Press "Enter" to skip to content

மாலத்தீவு: இந்தியாவுக்கு முய்சுவின் அடுத்த அடி – மோதி அரசு என்ன செய்யப் போகிறது?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கு மாலத்தீவு அடுத்தடுத்து இரண்டு அதிர்ச்சிகளைக் கொடுத்துள்ளது.

முதலில் தனது நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகளை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அது கூறியது. தற்போது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுடன் போடப்பட்ட ஹைட்ரோகிராஃபிக் மேலாய்வு ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி, அப்போதைய அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ்ஹின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி மாலத்தீவுக்கு சென்றபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த கணக்கெடுப்பின் கீழ், இந்தியா மற்றும் மாலத்தீவு இணைந்து மாலத்தீவு பகுதிகளில் உள்ள நீர் பரப்பளவு, பவளப்பாறை, கடல் ஆகியவற்றை ஆய்வு செய்வதாக இருந்தது.

மாலத்தீவில் அதிபர் முகமது முய்சு தலைமையிலான புதிய அரசு அமைந்ததற்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ள முதல் இருதரப்பு ஒப்பந்தம் இது.

முன்னதாக மாலத்தீவு அதிபர் முய்சு, “தங்கள் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகளைத் திரும்பப் பெற இந்திய அரசு ஒப்புக்கொண்டதாக” தெரிவித்திருந்தார்.

அதிபர் முகமது முய்சுவின் மாலத்தீவு முற்போக்கு கட்சியில் சீனாவுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது, ‘இந்தியாவே வெளியேறு’ என்ற கோஷத்தை முன்வைத்த அந்தக் கட்சி, மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை வெளியேற்றுவோம் என்று கூறி பிரசாரம் செய்தது.

அவர் அதிபரான பிறகு எடுக்கும் இதுபோன்ற முடிவுகள் ‘முழுவதும் சீனாவின் செல்வாக்கின் அடிப்படையிலேயே’ எடுக்கப்படுவதாகத் தெரிகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மாலத்தீவு: இந்தியாவுக்கு முய்சுவின் அடுத்த அடி - மோதி அரசு என்ன செய்யப் போகிறது?

பட மூலாதாரம், Getty Images

இதற்கு முன்னால் அதிபராக இருந்த மாலத்தீவு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முகமது இப்ராகிம் சோலிஹ், ‘முதலில் இந்தியா’ என்ற கோஷத்தை முன்வைத்தார். முய்சுவின் நிலைப்பாடோ இதற்கு முற்றிலும் நேர்மாறானது.

ஹைட்ரோகிராஃபிக் மேலாய்வு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் மாலத்தீவின் முடிவிற்குப் பிறகு, சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தப் பகுதியில் இந்தியாவின் ஸ்ட்ரேட்டஜிக் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு துருக்கியை தேர்வு செய்துள்ள முய்சு, அங்கு புதிய மாலத்தீவு தூதரகத்தையும் தொடங்கியுள்ளார்.

இது குறித்து மாலத்தீவு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாலத்தீவு துருக்கியில் இருந்து தினசரி பயன்படுத்தும் பல பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. தங்கள் நாட்டில் துருக்கிய முதலீட்டை ஊக்குவித்து வரும் அதே வேளையில் மாலத்தீவில் இருந்தும் துருக்கிக்கு ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மாலத்தீவில் இருந்து துருக்கிக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

முய்சுவின் துருக்கி பயணத்தைத் தொடர்ந்து மாலத்தீவின் துணை அதிபர் ஹுசைன் முகமது லத்தீஃப் சீனா சென்றிருந்தார். சீனா தலைமையில் நடந்த சீனா-இந்தியா வளர்ச்சி ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றிருந்தார். அதே நேரம், இதேபோன்ற மற்றோர் அமைப்பான இந்தியப் பெருங்கடல் ரிம் அசோசியேஷன் குறித்து மாலத்தீவின் அணுகுமுறையோ அவ்வளவு நேர்மறையானதாக இல்லை.

சீனா-இந்தியா வளர்ச்சி ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பேசிய லத்தீஃப் தனது நாட்டிற்கு சீனாவின் பங்கு முக்கியமானது என்று கூறியுள்ளார்.

துருக்கி மற்றும் சீனாவிற்கு மாலத்தீவு தலைவர்கள் பயணிப்பது இந்தியாவின் நலன்களுக்கு சாதகமான அறிகுறி அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம், சீனாவும் துருக்கியும் இந்தியாவின் நிலம் மற்றும் கடல்சார் பாதுகாப்புக்கு எதிரெதிர் நிலைப்பாடுகளை எடுத்து வருகின்றன.

இந்தியாவிற்கு என்ன பாதிப்பு?

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மற்றும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

மாலத்தீவின் சமீபத்திய நடவடிக்கை இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் நலன்களைப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள சீன ஆய்வு மையத்தின் இணை பேராசிரியர் அரவிந்த் யெல்லேரி, “1996-97 முதல் சர்வதேச அரசியல் நீல பொருளாதாரம் அல்லது பெருங்கடல் பொருளாதாரத்தில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருவதாக” தெரிவிக்கிறார். இது இந்திய பெருங்கடல் அல்லது பசிபிக் பெருங்கலுடனான இந்தியாவின் நெருக்கம் கடல் தொடர்பான உத்தியில் இந்தியாவின் பாத்திரத்தை அதிகரித்துள்ளது.

அதிலிருந்து, தென் சீனக் கடல், அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றில் இந்தியா தனது ஸ்ட்ரேட்டஜிக் நலன்களில் கவனம் செலுத்தி வருகிறது. இதனால், மொரீஷியஸ், மாலத்தீவு, சீஷெல்ஸ் போன்ற நாடுகளில் இந்தியாவின் தொடர்புகள் அதிகரித்துள்ளது. கண்காணிப்பு, எரிபொருள் விநியோகம் மேலும் பல விஷயங்களில் இந்தியாவிற்கு இந்தப் பகுதிகளில் நலன்கள் உள்ளன. கடந்த 25-30 ஆண்டுகளில், இந்தியா இந்தப் பகுதிகளில் அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறது.

இந்தியாவிற்கு பொருளாதார மற்றும் மூலோபாய அடிப்படையில் மாலத்தீவின் முக்கியத்துவம் மிக அதிகம் என்று கூறுகிறார் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் அமைதி மற்றும் மோதல் தீர்வுகளுக்கான நெல்சன் மண்டேலா மையத்தின் உதவிப் பேராசிரியர் மருத்துவர் பிரேமானந்த் மிஸ்ரா. எனவேதான், மாலத்தீவில் புதிய அரசு ஆட்சிக்கு வரும் போதெல்லாம், அந்த அரசை ஓரளவிற்குத் தனது பக்கத்தில் வைத்திருக்க இந்தியா முயன்று வருகிறது.

சீனாவும் இந்தப் பகுதியில் தனது செயல்பாட்டை அதிகரிக்க விரும்புகிறது. ஆனால் இந்தியா அதற்கு முக்கியப் போட்டியாளராக இருந்து வருகிறது. “இந்தியப் பெருங்கடலில் தனது செல்வாக்கை அதிகரிக்க சீனாவும் அழுத்தம் கொடுத்து வருகிறது.

இதற்காக தற்போது தென்சீனக் கடலில் இருந்து வெளியே வந்து இங்கு தனது நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது,” என்று கூறுகிறார் அரவிந்த் யெல்லேரி.

“மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் சீனாவுக்கு சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது இந்தியாவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் வலுவாக வெளியே தெரியும். மாலத்தீவில் இந்திய வீரர்கள் மிகக் குறைவாக இருந்தாலும், அவர்கள் திரும்பி வருவது கவலை அளிக்க கூடிய விஷயமாக உள்ளது,” என்று அவர் கூறுகிறார்.

சீனாவின் செல்வாக்கை குறைப்பது கடினமான சவால்

துருக்கி தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகருடன் முகமது முய்சு

பட மூலாதாரம், Getty Images

மாலத்தீவில் சீனாவின் செல்வாக்கைக் குறைக்க இந்தியா என்ன செய்ய முடியும்?

இந்தக் கேள்விக்கு பதிலளித்த அரவிந்த் யெல்லேரி, இதுபோன்ற சிறிய நாடுகளைத் தனது பக்கம் கொண்டு வர இந்தியா இவ்வளவு கடும் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார்.

இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் சீன முதலீட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனாலும், பூடான் மற்றும் மாலத்தீவில் தனது செல்வாக்கை வலுப்படுத்துவதில் சீனா வெற்றி பெற்றுள்ளது.

இந்த விஷயத்தில் சீனாவுடனான உறவின் மதிப்பை இந்த நாடுகள் புரிந்துகொள்ள விடுவதே இந்தியாவின் கொள்கையாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். காரணம் இப்போது சீனாவின் நிதியுதவி பல நாடுகளுக்குச் சுமையாக மாறியுள்ளது. எனவே அவர்கள் இந்தப் ‘பொறி’யில் இருந்து வெளியேற விரும்புகிறார்கள்.

“சொல்லப்போனால், பூகோள ரீதியாக மாலத்தீவு இந்தியாவுடன் நெருக்கமாக உள்ளது. இரண்டாவது, அங்குள்ள மக்கள்தொகை அமைப்பும் இந்திய மக்கள்தொகையின் அமைப்பிற்கு நெருக்கமாக உள்ளது. இது சீனாவின் மக்கள்தொகையின் தன்மை மற்றும் இயல்புடன் பொருந்தவில்லை. எனவே, மாலத்தீவின் பண்புகள் சீனாவுடன் பொருந்தவில்லை என்பதை அந்த நாடு புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறுகிறார் யெல்லேரி.

அதே நேரம், “தொடக்கத்தில் இருந்தே முய்சு இந்தியாவுக்கு எதிரான உதியையே கொண்டுள்ளார். அது அவரின் முடிவுகள் வாயிலாகவே கண்கூடாகத் தெரிகிறது. ஹைட்ரோகிராஃபி ஒப்பந்தம் ரத்து, இந்திய படைகள் திரும்பப் பெறுதல் உள்ளிட்டவை சீன கொள்கைகளுக்கு ஆதரவு அளிப்பது போலத்தான் உள்ளது. இது இந்தியா மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று தெரிவிக்கிறார் பிரேமானந்த மிஸ்ரா.

“இஸ்லாமிய சித்தாந்தத்தின் பக்கம் மாலத்தீவு சாய்வதையும் கண்கூடாகவே பார்க்க முடிகிறது. தேசிய நலன் என்பது எந்த சித்தாந்தம் சார்ந்தோ அல்லது தலைவர் மற்றும் கட்சி சார்ந்தோ இருத்தல் கூடாது. ஆனால் சில நேரங்களில் வெளியுறவு கொள்கைகளில் அதைப் பார்க்க முடியும். குறிப்பாக இரான் போன்ற விஷயங்களில் இதைப் பார்க்கலாம்” என்கிறார் மிஸ்ரா.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவிற்கான மூன்று வழிகள்

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பட மூலாதாரம், Getty Images

“இதில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். ஆனால் தற்போதைக்கு முய்சு இருக்கும் வரை, அங்கு ஒரு இஸ்லாமிய சார்பு தன்மை இருக்கலாம். மாலத்தீவின் பொருளாதாரத் தேவைகளில் சீனாவின் தலையீடு அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் இது இந்தியாவின் பாதுகாப்புத் துறை, பொருளாதாரம் மற்றும் மூலோபாயக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இந்தியா தனது அண்டை நாட்டுக் கொள்கையில் இந்த பிரச்னைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்று கூறுகிறார் பிரேமானந்த் மிஸ்ரா.

இந்தியாவிற்கு மாலத்தீவில் சீனாவின் செல்வாக்கைக் குறைக்க வேண்டுமென்றால், அதற்கு மூன்று வழிகள் இருப்பதாகக் கூறுகிறார் அவர்.

மாலத்தீவில் முய்சுவின் அரசு இருக்கும் வரை சீனாவின் இடையூறை குறைக்க முடியாத வரை இந்தியா ‘காத்திருந்து கண்காணிக்கும்’ உத்தியைப் பயன்படுத்த வேண்டும்.

இந்தியா மறைமுகமான செல்வாக்கை அங்கு உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் அமெரிக்காவும் பிற நாடுகளும்கூட இந்தியப் பெருங்கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளன. எனவே, அமெரிக்கா மூலம் மாலத்தீவு மீது செல்வாக்கு செலுத்த இந்தியா முயற்சி எடுக்கலாம்.

மாலத்தீவு சீனாவை சார்ந்திருப்பதை அதிகரித்திருப்பதால், அதன் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலையில், மாலத்தீவின் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்புமாறு தூண்டி விடலாம்.

மிஸ்ராவின் கருத்துப்படி, மாலத்தீவில் சீனா குடியேற விரும்புவதால் அங்கு ‘இந்தியாவே வெளியேறு’ கோஷம் ஊக்குவிக்கப்படுகிறது. எனவே எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையைக் கையிலெடுக்க வாய்ப்புள்ளது.

சீனா – மாலத்தீவு இடையிலான உறவு

சீனா அதிபர்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் பில்லியன்கணக்கான டாலர்களை உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் இதர வளர்ச்சி சார்நத பணிகளுக்காக கடனாக வழங்கியுள்ளது.

மாலத்தீவு அமைந்துள்ள இந்திய பெருங்கடல் பகுதி முக்கியமான மூலோபாய பகுதியாகக் கருதப்படுகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் கொண்டு வரும் கப்பல்கள் இந்த வழியைத்தான் பயன்படுத்துகின்றன.

நீண்டகாலமாகவே மாலத்தீவில் இந்தியாவின் செல்வாக்கு உள்ளது. மாலத்தீவில் இருப்பதன் மூலம் இந்தியப் பெருங்கடலின் பெரும் பகுதியைக் கண்காணிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு, தனது தீவுகளில் ஒன்றை சீனாவுக்கு 40 ஆண்டுகளுக்கு வெறும் 50 மில்லியன் டாலருக்கு குத்தகைக்குக் கொடுத்தது மாலத்தீவு. மாலத்தீவும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது.

சீனாவிடம் இருந்து மாலத்தீவு ஒரு பில்லியன் டாலர் வரை கடன் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது. இந்தப் பணம் மாலத்தீவில் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

சீன கடற்படை மாலத்தீவில் தனது எல்லையை அதிகரிக்க முயன்று வரும் அதே வேளையில் சீனாவின் செல்வாக்கைத் தடுக்க இந்தியா முயன்று வருகிறது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »