Press "Enter" to skip to content

ஹமாஸை இஸ்ரேலால் முற்றிலுமாக அழிக்க முடியுமா? பணயக்கைதிகள் என்ன ஆவார்கள்?

பட மூலாதாரம், EPA

ஹமாஸ் இந்த உலகத்திலிருந்து துடைத்து எறியப்படும் என இஸ்ரேலின் தலைவர்கள் சூளுரைத்துள்ளனர். காஸா இதற்கு முன்பு இருந்த நிலைக்கு மீண்டும் திரும்பாது என்றும் கூறியுள்ளனர்.

“ஒவ்வொரு ஹமாஸ் ஆளும் செத்து மடிவார்” என்று ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். ஹமாஸின் “தீவிரவாத இயந்திரம்” மற்றும் அதன் அரசியல் கட்டமைப்பு முழுவதும் தகர்க்கப்படும் என்று உறுதிபூண்டார்.

தனது இந்த இலக்குகளை அடைய தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தியிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஹமாஸ் ஒழிக்கப்பட்டதாக இஸ்ரேல் திருப்தியடையும் போது, காஸாவிலிருந்து இஸ்ரேல் வெளியேறும். இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட், “புதிய பாதுகாப்பு அமைப்பு” குறித்து பேசுகிறார், அதில் அன்றாட வாழ்வில் இஸ்ரேலுக்கு எந்த பங்கும் இருக்காது என்றும் கூறுகிறார்.

‘ஆப்ரேன் ஸ்வார்ட்ஸ் ஆப் ஐயன்’இன் நோக்கம், காஸாவில் இதுவரை ராணுவம் திட்டமிடாத வகையிலான லட்சியத்தை கொண்டுள்ளது. இதை அடைய பல மாதங்கள் ஆகலாம். ஆனால், இந்த இலக்குகள் யதார்த்தமானவையா? இஸ்ரேலின் படைத்தளபதிகள் இதனை எவ்வாறு அடைய போகிறார்கள்?

காஸாவுக்குள் நுழைவது என்பது வீடுவீடாக சென்று சண்டையிடுவதாகும். இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிருக்கு ஆபத்தானதாகும். ஹமாஸ் ஆட்சி புரியும் காஸாவில் உள்ள அதிகாரிகள், இதுவரை 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் கூறுகின்றனர்.

இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கு காஸாவில் அடையாளம் காண முடியாத இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் 230 பணயக் கைதிகளை மீட்கும் பொறுப்பும் உள்ளது.

“ஒவ்வொரு ஹமாஸ் உறுப்பினரையும் இஸ்ரேலால் அழிக்க முடியாது. ஏனென்றால் அது தீவிரவாத இஸ்லாமின் கருத்தாகும்” என இஸ்ரேலின் ராணுவ வானொலியின் ராணுவ நிபுணர் அமிர் பர் ஷாலோம் கூறுகிறார். “ஆனால், இயங்க முடியாத அளவுக்கு அதை வலுவிழக்க செய்ய முடியும்” என்றார்.

இஸ்ரேலின் தரை வழி தாக்குதல்

பட மூலாதாரம், AHMED ZAKOT/SOPA IMAGES/LIGHTROCKET

ஹமாஸை வலுவிழக்க செய்வது, அதனை முழுவதுமாக ஒழிப்பதை விட சாத்தியமான இலக்காகும்.

ஹமாஸுடன் இஸ்ரேல் ஏற்கெனவே நான்கு போர்களை சந்தித்துள்ளது. ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்களை தடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது. ஹமாஸ் இனிமேலும் இஸ்ரேல் மக்களை அச்சுறுத்தவோ கொலை செய்யவோ திறன் கொண்டதாக இருக்கக் கூடது என்பது தான் முக்கியமான இலக்கு என இஸ்ரேல் பாதுகாப்பு படைகளுக்கான செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

ஹமாஸை ஒழிப்பது சிக்கலானது என டெல் அவிவ் பல்கலைக் கழகத்தின் பாலத்தீன ஆய்வுகளுக்கான பிரிவின் தலைவர் மைக்கேல் மில்ஸ்டைன் ஒப்புக் கொள்கிறார். உலகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் மீது தாக்கம் செலுத்துகிறது இஸ்லாமிய சகோதரத்துவம் எனும் கருத்து. அந்த கருத்தின் உப கிளையாக உள்ள ஹமாஸை ஒழிக்க முடியும் என நினைப்பது பாசாங்காகும் என்று அவர் கூறுகிறார்.

ஹமாஸின் ராணுவ படையில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தவிர, அதன் சமூக நல கட்டமைப்பில் 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பேர் வரை உள்ளனர் என குறிப்பிடுகிறார் மைக்கேல் மில்ஸ்டைன்.

இந்த போரின் விளைவை பொறுத்தே அடுத்த 75 ஆண்டுகளுக்கு இஸ்ரேலின் இருப்பு அமையும் என பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் எவ்வளவு காலம் நீடிக்கும்?

இஸ்ரேலின் தரை வழி தாக்குதல்

ராணுவ தாக்குதல் பல காரணிகளை நம்பி உள்ளது.

ஹமாஸின் ஆயுதப் பிரிவு-இஸ்ஸேடைன் அல்-கசாம்- இந்நேரம் இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள தயாராகி இருப்பார்கள். வெடிகுண்டுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு, எதிர்பாராத தாக்குதல்களும் திட்டமிடப்பட்டிருக்கும். தனது நீண்ட சுரங்கங்களை பயன்படுத்தி இஸ்ரேலிய படைகளை தாக்கக் கூடும்.

2014ம் ஆண்டில், இஸ்ரேலிய காலாட்படை பட்டாலியன்கள் டாங்கி-எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் ஊடுருவல்களால் கடுமையான இழப்புகளை சந்தித்தன, அதேநேரத்தில் காஸா நகரின் வடக்குப் பகுதியில் நடைபெற்ற சண்டையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

வடக்கு பகுதியிலிருந்து வெளியேறி, வாடி காஸா ஆற்றின் தெற்கு செல்ல வேண்டும் என்று பொதுமக்களை இஸ்ரேல் வலியுறுத்துவதன் ஒரு காரணம் இதுவே.

நீண்ட நெடிய போருக்கு தயாராக இருக்கும் படி இஸ்ரேலியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் 3,60,000 முன்பதிவு படையினர் பணிக்கு வந்துள்ளனர்.

போர் நிறுத்தத்துக்கான அழுத்தம் சர்வதேச சமூகத்திடமிருந்து வழங்கப்படும் நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதலை எத்தனை நாட்கள் தொடர முடியும் என்பது தான் கேள்வி. அதிகரிக்கும் உயிரிழப்புகள், தண்ணீர், மின்சார வழங்கல் துண்டிப்பு, மனித பேரழிவுக்கான ஐ.நா எச்சரிக்கை என நிலைமை சிக்கலாகி வருகிறது.

“சர்வதேச சமூகம், குறைந்தது மேற்கத்திய தலைவர்களின் ஆதரவு இருக்கிறது என அரசும் ராணுவமும் கருதுகிறது. ‘நாம் அணி திரட்டலாம், நமக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது’ என்பது தான் இப்போதைய தத்துவம்” என இஸ்ரேலின் முன்னணி பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை பத்திரிகையாளர்களில் ஒருவரான யோசி மெல்மான் கூறுகிறார்.

ஆனால், மக்கள் பசி பட்டினியால் வாடும் காட்சிகளை பார்த்தால் இஸ்ரேலின் நண்பர்களும் தலையிடுவார்கள். பொதுமக்கள் உயிரிழப்பு அதிகமானால் அழுத்தமும் அதிகமாகும்.

“இது மிக சிக்கலானது ஏனென்றால், இதற்கு நேரம் தேவை. ஆனால் அமெரிக்க நிர்வாகம் காஸாவில் ஓரிரு ஆண்டுகளுக்கு மேல் இருக்க விடாது” என்கிறார் மைக்கேல் மில்ஸ்டைன்.

இஸ்ரேலின் தரை வழி தாக்குதல்

பணயக்கைதிகள் என்ன ஆவார்கள்?

பணய கைதிகளில் பலர் இஸ்ரேலியர்கள், ஆனால் வெளிநாட்டை சேர்ந்தவர்களும், இரு நாட்டு குடியுரிமை பெற்றவர்களும் அதிகம் உள்ளனர். அதாவது அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உட்பட பல நாடுகளின் அரசுகளுக்கு பணய கைதிகளை பாதுகாப்பாக மீட்பதில் பங்கு உண்டு.

இஸ்ரேலுக்கு இருப்பது நேரடியான வாய்ப்புகள், ஒன்று பணய கைதிகளின் வாழ்வை விட்டு வைப்பது அல்லது உள்ளே சென்று ஹமாஸுக்கு அதிகபட்ச தீங்கை விளைவிப்பது என பிரெஞ்சு மூலோபாய நிபுணர் கர்னல் மைக்கேல் கோயா கூறுகிறார்.

ஹமாஸ் பணயக்கைதிகளின் குடும்ப உறுப்பினர்களின் மனதை உலுக்கும் கோரிக்கைகள் இஸ்ரேல் தலைவர்களுக்கு கூடுதல் அழுத்தம் தந்துள்ளது.

ஐந்து ஆண்டுகளாக ஹமாஸ் பணய கைதியாக வைத்திருந்த கிலாத் ஷாலித் என்ற ராணுவ வீரரை விடுவிக்க , இஸ்ரேல் 1,000 கைதிகளை 2011ம் ஆண்டு விடுவித்தது.

ஆனால் அதுபோன்று மிகப் பெரிய எண்ணிக்கையில் கைதிகளை விடுவிப்பது குறித்து இஸ்ரேல் யோசித்து தான் செயல்படும். ஏனென்றால் கடந்த முறை விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான யாஹ்யா சின்வர் தற்போது காஸாவில் ஹமாஸின் அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார்.

இஸ்ரேலின் தரை வழி தாக்குதல்

பட மூலாதாரம், SAID KHATIB/AFP

கூர்ந்து கவனிக்கும் அண்டை நாடுகள்

தரைவழித் தாக்குதல் எத்தனை காலம் நீடிக்கும் என்பது இஸ்ரேலின் அண்டை நாடுகளின் எதிர்வினையை பொருத்தது.

காஸாவின் எகிப்து எல்லையாக‌ அமைந்த ரஃபாவை கடப்பது மனிதாபிமான புள்ளியாக மாறியுள்ளது, குறைந்த அளவிலான உதவிகள் மட்டுமே காஸாவிற்குள் வருகின்றன. வெளிநாட்டுப் குடிமக்களும், வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருக்கும் பாலத்தீனியர்களும் வெளியேறுவதற்காகக் காத்திருக்கின்றனர்.

“இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையால் காஸாவின் பாதிப்பு எத்தனை அதிகமாகிறதோ, அவ்வளவு அழுத்தத்தை எகிப்து எதிர்கொள்ளும். பாலத்தீனர்களை எகிப்து கைவிடவில்லை என்று தோற்றமளிக்க வேண்டிய அழுத்தம் அது,” என்று இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் ஒஃபிர் விண்டர் கூறுகிறார்.

ஆனால் அது கெய்ரோ வரையிலும் தொடராது, ஏனென்றால் காஸா மக்களை அது பெருமளவில் வடக்கு சினாயை கடக்க அனுமதிக்காது. சினாய் தீபகற்பத்திற்குள் காஸா மக்களை நிறுத்தும் எந்தவொரு முயற்சியும் எகிப்தியர்களை “லட்சக்கணக்கில் ஆர்ப்பாட்டக் களத்தில் இணைவதற்கு” தூண்டுவதாக அமையும் அதிபர் அப்துல் ஃபத்தாஹ் அல்-சிசி எச்சரித்துள்ளார்.

ஜோர்டானின் மன்னர் அப்துல்லா, பாலத்தீன மக்கள் காஸாவில் இருந்து அகதிகளாக வெளியேற்றுவதற்கான எந்தவொரு சாத்தியமான முயற்சிக்கும் “எல்லை உண்டு” என பேசினார்: “ஜோர்டானிலும் அகதிகள் கூடாது, எகிப்திலும் அகதிகள் கூடாது, ” என்று அவர் எச்சரித்தார்.

இஸ்ரேலின் தரை வழி தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

லெபனானுடனான இஸ்ரேலின் வடக்கு எல்லையும் தீவிர கண்காணிப்பிற்கு உட்பட்டுள்ளது.

ஏற்கனவே பல எல்லை தாண்டிய தாக்குதல்கள் இஸ்லாமிய போராளிக் குழுவினரால் நடந்து வருகின்றன. இரு தரப்பிலும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளன என்றாலும், இதுவரை இஸ்ரேலுக்கு எதிரான ஒரு புதிய அணிச்சேர்க்கை அமையுமளவு வன்முறை இல்லை.

ஹெஸ்பொலாவிற்கு பிரதான ஆதரவாளராக உள்ள இரான், இஸ்ரேலுக்கு எதிராக “புதிய தாக்குதல் முனைகளை” தொடங்கப் போவதாக அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் எச்சரிக்கையில் அதுதான் மையமாக இருந்தது.

“எந்த நாட்டிற்கும், எந்த அமைப்புக்கும், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் எவருக்கும், ஒரு வார்த்தை சொல்கிறேன்: வேண்டாம்!” என்று அவர் கூறினார்.

USS ஜெரால்ட் போர்ட் மற்றும் USS ஐசனோவர் ஆகிய இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்கள், அந்த எச்சரிக்கையை முன்னிட்டே மத்திய தரைக் கடலுக்கு அனுப்பப்பட்டுள்ளன, மேலும் 2,000 அமெரிக்க துருப்புகள் சூழ்நிலைக்கு ஏற்ப எதிர்வினையாற்றுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் தரை வழி தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

20 லட்சம் மக்களின் எதிர்காலம் என்ன?

ஹமாஸ் கணிசமான அளவு பலவீனமடைந்தால், அதன் இடத்தில் என்ன உருவாகும் என்பதே கேள்வி.

2005 -ம் ஆண்டில் இஸ்ரேல் தனது ராணுவத்தையும் ஆயிரக்கணக்கான குடியேறிகளையும் காஸா பகுதியிலிருந்து வெளியேற்றியது. தான் அந்த நிலத்தை ஆக்கிரமிக்கும்‌ எண்ணம் இல்லை என்றது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “அது ஒரு பெரிய தவறு” ஆகும் என்றார்.

ஒரு சக்தியின் வெற்றிடம் மிகவும் தீவிரமான அபாயங்களை உருவாக்கும் ஒரு சிக்கலைத் தீர்ப்பதில், புதிதாக பத்து சிக்கல்கள் உருவாகிடும் ஆபத்தும் இருப்பதாக மைக்கேல் மில்ஸ்டைன் எச்சரிக்கிறார்.

2007-ம் ஆண்டில் ஹமாஸ் அமைப்பினால் காஸாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பாலத்தீன அமைப்பு (PA) மீண்டும் படிப்படியாகத் திரும்புவதற்கு அதிகார மாற்றம் வழிவகுக்கும் என்று ஆபிர் வின்டர் நம்புகிறார்.

பாலத்தீன அமைப்பு தற்போது மேற்குக் கரையின் சில பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது, ஆனால் அங்கும் அது பலவீனமாக உள்ளது, அதனை காஸாவுக்குத் திரும்பும்படி வற்புறுத்துவதும் மிகவும் சிக்கலாக இருக்கும் என்கிறார்‌.

இஸ்ரேலின் தரை வழி தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

1999 -ல் செர்பியப் படைகள் வெளியேறிய பின்னர் ஐ.நா கொசோவோவை இயக்கியது போல் சர்வதேச சமூகம் ஒரு இடைக்கால தீர்வை வழங்கக்கூடும். ஆனால் ஐ.நா. மீது இஸ்ரேலில் பரவலான அவநம்பிக்கையே உள்ளது.

எகிப்து, அமெரிக்கா, PA மற்றும் பிற அரபு நாடுகள் சேர்ந்து காஸாவின் மேயர்கள், பழங்குடியினர், குலங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளால் நடத்தப்படும் நிர்வாகத்தை உருவாக்குவது மற்றொரு தேர்வாக இருக்கலாம் என்று மைக்கேல் மில்ஸ்டைன் கூறுகிறார்.

எகிப்தின் அதிபர் காஸாவைக் கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் “பேச்சுவார்த்தை மூலமாக ராணுவம் நீங்கலான பாலத்தீன அரசினை நீண்ட காலத்திற்கு முன்பே உருவாக்கியிருப்பின், இப்போது போர் உருவாகியிருக்காது” என சுட்டிக்காட்டினார்.

பேரழிவை எதிர்கொண்ட‌ காஸாவின் உள்கட்டமைப்பினை, முந்தைய போர்களுக்குப் பிறகு செய்ததைப் போன்றே இம்முறையும் மறு கட்டமைக்க வேண்டும்.

ராணுவ மற்றும் குடிமை தேவைகளுக்கான “இரட்டை பயன்பாடு கொண்ட பொருட்கள் “காஸாவிற்குள் நுழைவதில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க இஸ்ரேல் விரும்பும்.

இஸ்ரேலிய மக்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்குவதற்காக காஸாவை‌ சுற்றிலும் வேலியுடன் கூடிய இடையக மண்டலம் வேண்டும் என்ற கருத்துகளும் உள்ளன. போரின் முடிவு எதுவாக இருந்தாலும், அக்டோபர்‌ 7 அன்று நடந்த தாக்குதல் மீண்டும் நடந்துவிடாமல் உறுதி செய்யவே இஸ்ரேல் நினைக்கிறது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »