Press "Enter" to skip to content

தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அரசியல் நிகழ்வாகிப் போனதா குருபூசை வழிபாடு?

தமிழ்நாட்டில் பல சுதந்திரப் போராட்ட தலைவர்கள் மற்றும் சாதி தலைவர்களுக்கு குருபூசை அல்லது நினைவேந்தல் விழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறன. இந்த விழாக்களில் அதிக அரசியல் கலக்கப்படுகிறது என்றும் சாதி வாக்குகளை பெறுவதற்காக அரசியல்தலைவர்கள் பலரும் வலிந்து கலந்துகொள்வது போன்ற தோற்றம் தென்படுகிறது என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றம் இதுபோன்ற விழாக்களை முறைப்படுத்தவேண்டும் என வழிகாட்டியபிறகும், தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளாக தொடர்வது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பொதுவாக தமிழ்நாட்டில், சைவ சமய வழிபாட்டு முறையில், நாயன்மார்களுக்கு குருபூசை வழிபாடு நெடுங்காலமாக நடைபெற்றுவருகின்றது. இதனைப்போலவே, பலரும் தங்களது இனத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு, அவர்களின் பூத உடல் புதைக்கப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைத்து வழிபடும் இடமாக மாறுவது நடைபெற்றது. தற்போது அந்த ஆன்மீக வழிபாட்டு முறையில், பல சாதி தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட தலைவர்களின் நினைவிடங்களில் குருபூசை நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இந்த நிகழ்வில், இறந்த நபர் கடவுளாக கருதப்படுகிறார். ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களும் ஆண்டுக்கு ஒரு முறை இந்த விழாவில் கலந்துகொள்வது மூலமாக, தங்களது சொந்தங்கள் அனைவரும் ஒரு இடத்தில் திரள்வதற்கான வாய்ப்பாக இந்த நிகழ்வு அமைகிறது. ஆனால் அரசியல் தலைவர்கள் பங்குபெறுவதால், ஒரு இனத்திற்கான நிகழ்வு என்ற நடைமுறை, அரசியல் நிகழ்வாகி, அதிக பரபரப்பை ஏற்படுத்தும் விழாக்களாக மாறிவருகின்றன.

குருபூசை வழிபாடு அரசியலா?

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் பங்குபெறும் குருபூசை

சமீபகாலமாக, குருபூசை நிகழ்வுகளில் ஆட்சியில் இருக்கும் அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், அரசியல் கட்சி நடத்தும் பலரும் இதுபோன்ற விழாக்களில் கலந்துகொள்வது வழக்கமாகிவிட்டது. இந்த விழாக்கள் பெரும்பாலும் தென்மாவட்டங்களில்தான் நடைபெறுகின்றன. ஆனால் இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தங்களது ஆதரவாளர்கள் திரளுடன்தான் அரசியல் தலைவர்கள் பங்குபெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2013ல் குருபூசை நிகழ்வுகளில் தொடரும் வன்முறை, ஆர்ப்பாட்டம் மற்றும் பொது இடங்களில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்று பதிவானது. அதன்படி தமிழ்நாட்டில் 11 தலைவர்களுக்கு குருபூசை அல்லது நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரவாரமாக, பொது இடங்களில் அதிக ஜனத்திரளை குவிக்கும் விதத்தில் நடைபெறுவதாக அந்த வழக்கை தொடர்ந்த சமூக ஆர்வலர் வாராகி மனுவில் தெரிவித்திருந்தார்.

1) பூலித்தேவன்- திருநெல்வேலி மாவட்டம்

2) ஒண்டிவீரன் வீரன், திருநெல்வேலி மாவட்டம்

3) வ.உ.சிதம்பரனார்- திருநெல்வேலி மாவட்டம்

4) வீரன் அழகுமுத்து கோன்- தூத்துக்குடி மாவட்டம்

5) வீரன் சுந்தர லிங்கன், தூத்துக்குடி மாவட்டம்

6) கட்டபொம்மன், தூத்துக்குடி மாவட்டம்

7) பசும்பொன் முத்துராமலிங்க தேவர், ராமநாதபுரம் மாவட்டம்

8) தியாகி இம்மானுவேல் சேகரனார், ராமநாதபுரம் மாவட்டம்

9) வேலு நாச்சியார் -சிவகங்கை மாவட்டம்

10) மருது பாண்டியர்- சிவகங்கை மாவட்டம்

11) முத்தரையர்- திருச்சி மாவட்டம்

பிபிசிதமிழிடம் பேசிய மனுதாரர் வாராகி, விரைவில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் நடைபெறும் குருபூசை நிகழ்ச்சிகள் குறித்த விசாரணை நடைபெறும் என்றார்.

”2013ல் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான வழிகாட்டுதல்களை வழங்கியதோடு, குருபூசை அல்லது நினைவேந்தல் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும்போது, பொது இடத்தில் வன்முறை தவிர்க்கப்படவேண்டும் என காட்டமாக விமர்சித்திருந்தது. தீர்ப்பளித்த நீதிபதி கிருபாகரன், ஒரு ஊரில் நடக்கும் நிகழ்வில் கலந்துகொள்ள மற்ற ஊர்களில் இருந்து திரளாக மக்கள் வருவதை கட்டுப்படுத்தவேண்டும், அரசியல் தலைவர்கள் இந்த நிகழ்வை புறக்கணிக்கவேண்டும் என தெரிவித்திருந்தார். ஆனால் நீதிமன்ற உத்தரவை அரசியல் தலைவர்கள் பின்பற்றுவதுபோல தெரியவில்லை. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறேன். விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது,”என்கிறார்.

மேலும் 2009ல் இருந்து 2013வரை காவல்துறையில் பதிவான வழக்குகளின்படி, 30 கொலைகள் இந்த விழாக்களின்போது நடைபெற்றன என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஒரு சாதியை சேர்ந்தவர்கள் விமர்சையாக விழாவை கொண்டாடும்போது, அவர்களுக்கும், மாற்றுச் சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படும் வன்முறை காரணமாக, தொடர் கொலைகள் நடைபெற்றுள்ளன என்றும் வாராகி சொல்கிறார்.

குருபூசை வழிபாடு அரசியலா?

நிகழ்வை நடத்துபவர்கள் சொல்வது என்ன?

குருபூசை நிகழ்வுகளில், அதிக பரபரப்பை ஏற்படுத்தும், தேவர் ஜெயந்தி மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல் ஆகிய நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் குழுவினரிடம் பேசினோம். அவர்கள் சாதி ரீதியாக நிகழ்வை நடத்துவதில்லை என்கிறார்கள்.

தேவர் ஜெயந்தி நிகழ்வை ஒருங்கிணைக்கும் குழுவில் உள்ள தங்கவேலிடம் பேசியபோது, வன்முறைக்கான வாய்ப்புகள் இல்லை என்றும் காவல்துறையின் அனுமதி பெற்று உரிய முறையில்தான் விழா நடைபெறுவதாக சொல்கிறார். மக்கள் பிற மாவட்டங்களில் இருந்து திரள்வது குறித்து கேட்டபோது, ”வழிபாடு செய்யவரும் மக்களை தடுக்க முடியாது,”என்கிறார். அதோடு, அரசியல் தலைவர்கள் அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில்தான் வருகிறார்கள் என்றார்.

தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல் நிகழ்வை நடத்தும் பொறுப்பாளர்களில் ஒருவரான பாலமுருகனிடம் பேசினோம். அவர், தங்களது ஆதாயத்திற்காக குருபூசை அல்லது நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்கிறார். ஆளும்கட்சியாக இருக்கும்போது ஒரு சமூகத்தின் விழாவில் கலந்துகொண்டு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது வேறு சமூகத்தின் நிகழ்வில் கலந்துகொள்ளும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள் என்கிறார்.

”நாங்கள் காவல்துறையின் ஒப்புதலுடன் பாதுகாப்பாக நிகழ்வை நடத்துகிறோம். சாதிக்கான விழாவாக நாங்கள் நடத்துவதில்லை. சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்த தலைவருக்கு மரியாதை செய்ய பல்லாயிரம் மக்கள் வருகிறார்கள். இதனை பிரச்னையாக பார்க்கக் கூடாது,”என்கிறார்.

குருபூசைக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தொடர்பு எப்படி உருவானது?

பலவிதமான சாதி அமைப்புகளை சேர்ந்த தலைவர்களுக்கு அவர்களின் இனத்தைச் சேர்ந்தவர்கள் விழா எடுத்துவந்தனர். தியாகி இமானுவேல் சேகரனார், தென் மாவட்டத்தில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர். தேவேந்திர குல வேளாளர்கள் என்ற சாதியை சேர்ந்த மக்கள் இவரை தங்களது தலைவராக கருதினர். பின்னாளில் காங்கிரஸ் கட்சியிலும் இவர் இருந்தார்.

இவர் 1957ல் கொலை செய்யப்பட்டார். இவரது கொலையில், முத்துராமலிங்க தேவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பின்னர் அந்த குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டன. தியாகி இமானுவேல் சேகரனாருக்கு அவரது மறைவை அடுத்து நினைவிடம் அமைத்து மரியாதை செய்யும் நடைமுறை வந்தது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நேதாஜி சுபாஷ் சந்திர போசுடன் இணைந்துசெயல்பட்டவர். பின்னாளில், அவருடன் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியில் செயல்பட்டவர். இவர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடைமுறையில் இருந்த குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியது, சமூகநல்லிக்கணத்தை பின்பற்றியது என அவரது பங்களிப்பைச் செய்துள்ளார்.

குருபூசை வழிபாடு அரசியலா?

”எம்ஜிஆர் 1973இல் தேவர்பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தார். அந்த ஆண்டில் இருந்து அரசியல் தலைவர்கள் தேவர் ஜெயந்தியில் கலந்துகொள்வது தொடங்கியது. அதேபோல, தியாகி இமானுவேல் சேகரனார் நினைவேந்தல் நிகழ்வில் பங்குபெறுவதும் அதிகரிக்க தொடங்கியது. எம்ஜிஆர், கருணாநிதி என இந்த பங்கேற்பு தொடர்ந்தது. சசிகலா முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், ஜெயலலிதா-சசிகலா தேவர் ஜெயந்தி விழாவில் பங்குபெறுவது முக்குலத்தோர் வாக்குகளை ஈர்த்தது. இதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் என ஆட்சி பொறுப்பில் உள்ள முதல்வர்கள் குருபூசைகளில் கலந்துகொள்வதை பின்பற்றுகின்றனர். இது அந்தந்த சாதி வாக்குவங்கியை ஈர்க்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்,”என்கிறார் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன்.

இந்த இரண்டு விழாக்களை போல, ஒவ்வொரு சாதி சமூகங்களைச் சேர்ந்தவர்களும், தங்களுக்கான தலைவர்களுக்கு விழா எடுப்பதும் அதில் அரசியல் தலைவர்கள் பங்குகொள்வதும் அதிகரித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில்தான் இதுபோன்ற குருபூசைகள் நடத்தும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் இளங்கோவன் சொல்கிறார்.

”நான் பல குருபூசை நிகழ்வுகளுக்கு நேரில் சென்று செய்தி சேகரித்துள்ளேன். கட்டுக்கடங்காத வன்முறை, அதிக ஜனத்திரள், கடையடைப்பு, இரண்டு தரப்புகளுக்கு இடையில் தொடர் கொலைகள் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. நீதிமன்றம் வழிகாட்டுதல்களை கொண்டுவந்தாலும், பெருங்கூட்டமாக சேர்ந்த சாதி அடையாளத்தை காண்பிக்கும் வகையில் நிகழ்வை நடத்துவதை நிறுத்தவேண்டும். இதனை அரசியல் தலைவர்கள் பங்குகொள்வதால்தான் அதிக சர்ச்சையும் ஏற்படுகிறது. இதுபோன்ற விழாக்கள் பெரும்பாலும், தங்களது சாதியின் பலத்தை காட்டும் நிகழ்வாகத்தான் நடத்தப்படுகின்றன,” என்றும் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

குருபூசை வழிபாடு அரசியலா?

”நடுகல் வழிபாடு முறை குருபூசை ஆகிவிட்டது”

சாதி தலைவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள நினைவிடங்களில் நடத்தப்படும் குருபூசை நிகழ்வுகளில், பூசை விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது கேள்விக்குறிதான் என்ற கருத்தும் வைக்கப்படுகிறது.

பண்பாட்டு ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் சிவசுப்பிரமணியன் பேசுகையில், குருபூசை என்பது சைவம் மற்றும் வைணவ மடங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறை என்றும், தற்போதைய காலத்தில், சாதிக்கான வழிபாடாக அது மாற்றப்பட்டுவருகிறது என்ற விவரிக்கிறார் அவர்.

”குருபூசை என்றால், துறவி அல்லது, ஆன்மீக தலைவர் ஒருவர் இறந்த பின்னர், அவரது உடலுக்கு பூசைகள் செய்து, அவரது நினைவிடத்தில், சிவலிங்கம் அல்லது அவரது உருவ சிலையை நிறுவுவது என்ற முறை ஆகும்.”

குருபூசை வழிபாடு அரசியலா?

“இதுபோன்ற நடைமுறை தற்போது விழா நடத்தப்படும் பல தலைவர்களுக்கும் பொருந்தாது. வ.உ.சிதம்பரனார் உடல் எரியூட்டப்பட்டது. கட்டபொம்மன், ஒண்டிவீரன் உள்ளிட்ட பல தலைவர்களின் உடல் எங்கு புதைக்கப்பட்டது என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. பல தலைவர்களுக்கும் நடத்தப்படும் குருபூசைகள் சாதி ரீதியான குழுக்கள் கூடுவதைத்தான் ஊக்குவிக்கிறது. இதில் அரசியல் லாபம் இல்லை எனில், இதற்கான முக்கியத்துவம் ஏதுமில்லை,”என்கிறார் சிவசுப்பிரமணியன்.

சென்னை பல்கலைக்கழகத்தின் சைவ சித்தாந்த துறையின் தலைவர் சரவணனை தொடர்பு கொண்டோம். அவர் ஒரு காலத்தில், நடுகல் வழிபாடுதான் தமிழ்நாட்டில் பரவலாக இருந்தது என்றும் அது தற்போது குருபூசை முறையாக மாறிவிட்டது என்கிறார்.

குருபூசை வழிபாடு அரசியலா?

பட மூலாதாரம், Facebook

”சைவ முறைப்படி, நாள் மங்கலம் என்ற சொல்லைதான் பயன்படுத்துவார்கள். குருபூசை என்பது வைதீக சொல்லாடல். பல தலைவர்களை கடவுளாக வணங்க நினைப்பவர்கள், அவர்களின் நினைவிடத்தில் குருபூசை நடத்துகிறார்கள். குருபூசை என்பதற்கான ஆகம முறைகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. தங்களது முன்னோர்கள் அல்லது அவர்களின் வீரத்தை பறைசாற்றும் நடுகல் வழிபாடு என்ற முறையை பல சமூகத்தினர் கைவிட்டுவிட்டனர். தற்காலத்திற்கு ஏற்ப குருபூசை என்ற பெயரில் விழாவை மாற்றிவிட்டார்கள். அதில் அரசியல் தலைவர்கள் லாபம் பார்க்கிறார்கள் அவ்வளவே,”என்கிறார் சரவணன்.

குருபூசை வழிபாடு அரசியலா?

அரசியல் கட்சியினரின் பதில்

தமிழ்நாட்டில் பலமான கட்சிகளாக கருதப்படும் திமுக, அதிமுகவைச் சேர்ந்த தலைவர்கள் குருபூசை நிகழ்வுகளில் பங்குகொள்வதை பின்பற்றுகின்றனர். அந்த கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களிடம் இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வது கட்டாயமாகி விட்டதா என்றும் அவர்களின் பங்கேற்பின் தேவை என்ன என்றும் கேட்டோம்.

திமுகவின் செய்தி தொடர்பு தலைவரான டி.கே.எஸ். இளங்கோவன் பதில் அளிக்கும்போது, பிற கட்சிகள், குருபூசைகளில் கலந்துகொள்ள வாக்கு வங்கி அரசியல் காரணமாக இருக்கலாம் என்றும் திமுகவுக்கு அந்த தேவை இல்லை என்றார்.

”வாக்குகளை பெறுவதற்காக திமுக இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளவேண்டும் என்ற தேவை இல்லை. நாட்டிற்கு தொண்டு செய்த தலைவர்களுக்கு மரியாதை செய்கிறோம். அதிலும் குறிப்பாக தீண்டாமை, சமூக மாற்றங்களுக்கான உழைத்தவர்களுக்கு மரியாதை செய்வதை நாங்கள் பின்பற்றுபவர்கள். அதனால், இதில் வாக்கு அரசியல் இல்லை. ஆனால் சில சாதியினரின் வாக்குகளை பெறுவதற்கு இதுபோன்ற நிகழ்வுகளில் பங்குபெறவேண்டும் என அரசியல்வாதிகளிடம் ஒரு மனநிலை ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான்,”என தனது கருத்தை தெரிவித்தார் இளங்கோவன்.

குருபூசை வழிபாடு அரசியலா?

பட மூலாதாரம், Facebook

அதிமுகவை பொறுத்தவரை எம்ஜிஆர் தொடங்கிவைத்த முயற்சியை பின்பற்றும் விதமாகத்தான் குருபூசை நிகழ்வுகளில் கலந்துகொள்வதாக கூறுகிறார்கள். இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்குகொள்ள கடும் எதிர்ப்பு இருந்தது. இதுகுறித்தும் கேட்டோம்.

பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், எடப்பாடி பழனிச்சாமி தேவர் குருபூசைக்கு செல்வதை தடுக்க ”ஒரு சிலர்” முயற்சித்தனர் என்றார். ஆனால் அவர்கள் யார் என்று வெளிப்படையாக சொல்லதேவையில்லை என்றார்.

அதிமுக தலைவர்கள் குருபூசை நிகழ்வுகளில் கலந்துகொள்வது குறித்து பதில் அளித்த அவர், ''வாக்குகளை பெறுவதற்காக நாங்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளவதாக சொல்லமுடியாது. அரசியல் விழிப்புணர்வை பெற்றுள்ள மக்கள், தங்களது சமூகத்திற்கென ஒரு தலைவர், அவரை, பெரும்பான்மை அரசியல் கட்சியில் இருப்பவர்கள் வந்து மரியாதை செய்யவேண்டும் என எண்ணுகிறார்கள். இதுபோல எங்கள் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தங்களது சமூக அமைப்புகளில் பொறுப்பில் இருப்பார்கள், அவர்கள் அழைத்தால் அதனை மறுக்கமுடியாது. இதுபோன்ற நிகழ்வில் பங்குகொள்வது விருப்பம் என்பதைத்தாண்டி காலத்தின் கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது,''என்கிறார் வைகைச்செல்வன்.

அதிமுக தலைவர்கள் குருபூசை நிகழ்வுகளில் கலந்துகொள்வது குறித்து பதில் அளித்த அவர், ”வாக்குகளை பெறுவதற்காக நாங்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளவதாக சொல்லமுடியாது. அரசியல் விழிப்புணர்வை பெற்றுள்ள மக்கள், தங்களது சமூகத்திற்கென ஒரு தலைவர், அவரை, பெரும்பான்மை அரசியல் கட்சியில் இருப்பவர்கள் வந்து மரியாதை செய்யவேண்டும் என எண்ணுகிறார்கள். இதுபோல எங்கள் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தங்களது சமூக அமைப்புகளில் பொறுப்பில் இருப்பார்கள், அவர்கள் அழைத்தால் அதனை மறுக்கமுடியாது. இதுபோன்ற நிகழ்வில் பங்குகொள்வது விருப்பம் என்பதைத்தாண்டி காலத்தின் கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது,”என்கிறார் வைகைச்செல்வன்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »