Press "Enter" to skip to content

திமுகவை குறிவைத்து உருவாக்கப்படும் சர்ச்சைகளால் இந்தியா கூட்டணிக்கு என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Dhayanidhi Maran Facebook

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்தியா கூட்டணியின் முக்கியமான அங்கமான திமுக பாஜகவின் இலக்காகியுள்ளது. திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான வார்த்தை போர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

இந்தியா கூட்டணியை, குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில், எதிர்கொள்வதற்கான கருவியாக திமுக மாறி வரும் நிலையில், இதற்கு காரணம் திமுகவின் சில தவறான அணுகுமுறைகளா அல்லது மாநில அரசியலுக்கும் தேசிய அரசியலுக்கும் இடையேயான சிக்கலான உறவா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

கடந்த காலங்களில் நாம் பார்த்த பல சர்ச்சைகளின் பட்டியலில் சமீபத்திய வரவு வெள்ள நிவாரணம் தொடர்பானது. இந்த விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு இடையேயான வாதங்கள் மோசமானதாக மாறியுள்ளன.

திமுக பாஜக மோதல்

வெள்ள நிவாரண சர்ச்சை

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கான நிவாரணத் தொகை கேட்ட போது, மத்திய அரசு “ஏ டி எம்” கிடையாது என்ற பொருளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் கூறுகிறார்.

இந்தக் கருத்துக்கு எதிர்வினையாற்றிய தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் ஆகிய உதயநிதி ஸ்டாலின், “அவர்களின் அப்பன் வீட்டு சொத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் வரி பணத்தை தான் கேட்கிறோம்” என்று தெரிவித்தார்.

திமுக பாஜக மோதல்

இதன் தொடர்ச்சியாகவே நிர்மலா சீத்தாராமன் சுமார் ஒருமணி நேராம் பத்திரிக்கையாளர் சந்திப்பை டெல்லியில் மேற்கொண்டார். அதன் கேள்விகளும், பதில்களும் பெரும்பாலும் தமிழிலேயே அமைந்தன.

அப்போது பேசிய நிர்மலா சீதாராமன் “அவர்களின் பாஷை அப்படி தான் இருக்கும். சனாதனத்தை அழிக்க மாட்டோம் , ஒழிப்போம் என்று கூறினாரே, அவர்களின் பாஷை அப்படி தான் இருக்கும். நீங்கள் அப்பன் வீட்டு சோத்தில் தான் அனுபவித்து வருகிறீர்கள் என கூறமுடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு மரியாதை கொடுத்து தானே ஆக வேண்டும். அப்பன் வீடு, ஆத்தா இந்த பேச்சு எல்லாம் நல்லது இல்ல. வாய் வார்த்தைகள் அளந்து வர வேண்டும்” என்றார்.

இந்த விவகாரம் இத்துடன் முடிந்துபோகவில்லை. மீண்டும் பதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “அப்பன் என்பது கெட்ட வார்த்தையா, மரியாதைக்குரிய அமைச்சரின் மரியாதைக்குரிய அப்பாவின் பணத்தை கேட்கவில்லை என்று தான் கூறினேன்” என்று பதில் பேசியதுடன் சிலசமயம் ‘பெரியாரின் பாணி’ அவசியம் என்று அறிக்கை விட்டார்.

திமுக பாஜக மோதல்

பட மூலாதாரம், Getty Images

சர்ச்சையாகி வரும் தயாநிதி மாறனின் பேச்சு

இந்த சூழலில்தான், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் பேசிய 2019 ஆம் ஆண்டு காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் பேசிய அந்த உரையில், “ஆங்கிலம் தெரிந்தால் ஐ டி நிறுவனங்களில், கை நிறைய சம்பளம் வாங்கலாம். உத்தர பிரதேசத்தில், பிஹாரில் இந்தி மட்டும் படிப்பவன் தான் இங்க வந்து வீடு கட்டி தர்றான், கக்கூஸ் கழுவுறான்” என்று அவர் பேசியிருந்தார். சமூக ஊடகங்களில் இந்த பேச்சை பாஜகவினர் பகிர்ந்து வருகின்றனர். சில முன்னணி ஊடகங்கள் இது குறித்து விவாதங்கள் நடத்தின.

பொதுவாக மாநில அளவில் சர்ச்சையாகும் விசயங்களை தேசிய அளவில் பேசுபொருளாக்கி வருகிறது பாஜக. இதன் மூலம் இந்தியா கூட்டணிக்கு ஒரு நெருக்கடியை அளித்து வருகிறது பாஜக. இந்தியா கூட்டணியில் சித்தாந்த, கலாச்சார அடையாளத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டிய நிர்பந்தம் திமுகவுக்கே இருக்கிறது.

திமுக பாஜக மோதல்

எந்த அரசியல் கூட்டணியிலும் இருப்பது போல், இந்தியா கூட்டணியில் பாஜகவை எதிர்த்து நிற்கும் கட்சிகள் என்ற விதத்தில் கட்சிகள் ஒரே கருத்தை பகிர்ந்துகொள்கின்றன. ஆனால் அரசியல் தளத்தில் அவைகளுக்குள்ளே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பேராசிரியர் கருணாநந்தன் “இந்தியா என்பது பல கலாச்சாரங்களை உள்ளடக்கிய நாடாகும். திமுகவுக்கு பண்பாட்டு பின்புலம், கலாச்சார பின்புலம் உள்ளது. பாஜகவினர் இந்தியா கூட்டணியை பலவீனமாக்க, அந்த கூட்டணியில் உள்ள அமைப்பு ரீதியாக வலுவாக உள்ள கட்சியை தாக்குவார்கள். எதிர்கட்சிகளை, எதிரி கட்சிகளாக சித்தரிப்பார்கள். அந்த விதத்தில்தான் இப்போது திமுகவை தனிமைப்படுத்த நினைக்கிறார்கள்.”

“கூட்டணிக் கட்சிகளுக்குள் ஒத்த கருத்து உள்ள பிரச்சனைகளான இட ஒதுக்கீடு, மதவாத எதிர்ப்பு, மாநில உரிமைகள் நிலைநாட்டுவது போன்றவை தவிர மற்ற கருத்துக்களில் மாறுபடலாம். எல்லா விதத்திலும் ஒரே கருத்து கொண்டிருந்தால் ஒரே கட்சியாகவே இருந்திருக்கலாமே?”

“குறிப்பாக சில விஷயங்களை தேர்ந்தெடுத்து பூதாகரமாக்குவது, வாக்கு வங்கி அரசியலுக்காக செய்யப்படும் அரசியலாகும். இந்தியாவில் அனைவருக்கும் உரிய மரியாதை வழங்க வேண்டும். அதே சமயத்தில் ஒரு கருத்துக்கு மற்றொரு கருத்து இணங்கியே ஆக வேண்டும் என கூறுவது சரியல்ல” என்றார்.

திமுக பாஜக மோதல்

தயாநிதி மாறனின் காணொளியை X தளத்தில் பதிவிட்ட பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா, “ திமுகவின் மூத்த தலைவர்கள் இது போன்ற கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் அமைதி காப்பதன் மூலம், இந்த கருத்து அவர்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும், இந்தியா கூட்டணியின் உத்திகளில் ஒன்றாகவும் இருக்கிறது என தெரிகிறது. காங்கிரஸ் கட்சியும் இதை ஆமோதிக்கிறது. உத்தர பிரதேசத்தில் அரசியல் செய்து வளர்ந்த காங்கிரஸ் இன்று அதே மாநிலங்களை இழிவாக பேசுகிறது.

முதலில் சனாதனத்தை இழிவுப்படுத்தினார்கள், பிறகு ஒ பி சி விவகாரத்தை கொண்டு சாதி பிரிவினையை தூண்டினார்கள், பிறகு வடக்கு தெற்கு பிரிவினையை உருவாக்குகிறார்கள். இந்தியா கூட்டணியில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ், அரவிந்த கெஜ்ரிவால், மம்தா பேனர்ஜி, தேஸ்வி யாதவ் அனைவரும் ஒன்றுமே நடக்காதது போல் இருக்கப் போகிறார்களா? ” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

திமுக பாஜக மோதல்

பட மூலாதாரம், X/Shehzad_Ind

கூட்டணிக்குள் குழப்பமா?

இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பிஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“கருணாநிதி தலைமையிலான திமுக சமூக நீதியின் மீது நம்பிக்கைக் கொண்டது. பிஹார் மக்கள் குறித்து திமுக தலைவர்கள் தவறாக பேசியிருந்தால் அது கண்டத்துக்கு உரியது. பிஹார் மற்றும் உத்தரபிரதேச தொழிலாளர்கள் நாடு எங்கிலும் விரும்பப்படுகிறார்கள். அவர்கள் இல்லையென்றால் நிலைமைகள் ஸ்தம்பித்து விடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் திமுக இணக்கமான உறவினை பின்பற்றுகிறது. இந்தியா கூட்டணியின் கூட்டம் பிஹாரில் நடந்த போது, தேதஸ்வி யாதவின் வீட்டிற்கு சென்ற முகஸ்டாலின் அவரின் தாயார் ராப்ரி தேவியை நேரில் சந்தித்தார். சென்னையில் நடைபெற்ற கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்வுக்கு தேஜஸ்வி நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.

திமுக பாஜக மோதல்

பட மூலாதாரம், Getty Images

அதே சமயம் திமுக இன்று பேசிவரும் பல்வேறு அரசியல் பிரச்சனைகள் எதுவும் 2014ம் ஆண்டுக்கு பின் எழுந்தவை அல்ல, பல தசாப்தங்களாகவே அரசியல் களத்தில் விவாதப்பொருளாக இருந்துவரும் பிரச்னைகள். விடுதலைக்கு முன் 1930 ம் ஆண்டில் இருந்தே இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளன. இந்த போராட்டங்களை அதிகம் எதிர்கொள்ள நேர்ந்தது காங்கிரஸ் ஆட்சியாளர்கள்தான்.

ஆனால், 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த மோதல்கள் கூர்மை அடைந்துள்ளன என்று கூறலாம். ஏனென்றால், இந்துத்துவா, இந்தி மொழி, சாதி பிரச்னைகள், சமஸ்கிருதம், சனாதனம் எந்த விவகாரத்தை எடுத்துக் கொண்டாலும், திமுக மற்றும் பாஜக இரு கட்சிகளும் தங்கள் மாறுபட்ட கருத்துகளை பரிமாறிக் கொள்ளும் தொனி, தாக்குதல் மற்றும் மோதல் போக்கு கொண்டதாகவே இருக்கின்றன.

இந்த சர்ச்சைகள் பொதுவாக திமுகவுக்கும், தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும் அவர்களது அரசியலுக்கும் இடையூறாக இல்லை. ஆனால், இந்தியா கூட்டணிக்கு குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் இது கவலை தரக்கூடியதாகவே மாறி வருகிறது.

சனாதன தர்ம சர்ச்சை

குறிப்பிட்டு சொல்லத்தக்க மற்றொரு சர்ச்சை, உதயநிதி ஸ்டாலின் கூறிய ‘சனாதன தர்மம்’ குறித்த கருத்துகள் ஆகும். உதயநிதி, சனாதனத்தை கொடிய நோயுடன் ஒப்பிட்டு, அதை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் பெரிதாக தலையிடாத நிலையில், பாஜகவோ இந்த பிரச்னையை நாடு முழுவதும் பேசியது. பிரதமர் நரேந்திர மோதி தனது தொண்டர்கள் இதை எதிர்க்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். எனினும் திமுக தனது கூற்றை, தனது வார்த்தைகளை மாற்றிக் கொள்ளவில்லை.

கலாச்சார பண்பாட்டு அடையாளங்கள் குறித்த விவகாரங்களில் தமிழ்நாடு தனித்தே நிற்கிறது. தென்னிந்தியாவில் உள்ள அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா இந்தியை எதிர்க்காத போது, தமிழ்நாட்டில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. அதே போன்று தான் நீட் விவகாரத்திலும். ஆனால் இந்த கோரிக்கைகளும் விவகாரங்களும் நாட்டின் பிற பகுதிகளிலும் எளிதாக புரிந்து கொள்ளக் கூடியதாக இல்லை.

“திராவிட கட்சிகள் தேசிய அரசியலில், முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இந்நேரத்தில், நமது சிந்தாந்தம், அரசியல் கருத்துகளை தெரியாத மாநிலங்களோடு உறவாட பயன்படுத்தும் மொழி முக்கியமானதாகும். அப்போது தான் நமது கருத்துகளை இந்தியா முழுவதும் எடுத்து செல்ல முடியும். இந்த விவகாரங்களில் இன்னும் நேர்த்தியான மொழி பயன்படுத்தப்பட்டிருந்தால், வட இந்தியாவில் இன்னும் ஆழமான புரிதலை உருவாக்கலாம்” என்று திமுக இலக்கிய பணிகளை மேற்கொள்ளும் மூத்த தலைவர் கூறினார்.

எனவே இந்திய அரசியலில், தேசிய கூட்டணி என்பது பொது எதிரி கொண்டிருப்பது மட்டுமல்ல, பல்வேறு பின்புலங்களிலிருந்து வரும் வெவ்வேறு அரசியல் பார்வைகள் குறித்து விவாதிப்பதற்கான தளத்தையும் கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுகிறது.

திமுக பாஜக மோதல்

பட மூலாதாரம், Getty Images

தயாநிதி மாறனின் காணொளியை பற்றி கருத்துச் சொன்ன பாஜக தலைவர் அண்ணாமலை, இன்றைய சூழல் மாறிவிட்டது என்கிறார். “இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் இருந்து வந்தது. ஆனால் இன்று உத்தரபிரதேசம் வந்து விட்டது. மேலும் இரு மாநிலங்கள் தமிழ்நாட்டுக்கு கடும் போட்டியை தருகின்றன. சீக்கிரமே தமிழகம் ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்படும். எனவே தமிழகத்துக்கு தேவை புதிய பார்வை கொண்ட பாஜக தான்” என்கிறார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீநிவாசன், “(தயாநிதிமாறன்) இது போன்ற கருத்துகள் தெரிவிப்பது, தரக்குறைவாக பேசுவது முதல் முறை அல்ல. பான் போடுகிறவர்கள் என ஒரு தலைவர் கூறியிருந்தார். கோமூத்ரா மாநிலங்கள் என பேசி மன்னிப்பு தெரிவித்து வந்திருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார். மொழியை, மாநிலங்களின் பிராந்தியைத்தை வைத்து இழிவுப்படுத்துவது திமுகவின் பாரம்பரியத்தில் இருக்கக் கூடியது. மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் (CISF) இந்தியில் பேச சொன்னதுக்கு ட்வீட் போட்ட முதல்வர் ஸ்டாலின் , நிதிஷ் குமார் பேசியதாக சொல்லப்படுவதற்கு ஏன் அமைதியாக இருக்கிறார்?” என கேட்டுள்ளார்.

திமுக பாஜக மோதல்

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், “பாஜக திமுகவை வலிமையான கட்சியாக பார்க்கிறது. தெளிவான சிந்தனையும் சிந்தாந்தமும் கொண்ட கட்சி திமுக என்பதால், திமுகவை பார்த்து பயப்படுகிறது பாஜக. உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்தை பெரியார் கூறியிருக்கிறார், அம்பேத்கர் கூறியிருக்கிறார். ஏன் உதயநிதி ஒரு அரங்கில் பேசியதை மட்டும் எடுத்து சர்ச்சையாக்க வேண்டும்? மதம் மொழி இதை வைத்து தான் பாஜக அரசியல் செய்கிறது. உண்மையில் தயாநிதி மாறன், வட நாட்டு தொழிலாளர்களை பாராட்டி பேசுகிறார், அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள், தமிழ்நாடு அவர்களை அன்புடன் நடத்துகிறது என்று தான் கூறுகிறார்” என்றார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »