Press "Enter" to skip to content

தென் மாவட்டங்களில் புயல் இல்லாமலேயே அதீத மழை பெய்தது ஏன்?

திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி மற்றும் கன்னியாகுமரி என தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கன மழை பெய்திருக்கிறது. குமரி மற்றும் இலங்கை கடல் பகுதியில் நிலவும் காற்று கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இந்த மாவட்டங்களில் சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான அதி கன மழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் ஒரு ஆண்டில் பெய்யும் மழையை விட அதிக மழை 24 மணி நேரத்தில் பெய்துள்ளது.

வானிலை தரவுகளை சேகரிக்கும் தனியார்ஆய்வாளர் பிரதீப் ஜான், “தமிழ்நாட்டில் 1992ம் ஆண்டு 96.5 செ.மீ மழை திருநெல்வேலி மாவட்டத்தில் காக்காச்சியில் பெய்தது. அதன் பிறகு, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தான் அதிகமாக மழை பெய்துள்ளது.

காயல்பட்டினத்தில் 24 மணி நேரங்களில் 95 செ.மீ மழை பெய்துள்ளது. காயல்பட்டினத்தில் ஒரு ஆண்டில் பெய்யும் மழை அளவை விட அதிக மழை ஒரே நாளில் பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இது வரை காணாத மழை இதுவாகும்” என்று கூறுகிறார்.

பாளையங்கோட்டையில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான மழை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். “பாளையங்கோட்டையில் தற்போது 44.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அங்கு 1963ம் ஆண்டு 29.2 செ.மீ மழை பெய்தது. அதன் பிறகு தற்போது தான் அதிக மழை பெய்துள்ளது. அதே போன்று பாளையங்கோட்டையில், டிசம்பர் மாதத்தில் பெய்த அதிக மழை என்பது 1931ம் ஆண்டில் பெய்த 20 செ.மீ மழை ஆகும்” என்றார்.

இந்த மாவட்டங்களில் இவ்வளவு அதிக மழை பெய்ய என்ன காரணம்?

தென் மாவட்டங்களில் கன மழை

புயல் உருவாகாமல் கன மழை பெய்யுமா?

பொதுவாக அதி கன மழை, மிக கன மழை பொழிவுகள் கடலில் உருவாகும் புயல் காரணமாக ஏற்படும். காற்று மேல் அடுக்கு அல்லது கீழ் அடுக்கு சுழற்சி, தீவிரமாகி காற்றழுத்த தாழ்வு நிலை, பின்பு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி அது மேலும் தீவிரமடைந்து புயலாக மாறும். ஒவ்வொரு நிலையும் தீவிரமடையும் போது, மழை மற்றும் காற்றின் வேகமாக இருக்கும்.

ஆனால், இப்போது இலங்கைக்கு தென் கிழக்கே குமரி கடல் பகுதியில் காற்று கீழ் அடுக்கு சுழற்சி மட்டுமே நிலவுகிறது. அதன் காரணமாகவே அதி கன மழை பெய்து வருகிறது. காற்று கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக அதி கன மழை அதுவும் பரவலாக மழை என்பது இது வரை பார்க்காதது என்கிறார் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன்.

தென் மாவட்டங்களில் கன மழை

பட மூலாதாரம், IMD

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி ஏன் இவ்வளவு மழை தருகிறது?

இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் எஸ். பாலச்சந்திரன், “புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் காரணமாக இது போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம். வருங்காலங்களிலும், இது போன்ற மழை பொழிவுகள் இருக்கும். வட கிழக்கு பருவ மழையின் போது, அதி கன மழை நிகழ்வுகள் அதிகம் இருக்கும் என வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பல தெரிவிக்கின்றன. எனவே இனிமேல் எதிர்பார்க்காததை எதிர்பார்க்க வேண்டும்” என்றார்.

24 மணி நேரத்துக்கும் மேல் மழை தொடர காரணம் என்ன?

சென்னையில் மிக்ஜாம் புயல் உருவான போது, சென்னைக்கு அருகிலான கடல் பகுதியில் கிட்டத்தட்ட 18 மணி நேரங்களில் புயல் நிலைக் கொண்டிருந்தது. அதன் காரணமாகவே தொடர் மழை இருந்தது. அதே போன்று குமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்று கீழ் அடுக்கு சுழற்சி மிகவும் மெதுவாகவே நகர்கிறது.

“காற்று கீழ் அடுக்கு சுழற்சி மெதுவாக நகர்வதால், மேகங்கள் அவ்வபோது திரண்டு கொண்டே வருகின்றன. மழையும் விட்டு விட்டு பெய்துக் கொண்டெ இருக்கிறது” என்றார் பிரதீப் ஜான்.

தென் மாவட்டங்களில் கன மழை

இந்த மழை மேக வெடிப்பின் காரணமாக ஏற்பட்டதா?

மேக வெடிப்பு என்பது சிறிய பகுதியில் குறுகிய நேரத்தில் பெய்யும் அடைமழை (கனமழை) ஆகும். அதாவது ஒரு மணி நேரத்தில் 10 செ.மீக்கும் அதிகமான மழை பெய்தால், அது வானிலியலில் மேக வெடிப்பு எனப்படும் நிகழ்வாகும். ஆனால் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கு மேக வெடிப்பு காரணமல்ல என்று எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த மழை ஏன் அரிதானது?

தென் மாவட்டங்களில் பொதுவாக தென்மேற்கு பருவ மழை காலத்திலேயே அதிக மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழையின் போது அதி கன மழை பெய்துள்ளது. புயல் போன்ற நிகழ்வுகள் ஏதும் இல்லாமல் சமவெளியில் 24 மணி நேரத்தில் அதிக மழை பெய்வது அரிதானதாக கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் 24 மணி நேரங்களில் பெய்த அதிகபட்ச மழை 1992-ல் திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சியில் பெய்த 96.5 செ.மழை ஆகும். 2019-ல் அவலாஞ்சியில் 91.1 செ.மீ மழையும், 1992-ல் மாஞ்சோலையில் 82.1 செ.மீ மழையும் பெய்தது.

“இது வரை அதிகபட்ச மழை பெய்த இடங்கள் மலைப்பகுதிகள் ஆகும். அங்கே அதிக மழை பெய்வது அரிதானது அல்ல. ஆனால், இப்போது பெய்துள்ளது மிகவும் தனித்துவமான மழை. காயல்பட்டினத்தில் பதிவாகியுள்ள 95 செ.மீ மழை, சம வெளிகளில் இது வரை தமிழக வரலாற்றில் அதிகபட்ச மழை ஆகும். இந்தியாவின் முதன்மையான 10 அதிகமான மழை பொழிவுகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.” என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய வானிலை தரவுகளை சேகரிக்கும் தனியார்ஆய்வாளர் பிரதீப் ஜான்.

சிகப்பு ஆபத்து எச்சரிக்கை என்றால் என்ன?

ஒரு இடத்தில் 7செ.மீ முதல் 11 செ.மீ வரையிலான மழை பெய்ய வாய்ப்பிருந்தால் கன மழைக்கான மஞ்சள் அலர்ட் வழங்கப்படும். அதுவே 12 செ.மீ முதல் 20 செ.மீ வரையிலான மிக கன மழை பெய்யும் என்றால் ஆரஞ்ச் அலர்ட் மற்றும் 20 செ.மீக்கும் மேலாக அதி கன மழை பெய்யும் என்றால் சிகப்பு ஆபத்து எச்சரிக்கை வழங்கப்படும்.

இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், “தென் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரங்களில் 39 இடங்களில் அதிஅடைமழை (கனமழை) பெய்துள்ளது. 33 இடங்களில் மிக கன மழை, 12 இடங்களில் கன மழை பெய்துள்ளது.

வட கிழக்கு பருவ மழைக் காலத்தில் பெய்யும் இயல்பான மழை அளவை விட இந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் 135% அதிகமாக பெய்துள்ளது. அதே போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பை விட இந்த ஆண்டு 103%, தூத்துக்குடியில் 68%, தென்காசியில் 80% அதிகமாக மழை பெய்துள்ளது. தமிழகம் முழுவதிலும் வட கிழக்கு பருவ மழைக் காலத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் தற்போது வரை தமிழகத்தில் இந்த ஆண்டு 44 செ.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவான 42 செ.மீ விட 5% அதிகமாகும்.” என்றார்.

தமிழ்நாட்டில் இப்போது எங்கெல்லாம் சிகப்பு ஆபத்து எச்சரிக்கை?

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் சிகப்பு ஆபத்து எச்சரிக்கை வழங்கியுள்ளது. மேலும் 24 மணி நேரங்களுக்கு இந்த மாவட்டங்களுக்கான சிகப்பு ஆபத்து எச்சரிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்கள் மட்டுமல்லாமல், ராமநாதபுரம், தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »