Press "Enter" to skip to content

சட்டப் பிரிவு 370 தீர்ப்பு: தமிழகம் அல்லது சென்னையை யூனியன் பிரதேசமாக மத்திய அரசால் மாற்ற முடியுமா?

பட மூலாதாரம், ANI

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக உறுதி செய்துள்ளது. 

 ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது ஒரு மாநிலத்தை மத்திய அரசு இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க முடியுமா என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட மிக முக்கியமான கேள்வி. 

இந்தக் கேள்வி எதிர்காலத்தில் மிக முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது. ஏனென்றால் முதலில் குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திணிக்கவும், பின்னர் முழு மாநிலத்தையும் அல்லது அதன் ஒரு பகுதியையும் யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கான ஆயுதத்தை மத்திய அரசின் கையில் கொடுத்துள்ளது. 

பல சட்ட வல்லுநர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த முடிவு மாநிலங்கள் மீதான மத்திய அரசின் கட்டுப்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை தளர்த்துகிறது என்று நம்புகிறார்கள். 

இந்தியாவில் கூட்டாட்சி அமைப்பு பிரச்னை மிகவும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. மத்திய அரசு தங்களின் அதிகாரத்தை பறிப்பதாக பல மாநிலங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. 

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மசோதாக்களை கிடப்பில் போடுவதாக பல மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நலத் திட்டங்களுக்கான உத்தரவாத நிதி மற்றும் ஜிஎஸ்டியில் ரூ.1.15 லட்சம் கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறுகிறார். 

மேலும், ஒரே நாடு-ஒரே தேர்தல் என்ற எண்ணம், நாட்டின் அரசியல் மையப்படுத்தப்படும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது. 

370-வது சட்டப்பிரிவு

பட மூலாதாரம், SCREENGRAB/SUPREME COURT OF INDIA

நீதிமன்றத்தின் முன் உள்ள முக்கிய கேள்விகள்

அரசியலமைப்பின் 3-வது பிரிவு புதிய மாநிலங்களை உருவாக்கும் செயல்முறையை குறிப்பிடுகிறது. 

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களை இணைத்து அல்லது பிரித்து புதிய மாநிலங்களை நாடாளுமன்றம் உருவாக்கலாம் என்று கூறுகிறது. 

இதற்காக குடியரசுத் தலைவரின் பரிந்துரைகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தலாம். அதன் பிறகு அதை மாநிலங்களவையில் தாக்கல் செய்வது கட்டாயமாகும்.

2019-ஆம் ஆண்டில், குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் ஜம்மு-காஷ்மீர் இருந்தபோது, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

இதன் கீழ், ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசங்களும், லடாக்கில் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமும் உருவாக்கப்பட்டன. 

எனவே, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் அமைக்கப்பட்டது செல்லுபடியாகுமா, இல்லையா என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட மிக முக்கியமான கேள்வி. 

அபிஷேக் மனு சிங்வி

பட மூலாதாரம், ANI

நீதிமன்றம் என்ன சொன்னது?

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அமைக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றம் தனது கருத்தை தெரிவிக்கவில்லை. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளதால், ஒரு மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கலாமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 

இருப்பினும், யூனியன் பிரதேசமாக லடாக் உருவாக்கப்பட்டதை நீதிமன்றம் நியாயப்படுத்தியது. குடியரசுத் தலைவர் ஆட்சியில் இருந்தாலும், எந்த ஒரு மாநிலத்திலிருந்தும் யூனியன் பிரதேசத்தை உருவாக்குவதற்கு 3-வது பிரிவின் கீழ் மத்திய அரசுக்கு உரிமை உண்டு என்று நீதிமன்றம் கூறியது.

குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவரின் நடவடிக்கைகளுக்கு வரம்புகள் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

அசாதுதீன் ஓவைசி

பட மூலாதாரம், GETTY IMAGES

எதிர்க்கட்சிகள் கூறுவது என்ன?

இந்த முடிவு கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். 

ஒரு மாநிலம் முழுவதையும் யூனியன் பிரதேசமாக மாற்ற முடியுமா என்பது குறித்து நீதிமன்றம் எந்த முடிவையும் வழங்காதது ஏமாற்றம் அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மூத்த வழக்குரைஞரும், காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், அரசியலமைப்புச் சட்டத்தின்படி இதைச் செய்ய அரசுக்கு உரிமை இல்லை என்றார்.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) கருத்துப்படி, இந்த முடிவு மாநிலங்களின் கட்டமைப்பை ஒருதரப்பாக தீர்மானித்து மாற்றுவதற்கான உரிமையை மத்திய அரசுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த முடிவால், ‘சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் அல்லது மும்பையை யூனியன் பிரதேசமாக்குவதில் மத்திய அரசுக்கு எந்தத் தடையும் இருக்காது’ என்று எம்.பி. அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார். 

நரேந்திர மோதி

பட மூலாதாரம், GETTY IMAGES

தமிழ்நாடு உள்பட எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக்கலாம் – சட்ட நிபுணர்

அரசியலமைப்பு சட்ட நிபுணர் அனுஜ் புவானியா, “ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக பிரிக்கும் விவகாரத்தில் முடிவெடுக்காதது அப்பிரச்னையை முற்றிலும் மறுப்பதாகும்” என்றார். 

மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளதால், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் விவகாரத்தில் தீர்ப்பளிப்பதை நீதிமன்றம் மறுக்க முடியாது என்று அவர் கூறுகிறார். 

“புதிய மாநிலங்களை உருவாக்கவும், மாநில எல்லைகளை மாற்றவும் மத்திய அரசு ஒருதரப்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில், 3-வது பிரிவு எழுதப்பட்டிருப்பதால், அதை தவறாகப் பயன்படுத்தாத வகையில் நீதிமன்றம் விளக்கம் அளித்திருக்கலாம்” என்றார் அனுஜ் புவானியா.

“நாடாளுமன்றம் என்ன திருத்தங்களைச் செய்யலாம் என்பதைத் தீர்மானிக்கும் இத்தகைய அடிப்படைக் கோட்பாட்டு கட்டமைப்பை நீதிமன்றம் வழங்கியிருப்பதை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். இந்த வழக்கிலும் இதே போன்ற விளக்கத்தை நீதிமன்றம் அளித்திருக்கலாம்” என அவர் தெரிவித்தார்.”ஆனால், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது,” என்று அவர் தெரிவித்தார். 

ஆங்கில செய்தித்தாள் ’தி இந்து’வில் இதுகுறித்து வெளியான கட்டுரையில், ”இந்த முடிவானது குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும், அரசியலமைப்புத் திருத்தங்களை அங்கீகரிப்பது அல்லது முக்கியமான வழக்குகளை திரும்பப் பெறுவது போன்ற பெரிய மாற்றங்களைச் செய்யவும் மத்திய அரசுக்கு உரிமை அளிக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த வழக்குரைஞரும், சட்ட நிபுணருமான ஃபாலி நாரிமன் அளித்த பேட்டியில், ”இந்த முடிவின் விளைவாக இந்தியா ஒரு நாடாக மையப்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.

மற்றொரு சட்ட நிபுணர் அலோக் பிரசன்னா ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’-இல், “உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் நேரடி விளைவு என்னவென்றால், மத்திய அரசு விரும்பும் போதெல்லாம், எந்த காரணத்தையும் கூறி எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றலாம்” என எழுதியுள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »