Press "Enter" to skip to content

நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு கொந்தளித்த திமுக: மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?

பட மூலாதாரம், MK STALIN/NIRMALA SITHARAMAN

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு சரியாகச் செயல்படவில்லை என்றும், ஏற்கெனவே போதுமான நிதி வழங்கப்பட்டுவிட்டது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகி உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற வெள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் ஆளும் திமுக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?

தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கிறார் நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், SANSAD TV

நிர்மலா சீதாராமன், தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் அதில் நடைபெற்ற மீட்புப் பணிகள் குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். அதில் டிசம்பர் 12ஆம் தேதியே இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை வந்தபோதும்கூட தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டை வைத்துள்ளார் அவர்.

மேலும், ஏற்கெனவே தமிழ்நாட்டுக்கு 2023ஆம் ஆண்டுக்கான பேரிடர் நிதியான 900 கோடி ரூபாய் இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி ஏற்கெனவே தமிழ்நாடு அரசிடம் 813.15 கோடி பேரிடர் நிதி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

“மாநில அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோருக்கு முன்பாகவே தென் மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு உதவியது தேசிய பேரிடர் மீட்புக்குழுவே. அதற்கு பிரதமர் நரேந்திர மோதியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்தான் காரணம்,” என்றும் கூறியுள்ளார் நிர்மலா சீதாராமன்.

“தென் மாவட்டங்கள் தண்ணீரில் மிதந்தபோது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி வந்திருந்தார்” என்ற குற்றச்சாட்டையும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் கூறியது என்ன?

தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கிறார் நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், MK STALIN

மத்தியஅரசு நிதி குறித்துப் பேசியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மத்தியஅரசில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் மாநில பேரிடர் நிதிக்கு 1,200 கோடி ஒதுக்கப்படுகிறது. அதில் 900 கோடியை இரண்டு தவணைகளாக மத்தியஅரசும், 300 கோடியை தமிழ்நாடு அரசும் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

“இயற்கைப் பேரிடரின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது அது கடும் இயற்கைப் பேரிடராக அறிவிக்கப்பட்டு தேசிய பேரிடர் நிதியில் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

சென்னை வெள்ளம் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கருத்தில் கொண்டு இவற்றைக் கடும் பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிதியில் இருந்து கூடுதல் நிதி தரவேண்டும் என்றுதான் பிரதமரை பார்க்கும் போதுகூட கோரிக்கையாக வைத்தோம். கடிதமாகவும் வழங்கினோம்.

ஆனால், இதுவரை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து எந்த நிதியும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படவில்லை. மத்தியஅரசில் இருந்து தந்ததாகக் கூறப்படும் 450 கோடி என்பது மத்தியஅரசு மாநில பேரிடர் நிதிக்கு வழக்கமாகக் கொடுக்க வேண்டிய நிதியே தவிர, கூடுதல் நிதி எதுவும் வழங்கப்படவில்லை. மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாநில நிதியில் இருந்தே நிவாரணப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன,” என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

தங்கம் தென்னரசு காட்டமான பதில்

தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கிறார் நிர்மலா சீதாராமன்

“ஏதோ எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும் எரிச்சல் மொழியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் பேசியுள்ளது தமிழ்நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்தும் செயல்,” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலளித்துள்ளார் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ள அவர், “மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்து கடந்த 19ஆம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கினார். 20 நிமிடங்கள் முதலமைச்சர் அவர்கள் சொன்னது அனைத்தையும் கேட்டுக்கொண்ட பிரதமர், ‘இது தொடர்பான கோரிக்கை மனு கொண்டு வந்துள்ளீர்களா?’ என்று கேட்டார்.

ஆம் என்றதும் அதை வாங்கி வைத்துக் கொண்டார். ‘உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருகிறேன். இதைவிட எனக்கு வேறு பணி இல்லை’ என்று பிரதமர் சொன்னார்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளைச் சரி செய்ய மொத்தம் 21 ஆயிரத்து 692 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் மத்தியஅரசிடம் கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டுக்கான நிதியை அறிவிக்கவே அவர் பேட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக நான் முதலில் நினைத்தேன். ‘நிதி கிடையாது’ என்று சொல்வதற்காக எதற்காக பேட்டி தர வேண்டும்?” என்றும் காட்டமாகக் கேள்வியெழுப்பினார்.

“பொய்யும் வன்மமும் கலந்த குற்றச்சாட்டுகளை வைப்பதன் மூலமாக தமிழ்நாடு அரசின் மீது தவறான கற்பிதத்தை உருவாக்க ஊடகம்க்களை நிர்மலா சீதாராமன் பயன்படுத்தியுள்ளார்” என்ற காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் தங்கம் தென்னரசு.

மேலும், “2015ஆம் ஆண்டு முதல் பேரிடர்களால் ஏற்பட்ட சேதங்களைத் தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாகச் சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிய மொத்தத் தொகை என்பது ரூ.1,27,655.80 கோடி.

இதில் மத்திய பாஜக அரசால் ரூ.5,884.49 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிய தொகையில் 4.61% மட்டுமே,” என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் அவர்.

முதல்வர் டெல்லி சென்றபோது என்ன நடந்தது?

தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கிறார் நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், MK STALIN / TWITTER

தனது பேட்டியில், முதலமைச்சருக்கு மக்கள் மீது அக்கறை இன்றி வெள்ள பாதிப்பு நேரத்தில் டெல்லி கூட்டணி கூட்டத்தில் இருக்கிறார் என்று கூறியிருந்தார் நிர்மலா சீதாராமன்‌‌.

இதற்குப் பதிலளித்த தங்கம் தென்னரசு, “நிதி அமைச்சர் தனது பேட்டியில், பிரதமர் – முதலமைச்சரது சந்திப்பையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார். ‘ஒரு நாள் முழுக்க டெல்லியில் இருந்த முதலமைச்சர், போகிற போக்கில் சந்தித்துக் கொள்ளலாம் என்ற தோரணையில் பிரதமர் மோதியை இரவில் சந்தித்தார்,’ என்று சொல்லி இருக்கிறார்.

மாண்புமிகு இந்தியப் பிரதமர் தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கான நேரத்தை அவர்தான் தீர்மானிப்பார் என்பதைக்கூட தெரியாதவராக ஒருவர் நிதி அமைச்சராக இருப்பது வேதனை தருகிறது. மதியம் 12.30 மணிக்கு வரலாம் என்று நேரம் ஒதுக்கியது பிரதமர் அலுவலகம்.

அதன்பிறகு இரவு 10.30 மணிக்கு வரலாம் என்று நேரத்தை மாற்றியது பிரதமர் அலுவலகம். எனவே இரவில் சந்திக்க நேரம் ஒதுக்கியது பிரதமர் அலுவலகம்தானே தவிர, முதலமைச்சர் அல்ல,” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசியுள்ள அவர், “ஒரே நாடு – ஒரே தேசம்’ என்பதில் உண்மையான அக்கறை இருப்பவராக இருந்தால் தமிழ்நாட்டில் நடந்த பாதிப்புகளைக் கடும் பேரிடராக அறிவியுங்கள். தமிழ்நாடு அரசு கோரும் நிவாரண நிதியை விடுவியுங்கள்” என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

அதிகார குவியல் vs அதிகார பரவல்

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

தற்போது நடைபெற்று வரும் மாநில மற்றும் மத்திய அரசின் எதிர்கருத்துகள் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “அதிகார குவிப்பு என்ற ஒரு செயலுக்கு மத்திய அரசு தீவிரமாகத் தயாராகி விட்டது. இதன் விளைவாக அவர்கள் கடமையாகச் செய்ய வேண்டிய அனைத்தையும், கொடையாக மாற்றிவிட்டனர். இதனுடைய நீட்சிதான் தற்போது நடந்து வரும் உரையாடல்” என்றார் அவர்.

“கடந்த 8 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட அனைத்து முக்கியமான முடிவுகளும் மையப்படுத்தப்பட்ட முடிவுகளாகவே எடுக்கப்பட்டுள்ளன. அந்த பார்வையில்தான் மத்திய அமைச்சரின் அனைத்து கூற்றுகளும் அமைந்துள்ளன. அதற்கு எதிராகப் பேசும் முதல்வர் ஸ்டாலின் அல்லது அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுவது ஜனநாயக பரவல்.”

“மக்களுக்கான நிவாரணத்தை அளிக்கக்கூடிய வல்லமை மாநில அரசுகளுக்கே உள்ளது. மத்திய அரசால் அதைச் செய்ய முடியாது. நமக்கு ஏற்பட்டுள்ள பேரிடரையே மாவட்டம் மாவட்டமாகப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பேசியிருக்கும் உரையில் பறிவு, இழப்பு என்ற எதுவும் இல்லை. அதற்குப் பதிலாக அதிகாரக் குவியலின் குரல்தான் அவரது குரலாய் ஒலிக்கிறது என்று உறுதியாகக் கூறுகிறார்,” ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

“இந்தப் பேரிடரிலேயேகூட மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய வானிலை மையத்தின் தோல்வி குறித்துப் பேசப்படுகிறது. இப்படி இந்தத் துறை மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் அதிகாரக் குவிப்பு அதிகரித்துள்ளதால் மாநில அரசுகளைக் கட்டிபோடுவதாகவே உள்ளன. இனி வரும் காலங்களில் இது இன்னும் அதிகரிக்கும் என்றே தோன்றுவதாக,” கூறுகிறார் அவர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »