Press "Enter" to skip to content

சட்டமாகும் 3 குற்றவியல் மசோதாக்கள் – மக்கள் மீதான அரசின் கட்டுப்பாட்டை எவ்வாறு அதிகரிக்கும்?

பட மூலாதாரம், ANI

மாநிலங்களவை வியாழன் அன்று அதாவது டிசம்பர் 21 அன்று மூன்று புதிய மசோதாக்களை நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள் நமது தற்போதைய குற்றவியல் சட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டுவரும்.

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குடிமைத் தற்காப்புச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டத்தில் மாற்றம் செய்து இந்த புதிய மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை இனி இப்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் கையெழுத்திட்ட பிறகு, இந்த மூன்று மசோதாக்களும் சட்டமாக மாறும்.

பல வல்லுநர்கள் இந்தச் சட்டங்களின் தற்போதைய தேவை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர், ஏனெனில் அவை பெரும்பாலும் முந்தைய சட்டங்களை ஒட்டியே உருவாக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேள்வி கேட்ட 146 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டதால், ஜனநாயகத்தில் அவை ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த மசோதாக்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்.

புதிய குற்றவியல் மசோதாக்கள்

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசு என்ன சொல்கிறது?

நாடாளுமன்றத்தில் அமித் ஷாவின் பேச்சு, இந்த மசோதாக்களை அறிமுகப்படுத்திய ஆகஸ்ட் மாதம் அவர் ஆற்றிய உரையைப் போலவே இருந்தது. தற்போது பயன்பாட்டில் உள்ள சட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டதால், புதிய மசோதாக்கள் காலனித்துவ கால சட்டங்களை மாற்றியமைக்கும் என்று அவர் எடுத்துரைத்தார்.

மேலும், “முன்னதாக தண்டனை குறித்து கவலைப்படும் வகையிலான சட்டங்கள் தான் இருந்தன. இப்போது பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட சட்டங்களாக அவை மாற்றப்பட்டுள்ளன,” என்றார்.

மக்களவையில் பேசிய அவர், “ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து தொடரும் பிரிட்டிஷ் ராஜ்ஜியம் மற்றும் அடிமைத்தனத்தின் அனைத்து தடயங்களையும் அகற்றுவதன் மூலம் இது முழு இந்திய சட்டமாக மாறும்,” என்று கூறினார்.

இதற்குப் பிறகு, சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின் பட்டியலை ஷா வழங்கினார். இப்போது பெண்கள், குழந்தைகள் மற்றும் மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன. ஆங்கிலேயர்கள் அரசுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகவும், ஆனால் இப்போது இந்தியக் குடிமக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முதல் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பயங்கரவாத நடவடிக்கைகள், கும்பல் படுகொலைகள், இந்தியாவின் இறையாண்மையை அச்சுறுத்தும் குற்றங்களைச் செய்வது மற்றும் பாலியல் ரீதியான குற்றங்கள்தொலைபேசிற பல குற்றங்களுக்கான தண்டனை அதிகரிப்பு குறித்தும் அவர் பேசினார். விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணையின் செயல்பாட்டில் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களும், ஒரு வழக்கை எவ்வளவு விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்பதற்கான கால வரம்புகளை மனதில் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

‘பழைய சகாப்தம்’ முடிவுக்கு வருவது உறுதி என்று அமித் ஷா கூறினார்.

புதிய குற்றவியல் மசோதாக்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்த மசோதாக்களால் என்ன மாற்றம் நேரிடும்?

அரசியலமைப்பு சட்ட வல்லுநர் பேராசிரியர் தருணாப் கைடனின் ஒப்பீட்டின்படி, புதிய சட்டங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான விதிகள் ஒரே மாதிரியானவை. இதற்குப் பிறகும் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சட்டங்கள் புதிய குற்றப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்திய தண்டனை சட்டத்தில் இருந்து தொழில்நுட்ப ரீதியாக தேசத் துரோகம் நீக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட நிலையில், இந்த புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. இதில், என்ன மாதிரியான தண்டனை விதிக்கலாம் என்பது குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் போன்ற சிறப்பு சட்டங்களின் ஒரு பகுதியாக இருந்த பயங்கரவாத செயல்கள், இப்போது இந்திய நீதித்துறை சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதேபோல், பிக்பாக்கெட் போன்ற சிறிய குற்றங்கள் உட்பட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கையாள்வதற்கான விதிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக, இதுபோன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் சமாளிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக அவற்றின் சொந்த சட்டங்கள் இருந்தன.

கூட்டு சேர்ந்து கொலை செய்வது, அதாவது ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து சாதி அல்லது சமூகம் போன்றவற்றின் அடிப்படையில் கொலை செய்யும் போது, ​​குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

தவறான திருமண வாக்குறுதியின் கீழ் உடலுறவு கொள்வதும் ஒரு குறிப்பான குற்றமாக்கப்பட்டுள்ளது.

பாலியல் தொழில் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரும் பிரிவு 377 உள்ளிட்டவை இப்போது நீக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை 15 நாட்கள் வரை நீதிமன்றக் காவலில் வைக்க முடியும். ஆனால் இப்போது குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு 60 அல்லது 90 நாட்கள் வரை நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்கமுடியும்.

சிறிய குற்றங்களுக்கான தண்டனையின் புதிய வடிவம் சமூக சேவையை ஒரு தண்டனையாக உள்ளடக்கியதாக இருக்கிறது. சமூக சேவை சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.

விசாரணையில் தடயவியல் ஆதாரங்களை சேகரிப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேடல்கள் மற்றும் ஆதாரங்களைப் பதிவு செய்தல், அனைத்து விசாரணைகள் மற்றும் விசாரணைகளை கணினிமய முறையில் நடத்துதல் போன்ற தகவல் தொழில்நுட்பத்தை அதிக அளவு பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தல், விசாரணை மற்றும் விசாரணைக்கான கட்டாய கால வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, இப்போது விசாரணை முடிந்த 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். புகார் அளித்து 3 நாட்களுக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவேண்டும்.

இப்போது மரண தண்டனை கைதிகள் மட்டுமே கருணை மனு தாக்கல் செய்ய முடியும். முன்னதாக, அரசு சாரா அமைப்புகள் அல்லது சிவில் சமூகக் குழுக்களும் குற்றவாளிகளின் சார்பாக கருணை மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது.

புதிய குற்றவியல் மசோதாக்கள்

பட மூலாதாரம், Getty Images

மக்கள் மீதான அரசின் கட்டுப்பாட்டை எவ்வாறு அதிகரிக்கும்?

இந்தப் புதிய மாற்றங்கள் காவல் துறையினருக்கு இருக்கும் பொறுப்புகளை விட கூடுதல் அதிகாரத்தை வழங்குவதாக பல சட்ட நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சட்டக் கல்வியாளரும் நிபுணருமான ஜி மோகன் கோபால், “மத்திய, மாநில மற்றும் உள்ளூர் – அரசியல் ஆதாயங்களுக்காக குற்றவியல் நீதி முறையை துஷ்பிரயோகம் செய்ய அதிக வாய்ப்பை வழங்க காவல்துறை மற்றும் குற்றவியல் நீதி அமைப்பை இந்த மசோதா ஆயுதமாக்குகிறது,” என எழுதியுள்ளார். கைது செய்யப்பட்ட நபரின் பயோமெட்ரிக் சேகரிப்பை கட்டாயமாக்குவதன் மூலம் இது ஒரு கண்காணிப்பு நிலையை உருவாக்குகிறது என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

புதிய மசோதாக்களில் காலக்கெடுவை நிர்ணயிப்பது பொதுமக்களுக்கு உதவுமா என்ற சந்தேகமும் நிபுணர்களுக்கு உள்ளது.

எடுத்துக்காட்டாக, அனுப் சுரேந்திரநாத் தனது சக பணியாளர்களுடன் சேர்ந்து ‘ப்ராஜெக்ட் 39-A’ என்ற பயிற்சியை நடத்திவருகிறார். இந்தத் திட்டம் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களைக் குறிக்கிறது. விரைவான நீதிக்கு, நீதித்துறை காலியிடங்கள் நிரப்பப்படவேண்டும் என்பதுடன் நீதித்துறை சுமை குறைக்கப்பட வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார். தடயவியல் பயன்பாடு கூட உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் பயிற்சி முதலீடு தேவைப்படும்.

இதனுடன், தேடல் மற்றும் ஆதாரங்களைப் பதிவு செய்தல், ஒலிநாடா-விஷுவல் பதிவு போன்ற சில மாற்றங்களும் வரவேற்பைப் பெற்றுள்ளளன. இருப்பினும், அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது புதிய சட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதைப் பொறுத்தே இருக்கும்.

சட்டம் ‘அதிகச் செயல்களை குற்றமயமாக்குவதன் மூலம் காவல் துறையினருக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கப்படுவதாகவும், அரசின் கட்டுப்பாட்டை தேவையில்லாமல் விரிவுபடுத்துகிறது’ என்றும் ‘ப்ராஜெக்ட் 39-A’ நம்புகிறது. நீதிமன்றக் காவலை விரிவுபடுத்துவதும், இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் புதிய குற்றங்களை அறிமுகப்படுத்துவதும் இந்த விஷயத்தில் மிகப்பெரிய மாற்றம் என்றும் ‘ப்ராஜெக்ட் 39-A’ கருதுகிறது.

“இந்த மசோதாக்கள், காலனித்துவ கால குற்றவியல் சட்டத்தை ஒழிப்பதில் இருந்து வெகு தொலைவில், காலனித்துவ தர்க்கத்தை நிலைநிறுத்துகின்றன – குற்றவியல் சட்டத்தில் அரசின் முதன்மையான ஆர்வம் மக்களை முடிந்தவரை கட்டுப்படுத்துவதாகும்,” என அனுப் சுரேந்திரநாத் எழுதியுள்ளார்.

‘இந்தியா டுடே’ செய்தி நிறுவனத்திடம் பேசிய மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் மனு சிங்வியும், இந்த சட்டம் ‘லவ் ஜிகாத்தை’ தண்டிக்கும் வகையில் இருப்பதாக விமர்சித்தார். மோசடியான முறையில் உடலுறவில் ஈடுபடுவது குறித்து ஒரு புதிய ஏற்பாடு இந்த மசோதாவில் இருப்பதால், அது மக்களை குறிவைக்க பயன்படுத்தப்படும் என்று அவர் அச்சம் தெரிவித்தார்.

தற்போது, ​​ஆளும் பாஜகவுடன் தொடர்புடைய சில தலைவர்கள் பல முஸ்லிம் ஆண்கள் இந்து பெண்களை மத மாற்றம் செய்ய மட்டுமே திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

புதிய குற்றவியல் மசோதாக்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்த மசோதாக்கள் ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும்?

இது நமது நீதி அமைப்பில் செய்யப்பட்ட மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாகும். நாட்டில் ஏற்கெனவே அமலில் உள்ள ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட விதிகளையும் தலைகீழாக இந்த மசோதாக்கள் மாற்றிவிடும். மசோதா நிறைவேற்றப்பட்ட போது எதிர்க்கட்சி எம்பிக்கள் 150 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இதுவரை நடந்த இடைநீக்க நிகழ்வுகளில் அதிக எண்ணிக்கையிலான இடைநீக்கங்கள் இதுவாகும். இந்த மூன்று மசோதாக்களும் நிறைவேற்றப்படுவதற்கு முன் இரு அவைகளிலும் மொத்தம் 5 மணி நேரம் விவாதம் நடந்தது.

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் மற்றும் ஷிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் மட்டுமே இந்த மசோதாக்களை எதிர்த்தனர். அபிஷேக் மனு சிங்வியின் கூற்றுப்படி, காங்கிரஸ் சார்பில் விவாதத்தில் அவர் பங்கேற்கவிருந்தார். ஆனால் அவர் அவைக் கூட்டத்தில் பங்கேற்பதில் இருந்தே இடைநீக்கம் செய்யப்பட்டார்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் லோகூரின் கருத்துப்படி, இந்தச் சட்டங்கள் இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதால், அவை குறித்து மேலும் விவாதம் தேவை என்று தெரிவித்தார். இந்திய சட்ட ஆணையத்தின் பல அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளபடி, காவல்துறையின் பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை அரசாங்கம் தவறவிட்டதாக பல எம்.பி.க்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த சம்பவத்தை ‘ஜனநாயகத்தின் மரணம்’ என பல எம்.பி.க்கள் வர்ணித்துள்ளனர்.

பிரதாப் பானு மேத்தா ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில், “எதிர்ப்பு இல்லாத நாடாளுமன்றம் என்பது எதையும் நிறைவேற்றும் அதிகாரத்தின் கட்டுக்கடங்காத அதிகாரம் படைத்தது,” என எழுதியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியான கே சந்துரு, நாடாளுமன்றம் விரைவில் அரசாங்கத்தின் ரப்பர் ஸ்டாம்ப் ஆகிவிடும் என்றும், எந்த விவாதமும் இன்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. பல சட்டங்கள் அதிக விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன. அதே நேரத்தில், பல மசோதாக்கள் நிலைக்குழுவுக்கு விவாதத்திற்கு அனுப்பப்படாமல் இருப்பதாகவும் எம்.பி.க்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »