Press "Enter" to skip to content

பாஜகவின் ‘மண்டல், கமண்டல’ அரசியல்: 2024 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலாகுமா?

பட மூலாதாரம், ANI

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் அனைத்து யூகங்களையும் உடைத்து, மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைவிட அதிக இடங்களைப் பெற்றுள்ளது.

பிகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு மூன்று மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் இந்தப் பிரச்னையை உரத்த குரலில் எழுப்பியது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் பாஜக பின்னடைவைச் சந்திக்கும் என்று எதிர்க்கட்சிகள் கூறின.

ஆனால், முடிவுகள் வேறு விதமாக இருந்தன. பாஜக அதன் நன்கு அறியப்பட்ட வாக்கு வங்கியைத் தவிர, அதிக எண்ணிக்கையிலான இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) வாக்குகளையும் பெற்றது.

இந்த முறை சத்தீஸ்கரின் பழங்குடியினப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களை பாஜக வென்றது. அதேநேரத்தில், மத்திய பிரதேசத்திலும் அக்கட்சி ஓபிசி சமூகத்திடமிருந்து அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இந்துத்துவா பிரச்னையுடன் சாதி அரசியலிலும் பாஜக எதிர்க்கட்சிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.

சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், மக்களவைத் தேர்தலிலும், பாஜக முன்னிலை பெறுமா அல்லது எதிர்க்கட்சிகள், பாஜகவுக்கு பெரும் சவாலாக இருக்குமா அல்லது மக்களவைத் தேர்தலின்போது, ​​ஓபிசி வாக்குகள் வித்தியாசமாகச் செயல்படுமா?

நாட்டின் அரசியலை `மண்டல்` எப்படி மாற்றியது?

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

‘சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை, சமூக நீதி அவசியம்’.

இந்த வார்த்தைகளை முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஓபிசி சமூகத்தினருக்கு இட ஒதுக்கீட்டின் அவசியத்தை வெளிப்படுத்தும் வகையில் தெரிவித்தார்.

மூத்த பத்திரிகையாளர் நீரஜா சௌத்ரி தனது ‘ஹௌ பிரைம் சின்ன (மினி)ஸ்டர்ஸ் டிசைட்` (How Prime Ministers Decide) என்னும் புத்தகத்தில், “அடல் பிஹாரி வாஜ்பாயின் வார்த்தைகள் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்ட பிறகு, அவை நாட்டின் அரசியலை எவ்வாறு மாற்றியது என்பதை வெளிப்படுத்துகின்றன. இதன்மூலம், சாதி என்பது சமூகத்தின் ஒரு பிரிவாகப் பார்க்கப்படுவதைவிட அரசியல் வர்க்கமாகப் பார்க்கப்பட்டது,” என எழுதுகிறார்.

மண்டல் ஆணையம் பிராந்திய கட்சிகள் மற்றும் சாதி அடையாளம் தொடர்பான அரசியலுக்கும் சிறகுகளை விரித்தது. ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளின் அந்தஸ்து உத்தர பிரதேசம் மற்றும் பிகாரில் இதனால் அதிகரித்தது.

மேலும், சாதி அடிப்படையிலான சிறு குழுக்களும் வளர ஆரம்பித்தன. உதாரணமாக, உத்தர பிரதேசத்தில் மட்டும் ராஜ்பார் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சி, குர்மி சமூகத்திற்காகப் பேசும் அப்னா தளம் மற்றும் நிஷாத் சமூகத்திற்காகக் குரல் எழுப்பும் ஒரு கட்சியும் பிறந்தன. பிரதான அரசியலில் இந்த சிறு கட்சிகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தன.

ஓபிசி சமூகத்தினருக்கு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான பி.பி. மண்டல் (BP Mandal Commission) ஆணையத்தின் பரிந்துரைகளை வி.பி. சிங் அரசாங்கம் 1990களில் அமல்படுத்திய பிறகு இந்த அரசியல் வேகமெடுத்தது.

அந்நேரத்தில் ராமர் கோவில் பிரசாரத்தை பாஜக தீவிரமாக முன்னெடுத்தது. இது கமண்டல அரசியல் என்று அழைக்கப்பட்டது. வி.பி.சிங்குக்கு அடுத்து வந்த ஒவ்வோர் அரசும் இட ஒதுக்கீட்டை ஆதரித்தது.

பாஜக இந்துத்துவா அரசியலுக்கு முனைப்பு கொடுத்தது. அதேநேரத்தில், இட ஒதுக்கீடு விஷயத்தில் பாஜகவின் கருத்து மற்ற கட்சிகளைப் போலவே இருந்தது.

பாஜகவின் தலைமுறை மாற்றம்

ராகுல் காந்தி

பட மூலாதாரம், ANI

மொரார்ஜி தேசாய் அரசாங்கம் 1979ஆம் ஆண்டு பி.பி. மண்டல் தலைமையில் ஆணையத்தை அமைத்தது. ஆனால், அதன் பரிந்துரைகளை 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வி.பி.சிங் அமல்படுத்தினார்.

தேர்தலில் ஓபிசி வாக்கு வங்கியைத் தன் பக்கம் கொண்டு வர இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை வி.பி.சிங் அமல்படுத்தினார் என்ற கூற்றும் உள்ளது. வி.பி. சிங் அரசை ஆதரித்ததோடு, ராமர் கோவில் பிரசாரத்திற்கும் பாஜக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்த நேரம் அது.

இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய வி.பி.சிங்கை ஓபிசி சமூகம் தங்கள் தலைவராக ஏற்கவில்லை, மாறாக வாக்காளர்கள் தங்கள் சொந்த சாதியைச் சேர்ந்த தலைவர்களிடம் அதிக நாட்டம் கொண்டிருந்தனர் என்று நீரஜா சௌத்ரி தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

ஆனால், வி.பி. சிங்கின் முடிவு நிச்சயமாக நாட்டில் ஒரு புதிய ஓபிசி தலைமைகளை உருவாக்கியது. இது அடுத்த இருபது ஆண்டுகளாக இந்தியாவின் அதிகாரத்தில் முக்கிய அங்கமாக இருந்தது.

முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ், உமாபாரதி, கல்யாண் சிங், சிவராஜ் சிங் சௌஹான், அசோக் கெலாட் மற்றும் பல தலைவர்கள் உ.பி., பிகார், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அரசாங்கங்களை நடத்தினர்.

படிப்படியாக பாஜகவிலும் தலைமுறை மாற்றம் ஏற்பட்டது. 2014ஆம் ஆண்டு ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த நரேந்திர மோதி பிரதமரானார். இதற்குப் பிறகு, இந்துத்துவா அரசியலை முன்னெடுத்த பாஜக, ஒவ்வொரு தேர்தல்களிலும் முன்னேற்றம் அடைந்தது.

மோதி அரசாங்கம், 2019ஆம் ஆண்டில் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்தது. இந்த நேரத்தில் கட்சிப் பெரும்பான்மையுடன் பல மாநிலங்களில் ஆட்சிக்கு வந்தது.

இந்த ஆண்டு பிகாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு தகவல்கள் வெளியாகின. அதேநேரத்தில், அயோத்தியில் அடுத்த மாதம் 22ஆம் தேதி ராமர் கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

பிகார் சாதிவாரி கணக்கெடுப்பில், அதிகபட்சமாக 36.1 சதவீத மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் இந்துக்களின் மொத்த எண்ணிக்கை 82 சதவீதம். இதற்குப் பிறகு, காங்கிரசும் மற்ற எதிர்க்கட்சிகளும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பிரச்னையை நாடு முழுவதும் எழுப்பின.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த கருத்துக் கணிப்பை ஆதரித்து, இந்தியாவின் சாதிவாரி புள்ளிவிவரங்களை அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தினார். பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு தகவல்கள் வெளியானதையடுத்து, தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

இதன்மூலம், மண்டல் மற்றும் கமண்டல அரசியல் மீண்டும் திரும்புவதாக நிபுணர்கள் கருதத் தொடங்கினர். இருப்பினும், மக்களவைத் தேர்தலின் அரையிறுதி என்று அழைக்கப்பட்ட ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், இந்த பிரச்னை பயனற்றுப் போனதைப் பார்க்க முடிந்தது.

மாறாக, பிரதமர் நரேந்திர மோதி தனது தேர்தல் பரப்புரையில், ’நாட்டில் ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் என நான்கு சாதிகள் மட்டுமே உள்ளன’ எனத் தெரிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சி நடந்து வருகிறது என்றார் அவர்.

இதற்குப் பிறகு, இந்த மூன்று மாநிலங்களிலும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்களை பாஜக தேர்வு செய்தது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் சாதிப் பிரச்னையைத் தீர்க்க எதிர்க்கட்சிகளின் முயற்சியாக இது பார்க்கப்பட்டது.

சிவராஜ் சிங் சௌஹான், வசுந்தரா ராஜே, ராமன் சிங் போன்ற மூத்தத் தலைவர்களைத் தேர்வு செய்யாமல், மோகன் யாதவ், பஜன் லால் சர்மா, விஷ்ணு தேவ் சாய் ஆகியோருக்கு முதலமைச்சர் பதவியை பாஜக வழங்கியுள்ளது.

இருப்பினும், சமாஜ்வாதி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கபிஷ் ஸ்ரீவஸ்தவாவின் பார்வையில், முதலமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியில் சாதி சமன்பாட்டைத் தீர்ப்பது இல்லை என்றும் மோதிக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களை முக்கிய பதவிக்குக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் அதன் நோக்கம் என்றும் கூறுகிறார் அவர்.

உத்தர பிரதேசத்துடன் தனது எல்லையை மத்திய பிரதேசம் பகிர்ந்து கொள்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மோகன் யாதவை மத்திய பிரதேச முதலமைச்சராக ஆக்குவதன் மூலம், உத்தர பிரதேசம், பிகார் மாநில யாதவ சமூகத்தினரின் ஆதரவை பாஜக பெறுமா?

இதுகுறித்து, கபீஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தை தேர்ந்தெடுத்ததன் மூலம் மோதி-அமித் ஷா தங்கள் முடிவு தவறாகிவிட்டதை உணர்ந்ததால்தான் மூன்று மாநிலங்களிலும் பின் வரிசையில் உள்ளவர்களை முன்னோக்கி அனுப்பியுள்ளனர்,” என்கிறார்.

பாஜகவின் வியூகம்

நரேந்திர மோதி

பட மூலாதாரம், GETTY IMAGES

உத்தர பிரதேசம் மற்றும் பிகார் அரசியலில் ஓபிசி சமூகத்தினர் முக்கிய அங்கமாக இருந்து வருகின்றனர்.

ஆனால், யாதவ சமூகம் அல்லாத ஓபிசி பிரிவினர் மத்தியில் வலுவான அடித்தளத்தை உருவாக்குவதன் மூலம் சமாஜ்வாதி கட்சி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவற்றின் யாதவ்-முஸ்லிம் பிரிவினரின் கூட்டணியை பாஜக பின்தள்ளியுள்ளது. 2019ஆம் ஆண்டு பாஜகவின் வெற்றிக்கு இந்தப் பிரிவினர்தான் முக்கியக் காரணம்.

மத்திய பிரதேசத்தில் 50 சதவீத ஓபிசி வாக்காளர்கள் உள்ளனர். மத்திய பிரதேசத்தில் பாஜகவின் வெற்றியில் ஓபிசி வாக்காளர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர்.

பாஜக ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த மோகன் யாதவை முதலமைச்சர் ஆக்கியது, ஆனால் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திர சுக்லா மற்றும் ஜெகதீஷ் தியோரா ஆகியோரை துணை முதலமைச்சர்களாக அறிவித்தது.

சத்தீஸ்கரில் பழங்குடியினர் பகுதிகளில் அடைந்துள்ள முன்னேற்றத்தை மனதில் வைத்து, அக்கட்சி இந்த சமூகத்தைச் சேர்ந்த விஷ்ணுதேவ் சாய்க்கு முதலமைச்சர் பதவியை வழங்கியுள்ளது.

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஒடிசா மற்றும் ஜார்க்கண்டிலும் இது பாஜகவுக்கு பலனளிக்கும், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இங்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

ராஜஸ்தானிலும், பிராமண முதல்வருடன், ராஜ்புத் மற்றும் தலித் சமூகங்களைச் சேர்ந்த இரண்டு துணை முதலமைச்சர்களையும் கட்சி நியமித்துள்ளது.

ஆனால், இந்த முகங்களின் உதவியால், யாதவ்-முஸ்லிம் சமூகத்தினரிடையே பலத்த ஆதரவைக் கொண்ட சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளையும் மண்டல் ஆணையத்தை ஆதரிக்கும் கட்சிகளையும் பாஜகவால் விட்டுவிட முடியுமா?

“நிச்சயமாக இல்லை. அவர்கள் உண்மையில் ஓபிசி அல்லது தலித் சமூகத்தினருக்காக ஏதாவது செய்ய நினைத்திருந்தால், ஒரு முதலமைச்சரை மட்டும் நியமித்து அதைச் செய்திருக்க மாட்டார்கள். நீங்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும்,” என கபிஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

ஆனால், ஓபிசி சமூகத்தினரிடையே பாஜகவின் ஆதரவு பெருகி வருவதற்குக் காரணம், பிரதமர் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் என்று மூத்த ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் சிவானந்த் திவாரி நம்புகிறார். இதனால் பாஜக ஆதாயம் அடைகிறது என்கிறார்.

“மண்டல் ஆதரவு கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. இந்த வேறுபாடு காரணமாக பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒற்றுமை முடிவுக்கு வந்தது. அவர்களை பாஜக தன் பக்கம் சேர்த்துக்கொண்டது. உத்தர பிரதேசம் மற்றும் பிகாரில் ஓபிசி வாக்காளர்களை பாஜக வென்றது. பிரதமர் மோதி ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர். பாஜக இதைப் பயன்படுத்திக் கொள்கிறது,” என அவர் கூறுகிறார்.

இந்துத்துவா மற்றும் தேசியவாத அரசியலை தேசத்தின் போக்காக பாஜக மாற்றியுள்ளது என்று சிவானந்த் திவாரி கூறுகிறார். ஆனால், இதை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் கேள்வி.

தலைமை மாற்றத்தின் பலன்?

கமல்நாத்

பட மூலாதாரம், X/DR NIMO YADAV

டாடா சமூக அறிவியல் கழகத்தின் பேராசிரியர் புஷ்பேந்திர குமார் சிங், கொள்கைகளை மாற்றிக்கொள்வதே பாஜகவின் வெற்றிக்குக் காரணம் என்று கருதுகிறார்.

“மண்டல் அரசியல் ஓபிசியின் அரசியல். கமண்டல் அரசியல் என்பது உயர் சாதியினரின் அரசியல். ஆனால் பாஜகவில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஓபிசி மக்கள் பாஜகவின் தலைமையில் உள்ளனர். இதை பாஜக குறிப்பாக ஊக்குவிக்கிறது. இதை கமண்டல அரசியலுடன் சரிசெய்ய முயல்கின்றனர். இந்தி பேசும் மாநிலங்களில் இதன் மூலம் பலன் அடைந்துள்ளனர்,” என அவர் கூறுகிறார்.

“மோதி ஓபிசி சமூகத்தில் இருந்து வந்தவர். ஆனால், அவர் உயர் சாதியினரிடையேயும் பிரபலமானவர். ஏனெனில் உயர் சாதியினரைக் கவர்ந்தது இந்துத்துவா. கட்சிக்குள் ஓபிசி முக்கியப் பங்கு வகிக்கிறது. மத்திய பிரதேசத்தில் ஓபிசி முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமல்ல, சிவராஜ் சிங்கும் ஓபிசி தான்,” என்கிறார் அவர்.

இந்த மாற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய புஷ்பேந்திர சிங், “பாஜக அதன் தலைமைத்துவத்தில் நிறைய மாற்றங்களைச் செய்துள்ளது. அதன் காரணமாக ஓபிசி சமூகத்தில் அதன் ஊடுருவல் அதிகரித்துள்ளது மற்றும் அவர்களுக்கு உயர் சாதியினரின் நிரந்தர வாக்கு வங்கி உள்ளது. மொத்தத்தில், வெற்றிகரமான சூத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களின் 40 முதல் 45 சதவீத வாக்கு வங்கி வேறு எந்தக் கட்சிக்கும் செல்லாது,” என்கிறார்.

எதிர்கட்சிக்கு ஏதும் முனைப்பு இருக்கிறதா?

அமித் ஷா

பட மூலாதாரம், GETTY IMAGES

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவியது. ஆனால், இந்த மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய சாதிப் பிரச்னை பலனளிக்கவில்லை. காங்கிரசின் நிலைப்பாட்டில் உள்ள தெளிவின்மையே இதற்குக் காரணம் என்றும் சிவானந்த் திவாரி கருதுகிறார்.

அவர் கூறுகையில், “மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எளிதில் பெரும்பான்மை பெறும் என அனைவரும் கருதினர். ஆனால், கமல்நாத் பாகேஷ்வர் பாபாவுக்கு ஆரத்தி காட்டுகிறார். இது மென்மையான இந்துத்துவாவா?

பாகேஷ்வர் பாபாவின் இடத்திற்கு அவர் வாடகை விமானத்தில் சென்றார். இதையடுத்து அவருக்கு ஆரத்தி எடுத்தார். இப்படிப்பட்ட நிலையில் பாஜகவுடன் காங்கிரஸ் எப்படி போட்டியிடும்?

காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு அனுதாபம் காட்டும் கட்சியாகக் கருதப்பட்டபோது, ​​ராகுல் காந்திக்கு புனித நூல் அணிவிக்கப்பட்டது. காங்கிரஸுக்கு தெளிவு இல்லை,” என்றார்.

பாஜகவின் இந்த வெற்றி ரதத்தை நிறுத்த எதிர்க்கட்சிகளிடம் ஏதாவது வாய்ப்பாடு உள்ளதா?

இதுகுறித்து கபீஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “எங்காவது ஒருவர் வெற்றி பெற்றால், அந்த வெற்றியில் ஒவ்வொரு சமூகத்தினரின் பங்களிப்பும் இருக்கும். அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமையும் போதெல்லாம் ஒவ்வொரு சமூகமும் வாக்களிக்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி உருவான பிறகு, இந்த ஐந்து மாநிலங்களிலும் ‘இந்தியா` கூட்டணி கட்சிகள் அனைத்தும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தால், இன்றைய முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும்,” என்கிறார்.

அதே நேரத்தில், பாட்னாவில் உள்ள ஏ.என்.சின்ஹா ​​இன்ஸ்டிட்யூட் முன்னாள் இயக்குனரான டி.எம்.திவாகரும், வேலையின்மை மற்றும் வறுமை போன்ற அடிப்படைப் பிரச்னைகளில் காங்கிரஸ் தீர்க்கமாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார். இதுவே முன்னோக்கிச் செல்லும் வழியைத் தீர்மானிக்கும்.

அவர் கூறுகையில், “ராகுல் காந்தி ஓபிசி அரசியல் செய்தால் அது பலிக்காது. இதையே சொல்லி லாலு பிரசாத் யாதவ் வந்திருந்தால் தாக்கம் இருந்திருக்கும். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ் பற்றிப் பேசாமல் இருந்தால் பிற்படுத்தப்பட்ட சாதி அரசியலைச் செய்ய முடியாது. மக்கள் தங்கள் சின்னத்தைத் தேடுகிறார்கள், ராகுல் காந்தி பிற்படுத்தப்பட்ட சாதிகளின் சின்னம் அல்ல. அதனால்தான் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் பந்தயம் பலிக்கவில்லை,” என்றார்.

பாஜக தலைமையின் கீழ் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது, ஆனால் கட்சியின் அரசியல் இன்னும் இந்துத்துவா அடிப்படையிலானது. அப்படியென்றால் மண்டல் அரசியல் செய்பவர்களின் கையில் பாஜக கமண்டலத்தைக் கொடுத்துள்ளது என்று நம்ப வேண்டுமா?

இதுகுறித்து டிஎன் திவாகர் கூறுகையில், “முன்னதாக தலித் மற்றும் பழங்குடியினரிடையே இந்துத்துவா பிரச்னையில் பாஜக செயல்பட்டது. ஆனால், அது மண்டல் அரசியல் அல்ல, கமண்டல் அரசியலின் நீட்சியாகவே இருந்தது. இன்றும் பாஜக தனது கமண்டல் அரசியலை மண்டல் அரசியல் நடக்கும் இடங்களுக்குக் கொண்டு செல்கிறது,” எனத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “மண்டல்-கமண்டல அரசியலை பாஜக செய்யவில்லை; மாறாக கமண்டல் மயமாக்கலைச் செய்கிறது. கமண்டலத்தை விரிவுபடுத்த கட்சி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறது,” என்றார்.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள், பாஜகவுக்கு உற்சாகமாக இருந்திருக்கலாம், ஆனால், மக்களவைத் தேர்தலிலும் இதே நிலை நீடிக்குமா அல்லது எதிர்க்கட்சிக் கூட்டணியால், பாஜகவை வீழ்த்த முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »