Press "Enter" to skip to content

ஒரே நாளில் 78 எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 78 எம்.பி.க்கள் இன்று ஒரே நாளில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரே நாளில் இவ்வளவு அதிகமான எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதன்முறை என, எதிர்க்கட்சிகளும் அரசியல் நோக்கர்களும் விமர்சிக்கின்றனர்.

முன்னதாக, கடந்த 13-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்த இரண்டு பேர் திடீரென அவையில் குதித்து கையிலிருந்த பொருளை வீசினர். அதில் இருந்து புகை வெளியேறியது.

இந்தச் சம்பவம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு வெளியே, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய அதே நாளில் இந்தச் சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் தர வேண்டும் என, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதே கோரிக்கையை வலியுறுத்திய எதிர்க்கட்சிகளை சேர்ந்த 15 எம்.பி.க்கள் கடந்த 14-ஆம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களுள் கனிமொழி (திமுக), எஸ்.ஆர்.பார்த்திபன் (திமுக), சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), கே சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட), எஸ். ஜோதிமணி (காங்கிரஸ்), மாணிக்கம் தாக்கூர் (காங்கிரஸ்) உள்ளிட்டோரும் அடங்குவர்.

அமித் ஷா- நரேந்திர மோதி

பட மூலாதாரம், GETTY IMAGES

அமித் ஷா விளக்கம் அளிக்க வலியுறுத்தல்

இந்நிலையில், இன்றும் (டிச. 18) மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் இந்த பிரச்னை எழுப்பப்பட்டது. உள்துறை அமைச்சர் இச்சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும், இதுகுறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, இரு அவைகளும் மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் கூடியது.

மதியம் 3 மணியளவில் மக்களவை மீண்டும் கூடியதும் இதே பிரச்னையை எதிர்க்கட்சியினர் எழுப்பினர். இதுதொடர்பான முழக்கங்களை எழுப்பியும் பதாகைகளை ஏந்தியும் தங்கள் கோரிக்கைகளை எதிர்க்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தினர். அவர்களை அமைதியாக இருக்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை எழுப்பிய நிலையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 33 எம்.பிக்களை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்மொழிந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த சுகதா ராய், கல்யாண் பானர்ஜி, திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் கலாநிதி வீராசாமி உள்ளிட்ட 33 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதேபோன்று, மாநிலங்களவையிலும் இதே பிரச்னையை வலியுறுத்திய நிலையில், காங்கிரஸ் மூத்த எம்.பிக்கள் ஜெய்ராம் ராமேஷ், ரன்தீப் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். திமுக எம்.பிக்களான என்.ஆர். இளங்கோ, கனிமொழி என்.வி.என். சோமு, ஆர். கிரிராஜன் உள்ளிட்ட 45 எம்.பிக்கள் மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இவர்கள் தவிர, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல்

பட மூலாதாரம், ANI

“ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல்”

மாநிலங்களவையில் 34 எம்.பி.க்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் 11 எம்.பி.க்கள் மீது உரிமை மீறல் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து 3 மாதங்களில் அறிக்கை அளிக்க உயர் மட்ட குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குளிர்கால கூட்டத்தொடர் வரும் 22-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இடைநீக்கம் செய்யப்பட்ட திமுக எம்.பிக்களுள் ஒருவரான என்.ஆர். இளங்கோவன் பிபிசியிடம் பேசுகையில், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக தங்களுக்கு பல கேள்விகள் இருப்பதாக தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “நாடாளுமன்ற அவைக்குள் நிகழ்ந்த சம்பவம் குறித்து இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வந்து நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் முதன்மையான கோரிக்கை. ஏனெனில், நாடாளுமன்றத்திற்கே பாதுகாப்பில் குறைகள் இருந்தால் நாட்டு மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

நாடாளுமன்றத்திற்குள்ளேயே புகை குண்டுகளை வீச முடிகிறதென்றால், தீவிரவாத அச்சுறுத்தல் குறித்த அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும்? நாடாளுமன்றத்திற்கு இதுபோன்ற மோசமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க முடியுமா? 2001 நாடாளுமன்ற தாக்குதல் நிகழ்ந்து 22 ஆண்டுகள் கழித்து அதேநாளில் இது நிகழ்ந்திருப்பதை சாதாரணமானதாக எடுத்துக்கொள்ள முடியுமா? கேள்வி கேட்பது ஜனநாயக அடிப்படை” என தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், ”ஒருதலைபட்சமாக பல்வேறு சட்டங்களை நிறைவேற்ற எங்களை இடைநீக்கம் செய்திருக்கின்றனர். ஜனநாயகத்தை ஒட்டுமொத்தமாக குழி தோண்டி புதைக்கும் செயல் இது. பாதுகாப்பு அத்துமீறல் குறித்த சரியான விளக்கம் அரசிடம் இல்லை என்பதாலேயே இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். இதுவொரு மோசமான முன்னுதாரணம். சம்பவம் தொடர்பாக புலன் விசாரணையில் உள்ள மொத்த தகவல்களையும் சொல்ல தேவையில்லை. ஆனால், அடிப்படையான தகவல்களை மக்களுக்கு சொல்வது அவசியம்” என்றார்.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல்

பட மூலாதாரம், ANI

“எந்த பிரச்னையிலும் பாஜக பதில் சொல்வதில்லை”

இதே கருத்தை வலியுறுத்திய மூத்த பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாம், “இவ்வளவு எம்.பிக்களை இடைநீக்கம் செய்வது இதற்கு முன்பு நாடாளுமன்ற வரலாற்றில் நிகழ்ந்ததில்லை. 2ஜி விவகாரத்திலிருந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஓடிவிடவில்லை. பாஜக எந்த பிரச்னையை கிளப்பினாலும் பதில் சொல்வதில்லை” என தெரிவித்தார்.

மேலும், “நாடாளுமன்றத்தில் பேசாமல் பிரதமரும் உள்துறை அமைச்சரும் தனியார் நிகழ்ச்சிகளில் இதுகுறித்து பேசுகின்றனர்” என அவர் கூறினார்.

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் தொடர்பாக இந்தி தினசரி நாளிதழான ‘டேய்னிக் ஜாக்ரன்’ (Dainik Jagran) நாளிதழுக்கு பிரதமர் மோதி பேட்டி அளித்திருந்ததையும் அமித் ஷா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசியதையும் அவர் சுட்டிக்காட்டினார். மோதி நாளிதழுக்கு அளித்திருந்த பேட்டியில், இவ்விவகாரத்தை, “சபாநாயகர் முழு தீவிரத்துடன் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக” தெரிவித்திருந்தார் மோதி.

இதுகுறித்து பேசிய ‘தராசு’ ஷ்யாம், “அதேபோன்று, அதை நாடாளுமன்றத்தில் ஏன் சொல்ல முடியவில்லை? அவைத்தலைவரின் பொறுப்பில் அந்த பிரச்னையை ஒதுக்குவதும் தவறு” என தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவம் மூலம் ‘இந்தியா’ கூட்டணி சற்று கவனம் பெற்றிருப்பதாக அவர் கூறுகிறார்.

”சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் 4 மாநிலங்களில் அடைந்த தோல்விக்குப் பின் ‘இந்தியா’ கூட்டணி வலுவற்றிருந்தது. இப்போது இந்த விவகாரத்தால் அக்கூட்டணி ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்திருக்கிறது. அதற்கு பாஜகவும் இடம் கொடுத்திருப்பது போன்று தோன்றுகிறது.

ஆனாலும், நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் வேலையில்லா திண்டாட்டத்தை கையிலெடுத்துள்ளதன் நோக்கத்தை அக்கூட்டணி புரிந்துகொண்டு அதனை முன்னிறுத்த வேண்டும்” என்றார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »