Press "Enter" to skip to content

இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது தாக்குதலா? அரபிக் கடலில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், CHEM PLUTO

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த சரக்குக் கப்பல் மீது அரபிக் கடலில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. என்ன நடந்தது? தாக்குதல் நடத்தியது யார்? அதன் பின்னணி என்ன?

இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு அருகில் இஸ்ரேலுக்குச் சொந்தமான வணிகக் கப்பலின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, பிரிட்டிஸ் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான எம்ப்ரேய் கூறியதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் போர்பந்தர் கடற்கரையிலிருந்து 217 மைல் தொலைவில் இருந்த போது கப்பல் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிள்ளன.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதற்கு பின்னர் செங்கடலுக்கு வெளியே சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

தாக்குதல் நடத்தப்பட்டுள்ள கப்பலின் பணியாளர்கள் மற்றும் கப்பலின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் கூடுதல் உதவியை வழங்குவதற்காக அந்த கப்பலை நோக்கி சென்றுள்ளதாகவும் பெயர் சொல்ல விரும்பாத இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் எடுத்து வந்த கப்பல்

ஆல் இந்தியா வானொலிவின் கூற்றுப்படி, தாக்குதல் நடத்தப்பட்ட கப்பல் சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் எடுத்து வந்த எம்வி செம் புளூட்டோ ( MV Chem Pluto) கப்பல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் 20 இந்தியர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஏ.என்.ஐ .செய்தி முகமையின் தகவல்படி, இந்தியக் கடலோரக் காவல்படையின் கப்பலான ஐசிஜிஎஸ் விக்ரம், போர்பந்தரில் இருந்து 217 கடல் மைல் தொலைவில் அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள எம்வி கெம் புளூட்டோவை நோக்கி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் P-8I கடல்சார் கண்காணிப்பு விமானமும் அந்த கப்பலை நோக்கி கோவாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எண்ணெய் எடுத்து வந்த கப்பல் மீது டிரோன் தாக்குதல்?

மீண்டும் பயணத்தை தொடங்கிய கப்பல்

தாக்குதலில் அந்த கப்பலின் தானியங்கி முறையில் கப்பலை கண்டறியும் கருவி செயல்படாமல் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் கப்பல் செயல்பாட்டுக்கு வந்து விட்டதால் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல் மற்றும் விமானம் அந்த வணிக கப்பலோடு தொடர்பில் உள்ளனர்.

ஏற்கனவே 11 நாட்டிகல் மைல் வேகக்தில் அந்த வணிக கப்பல் தனது பயணத்தை தொடங்கி விட்டது. இன்று இரவு 10 மணியளவில் ஐசிஜிஎஸ் விக்ரம் போர்க் கப்பல் மற்றும் எம்வி செம் புளூட்டோ சந்திக்க கூடும் எனவும், ஐசிஜிஎஸ் விக்ரம் ரோந்து கப்பல் வணிக கப்பலை அழைத்து வந்து டிசம்பர் 25 வாக்கில் மும்பை துறைமுகத்தில் சேர்க்கும் என்றும் இந்திய கடற்படை அதிகாரிகள் கூறியதாக ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு எண்ணெய் எடுத்து வந்த கப்பல் மீது டிரோன் தாக்குதல்?

பட மூலாதாரம், Getty Images

தாக்குதலில் ஈடுபட்டது யார்?

இந்த டிரோன் தாக்குதல் செங்கடல் பகுதியில் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சி குழுவினரால் நடத்தப்படும் ஆளில்லா விமான தாக்குதலின் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. ஹூதிக்கள் குழு இஸ்ரேல் – ஹமாஸ் போரை தொடர்ந்து காஸாவுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது. ஏற்கனவே, செங்கடலில் பயணிக்கும் எந்த விதமான இஸ்ரேல் சார்பு கப்பல்களையும் சிறைபிடிப்போம் என்று ஹூதிக்கள் அறிவித்துள்ள நிலையில் தற்போது இந்த டிரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

யார் இந்த ஹூதிக்கள்?

2014ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவை கைப்பற்றிய ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சி குழு தற்போது செங்கடல் பகுதிகளில் அச்சுறுத்தும் சக்தியாக விளங்கி வருகின்றன.

குறிப்பாக பல அரபு நாடுகளே பாலஸ்தீனம் பக்கம் நிற்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பாலத்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் மீது முதன் முதலில் தாக்குதலை அறிவித்தது இந்த ஹூதிக்கள் குழுதான். ஏற்கனவே துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்த இஸ்ரேல் சார்பு கப்பலை ஏமன் அருகில் தெற்கு செங்கடல் பகுதியில் இந்த குழு உலங்கூர்தி வாயிலாக கைப்பற்றியதாக குற்றம் சாட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், reuters

கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல் தனது கட்டுக்கடங்காத எதிர்தாக்குதலை தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பாலத்தீனிய மக்கள் பாதிக்கப்பட்டனர். இதில் பல அரபு நாடுகள் காஸா பக்கம் நிற்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பாலத்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதலை அறிவித்தது ஏமனை சேர்ந்த ஹூத்தி கிளர்ச்சியாளர் குழு.

2014ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவை கைப்பற்றிய ஈரான் ஆதரவு பெற்ற ஹுதி கிளர்ச்சி குழு, சௌதி அரேபிய ஆதரவு பெற்ற ஏமன் அரசை 2015ல் அங்கிருந்து வெளியேற்றினர். ஏமன் அதிபரும் அதற்கு அடுத்த ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறி சௌதி அரேபியா சென்று விட்டார். ஒரு நாட்டின் தலைமையையே விரட்டும் அளவிற்கான சக்தி கொண்ட ஹுதி குழுவின் எழுச்சி 1990களில் இருந்தே தொடங்கி விட்டது.

1990ம் ஆண்டில் ஏமனின் வடக்குப்பகுதியில் இருந்த ஜைதிஷம் எனப்படும் ஷியா இஸ்லாத்தின் மரபுகளை பாதுகாக்கும் இளைஞர்களின் மறுமலர்ச்சி குழுவாக உருவாகியதுதான் இந்த ஹூத்திக்கள் என்று அழைக்கப்படும் அன்சார் அல்லாஹ்ஹ் (கடவுளின் கட்சிக்காரர்கள்) கிளர்ச்சி குழுவினர். ஆனால், இவர்களின் மரபுரீதியான வரலாறு பண்டைய காலத்திலிருந்து தொடங்கியதாகும்.

தங்களை முகமது நபிகள் நாயகத்தின் வழித்தோன்றல்களாக கூறிக்கொள்ளும் ஜைதிக்கள் பண்டைய ஏமனில் 1000 வருடங்களுக்கும் மேலாக 1962ம் ஆண்டு வரை ஆட்சி செய்து வந்த ஜைதி இமாம் ராஜ்ஜியத்தில் முக்கிய பங்காற்றியவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த ஆட்சியாளர்கள் புதிய ஏமன் குடியரசு ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு அச்சுறுத்தலாக கருதப்பட்டு ஒதுக்கப்பட்டனர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »