Press "Enter" to skip to content

உடுமலை சங்கர் கொலை: நீதிப் போராட்டத்தை திமுக அலட்சியப்படுத்துவதாக கௌசல்யா குற்றச்சாட்டு

பட மூலாதாரம், FACEBOOK

காதல் திருமணம் செய்து புது வாழ்வைத் தொடங்க இருந்தார்கள் அந்த இரண்டு பொறியியல் கல்லூரி மாணவர்கள். திருமணமான புதிது என்பதால், ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் கடை வீதியில் உள்ள துணிக் கடைகளில் துணி வாங்கிவிட்டு வீடு திரும்பும்போது, மோட்டார்எந்திர இருசக்கரக்கலன் (பைக்)கில் வந்த மர்ம கும்பல் இருவரையும் வழிமறித்தது.

கண் இமைக்கும் நேரத்தில், இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிய அந்தக் கும்பல் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திலிருந்து பறந்தனர். பட்டப் பகலில், பேருந்து நிலையத்திற்கு அருகில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் அந்த இளைஞர், செய்வதறியாத தவித்து அந்த இளம்பெண் அழுகுரலில் அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுக் கொண்டிருந்தார்.

உதவூர்தி வருவதற்குள்ளே அந்த மாணவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த அந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள்தான், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வேலுச்சாமியின் 22 வயது மகன் சங்கரும், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னச்சாமியின் மகள் கெளசல்யா.

சங்கர் கொலை வழக்கில், 2020ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு, கெளசல்யா மற்றும் சங்கரின் சகோதரர்கள் என மூன்று தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். ஆனால், அந்த வழக்கு இன்று வரை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்படவில்லை.

‘சாதாரண வாழ்வை வாழ முடியவில்லை’

கெளசல்யா

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சங்கரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கெளசல்யாவும் தனியார் பொறியியல் கல்லூரியில் படிகு்கம்போது காதலித்து வந்துள்ளனர்.

இதற்கு கெளசல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, 2016இல் இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்தனர். சாதி மறுப்பு திருமணம் செய்ததுதான் இந்தக் கொலைக்கு காரணம் எனக் கூறும் கெளசல்யா, சாதியின் குருதிவெறிக்குப் பலியான சங்கரின் இழப்பு இன்றும் தன்னை வாட்டுவதாகக் கூறினார்.

“இப்போது வரை என்னால் அந்த இழப்பைக் கடக்கவே முடியவில்லை. சிறைவாசிகள் காலையில் வெளியே வந்து, மாலையில் அறையில் அடைக்கப்படும்போது ஏற்படும் வெறுமையைப் போலத்தான் என் வாழ்வும் உள்ளது. சங்கரின் இழப்பு எனக்குத்தான். அவன் இல்லாத வெறுமையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது,” என்றார் கெளசல்யா.

சம்பவம் நடந்த இடத்திலேயே சங்கர் பலியான நிலையில், படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கெளசல்யா, அதே ஆண்டு மே மாதம் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட சங்கரின் குடும்பத்தினர், அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் உயிர் பிழைத்த கெளசல்யா, சங்கரின் கொலைக்கு நீதி பெறுவதில் உறுதியுடன் இருந்தார்.

“என்னால், ஒரு சாதாரண வாழ்வை வாழ முடியவில்லை. அந்தச் சம்பவம் இன்னும் என்னைத் துறத்திக்கொண்டே இருக்கிறது. சங்கருக்கு பிறகு, ஒவ்வொரு முறையும், யாரோ ஒருவர் சாதியின் பெயரால் கொல்லப்படும்போதும், நானே கொல்லப்படுவதாக உணர்கிறேன். சங்கருக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன்,” என்றார் கெளசல்யா.

சங்கர் கொல்லப்பட்ட வழக்கில், கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த எம். மணிகண்டன், எம்.மைக்கேல், பி செல்வக்குமார், பி.ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், கல்லூரி மாணவர் பிரசன்ன குமார், மற்றொரு மணிகண்டன் என 11 பேரை உடுமலைப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

வழக்கை எப்படி நிரூபித்தது போலீஸ்?

சங்கரும் கெளசல்யாவும்

பட மூலாதாரம், KOUSALWAY/ FACEBOOK

சங்கரின் கொலை வழக்கில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், குற்றம் சாட்டப்பட்டிருந்த 11 பேரில், 9 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சம்பவம் பட்டப் பகலில் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் நடந்ததால், சம்பவம் முழுவதும் அங்கிருந்த கடைகளின் கண்காணிப்பு தொலைக்காட்சி ஒளிக்கருவி (கேமரா)க்களில் பதிவாகியிருந்தது.

ஒளிக்கருவி (கேமரா)க்களில் பதிவாகியிருந்த காட்சிகள் மூலமாகவும், நேரடி சாட்சியான கெளசல்யாவின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்டிருந்தவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நிரூபித்ததாகக் கூறினார் அப்போது இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகளில் ஒருவர்.

“இந்த வழக்கில் கண்காணிப்பு தொலைக்காட்சி ஒளிக்கருவி (கேமரா) காட்சிகள் முக்கிய ஆதரமாக இருந்தன. இதற்காக, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இதுவரை இல்லாத அளவில், கண்காணிப்பு தொலைக்காட்சி காட்சிகளைத் துல்லியமாகப் பெரிதாக்கி, சம்பவத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டி நிரூபித்தோம்.

அது தவிர, கெளசல்யாவின் தந்தை சம்பவ இடத்தில் இல்லாவிட்டாலும், இந்த சதித் திட்டத்திற்கு அவர் எப்படி மூளையாகச் செயல்பட்டார் என்பதை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் உரையாடல்கள் மற்றும் பணப் பரிமாற்றத்தை வைத்து நிரூபித்தோம்,” என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த விசாரணை அதிகாரி.

மேலும், சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்காக கெளசல்யாவின் தந்தைதான் தலைமறைவாக இருக்க ஒரு தனியார் ஹோட்டலில் ரூம் போட்டுக் கொடுத்ததையும் உறுதி செய்ததாகக் கூறினார் அந்த விசாரணை அதிகாரி.

“சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண்பதற்கும், அதை நிரூபிப்பதற்கும் நேரடி சாட்சிகள் உள்ளன. ஆனால், இந்த நோக்கத்தையும், கூலிப் படையினருக்கு சின்னச்சாமி மூளையாக இருந்தார் என்பதையும் நிரூபிப்பதுதான் சற்று சவாலாக இருந்தது.

ஆனால், சின்னச்சாமி சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து தொலைபேசி உரையாடலில் இருந்துள்ளார். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அவரது தொலைபேசிக்கு இந்தக் கூலிப்படையினர் அழைத்துள்ளனர். மேலும், பழனியில் அவர்கள் தங்கியிருந்த அறையை இவர்தான் புக் செய்துள்ளார்,” என்றார் அந்த அதிகாரி.

கெளசல்யாவின் தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு தண்டனை

கெளசல்யாவின் தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு தண்டனை

பட மூலாதாரம், HANDOUT

இந்த வழக்கின் விசாரணை மிகவும் துரிதமாக நடந்தது. சம்பவம் நடந்த மூன்று மாதங்களில், விசாரணையை முடித்து 1,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

கடந்த 2017 நவம்பர் 14 ஆம் தேதி வழக்கு விசாரணை முழுவதுமாக முடிவடைந்து, டிசம்பர் 12ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என அப்போதைய திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் நீதிபதி அலமேலு நடராஜன் அறிவித்திருந்தார். தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கில் தீர்ப்பு வருவதால், அனைத்து தரப்பினரும் தீர்ப்பை எதிர்நோக்கி இருந்தனர்.

அதேநேரத்தில், திருப்பூர் நீதிமன்ற வளாகத்திலும், நீதிமன்றத்திற்கு வெளியிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். டிசம்பவர் 12ஆம் தேதி, 11 மணிக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில், கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட எட்டு பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது.

கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் மீதான குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதால், அவர்கள் மூன்று பேரும் விடுவிக்கப்பட்டனர்.

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட எட்டு பேரில், கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி, கூலிப்படையைச் சேர்ந்த ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல், ஆகிய ஆறு பேருக்கு தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த சிலர், கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி மற்றும் அவரது தாய் மாமா பாண்டித்துரை விடுதலையானதற்கு பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருந்த சிலர், அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அழைத்துச் சென்றனர்.

“இது முழுக்க முழுக்க சாதி வன்மத்தில் நிகழ்த்தப்பட்ட கொலை. இதற்கு ஒரு கூட்டமே ஆதரவாக உள்ளது. இது மட்டும் இல்லை. அன்னலட்சுமியை சாதி சங்கத்தினர் ஒரு கூட்டத்திற்கு அழைத்து பாராட்டு விழா நடத்தி, வழக்கின் செலவிற்காகப் பணமும் கொடுத்துள்ளனர். இதையெல்லாம் யாரும் கருத்தில் கொள்வதே இல்லை. இப்படி இருக்கும் சூழலில் எப்படி என்னால் நிம்மதியாக வாழ முடியும்?” எனக் கேட்டார் கெளசல்யா.

உயர்நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட சின்னச்சாமி

உயர்நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

அன்னலட்சுமி உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து அரசுத் தரப்பும், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

மூன்று ஆண்டுகள் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை, 2020இல் முடிவடைந்தது. இந்த வழக்கில், ஜூன் 22, 2020இல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அப்போது, வழக்கின் முதன்மைக் குற்றவாளியான சின்னச்சாமியை குற்றவாளியாகக் கருத போதிய ஆதாரங்கள் இல்லை என விடுவித்த நீதிமன்றம், மற்றவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையையும், ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

மேலும், இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தன்ராஜையும், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற மணிகண்டனையும் உயர்நீதிமன்றம் விடுவித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு முறையாக நடைபெறவில்லை எனக் குற்றம் சாட்டினார் கெளசல்யா.

“திருப்பூரில் வழக்கு விசாரணை நடைபெற்றபோது, ஒவ்வொரு முறையும் என்ன நடக்கிறது என்பதை எனக்குத் தெரியப்படுத்தினர். நானும் நீதிமன்றத்தில் ஆஜரானேன். ஆனால், உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, நான் ஒரு முறைகூட அழைக்கப்படவில்லை. தீர்ப்பு வரும்போதுதான் எனக்குத் தெரியும்,” என்றார் கெளசல்யா.

ஆண்டுகள் ஓடினாலும், சங்கரின் இழப்பை ஈடுசெய்ய முடியவில்லை எனக் கூறும் சங்கரின் சகோதரர் விக்னேஷ், அண்ணன் சாவுக்கு எப்படியாவது நீதியைப் பெற வேண்டும் என்றார்.

“அண்ணா சங்கர் இருந்திருந்தால் நாங்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருப்போம். அவன் இருக்கும் வரை, அவன் தான் எங்களைப் பார்த்துக்கொண்டான். இப்போது, அவனும் இல்லை, எங்கள் அப்பாவும் சமீபத்தில் உயிரிழந்தார். அவன் இறப்புக்குக் கிடைக்கும் நீதி மட்டுமே எங்களுக்கு உண்மையான ஆறுதலாக இருக்கும்,” என்றார் விக்னேஷ்.

மூன்று ஆண்டுகளாகியும் விசாரணைக்கு எடுக்கப்படாத வழக்கு

கெளசல்யா

பட மூலாதாரம், NATHAN G

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீடு செய்து தமிழ்நாடு அரசு சார்பிலும், கெளசல்யா சார்பிலும், சங்கரின் சகோதரர் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்று வரை ஒரு முறைகூட அந்த வழக்கு விசாரிக்கப்படவில்லை.

இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு முயற்சிகள் எடுத்தும், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறார் கெளசல்யா.

“இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வைப்பதற்கே பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பலரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதுதொடர்பாக முதல்வரைச் சந்திக்க பலமுறை முயன்றும், இன்று வரை அவரைச் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை.

சிலர் மாவட்ட கட்சிப் பிரமுகர்கள் வழியாக முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்கச் சொல்கிறார்கள். இதற்கு எப்படி கட்சிப் பிரமுகர்களை அணுகுவது என்று தெரியவில்லை,” என்றார் கெளசல்யா.

மேலும், திமுக அரசு இந்த வழக்கில் மெத்தனம் காட்டுவதாக கெளசல்யா குற்றம் சாட்டினார்.

“ஆளுநர் தொடர்பான வழக்குகளுக்கு எல்லாம் அவசரம் காட்டும் திமுக அரசு, இந்த வழக்கு குறித்து இதுவரை எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை. இதுவொரு தனிநபர் கொலை வழக்கு மட்டுமல்ல. இந்த வழக்கின் தீர்ப்பு, இதுபோன்ற மற்ற சம்பவங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும்.

எதிர்கட்சியாக இருந்தபோது, இந்த வழக்கில் எங்களுடன் துணை நிற்போம் எனக் கூறிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தற்போது முதல்வர் ஆனதும் எங்களைக் கைவிட்டுவிட்டார்,” என்றார் கெளசல்யா.

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் விளக்கம் கேட்க பிபிசி முயன்றது. ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி மற்றும் தயார் அன்னலட்சுமியிடமும் பிபிசி பேச முயன்றது. அப்போது அவர்கள், “எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் சொல்லிக் கொள்கிறோம்,” என்றனர்.

‘ஆணவக் கொலையில் திமுக அலட்சியம்’

எவிடன்ஸ் கதிர்

இந்த வழக்கில் கெளசல்யா சார்பாக மேல்முறையீடு செய்துள்ள எவிடன்ஸ் அமைப்பின் நிறுவனர் கதிர், திமுக அரசு ஆணவக்கொலை வழக்கில் மற்ற கட்சிகளைப் போலச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

“மற்ற கட்சிகளைப் போல் அல்ல திமுக. சாதி மறுப்பு, சுயமரியாதை திருமணம் உள்ளிட்டவற்றை ஆதரித்த பாரம்பரியத்தில் இருந்து வந்த கட்சி, ஆணவக்கொலை வழக்குகளில் மெத்தனம் காட்டுவது கவலையாக உள்ளது.

எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றப்படும் எனக் கூறியிருந்தார். நாங்களும் அவரைச் சந்தித்து, அதற்கான சட்ட முன்வடிவத்தையும் கொடுத்து வந்தோம். ஆனால், இன்று வரை அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை,” என்றார் கதிர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »