Press "Enter" to skip to content

போலி காணொளிக்களில் ரத்தன் டாடா, ராஷ்மிகா போன்றவர்கள் குறி வைக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

பாலிவுட் நட்சத்திரம் ஒருவர் ஒளிக்கருவி (கேமரா)வை நோக்கி ஆபாசமான சைகைகளை செய்கிறார், மற்றொருவர் குறைவான ஆடையில் `போஸ்` கொடுக்கிறார்.

ஆனால், இந்த இரு விஷயங்களுமே உண்மையானவை அல்ல.  சமீப வாரங்களாக மிகுதியாக பகிரப்பட்டுி வரும் டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலமாக (மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்) உருவாக்கப்பட்ட போலியான காணொளிகளின் வரிசையில் இவை சமீபத்திய உதாரணங்களாகும்.

ராஷ்மிகா முதல் பிரியங்கா சோப்ரா வரை

ராஷ்மிகா மந்தனா, பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் ஆலியா பட் போன்ற நட்சத்திரங்கள் இத்தகைய போலியான காணொளிகளால் குறிவைக்கப்பட்டுள்ளனர். 

அவற்றில், வேறொருவரின் முகம் அல்லது குரல்கள் இவர்களுடையது போன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் உள்ள படங்கள் பெரும்பாலும் அந்த பிரபலங்களின் சமூக ஊடக கணக்குகளிலிருந்து எடுக்கப்பட்டு அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளன.

பாலிவுட் நட்சத்திரங்களின் இத்தகைய டீப்ஃபேக் காணொளிகள், படங்களின் அதிகரிப்புக்குப் பின்னால் என்ன இருக்கிறது?

டீப்ஃபேக் காணொளிகள், படங்கள் நீண்ட காலமாக பிரபலங்களை குறிவைத்து வருகின்றன.

பிரியங்கா சோப்ரா

பட மூலாதாரம், Getty Images

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முன்னேற்றம்

“இதுவரை ஹாலிவுட் தான் இத்தகைய பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளது,” என்று கூறும் ஏ.ஐ. நிபுணர் ஆர்த்தி சமானி, நடாலி போர்ட்மேன் மற்றும் எம்மா வாட்சன் போன்ற பிரபல ஹாலிவுட் நடிகைகள் இவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால், செயற்கை நுண்ணறிவின் (AI) சமீபத்திய முன்னேற்றங்கள் பலருடைய போலி ஒலிநாடா மற்றும் காணொளியை உருவாக்குவதை இன்னும் எளிதாக்கியுள்ளன என்று அவர் கூறினார்.

“கடந்த ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரை ஏ.ஐ. கருவிகள் மிகவும் அதிநவீனமாகிவிட்டன. இதனால் தான் நம் நாடுகளில் இத்தகைய டீப்ஃபேக் காணொளிகளை நாம் அதிகமாகப் பார்க்கிறோம்” என்று ஆர்த்தி சமானி கூறினார்.

“இத்தகைய போலியான படங்களை குறைந்த செலவில் உருவாக்கக் கூடிய பல கருவிகள் இப்போது கிடைக்கின்றன. அத்தகைய கருவிகள் அனைவராலும் அணுகக் கூடியதாக இருக்கின்றன” என அவர் தெரிவித்தார்.

ஆலியா பட்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் அதிகரிப்பு ஏன்?

பெரியளவிலான இளம் மக்கள்தொகை, சமூக ஊடக பயன்பாடு அதிகரிப்பு, “பாலிவுட்டின் மீதான ஈர்ப்பு மற்றும் பிரபலங்களின் கலாசாரத்தின் மீதான ஈடுபாடு” உள்ளிட்ட சில தனித்துவமான காரணிகளையும் இந்தியா கொண்டுள்ளது என்று ஆர்த்தி சமானி கூறினார்.

“இதனால் இத்தகைய காணொளிகள் விரைவாக பரப்பப்படுகின்றன. இது, இந்த சிக்கலை பெரிதாக்குகிறது,” என தெரிவித்த அவர், அத்தகைய காணொளிகளை உருவாக்குவதற்கான தூண்டுதல் காரணிகள் இரு மடங்காக உள்ளதாகவும் அவர் கூறினார்.

பாலிவுட் பிரபலங்களை இவ்வாறு உருவாக்குவதன் மூலம், அதிகமானோரை அவை சென்றடைய முடியும், இதன்மூலம் அதிக வருவாயை உருவாக்க முடியும் என்பதும் காரணமாக உள்ளது. மேலும், இத்தகைய காணொளிகளோ, அல்லது படங்களிலோ இருப்பவர்கள் அறியாமல் அவற்றை விற்கும் வாய்ப்பும் உள்ளது” என்றார் அவர்.

கத்ரீனா கைஃப்

பட மூலாதாரம், Getty Images

‘மிகவும் அபாயகரமானது’

பெரும்பாலும், ஆபாச காணொளிக்களுக்காகவே இத்தகைய போலியான படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  ஆனால் போலி காணொளிகள் மூலம் கிட்டத்தட்ட எதையும் உருவாக்கலாம்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் காணொளியொன்றில் 27 வயதான இந்திய நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகம் போலியாக மாற்றியமைக்கப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில் அந்த காணொளியில் கருப்பு நிற உடையில் வேறொரு பெண் இடம்பெற்றிருந்தார்.

இந்த காணொளி சமூக ஊடகங்களில் மிகுதியாக பகிரப்பட்டது. ஆனால் உண்மைச் சரிபார்ப்பு தளமான ‘ஆல்ட் நியூஸ்’-ஐ சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் அந்த காணொளி டீப்ஃபேக் தொழில்நுட்பம் கொண்டு போலியாக தயாரிக்கப்பட்டது என்று வெளிப்படுத்தினார்.இந்த சம்பவத்தை “மிகவும் அபாயகரமானது” என்றும், இதுபோன்ற விஷயங்களைப் பகிர வேண்டாம் என்றும் ராஷ்மிகா மந்தனா மக்களை வலியுறுத்தினார்.

குறிவைக்கப்பட்ட ரத்தன் டாடா

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸின் இதுபோன்ற காணொளியும் சமீபத்தில் மிகுதியாக பகிரப்பட்டது. அதில், அவரது முகத்தை மாற்றுவதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் ’பிராண்ட்’-ஐ விளம்பரப்படுத்தும் வகையில் அவரது குரல் மாற்றப்பட்டது. அதில், பிரியங்கா சோப்ரா முதலீட்டு யோசனைகளை வழங்குவது போன்றும் குரல் மாற்றியமைக்கப்பட்டது.

நடிகை ஆலியா பட் போன்றே தோற்றமளிக்கும் பெண் ஒருவர், ஒளிக்கருவி (கேமரா) முன்பு பல்வேறு ஆபாசமான சைகைகளை செய்த காணொளியும் சமீபத்தில் மிகுதியாக பகிரப்பட்டது.

நடிகை கத்ரீனா கைஃப் உட்பட மற்ற நட்சத்திரங்களும் இத்தகைய போலி காணொளிகளால் குறிவைக்கப்பட்டுள்ளனர். கத்ரீனா கைஃப் நடித்த `டைகர் 3;` திரைப்படத்தில் டவல் அணிந்திருப்பது போன்ற ஒரு போஸ்டரில், அவரது உடலை வெளிப்படுத்தும் விதத்தில் வேறொரு ஆடை அணிந்திருப்பது போன்று போலியான புகைப்படம் பகிரப்பட்டது.

பாலிவுட் நடிகைகள் மட்டும் இதனால் பாதிக்கப்படவில்லை. சமீபத்தில் இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா உட்பட மற்றவர்களும் இந்த தொழில்நுட்பம் மூலம் குறிவைக்கப்பட்டுள்ளனர், ரத்தன் டாடா முதலீட்டு ஆலோசனைகளை வழங்கிய டீப்ஃபேக் காணொளியும் சமீபத்தில் மிகுதியாக பகிரப்பட்டது.

ஏ.ஐ. தொழில்நுட்பம்

பட மூலாதாரம், Getty Images

அதிகம் பாதிக்கப்படும் பெண்கள்

ஆனால் இந்த போக்கு குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கிறது. 90% முதல் 95% வரை அனைத்து டீப்ஃபேக் காணொளிகள், உடன்பாடு இல்லாத ஆபாச உள்ளடக்கங்களே என்று சென்சிட்டி AI ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை பெண்களை குறிவைக்கின்றன.

இந்திய தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஆலோசனை நிறுவனமான விப்ரோவின் உலகளாவிய தலைமை தனியுரிமை அதிகாரி இவானா பார்டோலெட்டி “இந்த போக்கு எனக்கு அச்சத்தைத் தருகிறது” என தெரிவித்தார்.

“பெண்களுக்கு, இது மிகவும் சிக்கலானது, ஏனெனில் இவை ஆபாச மற்றும் வன்முறை படங்களை உருவாக்க பயன்படுத்தப்படலாம். இதற்கென ஒரு சந்தை உள்ளது என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே,” என்று அவர் மேலும் கூறினார்.

“இது எப்போதுமே ஒரு பிரச்னையாக இருந்து வருகிறது, இந்த கருவிகளின் வேகமும் அவை எல்லோருக்கும் கிடைக்கும் தன்மையும் தான் இப்போது அதிர்ச்சியளிக்கிறது” என அவர் தெரிவித்தார்.

டீப்ஃபேக் “பெண்களுக்கு நிச்சயமாக மோசமானது” என்று ஆர்த்தி சமானி ஒப்புக்கொள்கிறார்.

“பெண்களின் மதிப்பு பெரும்பாலும் அழகுத் தரங்களுடன் ஒப்பிடப்படுகிறது. மேலும் பெண் உடல்கள் எப்போதும் காட்சிப் பொருளாகவே பார்க்கப்படுகின்றன” என்று அவர் கூறினார்.

“டீப்ஃபேக் தொழில்நுட்பம் இந்த போக்கை மேலும் அதிகரிக்கிறது. பெண்களின் கண்ணியம் மற்றும் அவர்களின் உடலை சித்தரிப்பதில் பெண்களுக்கு உள்ள அதிகாரத்தை இவை மறுக்கின்றன. குற்றவாளிகளின் கைகளில் அதிகாரத்தைக் கொடுப்பது போன்று இது உள்ளது” என அவர் தெரிவித்தார்.

நடவடிக்கை கோரும் பிரபலங்கள்

ஏ.ஐ. தொழில்நுட்பம்

பட மூலாதாரம், Getty Images

டீப்ஃபேக் காணொளிகள் அதிகளவில் பரப்பப்படுவதால், அரசாங்கங்களும் தொழில்நுட்ப நிறுவனங்களும் அவற்றை ஒடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்படுகின்றன.

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், இந்திய அரசாங்கம் தன் பங்குக்கு அத்தகைய போலிகளை களையெடுத்து வருகிறது.

ராஷ்மிகா மந்தனாவின் காணொளி மிகுதியாக பகிரப்பட்ட பிறகு, இந்திய தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் டீப்ஃபேக் தொழில்நுட்பத்திற்கு எதிராகப் பேசினார். அவை ” ஆபத்தான, சேதங்களை ஏற்படுத்தக் கூடிய தவறான தகவல்களை அவை உருவாக்கும்” என்று அவர் கூறினார்.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ், சமூக ஊடக தளங்கள் “எந்தவொரு பயனராலும் தவறான தகவலை பதிவிடவில்லை” என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அதற்கு இணங்காத தளங்கள் மீது இந்திய சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.

ஆனால், இந்தியாவையும் கடந்து பிரச்னை மிகவும் பரந்துபட்ட ஒன்றாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகள் இந்தப் பிரச்னையைச் சமாளிப்பதில் கவனம் செலுத்துகின்றன என்று பார்டோலெட்டி கூறினார்.

“இது பாலிவுட் நடிகர்கள் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகள், வணிகர்கள் மற்றும் பிறரையும் குறிவைக்கின்றன,” என்று அவர் கூறினார். “உலகெங்கிலும் உள்ள பல அரசாங்கங்கள் தேர்தல்களில் ஜனநாயக நம்பகத்தன்மை போன்ற பிற விஷயங்களில் இத்தகைய தொழில்நுட்பம் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பற்றி கவலைப்படத் தொடங்கியுள்ளன” என்றார் அவர்.

“ஆண்களும் குரலெழுப்ப வேண்டும்”

இதற்கு சமூக ஊடக தளங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இத்தகைய போலிகளை முன்கூட்டியே கண்டறிந்து அகற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சிக்கலைச் சமாளிப்பதில் ஆண்களின் பங்கும் “மிக முக்கியமானது” ஆர்த்தி சமானி கூறினார்.

“பாதிக்கப்பட்டவர்கள் சரியான முறையில் அதுகுறித்த கவலைகளை எழுப்புகின்றனர். நடவடிக்கை எடுக்க கோருகின்றனர். ஆனால் இப்பிரச்னைக்கு எதிராக  குறைவான ஆண்களே பேசுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

“ஆண்களிடமிருந்து அதிக ஆதரவு இந்த விஷயத்தில் இருக்க வேண்டும்.” என அவர் தெரிவித்தார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »