Press "Enter" to skip to content

வெள்ளத்தால் சிதைந்த தூத்துக்குடி – பிபிசி செய்தியாளர்கள் கண்ட கோரக் காட்சிகள்

மழை பெய்து நான்கு நாட்களுக்குப் பிறகும் தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மிதக்கின்றன. உதவிகளைக் கோரி பல பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடியை இணைக்கிறது தேசிய நெடுஞ்சாலை 138. இந்த இரு நகரங்களுக்கு இடையிலான சுமார் 50 கி.மீ. தூரத்தை இந்த நான்கு வழிச் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்தில் கடந்துவிட முடியும். ஆனால், புதன்கிழமையன்று பகலில் இந்த சாலையைக் கடக்க கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்களுக்கு மேல் ஆனது.

காரணம், இந்தச் சாலையின் இரு புறங்களிலும் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லையெனக் கூறி, ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் ஒரு இடத்தில் பொது மக்களை சமாதானம் செய்து, போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினால், வேறொரு இடத்தில் சாலை மறியல் நடக்க ஆரம்பித்தது.

பல வாகனங்கள், சில கிலோமீட்டர் தூரத்தில் நடக்கும் இரு வேறு சாலை மறியல்களுக்குள் சிக்கிக் கொண்டு எங்கேயும் செல்ல முடியாமல் தவித்தனர் அல்லது ஒரு சாலை மறியலைக் கடந்து சென்றால் இன்னொரு சாலை மறியலில் சிக்கிக்கொண்டனர்.

தமிழ்நாடு, அடைமழை (கனமழை), வெள்ளம், இயற்கை, சுற்றுச்சூழல்

பாதிப்பிலிருந்து மீளாத தூத்துக்குடி மாவட்டம்

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று பெய்த மழையில் உருவான காட்டாற்று வெள்ளம் அந்தோணியார் புரம் அருகில், இந்த நான்கு வழிச் சாலையை உடைத்துக்கொண்டு சென்றது. செவ்வாய்க்கிழமைதான் ஒரு ஓரமாக தற்காலிகச் சாலை அமைக்கப்பட்டிருந்தது.

பல மணி நேரக் காத்திருப்பிற்குப் பிறகு, தூத்துக்குடி நகரைச் சென்றடைந்தால், நகரின் பல இடங்களிலும் இதேபோல சாலை மறியல்கள் நடந்துகொண்டிருந்தன.

சனி – ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்த பெரு மழையில் இருந்து தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் நகர்ப்புறப் பகுதிகள் மீண்டுவிட்டாலும், தூத்துக்குடி நகரம் இன்னும் மீளவில்லை.

புதன்கிழமையன்றும்கூட, நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், அம்பேத்கர் நகர், ஸ்டேட் பாங்க் காலனி, தபால் தந்தி காலனி உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நிற்கிறது.

பல பிரதான சாலைகளில் முழங்கால் அளவுக்கு மேல் புதன்கிழமையன்றும் தண்ணீர் தேங்கியிருந்ததால், ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வது இன்னமும் சிக்கலானதாகவே இருக்கிறது.

தமிழ்நாடு, அடைமழை (கனமழை), வெள்ளம், இயற்கை, சுற்றுச்சூழல்

பட மூலாதாரம், வள்ளிநாயகம் சுட்கி/Facebook

வெள்ளத்தில் மூழ்கியுள்ள பல கிராமங்கள்

மழை நீர் தேங்கியிருப்பது ஒரு பிரச்சனை என்றால், இதன் காரணமாக பல இடங்களில் இன்னும் மின்சாரம் தரப்படாதது இதைவிட பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

இதனால், குடிநீர், புழங்குவதற்கான நீர், மொபைல் இணைப்பு போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டிக்கின்றன. மின்சாரம் தரக் கோரியும் உணவு, குடிநீர் போன்றவற்றைக் கோரியும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் தங்களை வந்து பார்க்க வேண்டும் எனக் கோரியும் பொது மக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் உருவான வழி மண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த சனிக்கிழமையன்று காலையில் பெய்ய ஆரம்பித்த மழை திங்கட்கிழமை காலை வரை பெய்தது. இதனால், தூத்துக்குடி நகரமும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களும் வெள்ள நீரில் மூழ்க ஆரம்பித்தன.

தூத்துக்குடி – திருநெல்வேலி, தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலைகள் துண்டிக்கப்பட்டன. கோரம்பள்ளத்திற்கு அருகில் சாலையை உடைத்துக்கொண்டு சென்ற வெள்ளம் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்ததில் சுமார் ஐயாயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டன.

இங்கிருந்த மக்கள் மீட்கப்பட்டு, திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் தற்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

தமிழ்நாடு, அடைமழை (கனமழை), வெள்ளம், இயற்கை, சுற்றுச்சூழல்

வீணான 1500 யூனிட் இரத்தம்

கிராமங்களில் தான் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்தது என்றால், தூத்துக்குடி நகருக்குள் நிலவரம் அதைவிட மோசமாக இருந்தது. நகரின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கின. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்பளவுக்கு தண்ணீர் புகுந்தது. இதனால், மருத்துவ சேவைகளை அளிப்பதில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. தரைத் தளத்திற்குள் தண்ணீர் புகுந்ததில் இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய ‘கேத் லேப்’ பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதிலிருந்த கருவிகளும் தண்ணீரில் மூழ்கின.

அதேபோல இரத்த வங்கியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 யூனிட் ரத்தம் வீணாகப் போனது. மழை நீர் உள்ளே புகுந்தவுடன், கீழ்த் தளத்தில் இருந்த நோயாளிகள் மேல் தளத்திற்கு மாற்றப்பட்டனர். ஆனால், இந்தப் பிரச்சனையைத் தாண்டியும் இங்குள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையும் உணவும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு, அடைமழை (கனமழை), வெள்ளம், இயற்கை, சுற்றுச்சூழல்

குறிப்பாக, மழை நீர் சூழ்ந்திருந்த நிலையிலும் ஞாயிற்றுக் கிழமையும் திங்கட்கிழமையும் சில பிரசவங்களும் நடந்திருக்கின்றன. புதன்கிழமையன்று மழை நீர் சற்று வடிந்திருந்தாலும் வளாகத்தின் பல பகுதிகளில் மழை நீர் முழங்கால் அளவுக்கு இன்னமும் தேங்கியிருக்கிறது. அவசர நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி, தற்போது தரைத் தளத்தில் துவங்கியிருக்கிறது.

தூத்துக்குடியிலிருந்து காயல்பட்டனத்திற்குச் செல்லும் சாலையில் ஆத்தூர் அருகே வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால், தூத்துக்குடியிலிருந்து அந்தப் பகுதியை அணுக முடியாத நிலையே நீடிக்கிறது. கடந்த சனி – ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழ்நாட்டிலேயே அதிக மழை பெய்த பகுதியான காயல்பட்டனத்தில் பல பகுதிகள் இன்னமும் மழை நீரில் மூழ்கியிருக்கின்றன.

தமிழ்நாடு, அடைமழை (கனமழை), வெள்ளம், இயற்கை, சுற்றுச்சூழல்

இயல்பு நிலை திரும்ப பல நாட்களாகும்

திருநெல்வேலி, தூத்துக்குடியை சுற்றியுள்ள கிராமங்கள் பலவும் இதேபோல மழை நீரால் சூழப்பட்டிருப்பதால், இந்தக் கிராமங்களுக்கு புதன்கிழமையன்றும் உலங்கூர்தி மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடா் மேலாண்மைக் குழுவின் ஆலோசகா் கா்னல் கே.பி.சிங் தலைமையிலான மத்திய குழுவினா் ஆறு பேர் புதன்கிழமையன்று பார்வையிட்டனர்.

தூத்துக்குடி நகரில் மழையின் பாதிப்பு நீடிப்பதால், டிசம்பர் 21ஆம் தேதியும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி நகருக்கு தொடர் வண்டிசேவையும் தூத்துக்குடிக்கு விமான சேவையும் துவங்கப்பட்டுவிட்டன என்றாலும்கூட, இந்தப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப இன்னும் பல நாட்கள் தேவைப்படும்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »