Press "Enter" to skip to content

‘இந்தியா’ அணியில் இந்தி திணிப்பு சர்ச்சை: திமுகவும் கூட்டணி கட்சிகளும் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணியின் சந்திப்பில் நிதிஷ் குமாரின் இந்தி உரைக்கு ஆங்கில மொழியாக்கம் வேண்டும் என்று கேட்ட திமுகவின் டி.ஆர்.பாலுவிடம் கடிந்துகொண்டார் நிதிஷ் குமார்.

இந்த பிரச்னை, இந்தியா கூட்டணிக்குள் புதியதொரு அரசியல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

‘இந்திதான் தேசிய மொழி’

டிசம்பர் 19ஆம் தேதி, இந்தியா கூட்டணி கட்சிகளின் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமாரும் பேசினார். அவருடைய பேச்சை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திட வலியுறுத்தி ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜாவிடம் கேட்டுள்ளார் திமுகவின் டி.ஆர்.பாலு.

இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டங்கள் மூன்று முறை நடந்துள்ளன. இந்த நிகழ்வுகளின் போதெல்லாம் மனோஜ் கே. ஜா மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டு வந்திருக்கிறார். அவர்தான் நிதிஷ் குமார் மற்றும் அவரது கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் பேச்சுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வந்தார்.

அதன்படியே, செவ்வாய்க்கிழமையும் பிகார் முதல்வரின் உரை முடிந்த பிறகு டி.ஆர்.பாலு மொழியாக்கம் செய்து தெரிவிக்கக் கேட்டுள்ளார். ஆனால் அதற்காக அவரிடம் நிதிஷ் குமார் கடிந்துகொண்டதாகவும், இந்திதான் தேசிய மொழி என்று உறுதியாகக் கூறியதுடன், ஆங்கிலத்தை பிரிட்டிஷ் அரசு திணித்தது என்று நிதிஷ் குமார் கடுமையாக விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பேச்சுக்குப் பின்னர் சில பேச்சாளர்கள் ஆங்கிலத்தில் பேசினர் என்றும் தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறி, விளக்கமாகப் பேச விரும்பாத டி.ஆர்.பாலு, “இந்தியா கூட்டணி ஒன்றாக இருக்க வேண்டும் என்பது என் நோக்கம்” என்று மட்டும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்தி மொழி சர்ச்சை

நிதிஷ் குமார் இந்தி சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images

இந்த பிரச்னை, இந்தியா கூட்டணிக்குள் வெடித்திருந்தாலும் உண்மையில் இது நீண்ட காலமாக வடமொழி மற்றும் தென்னிந்திய மொழி அடையாளங்களுக்கு இடையில் நிலவிவரும் பிரச்சனை.

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மொழி சமத்துவத்திற்கான குரல் தீர்மானகரமான அரசியல் பிரச்னையாக இருந்து வருகிறது. தேசிய மொழிகள் அனைத்திற்கும் சமத்துவம் வேண்டும், தமிழ்நாட்டுக்கு அதிக அதிகாரம், தமிழுக்குக் கூடுதல் நிதி போன்ற கோரிக்கைகள் தமிழ்நாட்டில் இயல்பாக உள்ளன.

விடுதலைக்கு முன்பும், விடுதலைக்குப் பிறகும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுள்ளன. திராவிடர் என்ற மொழிக் குடும்ப அடையாளத்தையே தனது இயக்கத்தின் பெயராகக் கொண்டிருக்கும் இயக்கங்கள், மொழி அரசியலைத் தங்கள் அரசியலின் முக்கிய அம்சமாகக் கொண்டுள்ளன.

மும்மொழிக் கொள்கை வலியுறுத்தப்பட்ட போதெல்லாம், தமிழ்நாடு இருமொழி கொள்கையை மட்டுமே ஏற்போம் என அறிவித்து அதையே நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

கேந்திரிய வித்யாலயா, சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் இந்தி பிரசார சபா போன்றவை தமிழ்நாட்டில் இயங்கினாலும் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க மறுப்பது மற்றும் இந்தி கட்டாயப்படுத்துவதை எதிர்ப்பது எப்போதும் அரசியல் முழுக்கமாக இருந்துள்ளன.

இந்தியை எதிர்க்கவில்லை, ஆனால் திணிப்பை எதிர்க்கிறோம் என்று தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளன.

நிதிஷ் குமார் இந்தி சர்ச்சை

பட மூலாதாரம், வீ அரசு

தேர்தல் நேரத்தில் முக்கியக் கூட்டணிக்குள் ஏற்பட்ட சர்ச்சை என்றாலும், இது அரசியல் கூட்டணி பிரச்னையே அல்ல, கலாசார பிரச்னை என்கிறார் பேராசிரியர் வீ அரசு.

“எப்படி தமிழ்நாட்டில் மேல்தட்டு வர்க்கம் ஆங்கிலத்துக்கு மரியாதை கொடுக்கிறதோ, அதே போன்று பிகார், மகாராஷ்ட்ரா என வேறு மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்ட மாநிலங்களில் இந்தி பேசுவது மரியாதையானது எனக் கருதப்படுகிறது. மகாத்மா காந்தி, நேரு காலந்தொட்டு கடந்த 70 ஆண்டுகளில் இது செய்யப்பட்டுள்ளது.

சமஸ்கிருதம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய மொழி தமிழ். இந்தியாவின் பிற மொழிகள் அனைத்தும் 9ஆம், 10ஆம் நூற்றாண்டுகளில் சமஸ்கிருதம் உருவானதற்குப் பிறகு தோன்றியவை.

தமிழுக்கு 3000 ஆண்டு கால கலாசார பாரம்பரியம் உள்ளது. பிற மாநிலத்தவருக்கு இது ஒரு மொழி வெறி பிரச்னையாகத் தோன்றலாம். ஏனென்றால் அவர்களுக்கு 3000 ஆண்டு கால கலாசாரம் புரியாது.

ஆனால் இது உணர்வுபூர்வமான விஷயம்கூட அல்ல, மிகவும் அறிவியல்பூர்வமானதே. இந்தியாவைவிட மிகச் சிறிய நாடான இலங்கையில் சிங்கள மொழியை நாடு முழுவதும் அமல்படுத்த நினைத்தபோது இலங்கைத் தமிழர்கள் எதிர்த்தனர்,” என்றார்.

சர்ச்சை உருவானது ஏன்?

'இந்தியா' கூட்டணியில் இந்தி திணிப்பு என்ற சர்ச்சை: திமுகவும் கூட்டணி கட்சிகளும் கூறுவது என்ன?

பட மூலாதாரம், MK STALIN

இந்தியா கூட்டணிக்குள் நடந்ததாக கசியக்கூடிய ஒரு செய்தி சர்ச்சையானதற்கு உடனடியான காரணம், கோவா விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவமாக இருக்கலாம்.

அண்மையில், கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவருக்கு இந்தி தெரியாததால், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர், அவரை அதட்டிப் பேசினார் என சர்ச்சை உருவானது. இதைக் கண்டித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

“தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது என்றும், இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும் என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்கு உரியது. இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது? பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா,” என்று காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

இதை மையப்படுத்தி சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுந்தன. எனவே இந்தியா கூட்டணிக்குள் நடந்த நிகழ்வும் கூடுதல் கவனத்தை ஈர்த்தது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்த அறிக்கையில் திமுக இதைக் கண்டிக்காதது ஏன் என கேள்வி கேட்கிறார்.

“மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் கூறியதைவிடக் கடுமையானது நிதிஷ்குமார் கூறியது. இதுதான் மாநில தன்னாட்சியை திமுக காக்கும் முறையா? தேர்தல் கூட்டணிக்காகவும், பதவிக்காகவும், தமிழர்களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு உணர்வை அடகு வைத்துள்ளதா திமுக?” என்று விமர்சித்துள்ளார்.

இந்தியா கூட்டணியின் முடிவாக இல்லாத ஒரு விசயத்தை ஏன் சர்ச்சையாக்க வேண்டும் என்று கேட்கிறார் திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன்.

“நிதிஷ் குமார் பேசியது அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக டி.ஆர்.பாலு மொழிபெயர்க்குமாறு கேட்டுள்ளார். இந்தி தான் தேசிய மொழி என்றோ, அனைவரும் கற்க வேண்டும் என்றோ இந்தியா கூட்டணியில் முடிவு செய்யப்படவில்லையே.

இதுவொரு சிறிய பிரச்னை. இதனால் இந்தியா கூட்டணியில் விரிசல் என்றெல்லாம் பேசுவது பொருத்தமற்றது. எல்லா கூட்டணியிலும் கண்டிப்பாக வித்தியாசங்கள் உள்ளன. பாஜக கூட்டணியில் இருந்த போது மோடியா லேடியா என ஜெயலலிதா கேட்கவில்லையா?

எனவே அவர்களின் அரசியல் வேறு, நமது அரசியல் வேறு. ஆனால் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் நாங்கள் ஒன்றாக இருப்போம்,” என்றார்.

கூட்டணி கட்சிகள் என்ன சொல்கின்றன?

நிதிஷ் குமார் இந்தி சர்ச்சை

பட மூலாதாரம், X/TKS Elangovan

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர், முத்தரசன் “நிதிஷ் குமார் பேசிய கருத்து வேண்டுமென்றே கூறியதாக எனக்குத் தெரியவில்லை, இயல்பாகக் கூறப்பட்ட சாதாரணமான விஷயம். தமிழ்நாட்டிலேயே ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், தமிழில் சரளமாகப் பேசுவதையே எளிதாகக் கருதுபவர்கள் இருப்பார்கள். அது போன்று தான்,” என்றார்.

இதுதான் பெரிய பிரச்னையா என்று கேள்வி கேட்கிறார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்.

“மொழி பிரச்னை என்பது எப்போதும் இருப்பதுதான். இதை கூட்டணிக்குள் பிரச்னையாகப் பார்ப்பது பாஜகதான். இதைவிட எவ்வளவு பெரிய பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கின்றன. 79 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரே நாளில் தூக்கி எரிந்துவிட்டார்கள்,” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “இந்தியை திணிக்கக் கூடாது என்றுதான் கூறுகிறோம். இந்தியை படிக்கக் கூடாது என்று யாரும் கூறவில்லை. நிதிஷ் குமார் கூறியது அவருடைய இயல்பான ஒரு செயல். இதற்கு திமுக என்ன பதில் கூறியிருக்க முடியும்,” என்றார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »