Press "Enter" to skip to content

எதிர்க்கட்சி தலைவர்களின் ஐபோன் ஹேக்கிங்கா? ஆப்பிள் எச்சரிக்கைக்கு மத்திய அரசு பதில்

பட மூலாதாரம், ANI

ஐபோன்களை ஹேக் செய்ய, ‘மத்திய அரசு ஆதரவுடன்’ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து, விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சில எதிர்க்கட்சித் தலைவர்கள் “அரசு ஆதரவுடன் இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டவர்கள் தங்கள் ஐபோன்களை ஹேக் செய்ய முயன்றனர்,” என்று குற்றஞ்சாட்டினர். இதைத் தொடர்ந்து, ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் தனது நிலைப்பாட்டை முன்வைத்தது.

செய்தி நிறுவனங்கள் மற்றும் பல இந்திய செய்தித்தாள்களின்படி, ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இதுபோன்ற முயற்சிகளை அரசின் ஆதரவுடன் மேற்கொண்டதாக எந்த ஒரு நபரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

அரசு உதவியுடன் தாக்குதல் நடத்துபவர்களுக்குப் போதுமான நிதியுதவி, அதிநவீன வசதிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“அத்தகைய தாக்குதல் குறித்த கண்டறிதல்கள், ‘அச்சுறுத்தல் நுண்ணறிவு‘ சிக்னல்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதுடன் பெரும்பாலும் துல்லியமற்றவை அல்லது முழுமையற்றவை. தாக்குதல் பற்றிய சில எச்சரிக்கை செய்திகள் தவறான எச்சரிக்கைகளாக இருக்கலாம் அல்லது தாக்குபவர்களுக்குத் தெரியாமலும் இருக்கலாம். ஆனால் அது நடப்பதாகத் தெரியவில்லை.”

“அத்தகைய அச்சுறுத்தல்கள் தொடர்பான தகவல்களை நாங்கள் எந்தச் சூழ்நிலையில் வெளியிடுகிறோம் என்பதை எங்களால் குறிப்பிட முடியாது. ஏனெனில் அவ்வாறு செய்வது, எதிர்காலத்தில் கண்டறிதலைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிய அரசு ஆதரவுடன் தாக்குதல் நடத்துபவர்களுக்கு வழிகளை ஏற்படுத்தித்தரும்.”

அதேநேரம், இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ள தகவல்கள் தெளிவில்லாமல் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த விவகாரத்தில் அரசு விரைவாக முடிவெடுக்கும் என்று தொடர் ட்வீட்களில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள், ஹேக்கிங் முயற்சிகள் குறித்து ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து தங்களுக்கு செய்தி வந்ததாக சமூக ஊடகங்களில் கூறியிருந்தனர்.

இந்த எம்.பி.க்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள செய்தியில், “அரசின் ஆதரவுடன் தாக்குதல் நடத்துபவர்களான நீங்கள் உங்கள் ஆப்பிள் ஐடியுடன் இணைக்கப்பட்ட ஐகைபேசியை ரிமோட் மூலம் ஹேக் செய்ய முயற்சிக்கிறீர்கள் என்று ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது. நீங்கள் யார் மற்றும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதன் காரணமாக இந்தத் தாக்குபவர்கள் உங்களை குறிவைக்கிறார்கள்,” என்று பதிவிட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ன சொன்னார்கள்?

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சிவசேனா (உத்தவ் பாலா சாஹேப் தாக்கரே) தலைவர் பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் மற்றும் அக்கட்சியின் மக்கள் தொடர்புத் துறை தலைவர் பவன் கேரா ஆகியோர் இந்த செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டை சமூக ஊடக தளமான எக்ஸ் இல் பகிர்ந்துள்ளனர்.

மஹுவா மொய்த்ரா தனது X பதிவில், “எனது தொலைபேசி மற்றும் மின்னஞ்சலை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாக ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கைச் செய்தி மற்றும் மின்னஞ்சல் எனக்கு வந்துள்ளது,” எனப்பதிவிட்டுள்ளார்.

மேலும், “உங்கள் பயத்தைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐபோன் ஹேக்கிங் குற்றச்சாட்டுகள்

பட மூலாதாரம், X/MAHUAMOITRA

இதைத் தொடர்ந்து, மஹுவா, “இதுவரை ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட இந்தியா கூட்டணியின் தலைவர்கள், என்னைத் தவிர, அகிலேஷ் யாதவ், ராகவ் சதா, சசி தரூர், பிரியங்கா சதுர்வேதி, சீதாராம் யெச்சூரி, பவன் கெரா ஆகியோர் மட்டுமில்லாமல் ராகுல் காந்தியின் அலுவலகத்துடன் தொடர்புடைய சிலரது போன்களும் இப்படி ஹேக் செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளன. இது அவசரநிலையை விட மோசமான அனுபவமாக இருக்கிறது,” எனப்பதிவிட்டுள்ளார்.

உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி பிரியங்கா சதுர்வேதியும் மஹுவா மொய்த்ரா போன்ற ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார்.

இந்த செய்தியை ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து பெற்றதாகவும் சதுர்வேதி கூறியுள்ளார். அது விசாரிக்கப்படுமா என்ற கேள்வியை பிரியங்கா சதுர்வேதி உள்துறை அமைச்சகத்திடம் முன்வைத்துள்ளார்.

பாஜக என்ன சொல்கிறது?

அதேநேரம், இந்த எச்சரிக்கை குறித்து பாரதிய ஜனதா அரசு மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை என்று அக்கட்சி கூறியுள்ளது.

இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் விளக்கம் வெளிவருவதற்கு முன், இந்த தலைப்பில் உள்ள கேள்விகளுக்கு அந்நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.

கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தைக் குறை கூறுவதற்குப் பதிலாக ஆப்பிள் நிறுவனத்திடம் இந்தப் பிரச்னையை எழுப்பி எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றார்.

மேலும், “அவர்களை யார் தடுக்கின்றனர்? அவர்கள் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டியதுதானே,” எனக்கேள்வி எழுப்பினார்.

ஐபோன் ஹேக்கிங் குற்றச்சாட்டுகள்

பட மூலாதாரம், X/RAHUL GANDHI

ராகுல் காந்திக்கு அமித் மாளவியா பதில்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில் அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டு தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி கூறுகையில், “எனது அலுவலகத்தில் பலருக்கு இந்த செய்தி வந்துள்ளது. இவர்களில் கே.சி.வேணுகோபால் மற்றும் பவன் கடா ஆகியோர் அடங்குவர். இளைஞர்களின் கவனத்தை திசை திருப்பவே இவர்கள் விரும்புகிறார்கள்” என்றார்.

செய்தியாளர் சந்திப்பில் ஆப்பிள் நிறுவனம் கூறியதாகக் கூறப்படும் செய்தியைக் காட்டிய ராகுல் காந்தி, “எவ்வளவு வேண்டுமானாலும் என்னுடைய கைபேசியை ஒட்டுக்கேட்கலாம். அது எனக்கு முக்கியமில்லை. நீங்கள் என் கைபேசியை எடுத்துக்கொண்டாலும், எனக்கு எந்த பயமும் இல்லை,” என்றார்.

மத்திய அரசை தாக்கி பேசிய ராகுல் காந்தி, “அதானியைப் பற்றிப் பேசியவுடனே, உளவு அமைப்புகள் உளவு பார்க்கத் தொடங்குகின்றன” என்றார்.

ராகுல் காந்தியின் இந்த செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனம் தனது விளக்கத்தை வெளியிட்டது. அதில் இந்த முழு பிரச்சினையிலும் தனது நிலைப்பாட்டை ஆப்பிள் நிறுவனம் வெளிப்படுத்தியது.

ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்புக்கு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா பதிலளித்துள்ளார்.

அவரது சமூக வலைதளப் பதிவில், “ஏன் வெளிநாட்டு ஏஜென்சிகளால் ஸ்பான்சர் செய்யப்பட்ட கதைகளை அவர்கள் விரும்புகிறார்கள்? சொரோஸ்? கடந்த முறையும் அவர் தனது கைபேசியை விசாரணைக்காக அளிக்க மறுத்துவிட்டார். ஏன் இப்படி அற்ப குற்றச்சாட்டுகளை கூறி தேசத்தின் நேரத்தை வீணடிக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐபோன் ஹேக்கிங் குற்றச்சாட்டுகள்

பட மூலாதாரம், ANI

ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அனுப்பிய செய்தி குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருவதாகவும், அமைச்சகம் விசாரணையை தொடங்கியுள்ளது என்றும் வைஷ்ணவ் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, “அரசாங்கம் இந்த பிரச்சினையில் அக்கறை கொண்டுள்ளது. அந்தப் பிரச்னை விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும். இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ளோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “சில எம்.பி.க்கள் மற்றும் பல குடிமக்கள் எழுப்பிய பிரச்சினை குறித்து, ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து அவர்களுக்கு எச்சரிக்கை வந்துள்ளது. இந்த பிரச்சினையில் அரசாங்கம் மிகவும் அக்கறை கொண்டுள்ளது என்பதை நான் உங்களுக்கு தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். இந்த பிரச்சினையின் அடிமட்டத்திலிருந்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இது குறித்து விசாரணைக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளோம்,” என்றார்.

இந்த முழு விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை மத்திய அமைச்சர் தொடர் ட்வீட் மூலம் உறுதியாக முன்வைத்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட அறிவிப்பு குறித்து எம்.பி.க்கள் மற்றும் பலர் ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கைகளை கண்டு நாங்கள் கவலையடைந்துள்ளோம் என்றார் அவர். அந்த மக்களுக்கு கிடைத்த அறிவிப்புகளில் ‘அரசாங்கத்தின் ஆதரவுடன் தாக்குதல்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐபோன் ஹேக்கிங் குற்றச்சாட்டுகள்

பட மூலாதாரம், X/ASHWINI VAISHNAW

“இருப்பினும், இந்த பிரச்சினையில் ஆப்பிள் வழங்கிய தகவல்கள் பெரும்பாலும் தெளிவற்றதாகவும் பொதுவானதாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது. இந்த அறிவிப்புகள் ‘தெளிவற்ற அல்லது முழுமையற்ற’ தகவலின் அடிப்படையில் இருக்கலாம் என்று ஆப்பிள் கூறியுள்ளது. ஆப்பிளின் பல ‘அச்சுறுத்தல் அறிவிப்புகள்’ தவறான எச்சரிக்கைகளாக இருக்கலாம் அல்லது பல தாக்குதல்கள் கண்டறியப்படாமல் இருக்கலாம் என்றும் அது கூறுகிறது.”

தொடர்ந்து அஸ்வினி வைஷ்ணவ் தமது பதிவில், ஆப்பிள் ஐடிகள் பாதுகாப்பாக என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், பயனரின் அனுமதியின்றி அவற்றை அணுகுவது அல்லது அடையாளம் காண்பது மிகவும் கடினம் என்றும் ஆப்பிள் கூறியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த குறியாக்கம் பயனர்களின் ஆப்பிள் ஐடிகளைப் பாதுகாக்கிறது என்பதுடன் அவை தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு தனது அனைத்து குடிமக்களின் தனியுரிமை மற்றும் தனியுரிமையைப் பாதுகாப்பதில் தனது பங்கை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்றும், இந்த அறிவிப்புகளின் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பாக பெறப்பட்ட தகவல்கள் மற்றும் ஊகங்களின் அடிப்படையில், உண்மையான மற்றும் துல்லியமான தகவல்களை வழங்குவதன் மூலம் ‘அரசு ஆதரவுடன் தாக்குதல்’ தொடர்பான இந்த விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு ஆப்பிள் நிறுவனத்திடம் கேட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »