Press "Enter" to skip to content

நரேந்திர மோதியை எதிர்த்து பிரதமர் வேட்பாளராக களமிறங்க கேட்டபோது மல்லிகார்ஜுன் கார்கே என்ன சொன்னார்?

பட மூலாதாரம், ANI

எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார் என்று விவாதிக்கப்பட்டது.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும், தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் பெயரை முன்மொழிந்தனர்.

ஆனால், மமதா ‘ஒரு தலித் பிரதமர்’ வந்தால் நன்றாக இருக்கும் என்று தான் கூறினார் என்றும், கார்கேவின் பெயரை குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பி.ஜே.தாமஸ் தெரிவித்திருக்கிறார்.

என்ன நடந்தது இந்தக் கூட்டத்தில்?

எம்.பி.க்கள் இடைநீக்கம்

இந்தியா கூட்டணியின் கூட்டம் நடந்த அதே நாளில் (செவ்வாய், டிசம்பர் 20) நாடாளுமன்றத்திலிருந்து மேலும் 49 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதன் மூலம் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 141-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் இடையே சுமார் 3 மணி நேரம் நீடித்த சந்திப்பிற்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “நாங்கள் போராடுவோம், களத்தில் இறங்குவோம்” என்று கூறினார்.

எம்.பி.க்கள் இடைநீக்கம் குறித்து, அவர் தனது ட்விட்டர் பதிவில், “இது ஜனநாயகத்தை மீறுவது போன்றது, இது சபையின் கண்ணியத்திற்கு ஆழமான அவமானம்” என்று பதிவிட்டுள்ளார்.

அகிலேஷ் யாதவ், டி ராஜா, சரத் பவார், அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, சோனியா காந்தி, லாலு யாதவ் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சுமார் 3 மாத கால இடைவெளிக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், பா.ஜ.க.விடம் மூன்று பெரிய மாநிலங்களை இழந்துள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ், பா.ஜ.க, நரேந்திர மோதி, மல்லிகார்ஜுன கார்கே, இந்தியா

பட மூலாதாரம், ANI

இந்தியா கூட்டணியின் முன் இருக்கும் முக்கிய சவால்

தொடர்ந்து மூன்றாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறுவதை எப்படித் தடுப்பது என்பது தான் இந்தியா கூட்டணியின் முன் உள்ள முக்கியச் சவால்.

அரசியல் ஆய்வாளரான யோகேந்திர யாதவ், மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, இந்தியா கூட்டணி உயிருடன் இருக்கிறது என்பதைக் காட்டியதே இந்த சந்திப்பின் முக்கியமான அம்சம் என்றார். “கூட்டணி உயிருடன் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் இடையிடையே எழுந்தது. கூட்டணி காப்பாற்றப்படுமா இல்லையா, இந்தச் சந்திப்பு அந்தச் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது,” என்றார்.

தில்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், எம்.பி.க்கள் இடைநீக்கம் குறித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட ஆலோசிக்கப்பட்டது. அதேபோல் தொகுதி ஒருங்கிணைப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன் கார்கே பெயர் முன்வைக்கப்பட்டது. ஆனார் அதை அவர் நிராகரித்தார்.

பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், “காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று மமதா பானர்ஜி முன்மொழிந்துள்ளார்,” என்றார்.

காங்கிரஸ், பா.ஜ.க, நரேந்திர மோதி, மல்லிகார்ஜுன கார்கே, இந்தியா

கார்கே என்ன சொன்னார்?

இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மல்லிகார்ஜுன் கார்கே, கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே நோக்கம் என்றார். “முதலில் கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.பி.க்கள் ஆகவேண்டும். அந்த எண்ணிக்கை இருந்தால்தான் பிரதமர் பதவியைப் பற்றிப் பேசமுடியும்,” என்றார்.

ஆனால், கூட்டத்திற்கு ஒருநாள் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய , மமதா பானர்ஜி, பிரதமர் பதவிக்கு ஒற்றை முகத்தை முன்வைப்பதை நிராகரித்திருந்தார்.

கூட்டம் முடிந்ததும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மல்லிகார்ஜுன் கார்கே ஓரிரு கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தார்.

இந்தக் கூட்டத்தின் எதிர்பார்ப்புகள் குறித்துப் பேசிய யோகேந்திர யாதவ், ” குறைந்தபட்சம் என்ன எதிர்பார்க்கப்பட்டதோ, அது மட்டுமே நடந்தது. அதற்குமேல் ஒன்றும் நடக்கவில்லை,” என்றார்.

“இந்தச் சந்திப்பில், ஒரு புதிய திட்டம் அறிவிக்கப்படும் என்று அதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. எம்.பி.க்களை இடைநீக்கம் செய்ததற்காக 22-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தனை எம்.பி.க்களை இடைநீக்கம் செய்திருப்பது முன்னோடியில்லாதது. இந்த விஷயத்தில் எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்வினை ஆற்றும், பெரிதாக ஏதாவது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்தேன். அதுவும் நடக்கவில்லை,” என்றார் யாதவ்.

கூட்டத்திற்கு முன் பிபிசியிடம் பேசிய யோகேந்திர யாதவ், “2024 தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இந்தக் கூட்டத்தின் வெற்றியை பொறுத்தே உள்ளது,” என்றார்.

‘நல்ல தொடக்கம்’

அரசியல் நோக்கர் ஜக்ரூப் சிங், செவ்வாய்க் கிழமை நடந்த இந்தக் கூட்டம் ‘ஒரு நல்ல தொடக்கம்’ என்றார்.

மூத்த பத்திரிக்கையாளர் பிரசாந்த் தீட்சித், பெண்கள், இளைஞர்கள், மற்றும் விவசாயிகளை தம் பக்கம் ஈர்ப்பதற்காக இந்தியா கூட்டணி என்ன செய்யப்போகிறது என்பதைக் காட்டும் எந்த நிகழ்ச்சியும் முன்வைக்கப்படவில்லை, என்றார்.

“இளம் தலைமுறையினர் வலுவான திட்டத்துடன் செயல்படும் வலுவான தலைவர்களை விரும்புகிறார்கள்,” என்றார்.

இதற்கிடையில், அசோக் கெலாட், பூபேஷ் பாகேல், சல்மான் குர்ஷித், மோகன் பிரகாஷ் மற்றும் முகுல் வாஸ்னிக் போன்ற தலைவர்களைக் கொண்ட தேசியக் கூட்டணிக் குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.

காங்கிரஸ், பா.ஜ.க, நரேந்திர மோதி, மல்லிகார்ஜுன கார்கே, இந்தியா

பட மூலாதாரம், ANI

மல்லிகார்ஜுன் கார்கே vs நரேந்திர மோதி?

காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவர் மல்லிகார்ஜுன் கார்கே.

சி-வோட்டர் ஆய்வு நிறுவனத்தின் ஆசிரியர் யஷ்வந்த் தேஷ்முக், இந்தியா கூட்டணியின் முகமாக அவரை நியமித்ததில் ஆச்சரியமில்லை என்கிறார். கடந்த இரண்டு மாதங்களாக அவரது பெயர் விவாதிக்கப்பட்டு வருகிறது, என்கிறார்.

ஆய்வாளர் மிலன் வைஷ்ணவின் கருத்துப்படி, நரேந்திர மோதிக்கு எதிராகப் போட்டியிட இந்தியா கூட்டணியில் எந்த முகமும் இல்லாமல் இருப்பது அதன் நிலையை பலவீனப்படுத்தும்.

யஷ்வந்த் தேஷ்முக், “இந்தியாவை விடுங்கள், கர்நாடகாவை மட்டும் பார்த்தால் கூட மல்லிகார்ஜுன் கார்கேவின் மதிப்பீடு குறைவாக உள்ளது. ஆனால், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர் ஒரு தலித் தலைவர். இதனால் அவரைத் தாக்குவது பா.ஜ.க.வுக்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் பா.ஜ.க அவரைப் புறக்கணித்துவிட்டு காந்தி குடும்பத்தைத் தாக்குவதையே தொடரவும் கூடும்,” என்றார்.

யஷ்வந்த் தேஷ்முக், மல்லிகார்ஜுன் கார்கேவின் பெயரை மம்தா பானர்ஜி முன்வைத்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்கிறார். “மமதா தனது இடம் மேற்கு வங்காளம் தான் என்பதை உணர்ந்துகொண்டார்,” என்றார்.

இந்தியா கூட்டணியின் முகமாக மல்லிகார்ஜுன் கார்கேவின் பெயர் முன்வைக்கப்படுவது குறித்து பேசிய யோகேந்திர யாதவ், “எதிர்கட்சிகள் இந்தத் தேர்தலை மோதிக்கு எதிரான பிரச்னையாக எதிர்கொள்வதுதான் விவேகமானது,” என்றார். “இதைத்தான் கார்கேவும் சொல்கிறார், ‘இப்போது எம்.பி.க்கள் ஜெயிப்பதுதான் முக்கியம், பிறகுதான் பிரதமர் யார் என்ற பிரச்னை’ என்று,” என்கிறார்.

மறுபுறம், மூத்த பத்திரிகையாளர் பிரசாந்த் தீட்சித், மல்லிகார்ஜுன் கார்கேவின் பெயரை மமதா முன்மொழிந்ததன் பின் வேறொரு நோக்கம் இருப்பதாகக் கூறுகிறார். இதன்மூலம் அவர் தனது பெயரை முன்வைக்கப் பார்ப்பதாகக் கூறுகிறார்.

இதன்மூலம் நிதிஷ் குமார் மற்றும் சரத் பவார் பெயர்கள் ஓரங்கட்டப்பட்டு, பிறகு கார்கேவின் பெயர் ரத்து செய்யப்பட்டு, அதன்பின் தனது பெயர் இரண்டாவது சுற்றில் முன்வைக்கப்பட வேண்டும் என்பதே மமதாவின் நோக்கம் என்று அவர் கருதுகிறார்.

“கார்கேவின் பெயரை பிகார் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது, ஏனெனில் நிதிஷ் குமார் தன்னையே முன்னிலைப் படுத்த விரும்புகிறார். மமதாவும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்,” என்று அவர் கூறுகிறார்.

தொகுதிப் பங்கீட்டு பேச்சு எந்த நிலையில் உள்ளது?

இந்தச் சந்திப்பில் தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய கார்கே, இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், பேச்சுவார்த்தையில் இடையூறு ஏற்பட்டால் கூட்டணி தலைவர்கள் முடிவு எடுப்பார்கள் என்றும் கூறியிருந்தார்.

யோகேந்திர யாதவின் கூற்றுப்படி, இது ‘ஒரு பொறிமுறையை உருவாக்கியுள்ளது’. “தொகுதிப் பங்கீடு குறித்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் மூன்று மாதங்களாக முடங்கியிருந்தன, இபோது மீண்டும் தொடங்கியுள்ளன. மேலும் பிராந்திய அளவில் இதற்கு முடிவு காணப்படவில்லையெனில் தேசிய அளவில் காணப்படும் என்பது முற்றிலும் சரியான முடிவாகும். குறைந்தபட்சம் முடங்கிய்ருந்த பேச்சுக்கள் துவங்கிவிட்டன, அதுதான் முக்கியம்,” என்றார்.

கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியிருந்த மமதா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் காங்கிரஸுடன் கூட்டணிக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். யஷ்வந்த் தேஷ்முக்கைப் பொறுத்தவரை, இது முக்கியமானது, ஏனெனில், மாநிலக் கட்சிகளுக்கு காங்கிரஸ் தேவையில்லை.

“மேற்கு வங்கத்தில், மமதாவின் வெற்றிக்கு காங்கிரஸ் அவசியமில்லை. காங்கிரசை மையமாக வைத்து முன்னேற முடியாது என்பதை அவர் புரிந்து கொண்டார். இதுதான் அவர் காங்கிரசுக்கு அனுப்பும் செய்தி. அதை காங்கிரஸ் ஏற்குமா?”

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »