Press "Enter" to skip to content

பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை: எம்.எல்.ஏ, அமைச்சர் பதவியை இழந்தார் – அடுத்து என்ன?

பட மூலாதாரம், PONMUDI

திமுக அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர் குற்றவாளி என அறிவித்தது.

இந்த வழக்கின் தண்டனையை இன்று (டிசம்பர் 21) அறிவிப்பதாகவும் இதில் தொடர்புடைய அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை ஆஜராகும்படியும் உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இன்று காலையில் சென்னை உயர்நீதிமன்றம் வந்தடைந்தனர்.

இன்று காலையில் தண்டனை விவரங்களை அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, இந்தத் தண்டனை மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்காக 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடு செய்தால் சிறை செல்வதில் இருந்து தப்பலாமா?

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து, மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துகொள்ளலாம். ஆனால், இதன்மூலம் அவர் சிறை செல்வதில் இருந்து தப்ப முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

இதற்குப் பதிலளித்த மூத்த வழக்கறிஞர் கே.என்.விஜயன், “மேல்முறையீடு செய்வதாலேயே அவர்களது சிறைக்குச் செல்வதைத் தடுத்துவிட முடியாது. மாறாக, தங்களது தண்டனையை மேல்முறையீட்டு வழக்கின் முடிவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

உயர்நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்தது முதல் அவர் அமைச்சர் பதவியை இழந்ததாகிவிடும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வழக்கின் பின்னணி என்ன?

அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2006-11 ஆம் ஆண்டு காலத்தில், திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016 ஆம் ஆண்டு, பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்தத் திர்ப்பை எதிர்த்து, அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேல் முறையீடு செய்தனர்.

மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், நேற்று பொன்முடி மற்றும் விசாலாட்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, அவர்கள் குற்றவாளிகள் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கின் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ஊழல் தடுப்புச் சட்டத்தில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளதால், அவர் தீர்ப்பு வந்ததில் இருந்தே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் எம்.எல்.ஏ.,விற்கான தகுதியை இழப்பதாகக் கூறினார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.

அமைச்சர் பொன்முடியின் பின்னணி என்ன?

அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு

பட மூலாதாரம், PONMUDI

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர்.தமிழக அமைச்சரவையின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1989ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினராகி படிப்படியாக வளர்ந்து ஒருகினைந்த விழுப்புரம் மாவட்டத்தின் திமுகவின் மாவட்ட செயலாளர் பதவிக்கு உயர்ந்தார். தற்போது துணைப் பொதுச்செயலாளராக உள்ளார்.

இவர் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் டி.எடையார் கிராமத்தில் ஆகஸ்ட் 19, 1950ஆம் ஆண்டு பிறந்தார். வரலாறு, அரசியல் மற்றும் பொதுத்துறை நிர்வாகம் ஆகிய துறையில் முதுநிலைப் பட்டமும், வரலாற்றில் முனைவர் பட்டமும் பெற்றவர் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

பொன்முடி 1989ஆம் ஆண்டு முதல் திமுகவில் முக்கியப் பதவிகளில் உள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இதே திருக்கோவிலூர் தொகுதியில் மீண்டும் வென்று ஆறாவது முறையாக ஆட்சியமைத்த திமுக அமைச்சரவையில் 2021 மே 7 அன்று உயர்கல்வித் துறை அமைச்சராகப் பதவி ஏற்றார்.

மேலும் 2 அமைச்சர்களுக்கு சிக்கல்

அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து மொத்தம் மூன்று அமைச்சர்களின் வழக்குகளை மறு விசாரணைக்கு எடுத்துள்ளது.

கடந்த 1996-2001ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அந்த ஆட்சிக்காலத்தில், வருமானத்திற்க அதிகமாக 1.36 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் 2002ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்குப்பதிவு செய்தனர்.

இருபது ஆண்டுகளாக விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு, இந்த ஆண்டு வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு கடந்த ஜூன் 28ஆம் தேதி அமைச்சர் மற்றும் அவரது மனைவியை விடுவித்து தீர்ப்பளித்தது.

அதேபோல, 2006-11 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார் தங்கம் தென்னரசு. அமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக 74.58 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக 2012 ஆம் ஆண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

திமுக-வை புரட்டிப் போட்டுள்ளது: அண்ணாமலை

அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை: மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைப்பு

பட மூலாதாரம், FACEBOOK/K.ANNAMALAI

இந்த வழக்கில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்பளித்த கீழமை நீதிமன்றம், அவரையும், அவரது மனைவியையும் விடுவித்தது. தற்போது, தங்கம் தென்னரசு நிதித் துறை அமைச்சராக உள்ளார். இந்த வழக்கையும் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துள்ளது.

அதேபோல, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் 2006-2011 ஆட்சிக்காலத்தில், சுகாதாரத்துறை அமைச்சராகவும், பிறகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக ரூ 44.59 லட்சம் சொத்து சேர்த்ததாக 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்புதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கிலும், கடந்த ஆண்டு கீழமை நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்த வழக்கையும் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தாமதமாக இருந்தாலும் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. ஒரு அமைச்சர் புழல் சிறையில் இருந்துகொண்டு இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். மூத்த அமைச்சர் ஒருவர் குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதே பட்டியலில் மேலும் சில அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆகவே, இதை ஒரு தனிப்பட்ட நபரின் பின்னடைவு எனப் பார்க்க முடியாது. இது திமுகவுக்கே பின்னடைவு. அவர்கள் செய்யும் அரசியலையே புரட்டிப் போட்டுள்ளது,” என்று கூறியுள்ளார்.

பாஜக-வை ஏற்றுக்கொண்டால், தண்டனையில் இருந்து தப்பலாம் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அண்ணாமலை, நீதிமன்ற நடவடிக்கைகள் வேறு, நிர்வாக ரீதியாக, அரசியல் ரீதியாக கட்சி எடுக்கும் நடவடிக்கை வேறு என்றும் இரண்டையும் தொடர்புபடுத்தி களங்கம் ஏற்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்தார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »