Press "Enter" to skip to content

ஊழல் வழக்கால் எம்.எல்.ஏ., பதவியை இழக்கிறாரா அமைச்சர் பொன்முடி? – திமுக என்ன செய்யும்?

பட மூலாதாரம், Ponmudi

திமுக அமைச்சர் பொன்முடி தனது வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவரை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து குற்றவாளி என அறிவித்துள்ளது.

இந்த வழக்கின் தண்டனை விபரங்களை அறிவிப்பதற்காக அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை வரும் 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தற்போதுஎம்.எல்.ஏ.,வாக நீடிக்கும் தகுதியை பொன்முடி இழக்கலாம்.

ஆனால், சட்டப் பேரவைச் செயலாளரிடம் இருந்து தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பின் என்ன நடக்க வாய்ப்பிருக்கிறது? அவர் அமைச்சராக தொடர முடியுமா?

வழக்கின் பின்னணி என்ன?

கடந்த 2006-11 ஆம் ஆண்டு காலத்தில், திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016 ஆம் ஆண்டு, பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்தத் திர்ப்பை எதிர்த்து, அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேல் முறையீடு செய்தனர்.

மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், நேற்று பொன்முறை மற்றும் விசாலாட்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, அவர்கள் குற்றவாளிகள் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கின் தண்டனை விபரம் நாளை அறிவிக்கப்படவுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ஊழல் தடுப்புச் சட்டத்தில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளதால், அவர் தீர்ப்பு வந்ததில் இருந்தே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் எம்.எல்.ஏ.,விற்கான தகுதியை இழக்கிறார் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.

தமிழ்நாடு சட்டமன்றம்

பட மூலாதாரம், TNDIPR

எம்.எல்.ஏ. தகுதியை இழந்தாரா பொன்முடி?

“ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு மக்கள் பிரதிநிதி குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே அவர் தகுதியை இழக்கிறார். தண்டனை அறிவிக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை. ஆனால், இது நாள் வரை, தீர்ப்பும் தண்டனையும் ஒரே நாளில் வெளிவந்ததால், இதுவரை அது பேசு பொருளாகவில்லை,” என்றார் தராசு ஷ்யாம்.

மேலும், அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு தடை பெற்றால் மட்டுமே எம்.எல்.ஏ.,வாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொடர முடியும் என்றும் கூறினார் ஷ்யாம்.

“நாளை வரவிருக்கும் தண்டனையை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றம் செல்லலாம். ஆனால், குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு தடையாணை வாங்கினால் மட்டுமே அவரால் தொடர முடியும். மற்றவை, தண்டனை விபரங்களைப் பொறுத்தது,”என்றார்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் தண்டிக்ப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம். ஆனால், குற்றத்தின் தன்மை உள்ளிட்டவையை கருத்தில் கொண்டு, ஏழு ஆண்களுக்குள்ளும் நீதிபதிகள் தண்டனை வழங்குவார்கள்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8(m)-யின் படி, ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் ஒருவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே அவர் தகுதியிழக்கிறார்.

பொன்முடி

பட மூலாதாரம், PTI

சிறை செல்வாரா பொன்முடி?

தண்டனை அறிவிக்கப்பட்ட பின் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து மூத்த வழக்கறிஞர் சங்கர் சுப்புவிடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது அவர், மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், சிறை செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறினார்.

“எத்தனை ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டாலும், அவர் ஜாமின் கோரலாம். மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால், உயர்நீதிமன்றத்திலேயே அவர் ஜாமின்கோரலாம். ஆனால், ஜாமின் வழங்க வேண்டுமா வேண்டாமா என்பது அந்த நீதிபதியின் தனிப்பட்ட முடிவு.

ஒரு வேளை, மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் உச்சநீதிமன்றத்தை நாடித்தான் ஜாமின் பெற வேண்டும்,” என்றார் சங்கர் சுப்பு.

ஆனால், சங்கர் சுப்பு தகுதியிழப்பு குறித்து பேசும்போது, “இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை கொடுத்தால் அவர் தகுதியிழக்கமாட்டார். ஆனால், குற்றவாளி என்ற தீர்ப்பிற்கு மட்டும் அவர் தடையாணை பெற வேண்டும்,” என்றார்.

ஃபேஸ்புக்

பட மூலாதாரம், PONMUDI

மறு விசாரணையில் மூன்று அமைச்சர்கள் மீதான வழக்குகள்

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து மொத்தம் மூன்று அமைச்சர்களின் வழக்குகளை மறு விசாரணைக்கு எடுத்துள்ளது.

கடந்த 1996-2001ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அந்த ஆட்சிக்காலத்தில், வருமானத்திற்க அதிகமாக 1.36 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் 2002ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்குப்பதிவு செய்தனர்.

இருபது ஆண்டுகளாக விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு, இந்த ஆண்டு வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு கடந்த ஜூன் 28 ஆம் தேதி அமைச்சர் மற்றும் அவரது மனைவியை விடுவித்து தீர்ப்பளித்தது.

அமைச்சர் தங்கம் தென்னரசு

பட மூலாதாரம், THANGAM THENNARASU/ FB

அதேபோல, 2006-11 ஆம் ஆண்ட நடந்த திமுக ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார் தங்கம் தென்னரசு. அமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக 74.58 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக 2012 ஆம் ஆண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்பளித்த கீழமை நீதிமன்றம், அவரையும், அவரது மனைவியையும் விடுவித்தது. தற்போது, தங்கம் தென்னரசு நிதித் துறை அமைச்சராக உள்ளார். இந்த வழக்கையும் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துள்ளது.

அதேபோல, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் 2006-2011 ஆட்சிக்காலத்தில், சுகாதாரத்துறை அமைச்சராகவும், பின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக ரூ 44.59 லட்சம் சொத்து சேர்த்ததாக 2011 ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்புதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கிலும், கடந்த ஆண்டு கீழமை நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்த வழக்கையும் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துள்ளது.

முதல்வர் முக ஸ்டாலின்

பட மூலாதாரம், MK Stalin/FB

அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

திமுக ஆட்சியில் அமைச்சராக இருக்கும்போது, ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்றால், அது ஆளும் கட்சிக்கும் ஆட்சிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்கிறார் தராசு ஷ்யாம்.

“அமைச்சராக இருக்கும் ஒருவர் ஊழல் வழக்கில் குற்றவாளியாகிறார் என்பது நிச்சயம் திமுக.வுக்கு ஒரு அழுத்தமாகத்தான் இருக்கும். மேலும், தற்போது அமைச்சரவையில் இருக்கும் அடுத்தடுத்த அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் வரும்போது, அவை அனைத்தும் கூடுதல் அழுத்தங்களாக திமுக அரசிற்கு இருக்கும்,”என்கிறார் ஷ்யாம்.

சிக்கலில் இருக்கும் அமைச்சர்களுக்கு கட்சிப் பொறுப்பு வழங்கி, புது முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கினால் மட்டுமே நெருக்கடிகள் குறையும் என்றார் ஷ்யாம்.

“அடுத்து மத்தியப்புலனாய்வு அமைப்பின் பார்வையில் இருக்கும் துரைமுருகன், ஏ.வ.வேலு போன்றோருக்கும் சிக்கல் வரலாம். இவை அனைத்தும் ஆளும் கட்சிக்கு கூடுதல் நெருக்கடியைத்தரும். அதற்கு அமைச்சர்களை மாற்றுவதுதான் ஒரே தீர்வு.

ஆனால், அதனை திமுக செய்யுமா என்பது தான் சந்தேகம். ஒருவேளை அதிமுகவில் இது நடந்திருந்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், அவர் இதனை தான் செய்திருப்பார்,” என்றார் ஷ்யாம்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »