Press "Enter" to skip to content

மேகமலை காட்டுக்குள் 55 வயது நபரை வனத்துறையினர் சுட்டுக் கொன்றது ஏன்?

தேனி மாவட்டம் மேகமலை காட்டுக்குள் வனத்துறையினரால் 55 வயது ஈஸ்வரன் அக்டோபர் 28ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். யானைகள் வலசை மின்வேலிகள் அமைத்த ஈஸ்வரன், வனத்துறையினரை கொல்ல முயன்றதாகவும் தற்காப்புக்காக அவரை சுட்டுக்கொன்றதாகவும் வனத்துறையினர் கூறுகின்றனர்.

ஆனால், ஈஸ்வரன் வயலில் தண்ணீர் பாய்ச்சவே சென்றதாகவும் அவரை வனத்துறையினர் சட்டவிரோதமாக கொன்று விட்டதாகவும் குடும்பத்தார் குற்றம் சாட்டுகின்றனர். உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள களத்துக்கு சென்றது பிபிசி தமிழ்.

மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பகத்தில் யானைகள் வலசை செல்லும் பாதையில் சட்டவிரோதமாக மின் இணைப்பு இழுத்து மின்வேலி அமைத்து வேட்டையாட முயன்றதாக ஈஸ்வரன்(55) என்ற நபர் மீது வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் பலியானார்.

விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற முதியவரை வனத்துறையினர் அடித்து, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வனத்துறையினரை கத்தியால் குத்த முயன்றதால் தற்காப்புக்காக வனத்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டனர் என வனத்துறையினர் விளக்கம் அளிக்கின்றனர்.

வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம், TN FOREST DEPARTMENT

மேகமலை புலிகள் காப்பகத்தின் சிறப்பு என்ன?

இந்தியாவின் தேசிய விலங்கான புலி அழிந்து வரும் நிலையில் இருப்பதால் அவற்றைப் பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புலிகளை பாதுகாத்து புலிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நாடு முழுவதும் 51 புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு உள்ளன. இதில்

தமிழ்நாட்டில் மட்டும் முதுமலை, களக்காடு முண்டந்துறை, சத்தியமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் உட்பட 5 புலிகள் காப்பகம் உள்ளன.

மதுரை, விருதுநகர், தேனி ஆகிய மூன்று மாவட்டத்தின் பகுதிகளில் விரிவடைந்து இருக்கக்கூடியது ஸ்ரீவல்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம். இது கடந்த 2021 ஆம் ஆண்டு புலிகள் வாழும் பகுதியாக அரசால் கண்டறியப்பட்டு அந்த பகுதி புலிகள் காப்பகமாக வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த புலிகள் சரணாலயம் 1016 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. உலகத்தில் உள்ள 36 பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதிகளில் மேகமலை புலிகள் காப்பகமும் ஒன்று. இதில் புலி, சிறுத்தை, காட்டெருமை, மான் யானை, வரையாடு, சிங்கவால் குரங்கு சாம்பல் நிற அணில் என 32 பாலூட்டிகள், 510 பறவை, பூச்சி வகைகள், 190 வகையான வண்ணத்துப்பூச்சிகள், 18 மீன்கள் வகைகள் என பல்லுயிர் நிறைந்த பகுதியாக இருக்கிறது.

இந்த புலிகள் காப்பகம் மற்ற புலிகள் காப்பகத்தை விட அதிக பரப்பளவு, நீர் தேக்கம் கொண்ட பகுதியாக இருக்கிறது. இதனால் இங்கு புலிகள் வாழ்க்கை, இனப்பெருக்கம் அடைவதற்கான ஏற்ற சூழல் இங்கு நிலவுகிறது.

வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம், TN FOREST DEPARTMENT

மேகமலையில் புலிகள் எண்ணிக்கை எவ்வளவு?

மேகமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 13 புலிகள் இருந்தன. அதற்கு அடுத்த ஆண்டில் 21 புலிகளாக அதிகரித்தது.

அதன்பிறகு 2020, 2021-ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

2022-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை இரண்டு ஆண்டில் 8 அதிகரித்து 21 ஆக இருந்தது.

2023 ஆம் ஆண்டு வனத்துறையினரால் எடுக்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு பணியின் போது 15 புலிகள் 4 குட்டிகள் என 19 புலிகள் கணக்கெடுக்கப்பட்டது. இது மேகமலை காடுகள் புலிகளின் வாழ்வியலுக்கு உகந்த சூழல் இருப்பதை காட்டின.

காட்டுக்குள் நடந்தது என்ன?

வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(55). இவர் ஸ்ரீவல்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயக்கூலியாக இருந்து வந்தார்.

இதற்கு முன்பாக இவர் யானைகள் வலசை செல்லும் பாதையை வனத்துறையினருக்கு காண்பிக்கும் பணியில் ஈடுபட்டதாக இவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த அக்டோபர் 28ஆம் தேதி மாலை விவசாய நிலத்திற்கு சென்றவர் மறுநாள் வனத்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அவரது உடல் உறவினரிடம் தெரிவிக்காமல் கம்பம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் கம்பம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குவிந்தனர். வனத்துறையினர் திட்டமிட்டு ஈஸ்வரனை சுட்டுக் கொலை செய்ததாகவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 வனத்துறை அதிகாரிகளை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர். பின்னர் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன் உறவினர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து உடலைப் பெற்றுச் சென்றனர்.

“இறந்ததை ஏன் உடனே தெரிவிக்கவில்லை?”

ஈஸ்வரன் அக்டோபர் 28ம் தேதி மாலையே சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அதை ஏன் உடனே குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை என ஈஸ்வரனின் உறவினர் விஜய் கேள்வி எழுப்புகிறார். மேலும் மிக அருகில் இருந்து ஈஸ்வரனை வனத்துறையினர் சுட்டதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

“எனது சித்தப்பா ஈஸ்வரன் 10 ஆண்டுகளுக்கு மேலாக யானை வலசை செல்லும் பாதைகளின் வழிகாட்டியாக வனத்துறைக்கு உதவி செய்து வந்திருக்கிறார். கடந்த 3 மாதங்களுக்கு மேலாக அந்த பணிக்குச் செல்லவில்லை. அவ்வப்போது எனது சித்தப்பாவை வனத்துறையினருக்கு கைது செய்ய ஆள் கிடைக்கவில்லை என்றால் வழக்கில் கணக்கு காண்பிக்க அழைத்துச் செல்வார்கள்.”

“ஆனால், கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி மாலை வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை (அக்டோபர் 29) வனத்துறையால் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்ததாக குடும்பத்திற்கு தகவல் கொடுக்கப்படுகிறது.”

“ஆனால், துப்பாக்கி சூடு அக்டோபர் 28 மாலையே நிகழ்ந்து உள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை உயர் அதிகாரிகள் அனைவரும் பார்வையிட்டு உள்ளனர். ஏன் அன்றிரவே இந்த தகவலை எங்களுக்கு தெரிவிக்கவில்லை?” என கேள்வி எழுப்புகிறார் விஜய்.

ஈஸ்வரனின் உடல் உறவினரிடம் தெரிவிக்காமல் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

“எனது சித்தப்பாவை வனத்துறையினர் பிடித்து தலை, கால் உள்ளிட்டப் பகுதிகளில் கடுமையாக தாக்கியதோடு அவரை மார்பில் துப்பாக்கியால் மிக அருகில் வைத்து சுட்டுக் கொலை செய்து இருக்கின்றனர்.

இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய வனத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து விசாரணை செய்தால் மட்டுமே உண்மைகள் வெளியே வரும்” என பிபிசி தமிழிடம் அவரது உறவினர் விஜய் பகிர்ந்து கொண்டார்.

வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு

வனத்துறையினர் துப்பாக்கி சூட்டுக்கு காரணம் என்ன?

மேகமலை புலிகள் காப்பகம் பகுதியில் வேட்டையாடுவதற்காக மின்வேலிகள் அமைக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைக்கிறது.

இதனையடுத்து வனவர் திருமுருகன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர், வனசரகர் முரளிதரன் மற்றுமொரு வன அலுவலர் என இரு குழுவாக பிரிந்து சென்றனர்.

இதில் வனவர் திருமுருகன் தலைமையிலான குழுவினர் செக் போஸ்ட் வழியாக காட்டிற்குள் பார்வையிட்ட படியே சென்றனர். முரளிதரன் மற்றும் மற்றொரு வனத்துறை அலுவலர் காட்டின் உள் வழியாக சென்றனர். “அப்போது வண்ணாத்திபாறை பகுதியில் யானைகள் வலசை செல்லும் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக பாதையை மறித்து சட்டவிரோதமாக மின் கம்பத்தில் மின்சாரம் எடுக்கப்பட்டு இரு மின் வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது” என வனத்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

இனைத் தொடர்ந்து அந்த பகுதியில் சோதனை செய்த போது அங்கு கூடலூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்ற முதியவர் இருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்த போது அவர்தான் காட்டில் வேட்டையாட மின் வேலி அமைத்தது தெரிந்தது என அந்த வனத்துறை அதிகாரி கூறினார்.

வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு

அதிகாரியை கொல்ல முயன்றதால் துப்பாக்கிச் சூடா?

ஈஸ்வரனை பிடித்த போது என்ன நடந்தது என வனத்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் விவரித்தார்.

“விசாரணை செய்துக் கொண்டிருக்கும் போது தூரத்தில் டார்ச் ஒளி தெரிந்ததால் இவரை வனத்துறையினர் சிலர் பாதுகாப்பில் விட்டு சிலர் அந்த ஒளியை பின்னோக்கி சென்றனர். ஆனால் அந்த வெளிச்சம் பாதியிலேயே மறைந்தது. இதனை அடுத்து மீண்டும் முதியவர் ஈஸ்வரனை பிடித்து அழைத்துச் செல்ல முயன்ற போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் வனத்துறையினரை தாக்க முயன்றார். அதில் இருந்து தற்காத்துக் கொள்ள வனத்துறையினர் சுட்டதில் ஈஸ்வரன் முதுகுப்பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்துவிட்டார்” என பிபிசியிடம் தெரிவித்தார் வனத்துறை அதிகாரி.

வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு

நீதிபதி விசாரணையில் என்ன நடக்கும்?

இந்த வழக்கு தற்போது நீதிபதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. தேனி காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கிரே, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் ஆனந்த், உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் நீதிபதி ராமநாதன் இணைந்து நேரில் ஆய்வு செய்து இருக்கினறனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சட்டப்பிரிவு 176 1A-ன் படி நீதிபதி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இந்த விசாரணையின் அடிப்படையில் நீதிபதி அளிக்கும் உத்தரவிற்கு பிறகே இது நீதித்துறை விசாரணைக்குச் செல்கிறதா? அல்லது துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்படுமா என்பது தெரியவரும்.

வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல சட்டம் அனுமதிக்கிறதா?

வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி வனத்துறையினரை வனப்பகுதியில் இருக்கும் போது வன விலங்குகள் தாக்க வந்தால் தற்காப்பிற்காக அதனை சுடலாம். அதே போல் ஐ.பி.சி 96 முதல் 106 வரையிலான பிரிவுகளின் படி தனிமனித பாதுகாப்பு, பிறர் பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் பயன்படுத்தலாம்.

ஆனால் அதனை நீதிபதியின் விசாரணையில் துப்பாக்கியால் சுட்டது சரி என நிரூபிக்க வேண்டியது அந்த அதிகாரியின் கடமை.

“சுட்டுக் கொல்ல வனத்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தார்?”

தேனியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்கிறார் மக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL) தேசிய செயலாளர் ச.பாலமுருகன்.

“ குற்றம் செய்தவர் அத்துமீறி மேகமலை வனப்பகுதியில் நுழைந்தால் வனத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்க மட்டுமே வனத்துறையினருக்கு அதிகாரம் உள்ளது. குற்றவாளியை சுட்டுக் கொல்ல வனத்துறைக்ககு அதிகாரம் கொடுத்தது யார்?” என கேள்வி எழுப்புகிறார் பாலமுருகன்.

ஈஸ்வரனை சுட்டுக் கொலை செய்த வனத்துறை அதிகாரி மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் அந்த வனத்துறை அதிகாரி மீது சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்றும் அவர் கோரினார்.

“அவர் மீது குற்றமில்லை என நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அவரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். அதுவரை கொலை குற்றவாளியாகவே விசாரணை செய்ய வேண்டும்.” என்றார் பாலமுருகன்.

வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு

சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறதா வனத்துறை?

குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CRPC) 46 படி கொடுங் குற்றம் செய்த நபரை, குற்றவாளியின் உயிருக்கு பாதிப்பு இல்லாத வகையில் பிடிக்க வேண்டும்.

“ஆனால், அதனை காவல்துறை வனத்துறை அதிகாரிகள் தவறாக புரிந்து கொண்டு தான் தோன்றித்தனமாக இது போன்ற என்கவுண்டரை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு காவல்துறையினரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது போன்ற சம்பவங்களில் மெத்தனமாக செயல்படுகிறார்.

அதிகாரிகள் ஆயுதத்தை பயன்படுத்தி மக்களை சுடும் இது போன்ற சம்பவங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 25 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும்” ” என பாலமுருகன் தெரிவித்தார்.

வனத்துறையினர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படுகிறது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »