Press "Enter" to skip to content

தமிழ்நாட்டில் மழை, வெள்ள மீட்புப் பணியின் பின்னணியில் நடக்கும் அரசியல் என்ன?

பட மூலாதாரம், X/Udhay

தென் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த அதி அடைமழை (கனமழை)யால், காணுமிடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளித்தது. திங்கட்கிழமை மழை நின்ற நிலையில், கடந்த இரண்டு தினங்களாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

மீட்புப் பணிக்காக தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினின் உத்தரவின்பேரில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் மூத்த ஐஏஎஸ்அதிகாரிகள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீட்புபணிக்காக பாதிக்கப்பட்ட மக்களுடன் இல்லாமல், செவ்வாய்கிழமை டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு சென்றது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

அதி அடைமழை (கனமழை)யால் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பும், வெள்ள நிவாரணப் பணிகளும் திமுகவிற்கு எதிராக அரசியலாக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தென் மாவட்டங்களில் வெள்ளபாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆனால், இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு அழைப்பு விடுத்தும் தமிழ்நாடு அரசின் சார்பில் யாரும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவில்லை என ஆளுநர் மாளிகைத் தரப்பு தெரிவித்தது.

இதனால், மாநில அரசுத் துறைகளும், மத்திய அரசுத் துறைகளும் இணைந்து பணியாற்றுவதில் சிக்கல் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வெள்ள நிவாரணப்பணிகள் அரசியலாக்கப்படுவது எப்படி? இது திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா? மத்திய, மாநில அரசுத்துறைகள் இணைந்து செயல்படுவதில் உண்மையில் சிக்கல் உள்ளதா?

மழை வெள்ள நிவாரணப் பணியிலும் அரசியலா?

மழை வெள்ளத்தால் இடிந்து தரைமட்டமான வீடு

அதிகன மழை பெய்த உடனே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி கருணாநிதி, ஞானதிரவியம், அமைச்சர் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆகியோர் களத்திற்கு அனுப்பப்பட்டனர்.

தமிழ்நாடு முதல்வர் டெல்லி பயணத்திற்கு முன், இவர்களுடன் கூடுதலாக அமைச்சர்கள் ஏ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் மற்றும் பி.மூர்த்தி ஆகியோரை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு நியமித்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆய்வுப் பணிக்காக தென் மாவட்டங்களுக்கு அனுப்பியதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் விமர்சித்துள்ளார்.

“அவர் ஒரு விளையாட்டு அமைச்சர். அவர் விளையாட்டாக வந்துவிட்டு, விளையாட்டாக போய்விட்டார். அவருக்கு இங்கு ஏற்பட்டுள்ள உண்மையான பாதிப்புகள் தெரியாது,” என திருநெல்வேலி மாவட்டத்தில் நிவாரண உதவிகள் வழங்கச் சென்றிருந்தபோது செய்தியார்களிடம் கூறினார்.

இதே கருத்தை பிரதிபலிக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “வெள்ள பாதிப்புகளை கண்டு கொள்ளாமல், கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்கு சென்றது, தமிழ்நாடு மக்களிடம் குறிப்பாக தென் மாவட்ட மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவர் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டது போல ஊடகங்களில் செய்தி வெளியிடுகிறார்,” என்று விமர்சித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம், UDHAYANITHI STALIN/ X

மழை பாதிப்புகளுக்கு மக்கள் அரசை குறை சொல்லவில்லை என்று கூறும், அரசியல் ஆய்வாளர் எஸ்.சத்தியமூர்த்தி, மழைக்கு பிந்தைய நிவாரண உதவிகளை சரியாகச் செய்யவில்லை என்றால், அது திமுக.விற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றார்.

“சென்னை வெள்ளமோ, அல்லது தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அதி அடைமழை (கனமழை)யோ, இதற்கு அரசால் எதுவும் செய்ய முடியாது என்பதை மக்கள் புரிந்துள்ளனர். ஆனால், மக்கள் எதிர்பார்ப்பது எல்லாம், பாதிப்பிற்கு பிறகு அரசு மக்களுடன் இருக்க வேண்டும் என்பது தான். ஆனால், தென் மாவட்டங்களில் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு, அவர்கள் ஒவ்வொரு வீடாக நிவாரணம் வழங்க வேண்டும்,” என்றார்.

மேலும், இந்த நிவாரணங்களை ஒரு மாதத்திற்குள் வழங்கவில்லை என்றால், இது திமுக,விற்கு வரும் தேர்தலில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறினார்.

“ஒரு அசம்பாவிதத்தை அரசியலாக்க முயன்றால், அது மக்களிடம் செல்லாது. ஆனால், அதற்குப் பிறகு விரைவாக செயல்பட வேண்டும். ஆனால், நாடாளுமன்ற தேர்தலுக்கு மிகக் குறுகிய காலமே உள்ளதால், திமுக அரசு விரைவாக செயல்பட்டால் மட்டுமே பாதிப்புகளை தவிர்க்க முடியும். இல்லை என்றால், தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது,” என்றார்

“ஸ்டாலினுக்கு கூட்டணி முக்கியம்”

எதிர்க்கட்சி கூட்டணிக் கூட்டம்

பட மூலாதாரம், AITCofficial/X

ஆனால், ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளது விமர்சனத்திற்குள்ளாகி இருப்பது தொடர்பாக பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, ஸ்டாலினுக்கு அனைத்தையும்விட கூட்டணி மிகவும் முக்கியம் என்றார்.

“வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணியும், ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் ஸ்டாலிணுக்கு முக்கியம். அதேவேளையில், ஸ்டாலினை விமர்சிப்பதன் மூலம், அதிருப்தி ஒட்டுகளை அறுவடை செய்யும் ஆசையில், அதனை அதிமுகவிற்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது என அண்ணாமலையும், அன்புமணி ராமதாஸூம், சீமானும் விமர்சனம் செய்து வருகின்றனர்,” என்றார் ரவீந்திரன் துரைசாமி.

வெள்ளம் வந்தது வேண்டுமானால் இயற்கையாக இருக்கலாம், ஆனால், அதற்கு பின் நடப்பவை அனைத்திலும் அரசியல் இருப்பதால், அது அரசியலாக்கப்படுகிறது, என்றும் கூறினார் ரவீந்திரன் துரைசாமி.

“மாரிசெல்வராஜை அழைத்துச் சென்றதும் ஓர் அரசியல் தான்”

உதயநிதி ஸ்டாலினும், மாரி செல்வராஜூம்

திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளத்தைச் சேர்ந்தவர் என்பதால், வெள்ளத்தில் சிக்கியிருந்த தன் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரை மீட்க நேற்று முன் தினம் அவர் திருநெல்வேலியில் இருந்தார்.

அப்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டபோது, மாரிசெல்வராஜூம் உடன் இருந்தார். இதனை பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்திருந்தனர்.

நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “நிதியமைச்சரைப் பின்னுக்குத் தள்ளி, தனது படத்தை இயக்கிய மாரி செல்வராஜூடன் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தன்னுடைய ஆய்வுப் பணிகளுக்கு எல்லாம் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆக்ஷன் சொல்ல வேண்டும் என உதயநிதி நினைக்கிறார்,” எனக் கூறினார்.

சமூக ஊடகங்களில் வெளியான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், இன்று காலை ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல …நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது,” என எழுதியிருந்தார் மாரி செல்வராஜ்.

ஆனால், உதயநிதி தன்னுடன் மாரிசெல்வராஜை அழைத்துச் சென்றதும் ஒரு அரசியல் தான் என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.

“தென் தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினரை மத்தியில் பாஜக.,வும், நாம் தமிழர் கட்சியினரும் கணிசமான ஆதரவு பெற்றுள்ளனர். அதனால், திமுக.விற்கு அவர்கள் மத்தியில் அவ்வளவு ஆதரவு இல்லை. தற்போது, மாரிசெல்வராஜை தன்னுடன் அழைத்துச் சென்றதன் மூலம், அந்த மக்கள் மத்தியில் திமுக.விற்கான ஆதரவு அதிகரிக்கும். இதுவும் ஒரு அரசியல் தான்,”என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.

மாரி செல்வராஜ் ட்வீட்

பட மூலாதாரம், X/Mari Selvaraj

ஆளுநர் – அரசு இடையே நடந்தது என்ன?

தேசிய பேரிடர் மீட்புப்டையினர்

பட மூலாதாரம், NDRF

இதற்கிடையில், தமிழ்நாடு ஆளுநர் ரவி அழைத்திருந்த ஆய்வுக் கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அதிகாரிகள் செல்லாததும் விமர்சனத்திற்குள்ளனது. இதனால், மாநில மற்றும் மத்திய அரசுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை எனப் பேசப்பட்டது.

இதுகுறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “ திருவனந்தபுரம் மற்றும் ஊட்டியில் இருந்து வரவழைக்கப்பட்ட 105 ராணுவ வீரர்கள், அரக்கோணம் மற்றும் ஆவடியில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட தேசிய பேரீடர் மீட்புப்படையினர், மற்றும் கடலோர காவல்படையினர் இணைந்து, வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் மத்திய அரசுத் துறையினர்தான். இவர்கள் மாநில அரசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்துதான் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மத்திய, மாநில அரசு துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை,” என்றார் அவர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »