Press "Enter" to skip to content

ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு: முற்றும் மோதலின் பின்னணி

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்காக கூறி தமிழ்நாடு அரசு வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது.

நிலுவையில் வைத்துள்ள மசோதாக்களை உடனடியாக ஆளுநர் பரிசீலிக்கவேண்டும் என உத்தரவிடக்கோரி அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சர்ச்சையின் பின்னணி என்ன?

‘ஆளுநர் பதிலளிக்க காலவரம்பு வேண்டும்’

சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்குக் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் பதில் சொல்லவேண்டும் என்ற எந்த காலக்கெடுவும் இல்லை என்பதை காரணம் காட்டி, ஆளுநர் பல மாதங்களாக மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று சொல்லி தமிழக அரசுஆளுநரைக் கடுமையாக விமர்சித்து வந்தது.

இந்நிலையில் தற்போது இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது.

மசோதாக்களின்மீது ஆளுநர் பதிலளிக்கும் அதிகாரத்தைக் காலவரம்பிற்குள் கொண்டுவரவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.

சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியலமைப்பின் 200-வது பிரிவின் கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை, ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என்று கோரியிருப்பதாக திமுகவின் ஐடி விங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 20 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார் என அமைச்சர் ரகுபதி ஏற்கனவே தெரிவித்திருந்தார். நிலுவையில் உள்ள மசோதா பட்டியலில், 2020 முதல் 2022வரை அனுப்பட்ட பல மசோதாக்கள் உள்ளன.

தமிழ்நாடு, ஆளுநர் ஆர்.என்.ரவி, மு.க.ஸ்டாலின், திமுக

பட மூலாதாரம், Getty Images

நிலுவையில் உள்ள மசோதாக்கள் எவை?

நிலுவையில் உள்ளவற்றில் முக்கியமான சில மசோதாக்கள்:

  • 2020-இல் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடைப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடத்தவும், விசாரணை செய்வதற்கும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இரு சட்டத் திருத்த மசோதக்கள் ஒப்புதலுக்காக ஜனவரி அனுப்பப்பட்ட மசோதா.
  • 2022-இல் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா ஒன்றும் நிலுவையில் உள்ளது.
  • 2022-இல் நிறைவேற்றப்பட்ட, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா.
  • தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா.
  • மதுரை, கோவை, திருப்பூர், ஒசூர் நகர வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்குவது தொடர்பான தமிழ்நாடு நகர ஊரமைப்பு திட்ட மசோதா.
  • தமிழ்நாடு மருத்துவர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா.
  • தமிழக சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்திவைப்பதற்கான மசோதா.
  • தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி உறுப்பினரை தேர்வு செய்வதை தடுக்கும் சட்டத்தை திருத்துதல்.
  • தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டம் மசோதா.
தமிழ்நாடு, ஆளுநர் ஆர்.என்.ரவி, மு.க.ஸ்டாலின், திமுக

ஆளுநரின் அதிகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியுமா?

தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு எதிராகத் தொடுத்திருக்கும் வழக்கால், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குமாறு ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துருவிடம் கேட்டோம்.

தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் பா.ஜ.க ஆளாத பல மாநிலங்களில், ஆளுநருக்கு எதிராக அந்த மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தை நாடும் நடைமுறை ஏற்பட்டுள்ளது என்கிறார்.

“ஆளுநர் ஒரு காலக்கெடுவிற்குள் ஒப்புதல் அளிக்கவேண்டும் என நேரடியாக உச்சநீதிமன்றம் சொல்லமுடியாது. ஆனால் இதுபோன்ற கால தாமதத்தை ஏற்கமுடியாது எனச் சொல்லலாம். அதோடு, இதுபோன்ற விவகாரங்களில், அதீத கால தாமதம் மற்றும் உள்நோக்கம் இருப்பதாக மாநில அரசு சொல்லும்போது, அதில் தலையீடு செய்ய உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை அடுத்து தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற விவகாரங்கள் தொடர்பாக வழக்குகளை விசாரிக்கும் உச்சநீதிமன்றம், ஆளுநரின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பும் என்பதில் சந்தேகம் இல்லை,” என்கிறார்.

ஏற்கனவே, தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி கொலைவழக்கில், எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் பல மாதங்கள் மௌனம் காத்தார். ஆனால் ஆளுநர் எடுத்த நடவடிக்கைகளின் விவரங்களை உச்சநீதிமன்றம் கேட்டது. அதேபோல, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் உள்ள தாமதம் குறித்தும் கேட்பதில் பிரச்னை இருக்காது என்கிறார் சந்துரு.

பஞ்சாப் மாநில ஆளுநர் அந்த மாநில அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கால தாமதம் செய்வதாக வழக்கு தொடுப்பதாக தெரிவித்தது. உடனே, ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், மசோதாக்கள் குறித்து தான் பதில் அளிக்கபோவததாக முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என்று சுட்டிக்காட்டுகிறார் முன்னாள் நீதிபதி சந்துரு.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »