Press "Enter" to skip to content

மாசடைந்த காற்றை வலிந்து சுவாசிக்கும் தன்னார்வலர்கள்: மூளையை பாதிக்கும் அபாயம்

பட மூலாதாரம், TONY JOLLIFFE/ BBC

மான்செஸ்டரில் உள்ள ஓர் ஆய்வகத்தில், மாசுபட்ட காற்றை சுவாசிக்க உதவும் முகமூடிகளை தன்னார்வலர்கள் அணிந்திருப்பதைக் காண முடிகிறது.

மூளையை இந்த மாசு எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் முயற்சியில், டீசல் முதல் துப்புரவுப் பொருட்கள் வரை பல்வேறு வகையான பொருட்களில் இருந்து வரும் புகைகளை அவர்கள் சுவாசிக்கின்றனர்.

இந்த சோதனைக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளையும் சோதனைகளின் முடிவுகளையும் விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்கின்றனர்.

காற்றின் தரம் நுரையீரல் மற்றும் இதய அமைப்பைப் பாதிக்கிறது என்பது நன்கு அறியப்பட்டாலும், மூளையில் அதன் பாதிப்பு குறித்து குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளின் அறிவுத் திறனை பாதிக்கும் காற்றுமாசு

காற்று மாசு, சுற்றுச்சூழல், இயற்கை, மாசுபாடு, சூழல் மாசடைதல்

பட மூலாதாரம், TONY JOLLIFFE/BBC

லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் நச்சுவியலாளரான மருத்துவர் இயன் மட்வே, ஆய்வுக்குத் தலைமை தாங்கும் விஞ்ஞானிகளில் ஒருவர்.

“கடந்த 10 ஆண்டுகளில், காற்று மாசுபாடு மற்றும் மூளை சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே உள்ள தொடர்புகளை நாங்கள் ஆய்வு செய்யத் தொடங்கினோம்.

குழந்தைகள் எப்படி கற்றுக்கொள்கிறார்கள் என்பது முதல் அவர்களின் அறிதிறன் மாறும் விதம், மன ஆரோக்கியம் மற்றும் டிமென்ஷியா வருவதற்கான அபாயங்கள் வரை ஆய்வு செய்தோம்,” என்று கூறுகிறார்.

அவர் தொடர்ந்து கூறியது, “மனித மூளையில் ஏற்படும் பாதகமான விளைவுகளுக்கும் காற்று மாசுபாட்டிற்கும் என்ன தொடர்பு மற்றும் அந்தத் தொடர்பிற்கான உயிரியல் வழிமுறைகள் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கான சோதனைகளில் இந்த ஆய்வின் மூலமாக ஈடுபடுகிறோம்.”

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு ஆராய்ச்சியாளர்கள் நான்கு வெவ்வேறு வகையான மாசுப்பட்ட காற்றை உருவாக்குகின்றனர். டீசல் புகை, மரப் புகை, துப்புரவுப் பொருட்கள் மூலம் வரும் புகை மற்றும் சமையல் புகைகள் (பன்றி இறைச்சியை ஒரு புகைக்கூண்டில் வறுத்ததன் மூலம் உருவாக்கப்பட்டது).

மாசு அளவுகள் கவனமாக அளவிடப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு பின்னர் ஓர் அறைக்குள் (அடிப்படையில் ஒரு அறை அளவிலான நெகிழி (பிளாஸ்டிக்) பை) அனுப்பப்பட்டு, பின்னர் தன்னார்வலர்களுக்கு சுவாசிக்க குழாய் மூலம் அனுப்பப்படுகிறது.

காற்று மாசு, சுற்றுச்சூழல், இயற்கை, மாசுபாடு, சூழல் மாசடைதல்

பட மூலாதாரம், TONY JOLLIFFE/BBC

மாசுபட்ட காற்றை சுவாசிக்கும் தன்னார்வலர்கள்

தன்னார்வலர்கள் பல மாதங்களுக்குத் தொடர்ந்து ஆய்வகத்திற்கு வருகிறார்கள். ஒவ்வொரு முறை வரும்போதும் ஒரு மணிநேரத்திற்கு ஏதேனும் ஒரு வகையான மாசடைந்த காற்று மற்றும் ஒரு சுத்தமான காற்றை சுவாசிக்கிறார்கள்.

சோதனைகள் நடக்கும்போது அவர்கள் எதை சுவாசிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் வளிமண்டல அறிவியல் மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் கார்டன் மெக்ஃபிகன்ஸ், “வீட்டிற்கு உள்ளே மற்றும் வெளியே நாம் சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்தக்கூடிய ஒரு பொருளால் மூளைக்கு ஏற்படும் தீங்குகளைத் தெரிந்துகொள்வதே இதன் முக்கிய நோக்கம்,” என்று கூறுகிறார்.

வீட்டுக்குள் அதிகமாக இருக்கும் காற்று மாசு

“வெளிப்புற காற்று மாசுபாட்டைவிட உட்புற காற்று மாசுபாடு உண்மையில் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன,” என்று அவர் விளக்கினார்.

“நீங்கள் ஜன்னலை திறக்கும்போது அல்லது வீட்டில் ஓர் இயந்திர காற்றோட்ட முறை இருக்கும்போது, வெளிப்புற மாசுகளை உள்ளேயும் உட்புற மாசுகளை வெளியேயும் கொண்டு செல்ல முடியும். இவ்வாறு இத்தகைய மாசுகள் எல்லோரையும் சென்றடையும்.”

“நாம் செய்ய வேண்டியது தனிநபர்களுக்கு சில விரிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். அதனால் அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய பல்வேறு வகையான தாக்கங்களின் சாத்தியக்கூறுகளை அறிந்துகொள்வார்கள்,” என்று கூறுகிறார் மெக்ஃபிகன்ஸ்.

காற்று மாசு, சுற்றுச்சூழல், இயற்கை, மாசுபாடு, சூழல் மாசடைதல்

பட மூலாதாரம், TONY JOLLIFFE/BBC

மூளை சோதனைகள், அறிதிறன் செயல்பாட்டைச் சோதிப்பதற்கான நேரடி வழி என்று ஆய்வுக் குழு கூறுகிறது. அதே நேரத்தில் உயிரியல் மாதிரிகள் மூலமாக உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

“மாசு எந்த வழிகளில் மூளையைப் பாதிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளவே நாங்கள் விரும்புகிறோம்,” என்று பேராசிரியர் மெக்ஃபிகன்ஸ் கூறுகிறார்.

மாசுபடுத்திகள் நேரடியாக மனித மூளையைச் சென்றடைகிறதா அல்லது அது மறைமுகமாகப் பாதிக்கிறதா என்பதையும், அதை நிரூபிக்கவும் குழு விரும்புகிறது என அவர் கூறுகிறார்.

“ஒரு சாத்தியக்கூறு என்னவென்றால், மாசுபடுத்திகள் நுரையீரல் போன்ற உடலின் மற்ற பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. பின்னர் இந்த உயிரியல் செயல்முறையால் உற்பத்தி செய்யப்படும் ரசாயனங்கள் மூளைக்குச் செல்கின்றன. ஆனாலும் இப்போதைக்கு அது குறித்து முழுமையாகச் சொல்ல முடியாது,” என அவர் கூறுகிறார்.

காற்று மாசு, சுற்றுச்சூழல், இயற்கை, மாசுபாடு, சூழல் மாசடைதல்

பட மூலாதாரம், TONY JOLLIFFE/BBC

பெரும்பாலான மக்கள் மாசடைந்த காற்றை சுவாசிக்கிறார்கள்

உலக மக்கள்தொகையில் 99% மக்கள் மாசுபட்ட காற்றையே (ஐக்கிய நாடுகளின் மாசுபாடு வரம்பை மீறிய காற்று) சுவாசிக்கிறார்கள் என்றும், மேலும் வெளிப்புற மற்றும் உட்புற காற்று மாசுபாட்டின் விளைவுகள் காரணமாக ஒவ்வொதர் ஆண்டும் ஏழு மில்லியன் பேர் இறக்கிறார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

மாசடைந்த காற்று மூளையின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி மேலும் புரிந்துகொள்வது இன்றியமையாதது என்று இந்த ஆய்வுக் குழு கூறுகிறது.

இது 13 நபர்களை உள்ளடக்கிய ஒரு சிறிய ஆய்வு எனத் தோன்றினாலும் கூட, இது மிகப்பெரிய பகுப்பாய்வுகளில் ஒன்று.

ஏனென்றால், ஒவ்வொரு தன்னார்வலரும் தனித்தனியாக நான்கு மாசடைந்த காற்றை (மற்றும் சுத்தமான காற்று) சுவாசித்து, கிடைக்கும் முடிவுகள் ஒன்றோடு ஒன்று ஒப்பிடப்பட்டு, பின்னர் ஒவ்வொரு தன்னார்வலரின் தனிப்பட்ட முடிவுகளுடன் குறுக்கு ஒப்பீடு செய்யப்பட்டு, புள்ளிவிவர ரீதியில் துல்லியமாக இருக்கும் பகுப்பாய்வு வெளியிடப்படுகிறது.

‘தன்னார்வலராக இருப்பது மகிழ்ச்சியே’

காற்று மாசு, சுற்றுச்சூழல், இயற்கை, மாசுபாடு, சூழல் மாசடைதல்

பட மூலாதாரம், TONY JOLLIFFE/BBC

இந்த சோதனைக்கான தன்னார்வலர்களில் பிரையோனி ஈவன்ஸும் ஒருவர்.

அறிவியலின் பெயரால் மாசுப்பட்ட காற்றை சுவாசிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறுகிறார். மேலும் ஒரு புத்தகத்தைப் படிப்பதன் மூலமாகக் காற்றை சுவாசிக்கும் அறையில் தனக்கு நன்றாகப் பொழுது போவதாகக் கூறுகிறார்.

தொடர்ந்து பேசியவர், “இதுபோன்ற விஷயங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை விஞ்ஞானிகள் பெறுவதற்கும், ஒரு சிறந்த ஆய்விற்கு உதவவும் எனது நேரம் மிகவும் பயனுள்ள வகையில் கழிகிறது என்பதை உணர்கிறேன்”

“நமக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய விஷயங்களையும், நமது அன்றாட வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றையும் கண்டறிய உதவுவது உண்மையிலேயே ஒரு சிறந்த செயலாக எனக்கு தோன்றுகிறது,” என்கிறார் பிரையோனி.

இந்த ஆய்வின் முடிவுகள் வரும் மாதங்களில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »