Press "Enter" to skip to content

அதி அடைமழை (கனமழை): வானிலை மையம் சரியாக கணிக்க தவறியதா? மேற்குலக மாதிரி துல்லியமாக கணித்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதி அடைமழை (கனமழை) பெய்துள்ளது. காயல்பட்டினம் திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் சிக்கி தவிக்கின்றனர். அரசு இயந்திரம் நிவாரணப் பணிகளில் முறையாக செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பப்படும் வேளையில் இந்திய வானிலை மையம் முறையான எச்சரிக்கை சரியான நேரத்தில் கொடுத்திருந்தால் பாதிப்புகள் குறைவாக இருந்திருக்கும் என தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது.

தென் மாவட்டங்களில் கன மழை குறித்த எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தாமதமாக கொடுத்தது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

வானிலை எச்சரிக்கை தாமதமாக கிடைத்தது – முதல்வர் குற்றச்சாட்டு

மத்திய அரசிடமிருந்து மழை நிவாரணத் தொகை கேட்டு டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது, “டிசம்பர் 17, 18 தேதிகளில் நெல்லை,குமரி, தென்காசி, தூத்துக்குடியில் கடுமையான மழை பெய்தது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் கடுமையான மழை பெய்யும் என்பதை 17ம் தேதி சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்தது. வானிலை ஆய்வு மையம் கணித்த மழை அளவை விடபல மடங்கு அதிகமாக பெய்தது. காயல்பட்டினத்தில் 94 செ.மீ மழை பெய்தது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை தாமதமாக கிடைத்தாலும், மழை பொழிவு கணித்ததை விட அதிகமாக இருந்தாலும், தமிழக அரசு மீட்பு பணிகளை விரைந்து செயல்படுத்தி வருகிறது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டும் 141 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.” என்றார்.

வானிலை மாதிரிகள் சரியாக கணிக்கின்றனவா?

சிகப்பு ஆபத்து எச்சரிக்கை கடைசி நேரத்தில் கொடுக்கப்பட்டது – அமைச்சர் விமர்சனம்

இதே குற்றச்சாட்டை எழுப்பிய பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் சிகப்பு ஆபத்து எச்சரிக்கை கொடுக்கப்பட்ட நேரத்துக்கும் வெள்ளப்பெருக்கு தொடங்கிய நேரத்துக்கும் இடையிலான காலஅவகாசம் மிகவும் குறைவாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

அவர், “இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் துல்லியமாகவும், சரியான நேரத்திலும் கொடுக்கப்பட்டிருந்தால், எதிர்பாராத பாதிப்பு மற்றும் அதன் தீவிரத்தன்மை குறைக்கப்பட்டிருக்கும்.

சிகப்பு ஆபத்து எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு தொடங்குவதற்கு முன் குறுகிய கால இடைவெளியே இருந்தது. மேற்கு நாடுகளில் இருக்கும் வானிலை கணிப்பு முறைகள் இப்படி இல்லை. நமது வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளில் ஏற்படும் முக்கியமான தாமதம், நமக்கு இன்னும் துரிதமான துல்லியமான எச்சரிக்கை முறைகள் தேவை என்பதை உணர்த்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு நாடுகளின் வானிலை மாதிரிகள் மிக துல்லியமாக முன்னெச்சரிக்கை கொடுக்கின்றன என்று தெரிவித்த அமைச்சர் மனோ தங்கராஜ், “இந்திய வானிலை மையத்தின் மழை கணிப்புகளுக்கும் மேற்கத்திய வானிலை கணிப்புகள் படியான மழை எச்சரிக்கைகளுக்கும் வித்தியாசம் உள்ளது என்பது உண்மை. அதி அடைமழை (கனமழை) மற்றும் உடனடி மழைப்பொழிவு போன்ற நிகழ்வுகள் மேற்கு நாடுகளில் மிக துல்லியமாக கணிக்கப்படுகின்றன. இந்த வேறுபாடு, நமது தயாரிப்பு மற்றும் வெள்ள மீட்பு பணிகளை பாதிக்கிறது” என்றார்.

வானிலை மாதிரிகள் சரியாக கணிக்கின்றனவா?

துரிதமான எச்சரிக்கைகளை சரியாக வழங்கும் வகையில், வானிலை ஆய்வு மையம் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். “இத்தகைய சூழல்களில் தமிழ்நாடு அரசு தன்னால் முடிந்த சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனினும், நிலைமையின் தீவிரத்தன்மை குறித்து, இந்திய வானிலை மையத்தின் தகவல்கள் இருந்திருந்தால் பாதிப்புகள் மற்றும் இழப்புகள் குறைவாக இருந்திருக்கும். சொத்துகள் சேதமடைவதும் குறைந்திருக்கும், வெள்ளத்தில் மக்கள் சிக்கிக் கொண்டு தவிப்பது குறைந்திருக்கும். நமது வானிலை முன்னெச்சரிக்கை முறைகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.” என்று மிக கடுமையாக இந்திய வானிலை மையத்தை சாடியுள்ளார்.

இதே போன்று தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவதாஸ் மீனாவும் இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகள் சரியாக இல்லை என்று கூறியிருந்தார்.

இது போன்ற குற்றச்சாட்டு எழுப்பப்படுவது முதல் முறை அல்ல. ஒக்கி புயலின் போதும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கருவிகள், தொழில்நுட்பங்கள் துல்லியமாக கணிப்பதில்லை என்று விமர்சிக்கப்பட்டது. சில தனியார் வானிலை ஆர்வலர்கள் பொது வெளியில் கிடைக்கும் தகவல்களை வைத்தே விரிவான முன்னெச்சரிக்கை, மிக குறுகிய பகுதிகளுக்கும் கொடுக்கும் போது, தொழில்நுட்பங்களை கொண்ட இந்திய வானிலை ஆய்வு மையத்தால் ஏன் அதை செய்ய முடியவில்லை என்பது அவ்வபோது எழுப்பப்படும் கேள்வியாக இருக்கிறது.

வானிலை மாதிரி என்றால் என்ன?

வானிலை முன்னெச்சரிக்கை, வானிலை மாதிரிகளிலிருந்து(weather model ) கிடைக்கும் தகவல்களை கொண்டு அளிக்கப்படுகிறது. வானிலை மாதிரி என்பது ஒரு கணினி தொழில்நுட்பமாகும். பூமியின் வளி மண்டலம் போன்ற மெய்நிகர் சூழலை கணினி உருவாக்கிக் கொள்ளும். தட்பவெட்பம், அழுத்தம், ஈரப்பதம், காற்று என பல்வேறு காரணிகளை அந்த மாதிரியால் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும்.

இந்த கணினி மாதிரியில், வானிலை ஆய்வாளர்கள் தற்போதைய வானிலை தரவுகளை உள்ளீடு செய்வார்கள். அதாவது ஒரு இடத்தில் எவ்வளவு வெப்பம் உள்ளது, எவ்வளவு ஈரப்பதம் உள்ளது, காற்றின் வேகம் உள்ளிட்ட தகவல்களை அந்த கணினி தொழில்நுட்பத்தில் உள்ளீடு செய்தால், அந்த வானிலை மாதிரி, இந்த தகவல்களை வைத்து கொண்டு சிக்கலான கணக்குகள் மேற்கொள்ளும். அதன் மூலம், எதிர்காலத்தில் என்ன மாதிரியான வானிலை நிலவும் என்பது வானிலை ஆய்வாளர்கள் கணிப்பார்கள்.

இது போன்று பல்வேறு கணினி தொழில்நுட்பங்கள் உள்ளன. அவை வெவ்வேறு வானிலை மாதிரிகளாக இருக்கும். ஒவ்வொரு மாதிரியும் கொடுக்கும் முடிவுகள் வெவ்வேறாக இருக்கலாம். இந்திய வானிலை ஆய்வு மையம் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட Global Forecast System (GFS ) என்ற வானிலை மாதிரியின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது.

வானிலை மாதிரிகள் சரியாக கணிக்கின்றனவா?

பட மூலாதாரம், Getty Images

‘வானிலை மாதிரி ஒரு வழிகாட்டி மட்டுமே’

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒய். இ. எ. ராஜ் பிபிசி தமிழிடம் விளக்கமாக பேசினார். அவர் “வானிலை ஆய்வு மையத்துக்கு செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் தகவல்களும் இருக்கின்றன, நேரடியாக கண்காணிப்பு மையங்கள் மூலம் கிடைக்கும் தகவல்களும் இருக்கின்றன. துல்லியமான நேரடியாக தகவல் கிடைக்கும் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

தற்போது பயன்படுத்தப்படும் வானிலை மாதிரிகளின் துல்லியத்தன்மையை அதிகப்படுத்தலாம். அதாவது, வானிலை தரவுகள் கணக்கிடப்படும் விதத்தை மேலும் துல்லியமாக்கலாம்” என்றார்.

மேற்கு நாடுகளின் வானிலை மாதிரிகள் இந்திய மாதிரியை விட துல்லியமாக இருப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, “இந்திய வானிலை ஆய்வு மையம் பயன்படுத்தும் Global Forecast System எனப்படும் மாதிரி மேற்கு நாடுகள் உருவாக்கிய மாதிரி தான். அதை இந்தியாவுக்கு ஏற்ற மாதிரி தகவமைத்து பயன்படுத்துகிறார்கள். வானிலை ஆய்வு மையம் பல்வேறு வானிலை மாதிரிகள் என்ன சொல்கின்றன என்பதையும் கண்காணிக்கும்” என்றார்.

வானிலை என்பது தினம் தினம் மாறக்கூடியது, எப்போது, எங்கே, எவ்வளவு என மிக துல்லியமாக யாராலும் கூற முடியாது என தெரிவித்த ராஜ், “வானிலை மாதிரி என்பது நமக்கு ஒரு வழிகாட்டி மட்டுமே. சில நேரங்களில் வானிலை மாதிரிகள் தவறாகவும் கணிக்கலாம். அது தவறு என்று தெரியாது, அதை நிராகரிக்கவும் தைரியம் வேண்டும்” என்றார்.

வானிலை மாதிரிகள் சரியாக கணிக்கின்றனவா?

பட மூலாதாரம், Getty Images

மேற்குலக மாதிரியில் துல்லியமாக கணிப்பு

மழை தகவல்களை சேகரித்து வரும் வானிலை ஆர்வலர்கள் பலர் தற்போது இயங்கி வருகின்றனர். அவர்களில் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசும் போது, “தென் மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கும் என்பதை பல்வேறு வானிலை கணிப்பு மாதிரிகள் கூறியிருந்தன. ECMWF என்ற வானிலை மாதிரி 100 செ.மீ மழை பெய்யும் என்று கூறியிருந்தது. GFS என்ற அமெரிக்க மாதிரி 40 முதல் 50 செ.மீ மழை பெய்யும் என்று கணித்தது. இந்த மாதிரி 27 கி.மீ பரப்பளவில் என்ன நிகழும் என்பதை பொதுவாக கூறும்.

இந்திய வானிலை ஆய்வு மையம் இதனை 12.5 கி.மீ பரப்பளவுக்கு ஏற்றவாறு மாற்றி கணக்கிடுகிறது. இப்படி பார்த்தால், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்னும் துல்லியமாக 12.5 கி.மீ பரப்பளவில் என்ன நிகழும் என்பதை கூறியிருக்க வேண்டும். மிக துல்லியமாக இவ்வளவு மழை என்று கூற முடியாவிட்டாலும், பெரிய அளவிலான மழை பெய்யும் என்பது வானிலை மாதிரிகளால் கணிக்கப்பட்டிருந்தது” என்றார்.

வானிலை மாதிரிகள் எப்போதுமே சரியாகத் தான் கணிக்குமா, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளலாமா என்று அவரிடம் கேட்டபோது, “ வானிலை மாதிரிகளில் சிற்சில மாற்றங்கள் இருக்கலாம். உதாரணமாக ஒரு வானிலை மாதிரி டெல்லிக்கு துல்லியமாக கணிக்கலாம், ஆனால் தென் மாநிலங்களுக்கு துல்லியமாக இருக்காது. வானிலை மாதிரிகளை தொடர்ந்து கண்காணிப்பவர்களுக்கு எந்த வானிலை மாதிரியை எந்த சூழலில் நம்பலாம் என்பது தெரிய வரும். வெறும் எண்களோடு வானிலை ஆய்வு மையம் தங்களை சுருக்கிக் கொள்ளக் கூடாது. அதையும் தாண்டி செல்ல வேண்டும்” என்றார்.

தென் மாவட்டங்களில் அடைமழை (கனமழை)

தென் மாவட்டங்களில் பெய்த கன மழையை வானிலை ஆய்வு மையம் கணிக்க தவறியதா என்று சென்னையில், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் துணைத் தலைவர். எஸ். பாலச்சந்திரன்,“டிசம்பர் 15, 16 தேதிகளில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

டிசம்பர் 17ம் தேதி அதி கன மழைக்கான சிகப்பு ஆபத்து எச்சரிக்கை வழங்கப்பட்டது. சிகப்பு ஆபத்து எச்சரிக்கை என்றால், 20 செ.மீக்கு மேல் பெய்யும் எந்த மழையும் அதி அடைமழை (கனமழை)யாகவே கருதப்பட வேண்டும். 95 செ. மீ மழை பெய்யும் என குறிப்பிட்டு கூற முடியாது” என்று கூறினார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »