Press "Enter" to skip to content

நடராஜர் கோவில்: சோழர்களின் நீர் மேலாண்மை நுட்பம்தான் சிதம்பர ரகசியமா?

சோழர்கள் தண்ணீரைப் புனிதமாகக் கருதினர். அதைத் தேக்கி வைக்க மட்டுமின்றி, பள்ளத்தில் இருந்து மேல் நோக்கி எடுத்துச் சென்று பயன்படுத்தும் நுட்பத்தையும் அவர்கள் கண்டறிந்தனர்.

அதன் ஆதாரமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலின் கீழிருந்து மேல் நோக்கிப் பாயும் நீர் வழித்தடம்தான் சிதம்பர ரகசியம் என்று வரலாறு ஆர்வலர்கள் கருதுகின்றனர். இந்த நீர் வழித்தடத்தின் ரகசியம் குறித்து இங்கு விரிவாகக் காண்போம்.

இந்தப் பயணத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து பிபிசி தமிழுடன் சில வரலாற்று ஆய்வாளர்களும் இணைந்தனர்.

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சிவராமகிருஷ்ணன், மயிலாடுதுறையின் மணல்மேட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த வரலாற்று துறைத் தலைவர் கலைச்செல்வன், உளுந்தூர்பேட்டை வரலாற்று ஆர்வலர் லலித் குமார் ஆகியோர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நம்முடன் பழமை வாய்ந்த சிதம்பரம் தெருக்கள் வழியே அதன் சிறப்புகளைக் கூறிக் கொண்டே வந்தனர்.

சிதம்பரம் கோவிலின் நிலவரைக் கால்வாய்

சிதம்பரம்

கோவில் வடக்குப் பகுதிக்கு அழைத்துச் சென்று கம்பிகள் வைத்து பாதுகாக்கப்பட்ட வழியைக் காண்பித்த தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் அதுகுறித்து விவரித்தார்.

“கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள இந்த நடராஜர் கோவில் சோழ மன்னர்களின் குலதெய்வ கோவிலாக விளங்கியதால் பல திருப்பணிகளை மன்னர்கள் செய்துள்ளனர்.

குறிப்பாக முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன், விக்கிரம சோழன், முதலாம் குலோத்துங்கன் வரை மிகப் பெரிய விரிவாக்கப் பணிகளைச் செய்துள்ளனர்.”

அவற்றில் குறிப்பிடத்தக்க திருப்பணியாக விளங்குவது நீர் மேலாண்மை கட்டமைப்பு என்று விளக்கினார் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன். 

“சிதம்பரம் நடராஜர் கோவிலின் 51 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட உட்பகுதில் விழும் மழை நீரை நடராஜர் கோவிலின் வடக்குப் பகுதியில் உள்ள யானைக்கால் மண்டபத்தின் அருகே தொடங்கும் நிலவரை கால்வாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு திருப்பாற்கடல் மற்றும் தில்லை காளிக்கோவில் முன்பாக உள்ள சிவப்பிரியை குளத்தையும் இணைப்பதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.”

அந்த நிலவரைக் கால்வாய் கம்பிக் கதவுகள் வைத்து நன்கு தற்போது பாதுகாக்கப்பட்டிருப்பதையும் காண்பித்தார். அதோடு அதன் அளவீடுகள் குறித்தும் விளக்கினார்.

கீழ் இருந்து மேல் நோக்கி செல்லும் நீர் வழி தொழில்நுட்பம்

சிதம்பரம்

“இந்தக் கால்வாயின் மொத்தநீளம் 2,200 மீட்டர். இது 65 செ.மீ அகலமும், 77 செ.மீ ஆழமும் கொண்டது. இதற்கு 24x15x5 செ.மீ அளவுள்ள செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேற்பகுதி செங்கல் கட்டுமானத்தால் முழுக்க மூடப்பட்டுள்ளது.

இருப்பினும் சில இடங்களில் மேற்பகுதி நீள்செவ்வக வடிவ கருங்கல் பலகையால் மூடப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் கால்வாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் கருங்கல் பலகையை எடுத்துவிட்டு அதைச் சீர்செய்யவே இந்த மூடிகள் வைக்கப்பட்டுள்ளன,” என்று விளக்கினார் சிவராமகிருஷ்ணன்.

இந்த நிலவரைக் கால்வாய் மூலம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் விழும் மொத்த மழை நீரும் சேதாரமின்றி இரண்டு குளங்களிலும் சேமிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கால்வாய் புவி மட்டத்திலிருந்து 30 செ.மீ அளவில் தொடங்கி சிவப்பிரியை குளத்தை அடையும்போது 200 செ.மீ ஆழத்தில் முடிகிறது. இதனால் மழை நீர் நேராக குளத்தை அடைவது எளிதாக்கப்பட்டது.

இந்தக் கட்டுமான தொழில்நுட்பத்தின் காலம் கி.பி.11–12ஆம் நூற்றாண்டு. இந்தக் கட்டமைப்பு, நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதில் சோழர்கள் காட்டிய அளப்பரிய அக்கறைக்குச் சான்றாக விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

சிதம்பரம்

கடற்கரை அருகே அமைந்துள்ள சிதம்பர நகரின் நிலத்தடி நீர் கெட்டுப் போகாமல் பாதுக்காக்கப்பட வேண்டுமேயானால் மழை நீர் சேமிப்பின் மூலமே அது சாத்தியம்.

இதை உணர்ந்தே சோழர்கள் சிதம்பரம் கோவிலைச் சுற்றி ஒன்பது நீர்பிடிப்புக் குளங்களை ஏற்படுத்தியுள்ளனர். இவற்றைச் சரியாகப் பாரமரிக்கமல் விட்டதே நகரின் நிலத்தடி நீர் இன்று உப்பாக மாறியதற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் கூறினார்.

“மழைக் காலங்களில் சிதம்பரத்தின் மேற்குப் பகுதியில் பொழியும் மழைநீரால் இந்த நகரம் அடிக்கடி வெள்ளத்தால் பாழ்பட்டது. இதை நன்கு உணர்ந்த பராந்தக சோழன் சிதம்பரத்திற்கு மேற்கே வீரநாராயணப் பேரேரியை வெட்டினான்.

அதிகப்படியான தண்ணீர் அங்கு சேமிக்கப்பட்டதன் விளைவாக நடராஜர் கோவிலுக்கு மழைக்காலங்களில்கூட மக்கள் பயமின்றி வந்து செல்ல முடிந்தது. மேலும் ஆண்டுக்கு இரண்டு டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலப்பது தடுக்கப்பட்டு ஏரியில் சேமிக்கப்பட்டதன் விளைவாக இப்பகுதி உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டியுள்ளது,” என்றும் விளக்கினார் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன்.

கடந்த 2005ஆம் ஆண்டு அவர்கள் கண்டறிந்த இந்த நீர்வழித் தடத்தையும் அதன் உள்ளே சென்று எடுத்த புகைப்படங்களையும் காண்பித்து எந்தெந்த இடங்களில் அகலமாக எந்தெந்த இடத்தில் குறுகியதாக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் நேரடியாக அழைத்துச் சென்று காண்பித்தார் அவர்.

தளபதி நரலோக வீரன் விரிவுபடுத்திய நகரம்

சிதம்பரம்

சோழர்களின் காலகட்டத்தில் கிபி.11ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் சோழர்களின் படைத் தளபதிகளில் ஒருவரான நரலோக வீரனின் முன்னிலையில் சிதம்பர நகரம் விரிவாக்கம் செய்யப்பட்டதாகக் கூறுகிறார் முனைவர் ப.கலைச்செல்வன்.

“இவர் முதலாம் குலோத்துங்கன் மற்றும் விக்கிரம சோழன் ஆட்சிக் காலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தலைமை அதிகாரியாக இருந்துள்ளார்.

குண மேனகைபுரம், பெரும்பற்ற புலியூர் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்தப் பகுதிகள் இவரது மேற்பார்வையில் நகரமாக விரிவுபடுத்தப்பட்டு தில்லை என்று அழைக்கப்படக்கூடிய சிதம்பரமாக மாற்றமடைந்தது.

இங்கு இடைக் காலத்தில் வாழ்ந்த தமிழர்களிடம் வரைநீர் மேலாண்மை பற்றிய புரிதல் இருந்துள்ளது. ஒவ்வொரு தெருக்களின் நடுவிலும் பாதாள சாக்கடையானது அமைக்கப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார் அவர்.

மாசு படாத கால்வாயை மேம்படுத்திய இன்டர் லாக்கிங் சிஸ்டம்

சிதம்பரம் நடராஜர் கோவில்

அதுகுறித்து விளக்கிய முனைவர் கலைச்செல்வன், “இந்தக் கால்வாயை பேராசிரியர் சிவராமகிருஷ்ணன், நான் மற்றும் குழுவினர் இணைந்து ஆய்வு செய்தோம். அப்போது, அது கட்டப்பட்டு சுமார் 900 ஆண்டுகள் கழித்து இந்தக் கால்வாயின் உட்பகுதி எந்தவிதமான தூசுகளும் இயற்கை சேதாரங்களும் இல்லாமல் மிகச் சுத்தமான நிலையில் இருந்ததைக் காண முடிந்தது,” என்றார்.

அதற்கான காரணத்தை விளக்கியவர், “கால்வாயில் மேல்பகுதி கருங்கற்களைக் கொண்டு இடைப்பூட்டு கட்டமைப்பு (Interlocking system) முறையில் சோழர்கள் கட்டமைத்துள்ளனர். எனவே தரையின் மேற்பகுதியில் தண்ணீரோ அல்லது இயற்கைப் பேரிடரோ எதுவாக இருப்பினும்து கால்வாயின் உள்பகுதியை எந்தச் சூழலிலும் பாதிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது,” என விவரித்தார்.

கால்வாயின் கட்டமைப்பானது நன்கு அரைக்கப்பட்ட களிமண்ணோடு சுண்ணாம்பையும் கலந்து சுட்ட செங்கற்களை இணைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கால்வாய் 1,250 மீட்டர் நீளம் மற்றும் தரை மட்டத்திலிருந்து 119 செ.மீ ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாயின் உயரம் 77 சென்டிமீட்டர், அகலம் 63 செ.மீ.

தண்ணீர் பள்ளத்திலிருந்து மேட்டுக்கு செல்லும் தொழில்நுட்பம்

சிதம்பரம் நடராஜர் கோவில்

தண்ணீரானது எப்போதும் மேட்டுப் பகுதியில் இருந்து எளிதாக பள்ளத்திற்கு வந்துவிடும். ஆனால் விதிவிலக்காக இந்தக் கோவில் கட்டமைப்பில் பள்ளத்திலிருந்து மேட்டுப்பகுதி நோக்கி எளிதாகச் செல்லும் வகையில் மிகச் சிறந்த அறிவியல் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

“வடக்கு கோபுரத்தின் கீழ் பகுதியில் நிலவரை தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய நிலையில் தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதாவது பள்ளமான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு தண்ணீர் செல்கிறது.

இந்தக் கால்வாய் ஒவ்வொரு தெருவின் மூலையிலும் பெரிய அளவில் சதுர நிலையில் ஆழமாகவும் அகலமாகவும் நீர்த்தேக்கம் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கால்வாயானது சில இடங்களில் அகலமாகவும் அடுத்து குறுகளாகவும் மாற்றி, மாற்றி அமைத்திருந்தனர்.

இடையிடையே சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ள நீர்த் தேக்கத்தின் தன்மையானது அதிக நீர் அழுத்தத்தை ஏற்படுத்தி கால்வாய் வழியாக தண்ணீரை இயல்பாகவே எடுத்துச் செல்கின்ற தன்மையை ஏற்படுத்துகின்றது,” என்று அந்த நுட்பத்தை விளக்கினார் முனைவர் கலைச்செல்வன்.

பாம்பு போல் வாய்க்கால் அமைத்து பனை உயரம் தண்ணீரை எடுத்துச் செல்லும் வித்தை

சிதம்பரம் நடராஜர் கோவில்

வாய்க்கால் அகலமான இடத்தில் அதிக நீர் இருப்பதால் குறுகலான இடத்தில் அழுத்தத்துடன் நீர் எடுத்துச் செல்லப்படுகிறது என்று கூறிய முனைவர் கலைச்செல்வன், தொடர்ந்து பேசினார்.

“சோழர்கள் பாம்பு போல் நீர் வழிப் பாதையை அமைத்திருந்தனர். தண்ணீரின் பாய்ச்சல் திறனை நிலவியலே தீர்மானிக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் தமிழர். அதனால்தான் முதலில் ஆற்றங்கரை ஓரத்தில் வாழ்ந்த இவர்கள் மக்கள் தொகையின் பெருக்கத்தால் ஊர் விரிவாக்கம் ஏற்பட்டதோடு உணவுத் தேவையும் அதிகரித்தது.

எனவே வேளாண்மையைச் செம்மையுற வைப்பதற்காக ஆறுகளில் இருந்து தோண்டப்பட்ட முதன்மைக் கால்வாய் மூலம் கொண்டு செல்லப்பட்ட தண்ணீரை பாசன வசதிக்கு ஏற்றாற்போல் துணை  கால்வாய்களோடு இணைக்கப்பட்டு ஒரு நீரியல் வலைப்பின்னலையே ஏற்படுத்தி வேளாண்மையில் உயர்வு பெற்று உணவு உற்பத்தியில் சிறந்து விளங்கினர்.

தமிழர்கள் வாழ்கின்ற நிலவியல் மண்டலத்தில் தண்ணீரை மேற்கிலிருந்து கிழக்காகவும், வடக்கிலிருந்து தெற்காகவும் மட்டுமே கொண்டு செல்ல இயலுமென்ற நிலையை மாற்றி நான்கு திசைகளிலும் தண்ணீரைக் கொண்டு சென்று தங்களது வாழ்வியலை  மேம்படுத்தினர்.

இதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்வது வீரராணம் ஏரி. இன்றிலிருந்து சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் சிதம்பரத்தின் மேற்கே வீராணம் ஏரி வெட்டப்பட்டது.

பிறகு கொள்ளிடம் ஆற்றிலிருந்து தோண்டப்பட்ட வடவாற்றின் மூலம் இவ்வேரி இணைக்கப்பட்டடு சுமார் ஒரு டி.எம்.சி. அளவிற்குத் தண்ணீர் சேமிக்கப்பட்டிருந்தது. தெற்கிலிருந்து வடக்காக தண்ணீரை கொண்டு செல்வது நீரியல் விதிக்கு எதிரானது என்றாலும் இன்றுவரை தடையின்றிச் செயல்பட்டு வருவது ஆய்விற்குரிய ஒன்று.

இதே முறைதான் சிதம்பரம் கோவிலிலும் உள்ளது. அதோடு மட்டுமன்றி வீராணம் ஏரி வெள்ளாற்றுடன் இணைக்கப்பட்டதன் விளைவாக, நவாப் வாலஜா காலத்தில் வெள்ளாற்றில் இருந்து தோண்டப்பட்ட ராஜாவாய்க்கால் மூலம் வடக்கு நோக்கிக் கொண்டு செல்லப்பட்ட கொள்ளிடம் ஆற்றின் தண்ணீரானது வாலஜா ஏரியில் நிரப்பப்பட்டது,” என்று விளக்கினோர்.

ஊருக்கு மேற்கே ஏரி கிழக்கே சேரி

சிதம்பரம் நடராஜர் கோவில்

எனவே கிராமப்புற விவசாயிகள் சாதாரணமாகக் கூறி வரும் பாம்பு போன்று வாய்க்கால் அமைத்தால் தண்ணீர் பனையேறும் என்ற விதி அப்படியே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை வடவாறு, இராஜாவாய்க்கால் அமைவியலைப் பார்க்கும்பொழுது எளிதில் தெளிவாவதாக விவரித்தார் முனைவர் கலைச்செல்வன். 

அதுமட்டுமின்றி, இன்று வடவாற்றில் இருந்து வீராணம் ஏரிக்கு வந்த தண்ணீர்தான் நேர் வடக்கு திசையில் 270 கி.மீ. தூரத்தில் உள்ள சென்னை வரை பயணித்து அந்நகர மக்களின் தாகத்தைப் போக்கி வருகிறது என்றும் கூறினார்.

இதுதான் சிதம்பர ரகசியமா?

அந்தக் காலகட்டத்தில் ஊருக்கு மேற்கே ஏரியும் கிழக்கே சேரியும் அமைக்கப்பட்டு இருந்ததாகக் கூறுகிறார் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் லலித் குமார்.

சிதம்பரம்
சிதம்பரம்

“அக்கால அரசர்கள் மக்களுக்காக அவர்கள் பாதுகாப்புக்காக பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வந்துள்ளனர். அப்படி ஒரு திட்டம்தான் சிதம்பரத்தில் கீழிருந்து மேல் நோக்கி தண்ணீரைக் கொண்டு செல்லும் வழிமுறை.

சிதம்பரம் ரகசியம் என்று இதைத்தான் கூறியிருப்பார்கள் என என்னைப் போன்ற வரலாற்று ஆர்வலர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் மேலிருந்து கீழ் நோக்கிப் பாய்ந்து வருவதுதான் நீரின் இயல்பு அதை மாற்றி எதிர்த் திசையில் அனுப்புவதும் ஒரு ரகசியம்தானே,” என்று கூறினார்.

மேலும், “ஆற்று நீர் பாசனமில்லாத மாவட்டமான புதுக்கோட்டையில் மட்டும் 5,128 ஏரி, குளங்களை ஏற்படுத்தி அப்பகுதி மக்களை உணவு உற்பத்தியில் உயர்வடையச் செய்த பெருமை முன்னோர்களையே சாரும். 

பல்லவர், பாண்டியர், சோழர்களிடையே பகையிருந்தாலும் தமிழகத்தை நீர் மேலாண்மையின் மூலம் உணவு உற்பதியில் தன்னிறைவை எட்ட வைப்பதில் ஒற்றுமையோடு செயல்பட்டுள்ளனர்,” என்றும் அவர் தெரிவித்தார்.

சிதம்பரம்
சிதம்பரம் நடராஜர் கோவில்

உலகில் நீர் மேலாண்மை மற்றும் மழைநீர் சேமிப்பு தொழில்நுட்பத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமை ஜோர்டனில் வாழ்ந்த நபாட்டன் மக்களையே சாரும்.

நபாட்டன்களின் நாகரிகம் அரேபிய தீபகற்ப பகுதியில் உள்ள ஜோர்டனின் ஹர் மலைப் பிரதேசத்தில்  தோன்றியது. இந்தப் பகுதி கடல் மட்டத்தில் இருந்து 2,657 அடி உயரத் தில் அமைந்திருந்தது.  நபாட்டன்களின் தலைநகர் பெட்ரா. 

இங்கு வாழ்ந்த நபாட்டன்கள் ஹர் மலையைக் குடைந்து தங்களுக்குத் தேவையான பாதுகாப்பான வாழ்விடங்களை உருவாக்கிக் கொண்டனர். கி.மு. 312 முதல் கி.பி. 106 வரை செழித்தோங்கியிருந்த இந்நாகரிகம் கி.பி. 363 மற்றும் கி.பி.700 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் முற்றிலும் அழிந்தது.

தாங்கள் வாழ்ந்த பாலைவனப் பிரதேசத்தைச் சோலையாக்கிய இவர்களின் நீர் மேலாண்மைத் திட்டம் இன்றளவும் போற்றத்தக்கதாக உள்ளது. ஒரு துளி மழைநீரைக்கூட வீணாக்கக் கூடாது என்பதே நபாட்டன்களின் நீர் மேலாண்மைத் திட்டத்தின் தலையாய நெறியாக இருந்துள்ளது.

அதே போன்றதொரு சிறந்த முறையைத்தான் தமிழர்களும் பின்பற்றி வாழ்ந்தனர் என்பதற்கு சிதம்பரம் கோவிலின் இந்த நிகீயல் தொழில்நுட்பம் ஒரு சான்று என்றார் வரலாற்று ஆர்வலர் லலித் குமார்.

சிதம்பரம் கோவிலின் இன்றைய நிலை என்ன?

சிதம்பரம் நடராஜர் கோவில்

பிபிசி தமிழிடம் பேசிய சிதம்பரம் கோவில்  தீட்சிதர் வெங்கடேசன் சிதம்பரத்தில் உள்ள நீர் மேலாண்மை மிகப் பழமையானது என்றும் கோவில் வெளிப்புறத்தில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட உள்ளே வராதபடி கோவில் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“உள்பகுதியில் இருந்து மட்டுமே தண்ணீர் வெளியேரும். வெளியில் இருக்கின்ற தண்ணீர் உள்ளே வராதபடி இயற்பியல் தொழில்நுட்பத்துடன் அக்காலத்திலேயே மன்னர்கள் சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.

மேலும் இங்கிருந்து வடக்குப் புறத்தின் கால்வாய் வாயிலாக குளங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சேமிக்கப்படுகின்றது. இதுவரை இது நடைமுறையில் இருக்கின்றது என்றபோதிலும் தற்போது பாதைகளை சற்று உயர்த்தி விட்டார்கள். அதைச் சரி செய்திட வேண்டும். மிகச் சிறப்பான இந்தத் திட்டத்தைப் பின்பற்றினால்  நீர் வீணாவதைத் தடுக்க முடியும்,” என்று கூறினார்.

மேலும், “கோவில் பிரகாரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை நீர் தேங்கியது. வழி பிரகாரத்தைக் கண்டறிந்து அதிகாரிகள் சரி செய்து விட்டனர். அது தொடர வேண்டும். ஆனால் தற்போது சில இடங்களில் இடர்பாடுகள் உள்ளன. அதை முற்றிலும் கலைந்துவிட்டால் மிகச் சிறப்பாகவே இருக்கும்,” என்றார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »