Press "Enter" to skip to content

கோண்ட்வானாவில் இந்தியா இருந்த போது பிரிந்து சென்ற கண்டம் இப்போது எங்கே?

பட மூலாதாரம், Getty Images

புவியியலின் மிகப்பெரிய புதிர் இப்போது அவிழ்க்கப்பட்டுள்ளது.

15.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி, பின்னர் காணாமல் போன ‘ஆர்கோலாண்ட்’ (Argoland) கண்டத்திற்கு என்ன ஆனது என்ற புதிர்தான் அது.

நெதர்லாந்தில் உள்ள உட்ரெக்ட் பல்கலைக் கழகத்தின் புவியியலாளர்கள், பல ஆண்டுகளாக விஞ்ஞான சமூகத்தைக் குழப்பிக் கொண்டிருந்த இந்த ‘தொலைந்துபோன கண்டத்தைக்’ கண்டுபிடித்திருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

இந்தக் கண்டம், கோண்ட்வானா எனப்படும் பெரும் கண்டத்திலிருந்து (supercontinent) பிரிந்து வந்தது. ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் அண்டார்டிகா ஆகிய இன்றைய கண்டங்கள் கோண்ட்வானாவின் பகுதிகளாக இருந்தபோது, ஆர்கோலாண்ட் கண்டம் மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிந்தது. அது சுமார் 5,000 கி.மீ நீளமுள்ள ஒரு பெரிய நிலப் பரப்பாகும்.

விஞ்ஞானிகள் இக்கண்டம் ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிந்ததற்கான தடயங்களை முன்பே கண்டறிந்தனர், அதனால் இதன் இருப்பை ஏற்கனவே அறிந்திருந்தனர்.

அர்கோலேண்ட், ஆஸ்திரேலியா, கண்டம், பூமி

பட மூலாதாரம், Getty Images

ஆர்கோலாண்ட் கண்டம் இப்போது எங்கே?

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட புவியியலாளர்கள் புதைபடிவங்கள், மலைத்தொடர்கள் மற்றும் பாறைகளில் மட்டுமிருந்து இதற்கான தரவுகளைச் சேகரிக்கவில்லை. வழக்கமாக கண்டப் பிரிவுகளின் தடயங்கள் இவற்றில் இருக்கும்.

ஆனால், இதில் ஆர்கோலாண்ட் கண்டத்திற்கான தடயங்கள் அது பிர்ந்துபோன பின் உண்டான ஒரு பெரிய துளையில் கிடைத்தது. இந்தத் துளை ஆஸ்திரேலியாவின் மேற்கில், கடலின் ஆழத்தில் அமைந்துள்ள ஒரு படுகை ஆகும். அது ஆர்கோ அபிசல் சமவெளி (Argo Abyssal Plain) என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்துதான் இக்கண்டத்தின் பெயர் தோன்றியது.

ஆனால், முன்பு கோண்ட்வானாவின் பகுதிகளாக இருந்த மற்றக் கண்டங்கள் எவ்வாறு பிரிந்தன என்பதைப் புரிந்து கொள்வது எளிது. உதாரணமாக, நீங்கள் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவைப் பார்த்தால், அவற்றின் வடிவங்கள் சரியாகப் பொருந்துவதைப் பார்க்கலாம். அதேபோல ஆர்கோலாண்டிலும் அப்படிப் பொருந்திப் போகும் நிலப்பரப்பைக் கண்டுபிடிப்பது அவசியம். அது ஆஸ்திரேலியாவுடன் பொருந்திப் போகிறது.

எல்டர்ட் அட்வோகாட் என்ற விஞ்ஞானியின் தலைமையிலான டச்சுப் புவியியலாளர்கள் குழு, இந்த மர்மத்தைத் தீர்த்தனர். ஆர்கோலாண்ட் என்று அழைக்கப்படும் பெரிய நிலப்பரப்பு இன்று இல்லை. காரணம் அந்தக் கண்டம் பிரிந்தபின், துண்டு துண்டாக உடைந்து ஒரு தீவுக்கூட்டமாக மாறியது.

அதன் ஒரு பகுதி கடலில் மூழ்கி இன்று தென்கிழக்கு ஆசியாவின் கீழ், கடல் தட்டுகள் வடிவில் உள்ளது. கோண்ட்வானா ரிசர்ச் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, ‘இந்தோனீசியா மற்றும் மியான்மரின் பெரும்பகுதியின் பச்சை காடுகளுக்கு அடியில்’ அந்தப் பகுதி உள்ளது.

அர்கோலேண்ட், ஆஸ்திரேலியா, கண்டம், பூமி

பட மூலாதாரம், ADVOKAAT AND VAN HINSBERGEN

மர்மம் விலகியது எப்படி?

ஆர்கோலாண்டின் இருப்பிடத்தைக் கண்டறிய விஞ்ஞானிகள் குழு ஏழு ஆண்டுகளாக வெவ்வேறு கணினி மாதிரிகளை உருவாக்கிச் சோதித்தது.

“நாங்கள் உண்மையில் தனித்தனித் தகவல் தொகுப்புகளைக் கையாண்டோம். அதனால்தான் எங்கள் ஆராய்ச்சி நீண்ட காலம் எடுத்தது,” என்று அட்வோகாட் ஒரு செய்திக்குறிப்பில் விளக்கினார்.

“ஆர்கோலாண்ட் பல்வேறு துண்டுகளாக உடைந்தது. அதனால் அக்கண்டத்தின் பயணத்தைச் சரியாகப் புரிந்து கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டன,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆர்கோலாண்ட் ஒரு திடமான நிலப்பரப்பாகப் பாதுகாக்கப்படவில்லை. அது கடலின் தரையில் நுண் கண்டங்களாகப் பிரிந்து கிடக்கிறது என்பதை அவர்கள் கண்டுகொண்டவுடன், அட்வோகாட் மற்றும் அவரது சகப் புவியியலாளர்களான டோவ் வான் ஹின்ஸ்பெர்கன் ஆகியோர் ஒவ்வொரு துண்டையும் ஒவ்வொரு துண்டையும் அடையாளம் காணவும் பணியைத் துவங்கினர்.

இந்தக் கண்டத்தின் தற்போதைய புவியியலை இன்னும் துல்லியமாக வரையறுக்கும் புதிய பெயரையும் அதற்குச் சூட்டினர் . அதுதான் ‘ஆர்கோபெலாகோ’.

அர்கோலேண்ட், ஆஸ்திரேலியா, கண்டம், பூமி

பட மூலாதாரம், ADVOKAAT AND VAN HINSBERGEN

‘வாலஸ் கோடு’ என்றால் என்ன?

இந்தப் புதிருக்கான விடை, மற்றொரு மர்மத்தையும் விளக்க உதவும். அது உயிரியலாளர்கள் தேடிக் கொண்டிருந்த ஒரு விஷயம்.

இது ‘வாலஸ் கோடு’ என்று அழைக்கப்படுகிறது. இது தென்கிழக்கு ஆசியாவின் விலங்கினங்களை ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிக்கும் ஒரு கண்ணுக்குத் தெரியாத தடைக்கோடு.

இந்தோனேசிய தீவுக்கூட்டத்தின் (இது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளால் ஆனது) தெற்கே கடக்கும் இந்தக் கோட்டின் இருபுறமும் உள்ள விலங்கினங்கள் ஒன்றுக்கொன்று மிகவும் வித்தியாசமானவை. மேலும் அவை ஒன்றோடொன்று கலப்பதில்லை என்பதையும் உயிரியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தக் கோட்டின் மேற்கே குரங்குகள், புலிகள் மற்றும் யானைகள் போன்ற நஞ்சுக்கொடி பாலூட்டிகள் உள்ளன. அவை கிழக்கில் முற்றிலும் இல்லை. அங்கு, பொதுவாக ஆஸ்திரேலியாவுடன் தொடர்புடைய கங்காரு போன்ற விலங்குகளான மார்சுபியல்கள் மற்றும் குக்கட்டூ போன்ற பறவைகள் காணப்படுகின்றன.

“சுண்டலாந்து (மலாய் தீபகற்பம் மற்றும் சுமத்ரா, ஜாவா மற்றும் போர்னியோ தீவுகள்) ‘யூரேசிய’ விலங்குகளின் தாயகமாக இருந்தாலும், சுலவேசி ‘ஆஸ்திரேலேசிய’ விலங்குகளின் தாயகமாக உள்ளது. இது யூரேசிய மற்றும் ஆஸ்திரேலிய விலங்குகளின் கலவையாகும்,” என்று அட்வோகாட் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.

“சுலவேசியின் மேற்குப் பகுதியான ‘யூரேசிய’ பகுதி 2.8 கோடி ஆண்டுகள் முன்பிரிஉந்து 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இடைப்பட்ட காலத்தில் சுலவேசியின் தென்கிழக்கு ‘ஆஸ்திரேலிய’ பகுதியுடன் தொடர்பு கொண்டது. அதுவே இந்தக் கலவைக்கு காரணம். இதை நாங்கள் எங்கள் கட்டமைப்பில் விளக்குகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஆர்கோலாந்தின் ‘கண்டுபிடிப்பாளர்களின்’ கூற்றுப்படி, இது ஆஸ்திரேலியாவில் இருந்து பிரிந்து தென்கிழக்கு ஆசியாவுடன் இணைந்தபோது அந்த கண்டம் அதன் சொந்த வனவிலங்குகளை தன்னுடன் எடுத்துச் சென்றதால் இருக்கலாம்.

இந்த வினோதமான நடத்தை பாலூட்டிகள் மற்றும் பறவைகளில் மட்டும் காணப்படவில்லை. தென்கிழக்கு ஆசியாவின் தீவுகளில் வாழ்ந்த முதல் மனித இனமும் இந்த கண்ணுக்குத் தெரியாத தடையை மதித்ததற்கான சான்றுகள் கூட கண்டுபிடிக்கப்பட்டன.

“இந்தப் புரிதல் பல்லுயிர் மற்றும் காலநிலையின் பரிணாமம், மூலப்பொருட்களின் பரப்பு போன்றவற்றைல்ப் பற்றிய நமது புரிதலுக்கு இன்றியமையாதவை,” என்று வான் ஹின்ஸ்பெர்கன் கூறுகிறார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »