Press "Enter" to skip to content

ஆர்.எஸ்.எஸ்.சுக்கே சவால் விடுகிறதா மோதி – அமித் ஷா கூட்டணி? பா.ஜ.க.வில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், பாலசுப்ரமணியம் காளிமுத்து
  • பதவி, பிபிசி தமிழ்

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் புதிய தலைவர்களுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த மாநிலங்களில் முதல்வர்களாக இருந்த ராமன் சிங் (சத்தீஸ்கர்), வசுந்தர ராஜே (ராஜஸ்தான்), சிவ்ராஜ் சிங் சவுகான் (மத்திய பிரதேசம்) ஆகிய தலைவர்களுக்கு முதலமைச்சர் பதவி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த தலைவர்களின் எதிர்காலம் குறித்து கருத்து கூறியுள்ள பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, “மாநில தலைவர்களை மத்திய தலைமை உன்னிப்பாக கவனித்து வருகிறது. கட்சிக்குள் அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்ற அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது,” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் மாநிலத்தில் செல்வாக்கு உடைய பாஜக தலைவர்களை மத்திய தலைமை ஓரங்கட்ட முயற்சிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. மேலும், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி தொடங்கி தற்போது வசுந்தரா ராஜே, சிவ்ராஜ் சிங் சவுகான் வரை பல மூத்த தலைவர்களை 2014ற்கு பிறகு மோதி-அமித் ஷா கூட்டணி ஓரங்கட்டுவதாக விமர்சிக்கப்படுகிறது.

இதற்கு பின்னிருக்கும் காரணங்கள் என்ன? ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நெருக்கமான தலைவர்களை ஓரங்கட்டுவதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்.சுக்கே மோதி – அமித் ஷா கூட்டணி சவால் விடுகிறதா? பாஜகவிற்குள் பிரதமர் மோதி மற்றும் அமித் ஷாவிடம் கட்டற்ற அதிகாரம் குவிகிறதா?

பாஜகவில் ‘காணாமல் போகும்’ தலைவர்களின் பட்டியல்

இது குறித்து தி இந்து ஆங்கில நாளிதழின் முன்னாள் வாசகர்களின் ஆசிரியரான மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வத்திடம் பிபிசி தமிழ் பேசியது. அவர் கூறுகையில், “அதிகாரம் என்பது முழுமையாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் இருந்து மோதி – அமித் ஷா தலைமைக்கு நகர்ந்துவிட்டது. பாஜகவிற்குள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு மிக நெருக்கமானத் தலைவர் என்றால் அது நிதின் கட்கரிதான். அதேசமயம், சமீபத்தில் வெளியான சிஏஜி அறிக்கையில் அதிகம் குற்றம் கண்டுபிடிக்கப்பட்ட தலைவரும் நிதின் கட்கரிதான். அந்த சிஏஜி அறிக்கையை அதிகார மாற்றத்திற்கான முக்கியமான குறியீடாக நான் பார்க்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “பாஜகவில் ஓரம்கட்டப்பட்ட தலைவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, எடியூரப்பா, சிவ்ராஜ் சிங் சவுகான், வசுந்தரா ராஜே என ஒரு நீளமான பட்டியல் உள்ளது. இவர்களில் அத்வானி பாஜகவின் நிறுவனர் தலைவராக இருந்தவர். வெங்கையா நாயுடு, முரளி மனோகர் ஜோஷி, நிதின் கட்கரி ஆகியோர் பாஜகவின் முன்னாள் தேசிய தலைவராக இருந்தவர்கள். ஆனால் அவர்களுக்கு தற்போது கட்சிக்குள் முக்கியத்துவம் இல்லை” என தெரிவித்தார்.

“இந்த தலைவர்களை ஓரங்கட்ட அவர்களின் சாதி அல்லது மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு தலைவரை பாஜக வளர்த்துவிடுகிறது. உதாரணமாக, உத்தபிரதேசத்தில் ராஜ்நாத் சிங்கை ஓரம்கட்ட கொண்டு வரப்பட்டவர்தான் யோகி ஆதித்யநாத். அதே போல, மகாராஷ்ட்ராவில் நிதின் கட்கரியை ஓரம்கட்ட தேவேந்திர பட்னாவிஸ் கொண்டுவரப்பட்டார்” என மூத்த பத்திரிகையாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பாஜகவில் காணாமல் போகும் தலைவர்கள்; அசுரபலம் பெறுகிறதா மோடி - ஷா கூட்டணி?

பட மூலாதாரம், Getty Images

செல்வாக்கு மிக்க தலைவர்களை ஓரங்கட்டுவதில் இருக்கும் பிரச்னை

செல்வாக்கு மிக்க மாநில தலைவர்களை ஓரங்கட்டுவது மாநில மற்றும் மக்களவை தேர்தல்களில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்து பேசினார் பெங்களூரைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் விஜய் க்ரோவர்.

அவர் கூறுகையில், “பாஜகவின் மத்திய தலைமைக்கு பாஜகவின் தேசிய தலைவர்களை விட மாநில தலைவர்களை ஓரம்கட்டுவதுதான் மிகக் கடினமாக இருந்தது. உதாரணம், வசுந்தரா ராஜேவும் எடியூரப்பாவும். கர்நாடகாவில் எடியூரப்பாவிற்கு பதில் பசவராஜ் பொம்மை முதலமைச்சராக முன்னிறுத்தப்பட்டார். ஆனால், 2023-ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்கும்போதுதான் பி.எஸ். எடியூரப்பா இல்லாமல் கர்நாடகாவில் ஜெயிக்க முடியாது என பாஜக தலைமைக்கு தெரிந்தது. அதனால்தான் தற்போது அவரது மகன் பி.எஸ். விஜயேந்திராவை கர்நாடகா மாநில பாஜக தலைவராக அறிவித்திருக்கிறார்கள்” தெரிவித்தார்.

“ராஜஸ்தான் தேர்தலில் 48 எம் எல் ஏக்களின் வெற்றியை வசுந்தர ராஜே உறுதி செய்திருக்கிறார். ராஜ்புத் சமுதாய மக்களிடையே செல்வாக்கு மிக்க தலைவரகாவும் வசுந்தர ராஜே இருக்கிறார். எனவே, வசுந்தரா ராஜே போன்ற மக்கள் செல்வாக்குமிக்க மாநில தலைவர்களை தற்போது ஓரங்கட்டியதாக பாஜக தலைமை நினைக்கலாம், ஆனால் அது மாநிலத்தில் கட்சியின் வளர்ச்சியை வரும்காலங்களில் பாதிக்கும். யாரெல்லாம் தங்களுக்கு மேல் வளர்கிறார்கள் என பாஜக தலைமை நினைக்கிறதோ அவர்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படுகிறது. தற்போது மத்திய பிரதேச முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோகன் யாதவ் பாஜகவின் மத்திய தலைமை என்ன சொன்னாலும் கேட்பார். ஆனால், சிவ்ராஜ் சிங் சவுகான் அப்படி அல்ல.” என அவர் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நெருக்கமான தலைவர்களை பாஜக தலைமை ஓரம்கட்டுகிறதா என்ற கேள்விக்கு, “ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை பாஜக ஓரம்கட்டுகிறதோ இல்லையோ, தங்களது இந்துத்துவா கொள்கையை பாஜக பரப்பும் வரைக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு எந்த பிரச்னையும் இல்லை. உதாரணமாக சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது, பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது போன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைக்கு ஏற்றவாறு பாஜக செயல்படும் வரை பாஜகவின் முடிவுகளில் ஆர்.எஸ்.எஸ் தலையிடாது. ” என விஜய் க்ரோவர் தெரிவித்தார்.

பாஜகவில் காணாமல் போகும் தலைவர்கள்; அசுரபலம் பெறுகிறதா மோடி - ஷா கூட்டணி?

பட மூலாதாரம், Getty Images

“ஓபிசி இந்துத்துவா VS பிராமண இந்துத்துவா”

இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் பன்னீர்செல்வம், மோதி – அமித்ஷா கூட்டணி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரத்தை மீறி சென்று விட்டது எனத் தெரிவித்தார்

மேலும், அவர் கூறுகையில், “ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் இருப்பது பிராமண இந்துத்துவா கொள்கை. ஆனால் மோதி-அமித் ஷா கூட்டணி தற்போது கையிலெடுத்திருப்பது இதர பிற்பட்ட பிரிவினரான ஓபிசி மக்கள் சார்ந்த இந்துத்துவா கொள்கை. பிராமண இந்துத்துவாவின் அதிகார குவிப்பை விட ஓபிசி இந்துத்துவாவின் அதிகார குவிப்பு பரந்துபட்டதாகிறது. இதற்கு குஜராத்தைச் சேர்ந்த கார்ப்பரேட் முதலீடுகள் பெரும் உதவி புரிகின்றன. 2014ற்குப் பிறகு பாஜகவிற்குள் நடந்த முக்கிய மாற்றமானது பாஜகவிற்குள் அதிகாரம் என்பது குஜராத்தை நோக்கி சென்றதுதான்.” எனத் தெரிவித்தார்.

“எந்தெந்த அரசியல் தலைவர்களால் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை பூர்த்தி செய்ய முடியவில்லையோ அவர்கள் அதிகார குவிப்பில் ஈடுபடுவார்கள். 2014ற்கு பிறகு பாஜக அரசு கொடுத்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

ஆட்சிக்கு வரும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பை 40 ரூபாய்க்கு கொண்டுவருவதாகக் கூறினார்கள். ஆனால் இன்றைக்கு 90 ரூபாயை நெருங்குகிறது. அதே போல கிராமங்களுக்கும் நகரங்களுக்குமான இடைவெளி அதிகரித்துள்ளது. கல்வித்தரம் உயரவில்லை. பாலின சமத்துவக் குறியீடு சரிந்துள்ளது. எனவே இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அடைந்த தோல்வியை சமாளிக்கவே பாஜகவிற்குள் அதிகார குவிப்பு நடக்கிறது,” என தெரிவித்தார்.

பாஜகவில் காணாமல் போகும் தலைவர்கள்; அசுரபலம் பெறுகிறதா மோடி - ஷா கூட்டணி?

பட மூலாதாரம், Getty Images

“சமூக நீதி அடிப்படையில் பாஜக தலைவர்களை தேர்வு செய்கிறது”

இது குறித்து தமிழ்நாடு பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர் கூறுகையில், “இந்தியாவிலேயே பாஜகவில் மட்டும்தான் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆக முடியும் என்பதை நிரூபித்த ஒரே கட்சியென்றால் அது பாஜகதான்,” எனத் தெரிவித்தார்.

மேலும், “கம்யூனிஸ்டுகள் கூட ஜோதிபாசு, மாணிக் சர்க்கார், இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், பினராயி விஜயன் போன்றவர்களை மட்டும்தான் மீண்டும் மீண்டும் முதலமைச்சராக்கி கொண்டிருந்தார்கள். இவர்கள் அத்தனை பேரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், பாஜகவில் மட்டும்தான் சமூக நீதி அடிப்படையில் முதலமைச்சர் வாய்ப்பு வழங்கப்படுகிறது.” எனத் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர்கள் குறிவைத்து ஓரங்கட்டப்படுகிறார்களா என்ற கேள்விக்கு, “பாஜகவின் தாய்க் கழகம் ஆர்.எஸ்.எஸ். பல பேர் பாஜகவிற்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ் இருக்கிறதென்று. நான் சொல்கிறேன், பாஜகவிற்கு முன்னால் தான் ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது. மேலும், மாநிலத்திற்கு ஏற்ப வியூகம் அமைத்துதான் கட்சித்தலைமை தலைமைகளை மாற்றுகிறது. இது எங்கள் சுதந்திரம்” என நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »