கு முன்பாக இங்கே குடிவந்தார். ஆங்கிலம் பேச சொல்லிக்கொடுக்க்கும் ஆசிரியராக வேலை பார்த்துவந்தார். கொரோனா காலகட்டத்தில் அவருடைய பணிகள் பாதிக்கப்பட்டபோது, வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றார். திரும்பிவந்து வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. இதுவரை அவரால் எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடனும் எந்த சண்டை சச்சரவும் வந்ததில்லை. அவர் யார் கூடவும் அதிகம் பேச மாட்டார். அவருடைய மனைவிதான் ஏதாவது கேட்பார்,” என்கிறார் ஜலீல்.

கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்

‘ஃபேஸ்புக் பார்த்துதான் அவரது மனைவிக்கே தெரியும்’

ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டுக்கு திடீரென காவல்துறை தேடிவரவும் ஜலீலுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

“இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு அவர் ஒரு க்ரில் அடுப்பை வாங்கிவந்தார். அந்த அடுப்பு எதற்கு எனக் கேட்டபோது, மகளுக்கு கிரில் கோழிக்கறி பிடிக்கும், வீட்டிலேயே செய்வதற்காக வாங்கிவந்தேன் என்று சொன்னார். அவர்கள் தங்கள் மகள் மீது ரொம்வும் பாசமாக இருப்பார்கள். மகளுக்கு சில மாதங்களுக்கு முன்பாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதை ஒட்டித்தான் அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பினார். அவருக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்கலாம் என யாருக்கும் தோன்றவில்லை,” என்கிறார் ஜலீல்.

டொமினிக்கிற்கு இரண்டு குழந்தைகள். மகன் பிரிட்டனில் இருக்கிறார். மகள் கொச்சியிலேயே வேலைபார்த்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில் தன்னுடைய ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார் டொமினிக்.

“அவர் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் என்பதுதான் தெரியும். எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதெல்லாம் தெரியாது. யகோவா பற்றியெல்லாம் என்னிடம் பேசியதில்லை. இதுபோல செய்திருப்பதாக அவர் பேஸ்புக்கில் பகிர்ந்தவுடன்தான் அவருடைய மனைவிக்கே தெரியும்” என்கிறார் ஜலீல்.

என்ன காரணம் சொன்னார் டொமினிக்?

டொமினிக், யகோவாவின் சாட்சியங்கள் குழுவில் 16 ஆண்டுகளுக்கு முன்பு இணைந்தார். அக்குழுவின் மீது 6 ஆண்டுகளாக அதிருப்தியில் இருந்ததாகவும், அதனால் இதனைச் செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

இப்போது டொமினிக் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், வெடி மருந்துச் சட்டம், கொலை முயற்சி, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

யகோவாவின் சாட்சியம் கூட்டத்தை நடத்தியவர்கள் இந்த விவகாரம் பற்றி ஊடகங்களிடம் பேச மறுக்கிறார்கள். இந்தப் பிரிவை நம்புபவர்களில் எல்லா மதத்தினரும் இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்திற்கு வந்து பிரார்த்திக்க ஆரம்பித்த பிறகு தங்கள் வாழ்வு மேம்பட்டிருப்பதாகக் கருதுகிறார்கள்.

யார் இந்த யகோவாவின் சாட்சியத்தினர்?

கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்

பட மூலாதாரம், Getty Images

யகோவாவின் சாட்சியம் என்ற குழுவைக் குறித்து கேரளாவில் பெரிய அளவில் பேசப்பட ஆரம்பித்தது 1985ல்தான்.

இப்பிரிவைச் சேர்ந்த பினுமோல், பிந்து, பிஜோ இமானுவேல் ஆகிய மூன்று குழந்தைகள் தேசிய கீதத்தைப் பாட மறுத்ததற்காக பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தப் பிரிவினரைப் பற்றி பலரும் பரவலாகத் தெரிந்துகொண்டார்கள்.

1987-இல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட நிலையில், இந்தப் பிரிவினர் சீராக வளர ஆரம்பித்தனர்.

யகோவாவின் சாட்சியம் பிரிவினரைப் பொறுத்தவரை, அவர்கள் கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவினர் என்ற பரவலான நம்பிக்கை இருந்தாலும், பிற கிறிஸ்தவப் பிரிவினருக்கு இவர்களை கிறிஸ்தவர்களாக ஏற்பதிலும் இவர்களுக்கு மற்றவர்களைக் கிறிஸ்தவர்களாக ஏற்பதிலும் உடன்பாடு கிடையாது.

இவர்களைப் பொறுத்தவரை யஹோவாவே முழுமுதல் கடவுள். யஹோவா என்பது, பழைய ஏற்பாட்டில் யூத மொழியில் கடவுளைக் குறிக்கும் சொல். யஹோவாவின் சாட்சியத்தினரைப் பொறுத்தவரை, அவர்கள் யஹோவாவைத் தவிர வேறு யாரையும் கடவுளாக ஏற்பதில்லை.

இவர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்கிறார்கள். ஆனால், அவரை இவர்கள் வணங்குவதில்லை. யஹோவாவை மட்டுமே வணங்க வேண்டும் என்பது இவர்களது நிலைப்பாடு.

கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்

பட மூலாதாரம், Getty Images

தீவிரமான மத நம்பிக்கைகள்

கிறிஸ்துவத்தின் மிக முக்கியமான அம்சமான அதிபுனித திரித்துவம் (Holy Trinity) எனப்படும் ‘பிதா, சுதன், பரிசுத்த ஆவி’ என்பதை இவர்கள் ஏற்பதில்லை. சிலுவையை வணங்குவதில்லை. கிறிஸ்துமஸ் நாளைக் கொண்டாடுவதில்லை. கிறிஸ்துவத்தின் பிற பிரிவினர் பைபிளை சரியாகப் படித்து விளங்கிக்கொள்ளவில்லையென்றும் தாங்களே அதனை முழுமையாகப் புரிந்துவைத்திருப்பதாகவும் இவர்கள் கூறிக்கொள்கின்றனர்.

1961-ஆம் ஆண்டு வரை பைபிளின் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பையே இவர்கள் பயன்படுத்தி வந்தனர். அதற்குப் பிறகு, நியு வேர்ல்ட் டிரான்ஸ்லேஷன் என்ற பதிப்பைப் பயன்படுத்துகின்றனர். கிங் ஜேம்ஸ் பதிப்பு, சரியான மொழிபெயர்ப்பில்லை எனக் கூறுகின்றனர்.

இவர்கள் சிலுவையையோ, வேறு உருவங்களையோ வணங்குவதில்லை. இயற்கைகையும் இவர்கள் வணங்கக்கூடாது. பொதுவாக, அலங்கரிக்கப்படாத அரங்குகளில் மொத்தமாகக் கூடி, பைபிளை வாசித்தும் பாடியும் கடவுளை வணங்குகிறார்கள்.

ஜெகோவாவின் சாட்சியம் எப்படி உருவானது?

கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்

பட மூலாதாரம், Getty Images

1870களில் அமெரிக்காவில் வசித்த சார்லஸ்நாட்கள் ரஸ்ஸல் என்பவரைப் பின்பற்றியவர்களால் பைபிள் மாணவர் இயக்கமாக இந்தப் பிரிவு முதலில் துவங்கப்பட்டது.

1881-இல் இங்கிலாந்திற்கு இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் சென்றனர். 1900-இல் லண்டனில் முதல் வெளிநாட்டுப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. பிறகு கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் இதன் பிரிவுகள் துவங்கப்பட்டன.

1916-இல் ரஸ்ஸல் இறந்த பிறகு இந்தப் பிரிவில் பிளவுகள் தோன்றின. இதில் ஜோசப் ரூதர்போர்ட் தலைமையிலான பிரிவு, தலைமையகத்தைக் கைப்பற்றியது. இதற்குப் பிறகு, பல சித்தாந்த மாற்றங்கள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டன. 1931-இல் யஹோவாவின் சாட்சியங்கள் என்ற பெயர் இந்தப் பிரிவுக்கு சூட்டப்பட்டது.

கேரளா குண்டு வெடிப்பு, யகோவாவின் சாட்சியம்

பட மூலாதாரம், Getty Images

ஜெகோவாவின் சாட்சியம் சர்ச்சைக்குள்ளாவது ஏன்?

இந்த காலகட்டத்தில்தான், ரத்ததானம் பெறுவது தடைசெய்யப்பட்டது. நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான மிகப் பெரிய யுத்தம் வரவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்தப் பிரிவினர் வேகமாக வளர்ந்துவந்த நிலையில், இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனி, சோவியத் யூனியன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்தப் பிரிவு தடைசெய்யப்பட்டது. இவர்கள் மீது பல தாக்குதல்கள் நடத்ததப்பட்டன.

இதையடுத்து, கனடாவிலும் அமெரிக்காவிலும் மிகப் பெரிய அளவில் வழக்குகளைத் தொடர்ந்த இவர்கள், வீடு வீடாகச் சென்று தங்கள் புத்தகங்களை விநியோகிக்கும் உரிமையை உறுதிசெய்தனர். கொடி வணக்கம் செய்யாமல் இருக்கவும் உரிமைகளைப் பெற்றனர். பல நாடுகளில் இந்தப் பிரிவினருக்கு சில தடைகளை விதிப்பது இன்றும் தொடரவே செய்கிறது.

இப்போது உலகம் முழுவதும் 85,00,000 பேர் இந்தப் பிரிவில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தப் பிரிவினருக்கான தலைமையகம் நியூயார்க்கில் இருக்கிறது.

இந்தப் பிரிவினர் எந்த அரசியல் நிலைப்பாட்டையும் எடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதேபோல, இவர்கள் வாக்களிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »