Press "Enter" to skip to content

பயிர் செய்யவே முடியாத அளவுக்கு பாழான விவசாய நிலம்: கவலையில் ராமநாதபுரம் விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் தூத்துக்குடி – ராமநாதபுரம் எல்லைப் பகுதியில் உள்ள பல கிராமங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, தனித் தீவாக மாறியுள்ளது.

இதனால் கிராமவாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு கிராமங்களுக்குள் முடங்கியுள்ளனர். மேலும், வெள்ள நீர் விளை நிலங்களுக்குள் புகுந்ததால் பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

அத்துடன், விளை நிலங்களில் பல அடி உயரம் வண்டல் மண் படிந்து மீண்டும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

புவிசார் குறியீடு பெற்ற ராமநாதபுரம் குண்டு மிளகாய் நிலை என்ன?

குண்டு மிளகாயின் நிலை என்ன?

ராமநாதபுரம் மாவட்ட எல்லைப் பகுதியான தூத்துக்குடி மாவட்டம் உச்சிநத்தம், மாவிலோடை, லட்சுமிபுரம், பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கன மழையால் தண்ணீர் நிரம்பி, வெள்ளம் ஏற்பட்டு கஞ்சம்பட்டி ஓடையில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனால் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உச்சிநத்தத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி செல்லும் சாலை மற்றும் செவல்பட்டியில் இருந்து எஸ்.தரைக்குடி செல்லும் சாலை ஆகிய இரண்டு பிரதான சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு செவல்பட்டி, சேதுராஜபுரம், ராமலிங்கம் பட்டி, உச்சிநத்தம், லட்சுமிபுரம், வடுகபட்டி, வாலம்பட்டி, எஸ்.தரைக்குடி, முத்துராமலிங்கபுரம் கொண்டுநல்லான்பட்டி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், உச்சிநத்தம் கிராமத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி செல்லும் எல்லைப் பகுதியில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்ததால் சாலை இரு துண்டாகி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு, வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

காட்டாற்று வெள்ளம் விளை நிலங்களுக்குள் புகுந்ததால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மல்லி, மிளகாய், சோளம், வெங்காயம் உள்ளிட்ட பயிர் வெள்ளத்தில் அடித்துச் செல்ல பட்டதுடன். விளை நிலங்களில் பல அடி உயரம் வண்டல் மண் படிந்துள்ளதால் மீண்டும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீர் செய்யவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி

கன மழையால் தனித் தீவாக மாறிய கிராமங்கள்

தனித்தீவான கிராமங்கள்

பிரதான சாலையில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த நான்கு நாட்களாக எங்கள் கிராமம் தனித் தீவாக மாறியுள்ளதாக முருகேசன் தெரிவித்தார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “எனக்கு 68 வயதுக்கு மேல் ஆகிறது. எனக்கு விவரம் தெரிய இதுவரை இப்படி ஒரு மழை இப்பகுதியில் பெய்ததில்லை. இந்த ஆண்டு அதீத கன மழை பெய்துள்ளது.

கன மழையால் தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி செல்லும் பிரதான சாலையில் உடைப்பு ஏற்பட்டு செவல்பட்டி, சேதுராஜபுரம், ராமலிங்கம்பட்டி, உச்சிநத்தம், லட்சுமிபுரம், வடுகபட்டி உள்ளிட்ட 10 கிராமங்களுக்குக் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாகப் போக்குவரத்து சேவை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் உச்சிநத்தம் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு மாணவ, மாணவிகள் நடந்தே வந்து செல்கின்றனர்.உள்ளூர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வெளியே செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு மத்தியில் கிராமத்தில் முடங்கி உள்ளனர்.

இந்த ஆண்டு பெய்த அடைமழை (கனமழை)யால் விவசாயம் 100 சதவீதம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் அடைமழை (கனமழை)யால் குண்டு மிளகாய் விவசாயம் பாதிக்கப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குண்டு மிளகாய் பயிர் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக” முருகேசன் தெரிவித்தார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி

‘எங்கள் வாழ்வாதாரம் வெள்ளத்தால் அழிந்து விட்டது’

தங்க நிலா

ஒரு நாள் மழையில் எங்கள் விவசாயமே அடியோடு அழிந்து விட்டதாக கூறுகிறார் விவசாய பெண் தங்க நிலா.

“கடந்த நான்கு நாட்களுக்கு முன் திடீரென பெய்த அடைமழை (கனமழை) காரணமாக கண்மாய், குளங்கள் உள்ளிட்டவற்றில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீர் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிரிட்ட மிளகாய், மல்லி, வெங்காயம், சோளம் உள்ளிட்ட பயிர்ச் செடிகள் வெள்ள நீரில் அடித்துச் சென்றது. இதனால் மூன்று லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

விளை நிலங்களில் வெள்ள நீர் புகுந்ததால் கரிசல் மண் அரித்துச் செல்லப்பட்டது. மேலும், விளைநிலங்களில் வெள்ள நீர் தேங்கி கரிசல் நிலம் முழுவதும் வண்டல் மண்ணாக மாறியுள்ளது. வண்டல் மண்ணில் எப்படி விவசாயம் செய்ய முடியும்?” என்று தெரிவித்தார்.

மேலும், “தற்போது உள்ள சூழ்நிலையில் அரசு நில அளவையாளர் அழைத்து வந்து நிலத்தை அளந்து பார்த்தால் மட்டுமே எங்களுடைய விளை நிலம் எது என்பது எங்களுக்குத் தெரிய வரும். அந்த அளவு நிலத்தின் அமைப்பு முற்றிலும் மாறியுள்ளது.

இனி ஓராண்டுக்கு மேல் இந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது. ஏற்கெனவே விவசாயத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் விவசாயத் தொழிலை நம்பி யாரும் கடன் கொடுக்க முன்வர மாட்டார்கள்.

எனவே விவசாயத் தொழிலை விட்டுவிட்டு கூலி தொழிலுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு முன் இப்படியொரு பேரிடரை இப்பகுதி விவசாயிகள் சந்தித்ததில்லை,” என்கிறார் தங்க நிலா.

அத்துடன், பயிர் காப்பீடு செய்துள்ளேன். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகள் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. எனவே இந்த ஆண்டு பயிர் காப்பீடு கிடைக்குமா என்ற அச்சத்தில் விவசாயிகள் இருப்பதாக விவசாயி தங்க நிலா தெரிவித்தார்.

‘சேதமடைந்த விளை நிலங்களை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லை’

பொன்மாடசாமி

மானாவாரி பயிர்கள் அனைத்தும் வெள்ள நீரில் அடித்துச் சென்றதாக விவசாயி பொன் மாடசாமி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

“மிளகாய், மல்லி, சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்திருந்த நிலையில் அவை அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பயிர்களை மணல் மூடிவிட்டது. இதனால் விவசாய நிலம் முற்றிலும் சேதமடைந்துள்ளதுடன், பாதி பயிர்களை வெள்ள நீர் அடித்துச் சென்றுள்ளது,” என்றார்.

இனிமேல், இந்த விளை நிலங்களை சரி செய்வதற்கு சராசரியாக ஓராண்டு ஆகும் என்பதால் இந்த ஆண்டு முழுமையாக விவசாயம் பாதித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், “தற்போது விளைநிலங்களில் வண்டல் மண் பரவியுள்ளத்துடன் சேறும் சகதியும், தேங்கியுள்ளதால் அதைச் சரி செய்ய பல லட்சம் ரூபாய் செலவாகும். அப்படி செலவு செய்தாலும் மீண்டும் பழைய நிலைக்கு விளை நிலங்கள் திரும்பும் என்கிற நம்பிக்கை இல்லை,” என்கிறார் விவசாயி பொன் மாடசாமி.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »